சண்டிகரில் மாநிலத் தேர்தல் கூட அல்ல, அது ஒரு மேயர் தேர்தல்தான்.

அதில் கூட ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்று விடக்கூடாது என்று நினைப்பதில் தவறில்லை. ஆனால் வெறிபிடித்துச் ‘சகுனித்தனம்’ செய்திருக்கும் பாஜக ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு பாசிச சக்தி என்பது அம்பலமாகி உள்ளது.

மேயர் தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி, பாஜகவை விடக் கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளது. ஆனால் தேர்தல் நடத்திய அதிகாரி அனில் மசிஹ், ஆம்ஆத்மியின் 8 வாக்குகளைப் பேனாவில் குறியிட்டுத் ‘தில்லுமுல்லு ‘ செய்து பாஜக வெற்றிபெற்றதாக அறிவிக்கிறார்.

ஆம்ஆத்மி உச்சநீதிமன்றம் சென்றது. அதற்குள் ஆம் ஆத்மியின் 3 உறுப்பினர்களை ஆசைகாட்டி இழுத்துக் கொண்ட பாஜக மறுதேர்தல் வைக்கலாம் என்று ‘சாணக்கிய ‘த்தில் இறங்கியது.

தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு அதற்கு இடம் கொடுக்கவில்லை. வழக்கை வீடியோ பதிவு, நேரடி விசாரணையின் மூலம் தேர்தல் அதிகாரியின் அத்துமீறல், ஒரு கட்சிச்சார்பு நிலையை உறுதிசெய்து, சட்டப்பிரிவு 142 இன் அடிப்படையில் ஆம்ஆத்மி வெற்றிபெற்றதாகத் தீர்ப்பை வழங்கி விட்டது.

நீதிபதி சந்திரசூட், “சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்தது ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் சம்பவம். ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயலாகத்தான் நான் இதனைப் பார்க்கிறேன். தேர்தல் நடத்தும் அதிகாரி சண்டிகர் மேயர் தேர்தலில் வாக்குச்சீட்டுகளைச் சிதைத்துள்ளார் என்பது அந்த வீடியோவில் வெளிப்படையாகவே தெரிகிறது. நிச்சயமாக அவர் விசாரிக்கப்பட வேண்டும்” எனக் கருத்தும் தெரிவித்துள்ளார்.

ஒரு சிறிய மேயர் தேர்தலுக்கே இப்படி ‘தகிடுதத்தம்’ செய்யும் மதவாக பாசிச பாஜக, அரசியல் சக்திமிக்க நாடாளுமன்றத் தேர்தலில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

‘இந்தியா’ கூட்டணியின் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், மக்களுக்கும் சண்டிகர் ஓர் எச்சரிக்கை மணி.

கரணம் தப்பினால் மரணம். பாஜகவைத் தோற்கடிப்போம்!

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It