நம்மூர் பத்திரிகைகள், தொலைகாட்சிகளுக்கு இணையாக ‘நடுநிலையாக’ப் பணியாற்றும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சியைப் பாராட்டாமல் இருக்க முடியுமா?

முப்பது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தேர்தல் காலங்கள் வரும்பொழுது, தேர்தல் ஆணையம் தவணை முறையில் தேர்தல் தேதி குறித்துப் பேசிக்கொண்டிருக்காது. பளிச்சென்றுச் தேதியை அறிவித்துத் தேர்தலை நடத்தும், அங்கே குறைகள் குறைவாக இருந்தாலும், தேர்தல் நடத்தும் முறை நிறைவாகவே இருக்கும்.

இப்பொழுது நிலைமை மாறிவிட்டது.

மத்திய பாஜகவின் ஆட்சியில், அது என்ன நினைக்கிறதோ அதுவே தேர்தல் ஆணையத்தின் ‘வேத’மொழியாகி வருகிறது என்பது இன்றைய நிலை.

            ‘‘விரைவில் தேர்தல்’’ - தேர்தல் ஆணையம்.

            ‘‘விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும்’’

            ‘‘15 நாள்களில் தேர்தல் தேதி அறிவிப்பு’’

- 15 நாள்கள் கழித்து தேர்தல் தேதியை அறிவிக்கும் தேர்தல் ஆணையம்.

விரைவில் தேர்தல் என்று தொடங்கிய ஆணையம், மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குப் பிறகு, சில முன்னறிவுப்புகளுக்குப் பிறகு ஏன் தேதியை அறிவிக்கிறது?

மத்திய மாநில ஆளும் கட்சிகள் இந்த நீண்ட இடைவெளிக் காலங்களைப் பயன்படுத்தி 2,000 ரூபாய் ஏழைகளுக்கு உதவி நிதி என்றும், 6,000 ரூபாய் விவசாயிகளுக்கு உதவி நிதி என்றும், முன்பு உயர்த்திய ஜி.எஸ்.டி வரியை குறைக்கிறோம் என்றும் பல போலிச் சலுகைகைளைச் சொல்லி மக்களைத் தன்வயப் படுத்துவதற்காகத்தான் இந்த நீண்ட இடைவெளியை தேர்தல் ஆணையம் ‘பெருந்தன்மை’யோடு வழங்குகிறது.

அதிலும் பணமாகக் கொடுக்கும் அரசு நிதிகள், தேர்தலுக்கான கையூட்டுகளாக மாற்றப்படும்.

தபால் ஓட்டுகளைக் கூட பேரம் பேசுகின்ற கொடுமை நடைபெறும்.

இப்படிப்பட்ட அதிகார வரம்பு மீறலுக்கு, ஆளும் அரசுகளுக்குப் போதிய கால இடைவெளி வாய்ப்பைக் கொடுக்கவே தவணை முறைத் தேர்தல் அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது.

இத்தகைய செயலால் தேர்தல் ஆணையம் மக்களிடம் நம்பகத் தன்மையை இழந்து வருகிறது என்பது ஒருபுறம் இருந்தாலும், அதையும் மீறித்தான் மக்கள் தங்கள் சனநாயகக் கடமையைச் செய்ய வேண்டி இருக்கிறது.

பாஜக பிடியிலிருக்கும் தேர்தல் ஆணையம் மீண்டும் தன்னாட்சி ஆணையமாக மாறவேண்டும்.

அதற்கு மோடியின் பாஜக அரசையும், ஆர்எஸ்எஸ் கூட்டத்தையும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்!

 

Pin It