நவீன தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டு இருக்கும் கலைஞர் நினைவிடத்தில் உள்ள, கலைஞர் உலகத்தைப் பார்த்து விட வேண்டும் என்று ஓர் ஆசை இருந்து கொண்டே இருந்தது. நேற்றைக்குத்தான் அந்த வாய்ப்பும் நேரமும் கிட்டின. குடும்பத்தினரோடும் தோழர்கள் மணி, பிரவீன் ஆகியோரோடும் சென்று பார்த்தோம். ஏறத்தாழ இரண்டு மணி நேரம் சுற்றிப் பார்த்த பிறகும், முழுமையாகப் பார்த்து விட்ட நிறைவு இல்லை. பார்த்த வரையில் ஏற்பட்ட வியப்பும் அடங்கவில்லை!

முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் அருகில் அமர்ந்து பலமுறை பேசி இருக்கிறேன். அந்த வாய்ப்பு என் வாழ்நாளில் நான் பெற்ற பெரும்பேறு! ஆனாலும் இந்தக் கலைஞர் உலகத்தில், அவர் அருகிலேயே அமர்ந்து பேசுவது போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியால் கிடைத்த படங்கள் எங்களை வியக்க வைத்தன.

வீட்டுக்குத் திரும்பும் வழியில் ஏதேனும் ஓர் உணவகத்தில் மதிய உணவை முடித்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டோம். ஒரு மரக்கறி (வெஜிடேரியன்) உணவகத்திற்குப் போகலாம் என்றார் என் துணைவியார். ஏன் என்று கேட்டேன். இன்றைக்கு ஆடி வெள்ளி இல்லையா என்றார்.subavee at kalaingar worldஎன்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அதற்கும் நம் உணவுக்கும் என்ன தொடர்பு என்று கேட்டேன். ஏதோ சொல்லுவாங்க என்றார்.

சற்று நேரத்தில், சரி, எந்த உணவகத்திற்கு வேண்டுமானாலும் போவோம் என்று சொன்னார்.

ஒரு விதத்தில் நல்லது. புலால் உணவகத்தில் ஆடிவெள்ளியான இன்று கூட்டம் இருக்காது என்று கருதி, வடபழநியில் உள்ள மதுரை குமார் மெஸ்ஸுக்குப் போனோம்.

எங்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக, அங்கே கூட்டம் நிரம்பி வழிந்தது. இடம் பிடிப்பதற்குக் கூடச் சற்று நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. எல்லா வகையான புலால் உணவுகளையும் மக்கள் ரசித்தும், ருசித்தும் உண்டு கொண்டிருந்தார்கள்.

என் துணைவியார் அயிரை மீன் குழம்பு இருக்கிறதா என்று கேட்டவுடன், மறுபடியும் எனக்கு ஒரு சின்னச் சிரிப்பு வந்தது. "சாப்பிடுவதுன்னு முடிவு செஞ்சுட்டோம். அப்புறம் என்ன?" என்றார். " நல்லது நல்லது இது கேலிச் சிரிப்பு இல்லை, மகிழ்ச்சிச் சிரிப்பு" என்றேன் நான்.

சுற்று முற்றும் பார்த்தேன். இளைஞர்கள் சற்றுக் கூடுதல். பெரியவர்களும் இருந்தார்கள். பெண்கள், ஆண்கள் என்னும் வேறுபாடுகள் இல்லாமல் எல்லோரும் புலால் உணவின் சுவையில் மூழ்கி இருந்தார்கள். ஆடி வெள்ளி எகிறிப் போயிற்று!

ஒரு பக்கம், கோயில், திருவிழா என்று மக்கள் கூட்டம் கூட்டமாகக் கூடினாலும், மறுபக்கம் மத நம்பிக்கைகள், சடங்குகளில் இருந்து விடுபட்டுக் கொண்டும் இருக்கிறார்கள்.

மகிழ்ச்சியாய் இருந்தது!

சில ஆண்டுகளுக்கு முன்பு, லண்டனுக்குச் சென்றிருந்தபோது, ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு தேவாலயத்தில் நான்கில் ஒரு பங்கு அளவு கூட இல்லாமல், மிகக் குறைவானவர்களே அங்கு கூடியிருந்தார்கள். "ஏன் இப்படிக் கூட்டம் குறைவாக இருக்கிறது?" என்று கேட்டேன். இன்று மட்டும் இல்லை, இப்போதெல்லாம் மிக மிகக் குறைவாகத்தான் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயங்களுக்கு மக்கள் வருகிறார்கள். அவர்களும் கூட நூற்றுக்கு 90 பேர் வயதானவர்கள்தான் என்றார் நண்பர்.

அன்றைக்கு ஏற்பட்ட அதே மகிழ்ச்சியைப் போல, இன்றைக்கு மீண்டும் என் நெஞ்சுக்குள் அதே மகிழ்ச்சி பூத்தது!

- சுப.வீரபாண்டியன்