ஏப்ரல் 24ஆம் நாள் 1820ஆம் ஆண்டு, கனடா நாட்டின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் பிறந்தார் ஜி.யூ.போப். இவரின் பெயர் (Georg Uglow) ஜார்ஜ் யூக்லோ.
இவரின் தாயார் கேதரின் யூக்ளோ. தந்தை ஜான்போப்.
1826ஆம் ஆண்டு, இவர்கள் குடும்பம் கனடாவில் இருந்து இங்கிலாந்தில் குடியேறியது. அப்போது ஜி.யூ.போப்பின் வயது 6.
இங்கிலாந்தில் ஹாக்ஸ்டன் கல்லூரியில் பயின்ற இவர், தன் 19ஆம் வயதில் 1839 ஆம் ஆண்டில் தமிழகம் வந்தார்- கப்பல் மூலமாக.
இலண்டன் பைபிள் சங்கத்தில் சேர்ந்து, கிருத்துவ சமயப் பணிக்காக வந்த போப் சென்னை சாந்தோமில் தங்கினார்.
சென்னையில் இருந்த இங்கிலாந்து, கிருத்துவத் திருச்சபையில் சேர்ந்து, அங்கு ‘குரு‘ பட்டம் பெற்றார். பின்னர் சமயப்பணி ஆற்றும் பொருட்டு இவர், தூத்துக்குடி அருகில் உள்ள சாயர்புரம் என்ற சிற்றூருக்குச் சென்றார்.
அங்கே இராமானுஜக் கவிராயரிடமும், ஆரியங்காவுப் பிள்ளையிடமும் தமிழ் இலக்கிய இலக்கணங்களைத் திரிபறக் கற்றார். இத்துடன் தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார்.
1850ஆம் ஆண்டு இங்கிலாந்து திருப்பிய போப் அங்கு திருமணம் செய்து கொண்டு தமிழகம் வந்தபோது, அவர் நேராகத் தஞ்சாவூர் சென்று அங்கு தங்கிச் சமயப்பணி ஆற்றத் தொடங்கினார்.
அங்கு இவர் சமயப்பணி ஆற்றிக் கொண்டு இருந்த நிலையில், இவருக்கு முன் ஒரு பிரச்சனை உருவெடுக்கத் தொடங்கியது.
ஏற்கனவே அங்கு இருந்த கிருத்துவர்களும், ஜி.யூ.போப் சமயப்பணியால் கிருத்துவர்களாக ஆக்கப் பட்டவர்களும் போப்பிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தனர்.
அதாவது தாங்கள் கிருத்துவர்களாக மாறும்முன் இந்து உயர்சாதியினராக இருந்தவர்கள். இப்பொழுது கிருத்துவர்களாக மாறி இருக்கிறார்கள்.
ஆகவே இவர்களுக்கு உயர் சாதிய முன்னுரிமை அங்கீகாரம் வழங்கவேண்டும் என்றும் தாழ்த்தப்பட்ட பிற மதம் மாறிய கிருத்துவ மக்களை இவர்களுக்கு இணையாக வைக்கக் கூடாது என்றும் இவர்கள் கோரினார்கள்.
இந்த சாதிய வர்ணாசிரமக் கோரிக்கை கிருத்துவ மதத்திற்குள் நுழைவதை விரும்பாத ஜி.யூ.போப் அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார்.
இறைவனின் முன் அனைத்து மக்களும் சமமானவர்களே. சாதியை வைத்து உயர்வு தாழ்வு பார்ப்பதை நான் ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டேன் என்று உறுதியாய்ச் சொல்லிவிட்டார்.
ஆனால் அவருக்கு மேலிருந்த கிருத்துவச் சபையின் தலைமை, உயர்சாதிக் கிருத்துவர்கள் பக்கம் சார்ந்து நின்றது.
சபைத் தலைமையின் இச் சாதியச் சார்பு நிலையை ஏற்க மறுத்த போப் அவர்கள், தலைமைச் சபைக்கு எதிராக வைத்த கருத்துகள் பயனற்றுப் போயின.
எனவே 16 ஆண்டுகள் தஞ்சையில் சமயப் பணி செய்த அவர், அச்சபையில் இருந்து விலகல் கடிதம் கொடுத்துவிட்டு தன் குடும்பத்துடன் உதகமண்டலம் சென்றார்.
அங்கு ஐரோப்பிய மாணவர்களுக்கு பாடங்கள் எடுத்தார். தமிழ் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார். அங்கு சமயப் பணிகளையும் செய்யத் தவறவில்லை அவர்.
உதகையில் பலரைச் சந்தித்து, ஒரு கூட்டு முயற்சியில் ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவினார் ஜி.யூ.போப்.
அத்தோடு பழைய தமிழ் நூல்களைத் தேடிப் படித்தார். தமிழ் ஓலைச் சுவடிகளைத் தேடிச் சேகரித்த அவர் அவைகளை ஆய்வு செய்யவும் தொடங்கினார்.
இவரின் சமயப்பணியுடன் இணைந்த கல்விப் பணிக்காக இங்கிலாந்து கிருத்துவத் திருச்சபை இவருக்கு ‘மறை நூல் புலவர்’ என்ற பட்டத்தை வழங்கியது.
பின்னர் உதகையில் இருந்து 1871ஆம் ஆண்டு பெங்களூர் சென்று சமய, கல்விப் பணியை பதினொரு ஆண்டுகள் தொடர்ந்து செய்தார்.
அவரின் 62ஆம் வயதில் ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக 1882 ஆம் ஆண்டு அவர் இங்கிலாந்து திரும்பினார்.
இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் 1885 முதல் 1908ஆம் ஆண்டு வரை பேராசிரியராகப் பணியாற்றினார். அப்பொழுது ஆங்கிலேய மாணவர்களுக்குத் தமிழ் மொழிப் பாடங்களைப் பயிற்றுவித்துள்ளார்.
1886ஆம் ஆண்டு திருக்குறளை
‘ஷிணீநீக்ஷீமீபீ ரிuக்ஷீணீறீ’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
புறநானூறு, புறப்பொருள் வெண்பாமாலை நாலடியார் ஆகிய இலக்கிய நூல்களின் பாடல்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இதழ்களில் பதிப்பித்து இருக்கிறார்.
திருவருட்பா, தேவாரம் ஆகிய நூல்களையும் மொழிபெயர்த்துள்ளார். சிவஞானபோதத்தைப் படித்த ஜி.யூ.போப் அவர்கள், அதனை முழுமையாக மொழிபெயர்க்க விரும்பி இருந்தார். ஆனால் சில பாடல்கள் மொழி பெயர்ப்புடன் அப்பணி முற்றுப் பெறமல் போய்விட்டது எனத் தெரிகிறது.
தமிழ் இலக்கணங்களுடன், செய்யுள்களைத் தொகுத்துச் ‘செய்யுள் கலம்பகம்’ என்ற நூலைத் தொகுத்தெழுதி இவரே அதை வெளியிட்டுள்ளார்.
கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பாடலையும், புலவர் இளம்பெருவழுதியின் “உண்டாலம்ம இவ்வுலகம்” என்ற பாடலையும் ஆங்கித்தில் மொழிபெயர்த்த இவர், அதை அச்சிலும் கொண்டுவந்துள்ளார்.
ஜி.யூ.போப் அவர்களின் தமிழ்ப் பணியினைப் பாராட்டி இராயல் எசியாடிக் சொசைட்டி இவருக்குத் தங்கப் பதக்கம் வழங்கிப் பெருமைப் படுத்தி இருக்கிறது.
ஜி.யூ.போப் எழுதிய சில நூல்கள்
1. தமிழ்ச் செய்யுள் கலம்பகம்
2. Extracts from Puranaanooru to Purapporul Venbaa malai
3. Elementary Tamil Grammer
4. The Lives of Tamil Siants
இதழ்கள்
1. Royal Asiatic Quarterly, 2. The Indian Magazine, 3. Siddhantha Deepika
ஜி.யூ.போப் தன் மரணத்திற்கு முன்னர் மூன்று விருப்பங்களைப் பதிவு செய்திருத்திருக்கிறார்.
1. தன் கல்லறைக்குச் செலவிடும் தொகையில் ஒரு சிறு தொகை தமிழ் மக்களின் நன்கொடையாக இருக்கவேண்டும் என்று விரும்பினர். போப்பின் மரணத்தை அடுத்து, பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் செல்வக் கேசவனார் தமிழ் அன்பர்களிடம் நன்கொடை பெற்று அதை இங்கிலாந்துக்கு அனுப்பியுள்ளார்.
2. தன் கல்லறையில் தன் உடலுடன் தன்னால் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள், திருவாசகம் இரண்டையும் வைத்து அடக்கம் செய்ய வேண்டும்.
3. “இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக்கொண்டு இருக்கிறான்” என்று தன் கல்லறைமீது பொறிக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் இந்த கடைசி ஆசை நிறைவேறவே இல்லை. அவரின் கல்லறையில் மேற்சொன்ன வாசகம் எழுதப்படவில்லை.
1908 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 12ம் நாள் தன் 88ஆம் வயதில் பெருந்தகை ஜி.யூ.போப் ‘தமிழ் மாணவனாகவே’ தன் நெடிய துயிலை ஏற்றுக்கொண்டார்& -இங்கிலாந்து மத்திய ஆக்ஸ்போர்ட் பகுதியில் உள்ள செயின்ட் செபல்கரிஸ் கல்லறையில்.