நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மாற்றத்தைத் தரப் போகிறோம் என்று சொல்லி ஆட்சியைப் பிடித்தது த.வெ.க. அவர்கள் ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற இந்த மூன்று மாதங்களில் முக்கியமானதொரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. தொலைக்காட்சி நெடுந்தொடரில் நீண்ட காலமாக நடித்துக் கொண்டிருந்த ஒருவர் மாறும் போது அதே கதாபாத்திரத்தில் இன்னொருவர் "இவருக்கு பதில் இனி இவர்" என்று சொல்லி அறிமுகப்படுத்தப்படுவார். அந்த வகையில் முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கு பதிலாக முதல்வர் விஜய் அரசியல் அரங்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். அவரது அரசியல் செயல்பாடுகளும் இம்மாற்றத்தை உறுதி செய்வதாகவே அமைந்துள்ளது.
அம்மையார் ஜெயலலிதா அவர்கள் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றவுடன் எதிர்க்கட்சியினரையும், தனது தனிப்பட்ட விரோதிகளையும் தொடர்ச்சியாகக்கைது செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். அதேபோல் விஜய் முதல்வர் பொறுப்பினை ஏற்றவுடன் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டனர். அனிதா ராதாகிருஷ்ணன் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படாமல் உடனடியாக அதே நாளில் விடுதலை செய்யப்பட்டார். மார்க்கண்டேயன் சிறையில் அடைக்கப்பட்டு பின்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர்கள் எ.வ. வேலு மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோரை கைது செய்ய த.வெ.க அரசு எடுத்த முயற்சிகளும் பலனளிக்கவில்லை. புதுப்புது வழக்குகளை பதிவு செய்த பின்னும் செந்தில் பாலாஜி அவர்களுக்கு நீதிமன்றம் அவ்வழக்குகளில் பிணை வழங்கியது. அதேபோன்று திமுக ஜென் சி இளைஞர்களான அறிவானந்தம், வினோத் சூர்யா போன்றவர்களை த.வெ.க அரசு கைது செய்ய முயன்ற போதும் நீதிமன்றம் அவர்களை சிறைக்கு அனுப்பாமல் பிணையில் விடுதலை செய்தது.
இதற்கெல்லாம் உச்சமாக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், கர்நாடக அரசு காவிரியில் மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் மௌனமாக இருக்கும் த.வெ.க அரசைக் கண்டித்துத் திமுக தஞ்சையில் நடத்திய போராட்டத்தில் பேசும்போது பெண்களை இழிவுபடுத்திப் பேசியதாகக் கூறி த.வெ.க தஞ்சாவூர் மாவட்ட மகளிரணி நிர்வாகி பைரவி அளித்த புகாரின் பேரில் 9 பிரிவுகளின் கீழ் அவர்மீது தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு (வழக்கு எண் : 287 / 2026) பதிவு செய்யப்பட்டது.
அவ்வழக்கில் அவர் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் தி.மு.க சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கினை தாக்கல் செய்தது. அதை பரிசீலித்த சென்னை உயர்நீதிமன்றம் நண்பகல் 12 மணி வரை அவரை கைது செய்ய தடை விதித்தது. ஆனால் த.வெ.க அரசோ உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி உதயநிதி ஸ்டாலின் அவர்களை கைது செய்து விசாரணைக்காக தஞ்சாவூர் அழைத்துச் சென்றது.
வழக்கினை தொடர்ந்து விசாரித்த உயர் நீதிமன்றம் "உதயநிதி ஸ்டாலின் அவர்களை சிறைக்கு அனுப்பாமல் விசாரணைக்குப் பிறகு அன்றைய தினமே விடுதலை செய்ய வேண்டும்" என்று தீர்ப்பளித்தது. ஆயினும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஏறத்தாழ ஏழு மணி நேரத்திற்கும் மேலான பயணம் மூலம் அலைக்கழிக்கப்பட்டார். கூடுதல் பயண நேரம் ஏற்படும் வகையில் இடையில் பலமுறை வழித்தடங்கள் மாற்றப்பட்டது. இறுதியில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லாமல் செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று உதயநிதி ஸ்டாலின் அவர்கள் விசாரிக்கப்பட்டார். இதற்கு சென்னையிலேயே ஏதேனும் ஒரு காவல் நிலையத்தில் அவரிடம் விசாரணை மேற்கொண்டிருக்கலாம்.
காவல் நிலைய பிணையில் விடுவிக்க இயலாத பிரிவுகளின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த போதிலும், அவரை சிறைக்கு அனுப்பும் திட்டம் இல்லை என்றும் அவர் விசாரணைக்கு பின் உடனடியாக விடுவிக்கப்படுவார் என்றும் உயர்நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்ததன் மூலம் அவர் மீது புனையப்பட்டது பொய் வழக்கு தான் என்பதை நாம் உணர முடிகிறது.
சர்ச்சைக்குரிய நடிகையின் பெயரை தனது உரையில் எந்த ஒரு இடத்திலும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் குறிப்பிடாத நிலையிலும் அவர் மீது இவ்வாறான வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பது அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையே தவிர வேறொன்றுமில்லை.
த.வெ.க அரசு இது போன்ற கைது நடவடிக்கைகளில் நீதிமன்றத்தில் குட்டுக்குமேல் குட்டு வாங்கியது மட்டுமின்றி ஐந்து தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை, கரூர் அரசு பணி நியமனம், த.வெ.க எம்.எல்.ஏவுக்கு லஞ்சம் தர முயன்ற குதிரை பேர புகார் என அனைத்து வழக்குகளிலும் தொடர்ச்சியாக தோல்வியையே தழுவுகிறது.
நெல்லிக்காய் மூட்டை போல் அ.தி.மு.க சிதறி அக்கட்சியினர் த.வெ.கவை நோக்கி வரும் நிலையில் தி.மு.க இரும்புக் கோட்டையாக நிற்பது த.வெ.க அரசுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது. அதனால்தான் இது போன்ற வழக்குகளின் மூலம் தி.மு.கவினரை வளைத்து விடலாம் என்று எண்ணுகிறது த.வெ.க. ஆனால் தி.மு.கவோ இதுபோன்ற சலசலப்புகளுக்கு அஞ்சாமல் சட்டரீதியாக அவற்றை எதிர்கொள்ளும். அரசியல் அரிச்சுவடியே தெரியாத முதல்வர் விஜய் தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்து கொண்டே முதல்வராக இருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களை சிறைக்கு அனுப்பியது என்பதையும், அவருக்கு விதிக்கப்பட்ட நான்காண்டு சிறைத்தண்டனை அவரது மரணத்திற்கு பிறகும் உச்ச நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டது என்பதையும் இனியாவது அறிந்து கொள்ள வேண்டும். தனது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட்டு ஆக்கபூர்வமான அரசியலை மேற்கொள்ள வேண்டும்.
"செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு" என்ற திருக்குறள் கூறும் "காதைக் குடையக்கூடிய கடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொள்கிற பண்பாளரின் அரசுக்குத்தான் மக்களிடம் மதிப்பு இருக்கும் " என்ற பொருளுக்கேற்ப இனியாவது முதல்வர் விஜய் நடந்து கொள்ள வேண்டும்.
- வழக்கறிஞர் இராம. வைரமுத்து