“ஆட்சி வேறு - பகுத்தறிவுப் பாதை என்பது வேறு. பகுத்தறிவுப் பாதையில் நடப்பவர்கள் ஆட்சியிலே இருக்கின்ற காரணத்தால் மதச்சார்பற்ற ஒரு ஆட்சியில் தங்களது சொந்தக் கொள்கைகளை யாரும் நுழைத்துவிடக் கூடாது. மூட நம்பிக்கைகள் களையப்பட வேண்டுமென்றால், அதனைப் பிரச்சாரத்தின் மூலம் மக்களிடையே மனமாற்றம் செய்துதான் செய்ய முடியுமே தவிர, அரசின் மூலமாக ஆணையிட்டுச் செய்திட இயலாது. எங்களைப் பொறுத்தவரையில் சாதி, மதம், மூட நம்பிக்கை ஒழிப்பு போன்ற கொள்கைகளை ஆட்சியின் மூலம் சாதிப்பதைவிட, பிரச்சாரத்தின் மூலம் செய்வதுதான் சரி என்றும், அதுதான் நிலைத்திருக்கும் என்றும் நம்புகிறோம்.”

- கலைஞர், ‘புதிய புத்தகம் பேசுது’ இதழுக்கு அளித்த பேட்டி (‘முரசொலி’ ஜன.22).

கலைஞரின் கருத்தில் நமக்கும் உடன்பாடு உண்டு. ஆனால், கலைஞர் ஆட்சியில்தான், பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கும், மூடநம்பிக்கைகளை தோலுரிக்கும் ஊர்வலங்களுக்கும், காவல்துறை தொடர்ந்து, அனுமதி மறுத்து வருவதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அரசு அலுவலகங்களில் - கடவுள் படங்களை அகற்றக் கோரி, ஆட்சிக்கு வந்தவுடன் அண்ணா பிறப்பித்த அரசாணை செயலிழந்து போய்விட்டது. அரசு அலுவலகங்களிலும், பணிகளிலும் மத நடவடிக்கைகள் இடம் பெறக் கூடாது என்று வாஜ்பாய் ஆட்சி காலத்திலேயேகூட மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு அறிவித்து, அதை சுற்றறிக்கையாக, அன்றைய முதல்வர் ஜெயலலிதா - தமிழக அரசு அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்தார். இந்து மத தீவிரவாதிகளாலேயே வெளியிடப்பட்ட அந்த அறிக்கைகள், இந்த ஆட்சியிலும் அமுல்படுத்தப்படவில்லையே!

காவல் நிலையங்கள் வாஸ்து நம்பிக்கையின்படி, மாற்றியமைக்கப்படுவதும், ‘வாஸ்து மீன்கள்’ வைக்கப்படுவதும் வழக்கமாகிவிட்டது. அரசு வளாகங்களில் கோயில்கள் கட்டப்படுகின்றன.

தமிழக அரசு நிகழ்ச்சிகளான ‘கல்லணை திறப்பு’ மேட்டூர் அணை திறப்புகளின்போது அரசே, பார்ப்பன புரோகிதர்களை அழைத்து, அமைச்சர்கள் புடை சூழ ‘பூமி பூஜை’ நடத்துகிறது. அரசு விளம்பரங்களிலே இவை அறிவிக்கப்படுகின்றன.

இந்த பார்ப்பனிய - மூட நம்பிக்கைகளினால் தான் - தமிழினம், காலம் காலமாக தன்னை உணராமல், தலைசாய்ந்து கிடந்தது என்பதை எடுத்துச் சொல்லி, நம்மைப் போன்ற பெரியார் தொண்டர்கள் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்வதற்கும், காவல் துறை தடை போடுகிறது.

தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் பார்வைக்கு மிகுந்த கவலையோடு, இதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்!

கனிமொழி மீது ‘கடும் கோபம்’

“அசைவ ஓட்டலுக்குப் போகிறவன், அசைவம் சாப்பிட்டே ஆகவேண்டும்; சாப்பிடா விட்டால் அசைவத்தைப் புண்படுத்துவதாகும்”.

“மதுபானக் கடைக்கு நண்பனோடு போகிறவன், குடிக்கும் பழக்கமில்லாவிட்டாலும், குடித்தே ஆகவேண்டும். இல்லாவிட்டால், குடிப்பவர்களைப் புண்படுத்துவதாகும்”.

“திருமண வீட்டுக்குப் போகிறவர்கள் எல்லாம் மணமக்களை வாழ்த்தி, விருந்து சாப்பிட்டு விட்டு வந்துவிடக் கூடாது; அது திருமணத்தையே அவமதிப்பதாகும். கட்டாயம், அனைவரும் ஆளுக்கொரு பெண்ணைத் திருமணம் செய்தேயாக வேண்டும்”.

அதேபோல் - “கோயிலுக்குப் போகிறவர்கள், கோயில் சிற்பங்களை மட்டும் ரசித்து விட்டு வரக் கூடாது; கட்டாயம் சாமி தரிசனம் செய்தேயாக வேண்டும். அப்படி செய்யா விட்டால் இந்துக்களைப் புண்படுத்துவதாகும்”.

- இப்படி பேசுகிறவர்கள் இருந்தால், அவர்களை எந்தப் பட்டியலில் சேர்ப்பது?

இது என்ன பைத்தியக்கார உளறல். இப்படியெல்லாம்கூட ‘புத்திசுவாதீனம்’ உள்ளவன் பேசுவானா? என்னப்பா, காது குத்துகிறாய்? இதைக் கேட்க நான் மாங்காய் மடையனா? அதற்கு வேறு ஆளைப் பாரு என்று பதிலடி பாய்ந்து வரலாம். நாம் ஒன்றும் இல்லாததைச் சொல்லவில்லை. நடந்ததைத் தான் கூறுகிறோம்.

மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, நெல்லையில் கிருஷ்ணாபுரத்திலுள்ள வெங்கடாசலபதி கோயிலுக்கு சென்று, கோயில் சிற்பங்களை மட்டும் ரசித்து பார்த்துவிட்டு, சாமி கும்பிடாமல் திரும்பிவிட்டாராம்; அதாவது, கோயிலுக்குப் போய் சாமி சிலைகளைப் பார்த்துவிட்டு சாமி கும்பிடாமல் திரும்புவது, இந்துமத அவமதிப்பாம்! இது இந்துக்களைப் புண்படுத்தி விட்டதால், மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ‘இந்து முன்னணி’ அறிக்கை வெளியிட்டுள்ளது.

பிரபல இசைக் கலைஞர் ஜேசுதாஸ் பிறப்பால் கிறிஸ்தவராக இருந்தாலும், இந்துக் கடவுள்கள் மீது அபார பக்தி கொண்டவர். பல அற்புதமான பக்திப் பாடல்களைப் பாடியவர். அவர் கடந்த 20-ம் தேதி கேரளாவில் கடம்புழா தேவி அம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்யப் போனபோது, கோயில் அதிகாரிகள் உள்ளே விடவில்லை. இந்துக்கள் அல்லாதவர்கள் (அவர்கள் இந்துக் கடவுளை ஏற்றாலும்) கோயிலுக்கு உள்ளே வர முடியாது என்பதுதான் கோயில் விதி என்கிறார்கள் அதிகாரிகள். ‘நம்பிக்கையுள்ளவர்களை வராதே’ என்பதும், நம்பிக்கை இல்லாதவர்களை தரிசனம் செய்தேயாக வேண்டும் என்பதும் தான் பார்ப்பனர்கள் வகுத்த விதிகள் போலும்!

‘சாவுக்கு வந்தவர்கள் இனி உயிரோடு திரும்பக் கூடாது; அது செத்தவர்களை அவமதிப்பதாகும். இதற்கு தி.மு.க. அரசு ஒரு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும். இல்லாவிட்டால், இந்துக்களைத் திரட்டிப் போராடுவேன்’ என்று ராமகோபாலன் அறிவித்தாலும், ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

‘இப்போதெல்லாம் - துப்பாக்கிமுனையில் தான் பக்தியைப் பரப்ப வேண்டியிருக்கிறது; கடவுளுக்குத்தான் சக்தி இல்லையே’ என்கிறார், ஒரு தோழர். இதைச் சொன்னாலும், நம்மீது பாய வரும்; இந்து முன்னணி.

Pin It