மோடியைப் பதவியில் இருந்து இறக்குவதற்காக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வரவில்லை.

நாற்பது நாள்களுக்கும் மேலாக மணிப்பூர் கலவரம், கொலைகள், நிர்வாணப் பாலியல் கொடுமை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அது குறித்துப் பேசாமல் வாய்மூடியிருக்கும் நாட்டின் பிரதமரைப் பேச வைக்கத்தான் இத்தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

நம்பிக்கையில்லாத் தீர்மாமானத்தின் மேல் பேசிய மோடி 2 மணி 12 நிமிடங்கள் பேசினார். இதில் 1 மணி 58 நிமிடம் வரை மணிப்பூரைப் பற்றி அவர் வாயில் இருந்து ஒரு வார்த்தை கூட வெளி வரவில்லை. வெறும் 14 நிமிடங்கள் மட்டும் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்பது போலப் பேசியிருக்கிறார்.

நாட்டின் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த மணிப்பூர் துயரத்தைப் பேசாமல் ஏறத்தாழ இரண்டு மணிநேரம் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளைத் தாக்கியும், கேலி - கிண்டலுமாகப் பேசியிருக்கிறார் மோடி. அதற்கு சிரித்து, கும்மாளமிட்டு மகிழ்ச்சியில் திளைத்துப் போனார்கள் பா.ஜ.க வினர்.

ஒரு பிரதமருக்குத் தன் நாட்டின் மாநிலம் ஒன்றின், மக்களின் கொடுமையான துயரத்தை எப்படிக் களைவது, எப்படிப் பேசுவது என்பது கூடவா தெரியவில்லை?

இது ஒருபுறம் இருக்க, மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா புதிய மசோதாக்களைத் தாக்கல் செய்துள்ளார்.

இதுவரை நடை முறையில் இருந்த இந்திய குற்றவியல் சட்டத்திற்குப் பதிலாக ( IPC), பாரதிய நியாய சம்ஹிதா 2023 என்றும், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்குப் பதிலாக (CRPC), பாரதிய நாகரிக் சுரக்ஷா 2023 என்றும், இந்திய சாட்சிகள் சட்டத்திற்குப் பதிலாக (IEC), பாரதிய சாக்ஷிய விதேயக் 2023 என்றும் பெயர்களை இந்தியில் மாற்றி, வரையறுக்கப்பட்ட மூன்று மசோதாக்களை அவையில் தாக்கல் செய்துள்ளார். பன்முகம் கொண்ட இந்திய ஒன்றியத்தைக் கோர முகமாக்கும் வேலையல்லவா இது!

தேச ஒற்றுமையைக் குலைப்பவர்களுக்கு ஆயுள் தண்டனையாம். என்ன அது தேச ஒன்றுமைக் குலைப்பு? தமக்கு வேண்டாதவர்களைப் பழி வாங்கும் நோக்கம் இது என்பது புரிகிறது. கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் சர்வாதிகாரமல்லவா இது!

நாடாளுமன்றத்தில் மணிப்பூரை மதிக்கவில்லை, எதிர்கட்சிகளைச் சாடும் வேலையைச் செய்கிறார் மோடி.

இந்தியைத் திணித்து, கருத்துச் சுதந்திரதைப் பறிக்கிறார் அமித்ஷா.

விதைக்கும் விதைகளை நாளை அறுவடை செய்யத்தான் போகிறது பா.ஜ.க.

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It