தந்தை பெரியார் பார்ப்பன வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்று பார்ப்பனர்களால் தொடர்ந்து அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. “பாம்பையும், பார்ப்பனரையும் ஒன்றாகப் பார்த்தால், பாம்பை விட்டுவிட்டுப் பார்ப்பானை அடி” என்பது அதில் முக்கியமானது.
அந்தப் பழமொழி ஒரு வடநாட்டுப் பழமொழி. ‘Verdict on India’ என்ற நூலில் அந்தப் பழமொழி மேற்கோள் காட்டப் பெற்றுள்ளது.
மாறாக, பெரியார் பார்ப்பனர் குறித்துக் கூறுவது என்ன? “பார்ப்பனத் தோழர்களே” என்று பார்ப்பனர்களைக் குடிஅரசு இதழில் விளிக்கிறார் பெரியார்.
“எந்தப் பார்ப்பனரிடமும் எனக்குத் தனிப்பட்ட முறையில் விரோதமோ, பகைமையோ கிடையாது. பார்ப்பனியத்தை அடியோடு ஒழிப்பது என்பதுதான் எனது முக்கியமானதும் முதன்மையானதுமான காரியம்.
சுயநலமும், பதவி மோகமும், பணத்தாசையும் கொண்ட சில பார்ப்பனர்கள் பதவிக்கு வந்து, தங்கள் சமூகத்தாருக்கு ஏதோ உத்தியோகம் கொடுக்கப்போவதாகச் சொல்லிக் கொண்டு, பல பார்ப்பனரல்லாதாருக்குக் கேடு விளைவித்துக் கொண்டும், தங்கள் சுயநலத்துக்கு ஏராளமான பணம் பல நாணயக் குறைவான வழிகளில் சம்பாதித்துக் கொண்டும் வருவதை நடுநிலைமையுள்ள பார்ப்பனர்கள் ஆதரித்து வருவதாலேயே இன்று நாட்டில் பார்ப்பனியத்தின் மீது உள்ள வெறுப்பு பார்ப்பனர்கள் மீது திரும்புவதை அவர்கள் அறிவதில்லை” (குடிஅரசு, 17.09.1939) என்கிறார் பெரியார்.
நிலைமை இவ்வாறிருக்கத் தொடர்ந்து உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புவதில் பாஜவினரும், பார்ப்பனரும் ஈடுபட்டு வருகின்றனர்.
மனிதநேயத்தை அடிப்பையாகக் கொண்டு இயக்கம் கட்டிய தந்தை பெரியாருக்கு, பார்ப்பனர் மீது வெறுப்பு இருந்ததாக அவதூறு பரப்புவது சிறிதும் அறிவு நாணயமற்ற செயல்.
- கருஞ்சட்டைத் தமிழர்