மத வெறிக் கூட்டத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். நரேந்திர மோடிக்கு நடிக்கத் தெரியும், உண்மைக்கு மாறாகப் பேசத் தெரியும், 10 கோடி ரூபாய்க்குக் ‘கோட்’ போடத் தெரியும்.

மக்கள் நலனைப் பற்றி மட்டும் அவருக்குச் சிந்திக்கத் தெரியாது.

இந்தியப் பிரதமர்களில், மோடியைப் போல உலக நாடுகளின் இண்டு இடுக்குகளில் எல்லாம் மக்கள் பணத்தில் சுற்றித் திரிந்தவர் யாருமில்லை.

அவர் எங்கு போனாலும் இந்து மத வெறி அவருடன் போகும்.

தமிழர்கள் என்றாலும், தமிழகம் என்றாலும் எட்டிக்காயாக கசக்கும் மோடிக்கு. தமிழகத்தில் மத வெறியை தூண்டவேண்டும் என்றால் மட்டும் இனிக்கும்.

கோவையை அடுத்த வெள்ளிங்கிரி மலைப்பகுதி ஓர் இயற்கை வனப்பகுதி. விலங்குகள், குறிப்பாக யானைகள் நடமாடும் வழித்தடங்கள் இங்கு இருக்கின்றன.

இப்படிப்பட்ட இயற்கைச் சூழ்நிலையில் பல இலட்சம் ஏக்கர்களை வளைத்து, காடுகளை அழித்து, முறையான அனுமதி கூட இல்லாமல் ஈசா யோக மையம் என்ற ஒரு மதவாத நிறுவனத்தைக் கட்டியிருக்கிறார். ஜக்கி வாசுதேவ் என்பவர்.

இதற்கு அந்த பகுதி மக்களிடம் இருந்து கடும் எதிர்ப்புகள் வலுத்துக்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் இங்கே 112 அடி உயரத்திற்கு ஆதியோகி சிவன் முகச்சிலை என்று ஒரு கற்சிலையைக் கட்டியிருக்கிறார்கள்.

அச்சிலையால் நாட்டுக்கோ, மக்களுக்கோ பயன் ஏதும் ஏற்படப்போவதில்லை. மாறாக மதவாதச் சிந்தனைதான் தலை தூக்கும். அப்படிப்பட்ட சிலையைத் திறக்க இந்தியப் பிரதமர் மோடி வருகிறார்.

தமிழ்நாட்டில் வர்தா புயல், மழையால் வட தமிழகம் ஏறத்தாழ அழிவு நிலைக்கே சென்று, மக்கள் வாழ்க்கை சின்னாபின்னமானது.

அதைப் பார்க்கத் தமிழகம் வராத பிரதமர்...

சென்னை மெரினா கடற்கரையில், சல்லிகட்டுக்கு ஆதரவு என 10 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டு, பிற மாவட்டங்களிலும் மக்கள் வீதிக்கு வந்தபோது, தமிழகம் நிலைகுலைந்து போனது.

அப்போது தமிழகம் வராத பிரதமர்...

கர்நாடகம், கேரளம் இருமாவட்டங்களின் தடுப்பால் நீர்வரத்து இன்றி கழனிகள் எல்லாம் பாலையாகி, விவசாயிகள் மரணம் அடைந்துக்கொண்டு இருந்தார்கள்.

அப்போது தமிழகத்தைத் திரும்பிப் பார்க்காத மோடி...

மதவாத ஈஷா மைய சிலை திறப்பதற்கு மட்டும் தனி விமானத்தில் வந்து சென்று இருக்கிறார்.

இப்படி ஒரு பிரதமர் நாட்டிற்கு தேவையா?

எஞ்சி இருக்கும் ஆட்சிக் காலத்தில் இன்னும் என்னென்ன செய்யப் போகிறார்களோ, நமக்குத் தெரியவில்லை.

ஒரு வேளை அந்த கற்சிலைக்குத் தெரிந்திருக்குமோ என்னவோ-!