நிதி நிலை அறிக்கை என்பது பொதுவாக அரசு எவ்வளவு செலவு செய்தது, எவ்வளவு சம்பாதித்தது என்று குறிப்பிடும் ஒரு கணக்கு அறிக்கை ஆகும். அந்த அறிக்கையின் முடிவு உபரியாகவோ அல்லது பற்றாக்குறையாகவோ இருக்கலாம். கெடுவாய்ப்பாக மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு அமைந்த பிறகு இந்த நடைமுறை நிதியமைச்சர் ஆண்டுக்கொரு முறை பிரமாண்டமான அறிவிப்புகளை வெளியிடும் தளமாக மாறி விட்டது.

nirmala sitharaman on budget “ரூபாய் 12 லட்சம் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை” என்ற அறிவிப்பே இந்த நிதி நிலை அறிக்கையில் முக்கிய அம்சமாக கூறப்படுகிறது. இந்தியாவில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் 8 கோடி பேர். அதில் 5 கோடி பேர் வருமான வரி கணக்கைச் சமர்ப்பித்து வரி செலுத்தாதவர்கள். மீதமுள்ள 3 கோடி பேர் தான் வருமான வரி செலுத்துபவர்கள். 140 கோடி பேர் வாழும் இந்தியாவில் வெறும் 3 கோடி பேர் மட்டுமே பயனடையும் ஒரு அறிவிப்பு எவ்வாறு நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும். தனிநபர் ஆண்டு வருமானமாக ரூ.12 லட்சம் வரை பெறுபவர்கள் வருமான வரி செலுத்தத் தேவையில்லை என்று அறிவித்து விட்டு அதன் பிறகு ரூ. 8 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு 10% வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஜி.எஸ்.டி வரி விகிதத்தில் பல்வேறு தரப்பினர் கோரிய சலுகைகள் அளிக்கப்பட்டிருந்தால் அதன் மூலம் பெரும்பான்மையான மக்கள் பலன் பெற்றிருப்பர். ஆனால் ஜி.எஸ்.டி வரியில் எந்த ஒரு சலுகையும் அளிக்கப்படவில்லை.

காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பு இது வரை 74 சதவிகிதமாக இருந்தது. தற்போது அது 100 சதவிகிதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் பொதுத்துறை நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழகம் (எல்.ஐ.சி) அந்நிய முதலீட்டாளர்களுக்கு தாரை வார்க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தனிப் பெரும்பான்மை இல்லாத இந்த அரசை தாங்கி நிற்கும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் ஆளும் பீகாரில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆகவே 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையில் “பீகார் மாநில விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளுக்கான புதிய திட்டம், பீகாரில் தேசிய உணவு தொழில் நுட்பம் மற்றும் மேலாண்மை பயிலகம், பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னா விமான நிலையம் விரிவாக்கம், பாட்னா ஐ.ஐ.டி உள்கட்டமைப்பு விரிவாக்கம், நீர் அல்லி வாரியம், கிரீன்பீல்டு விமான நிலையம், மேற்குக் கோஷி கால்வாய் திட்டம், பூர்வோதயா முன்முயற்சி திட்டம்” போன்று பீகாருக்கு சாதகமான அம்சங்கள் பெருமளவில் இடம் பெற்றுள்ளது. இதனால் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தது ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையா அல்லது பீகார் மாநிலத்தின் நிதி நிலை அறிக்கையா என்ற ஐயம் அனைவருக்கும் எழுந்துள்ளது.

அண்மையில் மணிப்பூரை ஆளும் பா.ஜ.க அரசுக்கான ஆதரவை நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் விலக்கிக் கொண்டது. அதே போல் ஒன்றிய அரசுக்கான ஆதரவையும் ஐக்கிய ஜனதாதளம் விலக்கிக் கொண்டு விடுமோ என்ற அச்சத்தில் அக்கட்சியின் தலைவரான பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை திருப்திப்படுத்தும் நோக்கில் ஒன்றிய அரசு பீகாருக்கு பல்வேறு திட்டங்களை வாரி வழங்கியுள்ளது. ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கென இந்த நிதி நிலை அறிக்கையில் எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை. செங்கோலின் சிறப்பை பற்றிய திருக்குறளை வாசித்த நிதியமைச்சரின் செவிகளுக்கு “பல்வேறு மாநிலங்கள் கூட்டமைப்பாக உள்ள ஒன்றியத்தில் தங்கள் அரசியல் சுயலாபத்திற்காக ஒரு மாநிலத்திற்கு மட்டும் வளர்ச்சித் திட்டங்களை வாரி வழங்குவது தான் செங்கோன்மையா” என்று முழக்கமிடும் மக்களின் உரிமைக் குரல் கேட்கிறதா.

இப்போது இல்லையெனினும் விரைவில் மக்களின் உரிமைக் குரல் உரக்க கேட்கும்!

அன்று ஆளும் பாசிசம் தோற்கும்!!

- வழக்கறிஞர் இராம. வைரமுத்து