இன்று நடந்து கொண்டிருக்கும் திராவிட மாடல் ஆட்சி, திரும்பும் திசையெல்லாம் பெண்களின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும், வலிவூட்டும் ஆட்சியாகவே உள்ளது!
புதுமைப் பெண் திட்டம், விடியல் பயணம் என்று பெண்களுக்கான பல நலத்திட்டங்கள் இன்றைய ஆட்சியில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன என்றாலும், மகளிர் உரிமை தொகைத் திட்டம், பெரும் வரவேற்பை மக்களிடையே பெற்றுள்ளது !
அத்திட்டத்தால், ஏற்கனவே ஏறத்தாழ ஒரு கோடியே 14 லட்சம் பெண்கள் பயன் பெற்று வருகின்றனர். இப்போது அத்திட்டத்தை மேலும் 15 லட்சம் பெண்களுக்கு, அரசு விரிவு படுத்தி உள்ளது! ஆக மொத்தம் ஒரு கோடியே 29 லட்சம் பெண்களுக்கு இதனால் ஓர் ஆதரவு கிடைக்கிறது. அதாவது, தமிழ்நாட்டில் உள்ள மொத்தப் பெண்களின் தொகையில், சரி பாதிக்குச் சற்றுக் குறைவாக இந்த எண்ணிக்கை அமைந்துள்ளது !
இரண்டாவது விரிவாக்கத் திட்டத்தின் தொடக்க விழா, நேற்று (டிசம்பர் 12) சென்னையில் நடைபெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்!
இந்த விழாவிற்குக் கிருஷ்ணம்மாள் ஜெகநாதனும் அழைக்கப்பட்டிருந்தார். அவர் வினோபாவின் சீடர்களில் ஒருவர். அந்த நாளிலேயே சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்! அவரின் உழவர் நில உரிமைச் சங்கத்திற்கு, ஏற்கனவே நம் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களும், இன்றைய கழகத்தின் தலைவர் அவர்களும் பல்வேறு உதவிகள் செய்துள்ளனர் என்பதை, அவர் இந்து குழுமம் வெளியிட்டுள்ள நூலில் தெரிவித்திருக்கிறார்.
இவையெல்லாம் வரும் தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காகவே செய்யப்படுகின்றன என்று சிலர் குறை கூறுகின்றனர்.
தேர்தல் அரசியலில், மக்களுக்கு நன்மைகளைச் செய்து, அவற்றின் மூலம் வாக்குகளைப் பெறுவதில் தவறு ஒன்றுமில்லை!
ஆனால் இன்றைய திராவிட மாடல் ஆட்சி செய்வதெல்லாம் வெறும் வாக்குகளுக்காக மட்டும்தான் என்று சொல்ல முடியாது! இப்போதெல்லாம் பெண்களுக்குக் கருப்பைப் புற்றுநோய் கூடுதலாக வருவதைப் பார்க்கிறோம். இதற்கும் தமிழ்நாடு அரசு, ஒரு செயலைத் தொடங்கி உள்ளது!
9 வயது முதல் 14 வயது வரையிலான, இளம் பெண்களுக்குப் புற்றுநோய்த் தடுப்பூசி போடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது !
இது பெண்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளி ஏற்றும் நல்லதொரு திட்டம் என்பதை எதிரிகள் கூட மறுக்க முடியாது. அதே நேரத்தில், இதனை வெறும் வாக்குகளைப் பெறுவதற்கான திட்டம் என்றும் சொல்லி விட முடியாது!
அவர்கள் யாருக்கும் இந்தத் தேர்தலில் வாக்குகள் இல்லை. 9 முதல் 12 வயது வரையிலான பெண்களுக்கு அடுத்த தேர்தலிலும் வாக்குகள் இல்லை! எனவே அடுத்த தேர்தலை மட்டும் நெஞ்சில் நிறுத்தாமல், அடுத்த தலைமுறையை நினைவில் கொண்டு செயலாற்றுகிறது இன்றைய தமிழ்நாடு அரசு !
எனவேதான் இன்றைய அரசை, திசை வழிகாட்டும் திராவிட அரசு என்று சொல்லி நாம் கொண்டாடுகிறோம்!
- சுப.வீரபாண்டியன்