ஊழலை ஒழிக்கப் புறப்பட்டு விட்டதாய், ஊரெங்கும் முரசறைந்து கொண்டிருக்கும், த.வெ.க தலைவர் விஜய், கட்ட வேண்டிய வரியை மறைத்ததற்காக, வருமான வரித்துறை அவருக்கு 1.5 கோடி ரூபாய் தண்டம் விதித்தது சரியானதே என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது!
2015 ஆம் ஆண்டு, அவர் வீடு சோதனையிடப்பட்ட போது, ஆவணங்கள் பல கைப்பற்றப்பட்டன! அந்த ஆண்டிற்கான தன்னுடைய வருமானம் 35.42 கோடி என்று அவர் அறிவித்திருந்தார். ஆனால் அந்த வருமானத்தில், புலி என்னும் படத்தில் நடித்ததற்காக அவர் பெற்ற 15 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படவில்லை!
அதன் மீது விசாரணை நடத்திய வருமான வரித்துறை 2022 ஜூன் மாதம் 1.5 கோடி ரூபாய் தண்டம் (Fine) விதித்தது !
அதையும் கட்ட மறுத்து, அவர் நீதிமன்றத்திற்குச் சென்றார். இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி, செந்தில் ராமமூர்த்தி அவர்கள், வருமான வரித்துறையின் அந்தக் குறிப்பிட்ட நடவடிக்கை சரிதான் என்று தீர்ப்பளித்திருக்கிறார்!
அடுத்த கட்டமாக, அவர் உச்ச நீதிமன்றத்திற்கு, மேல் முறையீட்டுக்குச் செல்லலாம். இருப்பினும், விஜய் தரப்பிலிருந்து நீதிமன்றத்தில் என்ன வாதம் வைக்கப்பட்டது என்பதை நாம் கவனிக்க வேண்டும்!
எந்த ஒரு வருமானத்தையும் மறைக்கவில்லை என்று அவர் தரப்பு வாதம் முன்வைக்கப்படவில்லை.
மாறாக, 2019 ஆம் ஆண்டிற்குள் தண்டம் விதித்திருக்கப்பட வேண்டும். ஆனால், அதனைத் தாண்டி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகே வருமான வரித்துறை தன் முடிவை அறிவித்தது. எனவே அது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்பதுதான் விஜய் தரப்பு முன்வைத்த வாதம்!
இப்போது அந்த வாதத்தையும் உயர்நீதிமன்றம் புறக்கணித்து விட்டது! இதனைத் தவிர்த்து வேறு காரணங்களுக்காக மட்டுமே மேல்முறையீட்டுக்குப் போகலாம் என்று கூறிவிட்டனர்!
இதுபோன்ற வருமான வரித்துறை தொடர்பான வழக்குகள் ஏற்கனவே பல நடந்துள்ளன. இனியும் நடக்கும் ! ஆனாலும் ஊழலை ஒழிப்பதே தன் வாழ்நாள் லட்சியம் என்று சொல்லி, அதற்காகவே ஒரு கட்சியையும் தொடக்கி இருக்கிற விஜய் அவர்கள், தன்னளவில் கூட நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது!
ஊழலை வேட்டையாடும் புலியாகத் தான் புறப்பட்டுள்ளதாகக் கூறிக் கொள்ளும் விஜய், புலி படத்தில் நடித்ததற்காக பெற்ற தொகையைக் கூட கணக்கில் காட்டவில்லை என்றால், நமக்குள் ஒரு கேள்வி எழுகிறது - இவர் புலியா இல்லை வெறும் வரிப் புலியா?
- சுப. வீரபாண்டியன்