சுயராஜ்யக் கட்சியைப்பற்றி குமரன் தலையங்கத்திலுள்ள சில குறிப்புகள்:-

“சுயராஜ்யக்கட்சியானது தற்போதைய நிலைமையில் மிகப் பாராட்டத்தக்கதாயிருந்தும் நமது மாகாணத்தைப் பொருத்தமட்டில் அக்கட்சியானது நல்ல நிலையிலில்லை. அது இங்கு வளர்ச்சியடைகிறதென்று கூறவும் முடியவில்லை. இக்கட்சியானது சென்னைப் பத்திரிகைகளின் ஆரவாரத் தாலும், வாசாலகமாகப் பேசும் வல்லமையுள்ள சத்தியமூர்த்தி போன்றவர்களாலும், செல்வாக்கு பெற்ற இரண்டொரு பிராமணத்தலைவர்களாலுமே இயங்கி வருகின்றதென்று கூறுவார் கூற்றை மறுப்பது எளிதன்று.

சென்னை மாகாண சுயராஜ்யக்கட்சியாரின் செல்வாக்கு பிராமண ஜாதியின் ஆதிக்கத்தைப் பலப்படுத்துவதற்குப் பெரிதும் உபயோகப்படுத்தப்படுகிறதென்ற உரையும் பொய்யென்று மறுப்பதற்கில்லை. இம்மாதிரியான நோக்கங்கள் அக்கட்சியின் முன்னணியில் நிற்பவர்களது உள்ளத்தில் பதிந்து கிடக்குமாயின் அக்கட்சி ஒரு நாளும் தமிழ்நாட்டில் வேரூன்றப் போவதில்லை. ஜாதிக் கொடுமையால் நைந்து புண்பட்டுக்கிடக்கும் தமிழ்நாட்டில் புதிய பிராமண சகாப்தத்தை உண்டாக்க சுயராஜ்யக் கட்சித் தலைவர்கள் எண்ணங்கொண்டு அரசியல் பேச முன்வருகிறார்களென்பது உண்மை யானால் அத்தலைவர்களது செல்வாக்கை அடியோடு ஒழித்தற்கு முயலல் வேண்டும்.

ஸ்ரீமான். எம்.கே. ஆச்சாரியார் போன்ற மகான்கள் தோன்றி ஜாதீ வெறி பிடித்து தலைகால் தெரியாது மகாத்மாவையும் இகழ்ந்து வாய்கூசாது புன்மொழி வழங்கி வருவதையும் பார்த்து வருகிறோம்.

அவர் சென்னை சுயராஜ்யக்கட்சியில் ஒரு முக்கிய அங்கத்தினராவர். அவருக்கு சுயராஜ்யக் கட்சியின் முன்னணியாளர் ஆதரவளித்து வருகிறார்களென்பதையும் அறிகிறோம். இம்மாதிரியான சிறுமைக் குணங்களும் ஜாதியிறுமாப்பும் கொண்டவர்கள் கையில் இக்கட்சியின் பொருப்பு இருக்கிறவரை உண்மையாக ஒன்றும் நடைபெறப்போவதில்லை”.

இவைகளில் சுயராஜ்யக் கட்சியானது தற்போதைய நிலைமையில் மிகப் பாராட்டத்தக்கதாயிருந்தும் என்னும் வாக்கியம் தவிர மற்றதை நாம் ஒருவாறு ஒப்புக்கொள்ளுவோம்.

வெளவால் கட்சியாரின் தந்திரமாகிய “சுயராஜ்யக்கட்சி ஒன்றுதான் தற்கால நிலையில் பாராட்டத்தக்கது, தீவிர நோக்கமுள்ளது, அரசியல் கொள்கையுள்ளது” என்று பலவாராக தங்கள் மனச்சாட்சிக்கு விரோதமாய் அடிக்கடி பாடிவரும் பல்லவியை குமரனும் பாட ஆரம்பித்திருப்பது நமக்கு மிகவும் ஆச்சரியமாயிருக்கிறது.

ஊழியனாவது “காந்தியடிகள் ஆணை” என்னும் சாக்கைக்கொண்டு ஒதுங்கி நிற்கப் பார்க்கிறான். குமரனோ அதைவிட ஓரடி முன்வந்து சுயராஜ்யக்கட்சி பாராட்டத்தக்கது என்கிறான். இராஜீய தந்திரத்தால் வாழவேண்டிய அவசியமில்லாதவர்களும், பயங்கொள்ளித்தனமில்லாத வீரர்களும் உள்ளன்போடும், பரோபகார சிந்தையோடும் “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்னும் மந்திரமே கொடியாய்க் கொண்டவர்களுமான குமரனும், ஊழியனும் கூட இத்திருவிளையாடல் புரிவார்களானால் உலகில் என்னதான் எதிர்பார்க்க முடியாது.

சுயராஜ்யக் கட்சியாரின் எந்த நடவடிக்கையை குமரன் பாராட்டுகிறான் என்பதை உலகத்துக்கு விளங்கவைத்தால் குமரனைக் குருவாய்க் கொள்ளத்தயங்கோம்.

சுயராஜ்யக் கட்சியார் காந்தியடிகளின் கொள்கைகளை பாழாக்கினதையா? ஒத்துழையாமையைக் கொன்றனதையா? காங்கிரசை ஏழை மக்கள் கையிலிருந்து தங்கள் சுயநலத்துக்காக பிடுங்கிக் கொண்டதையா? காந்தியடிகளை காங்கிரசை விட்டு ஓட்டினதையா? கதரில் நம்பிக்கையில்லை என்று சொல்வதையா? ராட்டினம் சுற்றுவதால் சுயராஜ்யம் வரும் என்னும் நம்பிக்கை எங்களுக்கில்லையென்று சொல்லுவதையா? கல்கத்தா சட்ட சபையில் மந்திரி பதவிகளை ஒழித்து சர்க்காருக்கே அவ்வதிகாரங்களையும் ஏகபோகமாய் பொருப்பின்றி நடத்தவிட்டுக்கொண்டு மேலே என்ன செய்வதென்று தெரியாமல் ஆப்பசைத்த குரங்கைப்போல் விழிப்பதையா?

போக்குவருத்துக்காக வழிச்செலவு கூட வாங்கப்போவதில்லை என்று சொல்லி ஏமாற்றி சட்டசபைக்குப் போய் 4000, 5000 சம்பளமுள்ள பதவிகள் பெற்றதையா? பெற விழைவதையா? கமிட்டிகளில் உத்தியோகம் அடைந்ததையா? தொழிலாளர் மசோதா சட்டசபையில் வந்த காலத்தில் தொழிலாள சகோதரிகளான கருப்ப ஸ்திரீகளுக்கு பிள்ளைப்பேறு சமயத்தில் கூலியுடன் லீவு கொடுக்கவேண்டும் என்று வந்த தீர்மானத்தை நிறைவேறச் செய்யாமல் செய்த பாதகத்தையா? பிராமணரல்லாதாரை எதிர்க்கவேண்டியதுதான் என்றும் அவர்களோடு ஒத்துழையாமை செய்யவேண்டியதுதான் என்றும் சென்னை சுயராஜ்யக் கட்சியாரும் பம்பாய் சுயராஜ்யக்கட்சியாரும் முறையே சொல்லுவதையா? சுயராஜ்யக்கட்சித் தலைவர் ஸ்ரீமான் நேரு தனது உறவினருக்கு உத்தியோகம் வாங்கிக்கொடுத்ததையா? காரியதரிசி ஸ்ரீமான். ரங்கசாமி ஐயங்கார் தமது மகனுக்கு உத்தியோகம் வாங்கிக் கொண்டதையா? சென்னை சுயராஜ்யக்கட்சித் தலைவர் ஸ்ரீமான்.சீனிவாச ஐயங்கார் தீண்டாமை ஒழியவேண்டியதுதான் ஆனால் இப்பொழுது அது சாத்தியப் படாது என்று புகல்வதையா? தீண்டாமை ராஜீய திட்டமாயிருக்கக்கூடாது என்று முணுமுணுப்பதையா?

தீண்டாமை ஒழிக்கும் கமிட்டிக்கு 25 ரூபாய் கொடுத்து விட்டு தீண்டாமை நிலைநிறுத்த ஏற்பட்ட கமிட்டிகளான வருணாச்சிரமதர்ம ஆதரிப்பு சபை முதலிய பிராமணசபைகளுக்கு மறைமுகமாய் ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து எதிர்ப்பிரசாரம் செய்யச் செய்வதையா? ஆதியில் அவர்கள் தம்பட்டம் போட்டுச் சொன்னதுபோல் நடந்து கொள்ளாததையா? சென்னை மாகாணத்தில் சுயராஜ்யக் கட்சி நல்ல நிலையில் இல்லாமல் “பத்திரிக்கை” ஆரவாரத்தாலும், பிராமணத் தலைவராலும் இயங்கிவருவதையா? சென்னை சுயராஜ்யக் கட்சியின் செல்வாக்கால் பிராமண ஜாதியின் ஆதிக்கத்தைப் பலப்படுத்துவதையா? ஜாதிக் கொடுமையால் நைந்து புண்பட்டுக் கிடக்கும் தமிழ்நாட்டில் புதிய பிராமண சகாப்தத்தை உண்டாக்க எண்ணங்கொண்டு அரசியல் பேசுவதையா? அக்கட்சியின் முக்கியஸ்தரான ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியார் போன்றவர்கள் ஜாதி வெறி பிடித்து மகாத்மாவை இகழ்ந்து வாய் கூசாது புன்மொழி வழங்குவதையா? ³ ஆச்சாரியாருக்கு சுயராஜ்யக் கட்சியிலுள்ளவர்களும் ஆதரவளிப்பதையா? இம்மாதிரி ஜாதி இறுமாப்புக் கொண்டவர்கள் கையில் சுயராஜ்யக் கட்சியிருப்பதையா? இவைகளில் எதை நமது அன்புள்ள சகோதரனான குமரன் பாராட்டுகிறான் என்பது நமக்கு விளங்க வில்லை.

(குடி அரசு - கட்டுரை - 22.11.1925)

Pin It