பக்திவேடம் போட்டு வேலெடுத்து சுற்றித்திரிந்த காவிக் கூட்டத்தார், இப்போது முருக வேடமிட்டு முருகனைத் தூக்கத் தொடங்கி விட்டார்கள், தமிழ்நாட்டில்.

தமிழ்மீது எக்கச்சக்கமான அக்கரையினால் காசியில் தமிழ்ச் சங்கம் கூட்டி தமிழ் வளர்க்கிறார்களாம்.

எப்படி? வழக்கில் இல்லாத சமஸ்கிருதம் என்ற மொழியை வளர்க்க 2,532. 59 கோடி ரூபாவை ஒதுக்கி இருக்கும் ஒன்றிய அரசு, தமிழ் உள்பட ஐந்து தென்மாநில மொழிகளுக்கும் சேர்த்து வெறும் 147. 56 கோடியைத்தான் ஒதுக்கியிருக்கிறது.

இதைத்தான் நம்முடைய முதலமைச்சர் "போலிப் பாசம் தமிழுக்கு, பணமெல்லாம் சமஸ்கிருதத்திற்கு" என்று வெளிப்படையாகக் கூறியிருக்கிறார், காவிகளின் தமிழ்ப் பாசம் குறித்து.

தமிழர்களின் நாகரீகம், பண்பாடு மிக உயர்ந்தது என்று முன்பு தமிழ்நாட்டில் பேசியிருந்தார், பிரதமர். ஆனால் கீழடி நாகரீக ஆய்வறிக்கையை மட்டும் அவரின் அரசு ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

ஏனென்றால் கீழடி தமிழர் நாகரீகம், சிந்துவெளியை விடவும் காலத்தால் மிக முந்தையது.

காவிகள் இன்னமும் தேடிக்கொண்டு இருக்கும் 'இல்லாத' சரஸ்வதி நதிநாகரீகம் ஏதோ மண்ணுக்குள் ஓடிக் கொண்டிருப்பதாக ஒரு கேள்வி.

இந்தக் காவிக் கூட்டத்திற்கு நம்மூர் இலையும், சில தழைகளும் துணை போகின்றன, கூட்டணி என்ற பெயரால்.

ஏன் இந்த சடுகுடு விளையாட்டு? எல்லாம் நெருங்கிக் கொண்டிருக்கும் தேர்தலுக்காகத் தான்!

கொள்கையைச் சொல்லி தமிழ்நாட்டு மக்களிடம் வாக்கு வாங்க முடியாது பாஜகவால். இனி தமிழ்நாட்டில் வேலை இல்லை, காசிக்கே போக வேண்டும், பாஜக, என்பது அதற்குத் தெரியும். ஆகவே ராமஜென்மபூமி என்று அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தார்களே,

அதுபோல் குன்றம் காப்போம், சிக்கந்தர் மலை என்று இங்கும் கலவரம் உருவாக்கக் காவிகள் கனவு காண்கிறார்கள். இனி தமிழ்நாட்டில் வேலை இல்லை, காசிக்கே போகட்டும், பாஜக!

அவர்களின் கனவும், முயற்சியும் தமிழ்நாட்டில் பலிக்காது என்றாலும், நாம் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று ஏனோ தானோவாக இருந்து விடக்கூடாது.

தேர்தல் ஒன்றும் புதிதல்ல திமுகவினருக்கு. தேர்தல் களத்தில், முதல்வர் சொன்னதுபோல ''களப்பணி ஆற்றுவோம், வெற்றி பெறுவோம்''.

மீண்டும் முதலமைச்சர் நம் ஸ்டாலின் தான், 2026ஆம் ஆண்டும், தொடர்ந்தும்!

- கருஞ்சட்டைத் தமிழர்