எதிர்பார்த்த ஒன்றுதான் இலங்கையில் இப்போது அரங்கேறிக் கொண்டுள்ளது.

சர்வாதிகாரம், இன அழிப்பு, இராணுவ ஒடுக்குமுறை போன்றவைகளுக்கு எப்போதும் எதிர்பாராத முடிவுகள்தான் காத்திருக்கும். ராஜபக்சேவும், பொன்சேகாவும் சேர்ந்து தமிழினத்தை அழித்துவிட்டதாகக் கொக்கரித்தனர். இன்று அவர்களே ஒருவரையயாருவர் அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதிபர் தேர்தலில் ராஜபக்சே, பொன்சேகா இருவரும் போட்டியிட்ட வேளையில், இருவருக்குமிடையில் பெரிய வேறுபாடு ஏதும் இல்லை என்பதே நம் கருத்தாக இருந்தது. கொன்றவனா, கொலை செய்யச் சொன்னவனா ‡ இருவரில் எவன் மேலானவன் என்று எப்படி நாம் தீர்மானிக்க முடியும். எனினும் ஈழத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், பொன்சேகாவைத் தவிர்க்கவியலாத தீமையாகக் கருதினர். ஆனால் இறுதி வெற்றி ராஜபக்சேவுக்குப் போய்ச் சேர்ந்துவிட்டது.

அடுத்தவனை அடித்துக் கொன்ற பொன்சேகாவிற்கு, இப்போது தான் அடிபடும்போது வலிக்கிறது. ஓர் அரசியல் தலைவரைப் போலன்றி, பிடரியில் அடித்தபடியே இழுத்துச் சென்றனர் என்று ஒருசெய்தி, நாளேடுகளில் வெளிவந்துள்ளது.

இலங்கையின் தேசியப் பாதுகாப்புத் தலைமை இயக்குனர், பொன்சேகாவின் மீது இரண்டு குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார். இராணுவக் கலகத்திற்கு ஏற்பாடு செய்தார் என்றும், அதிபரைக் கொலை செய்யச் சதி செய்தார் என்றும் கூறப்பட்டுள்ள அவற்றிற்கு, அடிப்படை ஆதாரத்தைக் காட்டுவதில் கூட அரசு கவனம் செலுத்தவில்லை. தான் ஒரு அறிவிக்கப்படாத சர்வாதிகாரி ஆகிவிட்டதாக, ராஜபக்சே முடிவு செய்துவிட்டார்  என்பதுதான் இதன் பொருள்.

அந்த முடிவை உறுதிபடுத்திக் கொள்வதற்காகவே, அடுத்த ஆண்டு வரவேண்டிய நாடாளுமன்றத் தேர்தலை இந்த ஆண்டே, இன்னும் சில மாதங்களில் நடத்த அவர் தீர்மானித்துள்ளார். அத்தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றி விட்டால், எல்லாச் சர்வாதிகாரத்தையும், ஜனநாயகத்தின் வழியே அவரால் செய்துவிட முடியும்.

அங்கே நடைபெறும் இந்த அக்கிரமங்கள் ஒருவகையில் நல்லது என்றே கூறவேண்டும். தங்கள் சொந்த மண்ணில், சுயமரியாதையோடும், சுதந்திரத்தோடும் வாழ உரிமை கேட்டுப் போராடிய தமிழ் மக்களை, இராணுவம் கொண்டும், உலக நாடுகளின் துணை கொண்டும் அழிக்க நினைத்த சிங்களப் பேரினவாதம் தனக்குள் முட்டிமோதி அழிவது இயற்கையின் தேர்வு அல்லாமல் வேறு என்ன?

அமெரிக்கா அன்றைக்கு வியட்நாம் மீது போர் தொடுத்த போது, மனித நேயமும், ஜனநாயகப் பற்றும் கொண்ட அமெரிக்கர்கள் பலர் தங்கள் சொந்த நாட்டையே எதிர்த்துக் குரல் கொடுத்தனர். 2002 இல் ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்த போதும் அந்த நிலையைப் பார்க்க முடிந்தது. மார்லன் பிராண்டோ போன்ற புகழ்வாய்ந்த கலைஞர்கள் கூட அந்த எதிர்ப்பு வரிசையில் முன்னின்றார்கள்.

ஆனால், அத்தகைய மனித உணர்வும், நேயமும் கொண்ட மக்கள் சிங்கள இனத்தில் மிகமிகச் சிலராகக் கூட இல்லையே. அப்படியானால், தன்னைத்தானே அழித்துக் கொள்ள வேண்டிய இனம் தானே அது ! நமக்கென்ன கவலை.

இன்றைக்குப் பொன்சேகா. நாளைக்கு ராஜபக்சேவுக்கும் ஈனச் சாவு வந்தே தீரும்.

சிங்களர்களுக்கே இந்த நிலை என்றால், காட்டிக் கொடுத்த கயவர்கள் டக்ளஸ், கருணா போன்றவர்களின் நிலை என்னாகும் என்பதைக் காலம் நமக்குக் காட்டாமலா போய்விடும்.

Pin It