கீற்றில் தேட...

கடுகு 100 கிராம், சீரகம் 100 கிராம் என்று சொல்வது போல, பிரான்ஸ் ஒலிம்பிக் போட்டி 50 கிலோ பிரீஸ்டைல் பிரிவு மல்யுத்தப் போட்டியில் இருந்து 100 கிராம் எடை கூடிவிட்டது என்று கூறி தகுதி நீக்கம் செய்யப் பட்டுள்ளார் இந்திய ஒன்றிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்.

ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்குச் சில கட்டுப்பாடுகள் இருக்கும். பயிற்சியாளர் இருப்பார், ஊட்டச்சத்து உணவு கொடுக்கும் பிரிவு இருக்கும், மருத்துவர் போன்றவர்களின் மேற்பார்வையில் அந்த விளையாட்டு வீரர் கண்காணிக்கப்பட்டுக் கொண்டு இருப்பார்.vinesh phogatவினேஷ் போகத் முந்தைய இரு விளையாட்டுகளிலும் சரியான எடையில் இருந்திருக்கிறார். ஆனால் தங்கப் பதக்கத்தை நோக்கி முன்னேற வேண்டிய போட்டியில் திடீரென்று 100 கிராம் அளவு எடை கூடி விட்டதாம். அதனால் வெளியேற்றி விட்டார்கள்.

சரி, அப்படியே என்றாலும் அவரின் பயிற்சியாளர் என்ன செய்து கொண்டு இருந்தார்? ஊட்டச்சத்து - உணவு வழங்கும் குழு என்ன செய்து கொண்டு இருந்தது? என்று எழும் ஐயத்திற்கு விடை இல்லை இதுவரை.

இதுகுறித்து இந்திய ஒலிம்பிக் சங்கம் எத்தகைய அழுத்தமான நடவடிக்கை எடுத்தது? பிரதமர் மோடி, வினேஷுக்கு ஆறுதல் சொன்னதோடு ஒலிம்பிக் அல்லது பிரான்ஸ் அதிகார மையத்திற்கு இந்திய ஒன்றியத்தின் 'கவலை' யையாவது தெரிவித்திருக்கலாமே!

முன்னால் பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷண் ஷரண்சிங்கின் மீதான பாலியல் புகாரில் வீதியில் இறங்கிப் போராடிய வினேஷ் போகத், ஒலிம்பிக்கில் போராடியும் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

விளையாட்டு வீரர்கள், எதிர்கட்சித் தலைவர்கள் என்று அனைத்துத் தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனங்கள் வருகின்றன.

ஆனாலும் 'மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன். இதற்கு மேல் எனக்கு சக்தி இல்லை' என்று சொல்லி விட்டார் அந்த மல்யுத்த வீரப்பெண் வினேஷ் போகத்.

இது விரக்தியின் உச்சம்.

தங்கம் கிடக்கட்டும். நீ தலைநிமிர்ந்து வா நாட்டிற்கு!

- கருஞ்சட்டைத் தமிழர்