ஒன்றிய அரசின் பரிந்துரையின்படி ஆளுநர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டாலும், அவர் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள்தான் செயல்பட வேண்டும்.

அரசியல் சாசனப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட மாநில அரசைவிட ஆளுநரின் அதிகாரம் பெரிதல்ல. உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் இதை உறுதி செய்கின்றன.

இது இப்படி இருக்க ஆளுநர் ஆர்.என்.ரவி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.கழக அரசுக்கு எதிராக, தனியொரு ‘ராஜாங்கத்தை’ நடத்த முயன்று கொண்டிருக்கிறார், ஓர் அரசியல்வாதியைப் போல.

தொடர்ந்து சனாதனம், ஒரே நாடு, ஒரே கலாசாரம், திராவிட மாடல் முடிந்துவிட்டது போன்ற அரசியலைப் பேசுகிறாரே ஒழிய ஓர் ஆளுநராகப் பேசியதும் இல்லை, நடந்து கொண்டதும் இல்லை.

அண்மையில் நீலகிரி ராஜ்பவனில் துணைவேந்தர்களைத் தன்னிச்சையாகக் கூட்டி வைத்து பேசியதும் கூட அப்படித்தான் இருக்கிறது.

தமிழ்நாடு முதல்வர் அந்நிய முதலீடுகளை ஈர்த்துத் தமிழ்நாட்டில் தொழில் முனைவோர்களைக் கொண்டுவர வெளிநாடுகளுக்குச் சென்றிருந்தார். இது முதல்வர் என்ற முறையில் அவரின் கடமை. அதைச் செய்திருக்கிறார், சரியாக.

ஊட்டியில் ஆளுநர் பேசுகிறார், வெளிநாட்டிற்குச் சென்றால் முதலீடு வந்துவிடுமா? என்று.

ஆளுநரே, உமக்கேன் இந்தக் கவலை? குஜராத் முதல்வராக இருந்த மோடியும் கூட, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இதே வேலைக்குச் சென்றாரே. அதையும் சேர்த்து சொல்லி இருக்கலாமே.

தேசியக் கல்விதான் சரியானது, நாட்டுக்கு உகந்தது. தமிழ்நாட்டின் கல்வியின்தரம் சரிந்து விட்டது. ஆகவே தேசியக் கல்விக் கொள்கையைப் பரிசீலிக்க வேண்டும் என்பது போலப் பேசியும் இருக்கிறார் அவர்.

ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியின்படி இந்திய ஒன்றிய அளவில் சென்னை மாநிலக் கல்லூரி 3ஆம் இடத்திலும், கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி 4 ஆம் இடத்திலும், சென்னை இலயோலா கல்லூரி 7ஆம் இடத்தில் இருக்கிறது என்றால், தமிழ்நாட்டில் கல்வியின் தரம் குறைந்தா இருக்கிறது.

மாநிலக் கல்விக் கொள்கைதான் தமிழ் நாட்டுக்கு உரியது.

ஆளுநர் ரவி எதுவும் தெரியாமல் பேசவில்லை. எல்லாம் தெரிந்தேதான் பேசுகிறார். தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். ஏஜன்ட் வேலையைப் பார்ப்பதை நிறுத்திக் கொண்டு அண்ணாமலையைப் போல் அரசியல் வாதியாக வரட்டும்.

அதை விட்டுவிட்டு ஆளுநர் போர்வையில் ஆர்.எஸ்.எஸ். வேலை பார்க்க வேண்டாம்.

இப்பொழுது அவர் பதவி விலக வேண்டும். அல்லது மக்கள் சக்தி அவரைப் பதவியில் இருந்து விலக்க வேண்டும்!

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It