திருச்செந்தூர், வந்தவாசித் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில், யாரும் எதிர்பார்த்திராத அளவுக்கு, மாபெரும் வெற்றியைத் தி.மு.க.விற்கு மக்கள் அள்ளித் தந்துள்ளனர். 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றுதான் தி.மு.கவினரே நம்பினர். அவர்களையும் ஏமாற்றிவிட்டு, மிக அதிகமான வாக்குகளை மக்கள் தந்துள்ளனர்.

இவ்வெற்றியைப் பணநாயகத்தாலும், ஜனநாயகத்திற்குப் புறம்பான முறைகளாலும் தி.மு.க பெற்றுள்ளது என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும், விஜயகாந்தும் கூறியிருப்பது, வழக்கமான எதிர்க்கட்சிகளின் புலம்பல்தான். அவர்கள் மக்களை ஏமாற்ற நினைக்கின்றனரா, அல்லது தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனரா என்பது தெரியவில்லை.

ஆனந்தவிகடன், தன் தலையங்கத்தில், தி.மு.க. பிரமுகர் ஒருவரிடம் 10 இலட்சம் மதிப்புள்ள பொருள்களும், அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரிடம் 40 இலட்சம் ரூபாய் ரொக்கமும் பிடிபட்டுள்ள செய்தியைச் சுட்டிக் காட்டியுள்ளது. இந்நிலையில் தாங்கள் ‘சுத்த சுயம்புவான யோக்கியர்கள்’ என்றும் தி.மு.க. பணத்தால் வெற்றி பெற்றுவிட்டது என்றும் கூறுவதெல்லாம் நகைப்புக்கு மட்டுமே உரியது.

தேர்தல் திருவிழாவில் பணம், சாதி, வன்முறை ஆகியனவற்றிற்கு உள்ள இடத்தை அனைவரும் அறிவர். ஒட்டு மொத்தமான ஒரு சமூக மாற்றம் வந்தாலேயன்றி, இந்த நடைமுறையை எளிதில் மாற்ற முடியாது. எனவே இதில் தி.மு.க. மட்டுமே குற்றவாளி என்பதும், மற்றவர்களுக்கெல்லாம், வாயில் விரலை வைத்தால் கூடக் கடிக்கத் தெரியாது என்பது போலப் பாவனை செய்வதும், பரிவுக்குரிய செயல்களாகத்தான் இருக்கும்.

இந்த முறை இயந்திரக் கோளாறு என்று எவரும் கூறவில்லை. அந்தப் பொய் எடுபடவில்லை என்பது எல்லோருக்கும் புரிந்திருக்க வேண்டும். இந்த இடைத்தேர்தல்கள், இன்னொரு மாயையையும் போட்டு உடைத்துவிட்டன. விஜய்காந்தின் உருவத்தை ஊடகங்கள் ஊதி ஊதி வளர்த்தன. ஆனால் அது ஓட்டை விழுந்த பலூனாய் ஓரங்கட்டப்பட்டு விட்டது. விஜய்காந்த் வாக்குகளைப் பிரிக்கிறார், அதனால்தான் தி.மு.க. வெற்றி பெறுகிறது என்றனர். ஒரு தொகுதியில் எட்டாயிரத்திற்குக் குறைவாகவும், இன்னொரு தொகுதியில் ஐயாயிரத்துக்கும் குறைவாகவும் வாக்குகள் வாங்கி, கட்டுத்தொகையை இழந்துள்ள விஜய்காந்த் கட்சி, வாக்குகளைப் பிரித்தால் என்ன, பிரிக்காவிட்டால் என்ன? அ.தி.மு.க., தே.மு.தி.க ஆகிய இரண்டு கட்சிகளும் வாங்கியுள்ள வாக்குகளை ஒன்று சேர்த்தாலும், தி.மு.க. வாங்கியுள்ள வாக்குகளில் 50 சதவீதத்தைக் கூட எட்டவில்லை என்பதுதானே உண்மை.

விஜயகாந்தைக் ‘கறுப்பு எம்.ஜி.ஆர்’ என்று விளம்பரப்படுத்தினர். மக்களோ, முதல் பகுதியை மட்டும்தான் உண்மை என்று ஏற்றுக் கொள்கின்றனர் என்பது உறுதியாகிவிட்டது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பா.ம.க.விற்குப் பலத்த அடி என்றால், இந்த இடைத்தேர்தலோ, விஜயகாந்திற்கு இனி வேலை இல்லை என்று ஆக்கிவிட்டது.

தேர்தலில் நிற்காமலேயே, இன்னொரு படுதோல்வியை இப்போது பா.ம.க சந்தித்துள்ளது. ‘யாரும் வாக்களிக்க வேண்டாம் என்றும், 49ஓ வின் கீழ் யாருக்கும் தம் வாக்கு இல்லை என்பதைப் பதிவு செய்யுமாறும்’ மருத்துவர் ஐயா கேட்டுக் கொண்டார். அவர் வேண்டுகோளை ஏற்று, ஒரு தொகுதியில் 21 பேரும், இன்னொரு தொகுதியில் 17பேரும், 49ஓ வைப் பயன்படுத்தியுள்ளனர். இவ்வளவுக்கும் வந்தவாசித் தொகுதியில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பெருவாரியாக உள்ளனர்.

அ.தி.மு.க. வாங்கியுள்ள மிகக் குறைவான வாக்குகளுக்குள், ம.தி.மு.க. மற்றும் இரண்டு பொதுவுடைமைக் கட்சிகளின் வாக்குகளும் அடங்கியுள்ளன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளலாம்.

தி.மு.க தலைமையிலான தமிழக அரசு, தொடர்ந்து ஆற்றிவரும் மக்கள் நலத் திட்டங்கள்தான், இந்த மகத்தான வெற்றிக்குக் காரணம் என்பதை இப்போதும் எதிர்க்கட்சிகள் உணரவில்லையயனில், 2011 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் சந்திக்கப் போகும் தோல்விக்கான காரணத்தையும் இப்போதே முடிவுசெய்து வைத்துக் கொள்வது நல்லது.

- இளைய சுப்பு

Pin It