2020 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான லடாக் மோதல் குறித்து ராணுவ ஜெனரல் எம்.எம்.நரவனே எழுதி, இதுவரை வெளிவராத புத்தகம் குறித்து - எழுதப்பட்ட கட்டுரையினைக் கையில் வைத்துக் கொண்டு நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன் பேச்சைத் தொடங்கினார், 2026, பிப்ரவரி 2 ஆம் நாள், நாடாளுமன்றத்தில். உடனே பாஜக உறுப்பினர்கள் கூச்சம் குழப்பத்தில் ஈடுபட்டு, அவை ஒத்திவைக்கப்பட்டது.
எதிர்கட்சி உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் போன்றோர் ராகுலைப் பேசவிடும்படி எழுந்து கேட்டதற்கு அவர்கள் உட்பட 8 உறுப்பினர்களை சஸ்பென்ட் செய்துள்ளார் அவைத்தலைவர்.
நாடாளுமன்றம் என்பது நாட்டு நிலைமைகள் குறித்து உறுப்பினர்கள் பேசவும், விவாதங்கள் செய்வதற்கு மான இடம். அது மக்கள் பணத்தால் கட்டப்பட்டது, பாஜகவின் அடாவடிக்கான இடம் அல்ல.
தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சொல்வதைப் போல அங்கே ஆளும் கட்சியினர் நினைப்பதைப்போல எல்லாம் பேச முடியாது. அப்படிப் பேசினால் அங்கே விவாதங்கள் கூட தேவையற்றவை ஆகிவிடும்.
ராகுல்காந்தியின் பேச்சு அல்லது கேள்விக்கு, அரசு உரிய விளக்கத்தைச் சொல்லிவிட்டால், தொடர்ந்து அவை சுமுகமாக நடைபெறும். அதைவிடுத்து சர்வாதிகாரத் தனமாக உறுப்பினர்களை அவை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள விடாமல், சஸ்பென்ட் செய்வதெல்லாம்
மக்களாட்சியின் மாண்புக்கு இழுக்கைத் தேடித்தரும் செயலாகும்.
இடைநீக்கம் செய்யப்பட்ட உத்தரவை, உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளில் கலந்துகொள்ள ஏதுவாகத் திரும்பப் பெற வேண்டும், அவைத்தலைவர்.
அது மக்கள் மன்றம். மக்கள் பணத்தை வீணடிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை!
- கருஞ்சட்டைத் தமிழர்