காஷ்மீரத்தில் ஓர்இந்துவாகப் பிறந்து,இந்துமதத்தத்துவங்களையும்,வேத, உபநிடதங்களையும், பகவத் கீதையையும் மிக ஆழமாகக் கற்ற அறிஞர் பிரேம்நாத் பசாஸ் அவர்களால், ‘The role of Bhagavat Gita in Indian History’ என்னும் பெயரில் எழுதப்பட்ட ஆங்கில நூலின் தமிழ் மொழி பெயர்ப்பே,‘இந்திய வரலாற்றில் பகவத்கீதை’ என்னும் இந்நூல்.1975இல் ஆங்கிலத்தில் வெளியான இந்நூல், 30 ஆண்டுகளுக்குப் பின் 2004ஆம் ஆண்டு தமிழில் பெயர்க்கப்பட்டுள்ளது.

950 பக்கங்களில் எழுதப்பட்டுள்ள இப் பெரிய நூல், கீதை பற்றிய முழுமையான, விரிவான ஆய்வின மேற்கொண்டுள்ளது. கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் எழுதப்பட்டுள்ள எந்த ஒரு சமய நூலும், பகவத் கீதை அளவிற்குப் போற்றப்படவும் இல்லை, வெகு மக்களைச் சென்றடையவும்  இல்லை என்று கூறலாம்.அதே  நேரத்தில், கீதையைப் பாராட்டுகின்றவர்களில், மிகப் பெரும்பான்மையானவர்கள், இன்று வரை அந்நூலை முழுமையாகப் படிக்காதவர்களே என்பது பேருண்மை. ஆனாலும், கீதை இந்துக்களின் புனித நூல் என்னும் கருத்தும், வாழ்விற்குத் தேவையான அரிய பல தத்துவங்களை அந்நூல் தருகிறது என்னும் கருத்தும் இங்கு மிக ஆழமாக வேரூன்றியுள்ளது. ஆதலால், பகவத் கீதை குறித்தும், இந்திய சமூக - அரசியல் வரலாற்றில் அது ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும் விரிவாக நாம் அறிந்துகொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

அனைத்து இந்திய மொழிகளிலும் மட்டுமல்லாமல், பிறநாட்டு மொழிகள் பலவற்றிலும் கீதை பெயர்க்கப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், இந்தியாவில் அரசியல் நடத்திய அயர்லாந்து நாட்டினரான அன்னிபெசன்ட் அம்மையார் என அனைவரும் கீதையைப் புகழ்ந்து தள்ளியுள்ளனர். கி.பி.9ஆம் நூற்றாண்டில் ஆதி சங்கரரால் தொடங்கப்பெற்ற ‘கீதைப் புகழ்ச்சி’ இன்று வரை தொடர்கிறது.

வெளிநாட்டினர் சிலரும்கூட,கீதையை வானளாவப் புகழ்கின்றனர். இந்நூலாசிரியரான, பிரேம்நாத் பசாஸ் கூட,கீதையில் காணப்படும் சில விழுமியங்களை,உயர் கோட்பாடுகளை மறுக்கவில்லை. எனினும் ஒட்டுமொத்தமாய்ப் பார்க்கும்போது,

“உரிமைகள் பறிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களிடம்,கிடைப்பதில் மனநிறைவு பெற்று,எதிர்த்துக் கேள்வி கேட்காது,அமைதியுடன் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துவிடவும்,விரக்தியுற்றுப்போன சமூகத்தைக் கிளர்ந்தெழ விடாமல் அடக்கி வைத்துக்கொள்ளவும்,உயர் வர்க்கத்தினரால் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதே கீதையின் தத்துவம் ”

என்று அழுத்தமாகக் கூறுகின்றார்.இதுவே இந்நூலின் சாரம்.இதனை நூற்றுக்கணக்கான சான்றுகளுடன் ஆசிரியர் நூலுள் நிறுவியுள்ளார்.

நூல்,மூன்று பாகங்களாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளது.முதல் பாகத்தில் இந்தியத் தத்துவத்தின் வரலாறு, விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. பூர்வ மீமாம்சம், வேதாந்தம், வைசேடிகம், நியாயம், சாங்கியம், யோகம் ஆகிய ஆறு சிந்தனை மரபுகளின் தோற்றம், உள்ளடக்கம் முதலானவை விளக்கப் பெற்றுள்ளன.பெளத்தத்தின் எழுச்சியும், வைதீகச் சிந்தனை களின் மீது அது ஏற்படுத்திய தாக்கமும் உரிய முறையில் கூறப் பட்டுள்ளன. மீண்டும் பார்ப்பனியக் கோட்பாடுகள் அரங்கேறி, குழப்பமும், கொந்தளிப்புமான சூழல் எவ்வாறு உருவாக்கப் பட்டது என்பன போன்ற செய்திகளும் முதல் பாகத்தில் இடம்பெற்றுள்ளன.

கீதையின் காலமும்,கீதை தரும் தத்துவச் செய்திகளும் இரண்டாம் பாகத்தில் கூறப்பெற்றுள்ளன. 120 பக்கங்களில் எழுதப்பெற்றுள்ள இரண்டாம் பாகத்தை மட்டும் ஆழ்ந்து படித்தாலே, கீதையின் பிழிவு என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

மூன்றாம் பாகம் விரிவானது, ஏறத்தாழ 600 பக்கங்களைக் கொண்டது.இந்துத்துவத்தின் தோற்றம்,இந்துத்துவ அடிப்படையில் நிகழ்ந்திருக்கும் இந்தியக் கட்டமைப்பு,கீதையின் அடிப்படையில் இந்திய அரசியலை முன்னெடுத்துச் சென்ற இந்தியத் தலைவர்கள், இந்துத்துவாவைத் தழுவியே நின்ற காங்கிரசின் ஆட்சிக்காலம் என்று பரந்த தளத்தில் பல செய்திகள் சொல்லப்படுகின்றன.இவை அனைத்துக் கும் கீதையே அடிநாதமாக இருப்பது சுட்டிக்காட்டப்படுகின்றது.

நுட்பமும்,சிக்கலும் நிறைந்த செய்திகள் பலவற்றைக் கொண்டிலங்கும் இந்நூலை, எளிய, அழகிய தமிழில் கே. சுப்பிரமணியன் பெயர்த்துள்ளார்.

நூலாசிரியர் பிரேம்நாத் பசாஸ், கீதையின் சாரத்தை, ஒரு வரியில் கூறுகின்றார். ‘அனாசக்தி யோகம் ’என்பதை வலியுறுத்துவதும்,அக்கருத்தைவெகுமக்களிடம் கொண்டு செல்வதும்தான் கீதையின் ஒரே நோக்கம் என்கிறார்.‘கடமையைச் செய் பலனை எதிர்பாராதே ’என்பதுதான் அனாசக்தி யோகம். அதாவது பயன் கருதாத செயல்பாடு.

700 பக்கங்களால் இயற்றப்பட்டிருக்கும், பகவத் கீதையின் இரண்டாவது இயலின் 47ஆவது பாடல் அனாசக்தி யோகம் பற்றிப் பேசுகிறது. அப்பாடலின் பொருள்,

“ வினையாற்றுவதே உனது கடமை

வினைப்பயன் உனக்கு உரிமையானதன்று

பயன்கருதி வினையாற்றாதே

வினையாற்றாது இருப்பதிலும் விருப்புக் கொள்ளாதே! ”

என்பதாகும்.

கீதையின் இப்பாடல் இரண்டு அறிவுரைகளைச் சொல்கிறது.உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது முதல் அறிவுரை.உழைத்தபின் அதற்கு ஊதியம் கேட்கக்கூடாது என்பது இரண்டாவது அறிவுரை.

இவ்விரு அறிவுரைகளும், எந்தக் காலகட்டத்தில், யாருக்குச் சொல்லப்பட்டுள்ளன என்பதே நாம் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.

கீதையின் காலம், இன்று வரை துல்லியமாக வரையறுக்கப்பட வில்லை என்பதே உண்மை. மகாபாரதம் என்னும் இதிகாசத்தின் ஒரு பகுதியாக அது அமைந்திருந்தாலும், ‘ பகவத் கீதை ’ ஓர் இடைச் செருகல் என்பதே வரலாற்று ஆய்வாளர்கள் பலரின் கருத்தாகவும் உள்ளது.

‘ கீதையின் மூலப்படிவத்தைத் தேடி ’ என்னும் தன் புகழ்பெற்ற நூலில், கி.மு.500 - கி.மு.200 காலகட்டத்தில் கீதை எழுதப்பட்டிருக்க வேண்டும் என்கிறார், வரலாற்று ஆசிரியர் ஜி.எஸ்.கைர். இன்னொரு ஆய்வாளர் ஜி.வி.கேட்கரும் அதனை ஏற்கின்றார்.ஆனாலும், டி.டி.கோசாம்பி, எட்வின் ஆர்னால்டு போன்ற உலகப் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர்கள், கி.பி.3ஆம் நூற்றாண்டிற்கு முன்னர்,கீதை இயற்றப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை என்று உறுதிபடக் கூறுகின்றனர். அண்ணால் அம்பேத்கரும், தன் நீண்ட ஆய்வுக்குப் பின், குப்தர்கள் காலத்தில் (கி.பி.5-6ஆம் நூற்றாண்டு) எழுதி, இடைச்செருகலாக மகாபாரதத்தில் இணைக்கப்பட்டதே கீதை என்கின்றார்.

மேலே குறிக்கப்பெற்றுள்ள காலகட்டங்கள் அனைத்துக்கும் பொதுவான தன்மை ஒன்று உண்டு.‘வருணாசிரம தரும’த்தைக் கேள்விக்குள்ளாக்கிய,பெளத்தப் புரட்சிக் காலம் அது என்பதே அத் தன்மை. ஒவ்வொரு வருணத்திற்கும் ஒரு ‘ தருமம் ’ உரைக்கப்பட்டது. உழைப்பு மட்டுமே ‘சூத்திரர் ’களுக்கு உரிய தருமம் என்றானது.எந்தப் பயனும் இன்றி ஏன் நான் உழைக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்த போது,வருண தருமம் தடுமாறியது. அச்சூழலில்தான் கீதை எழுகின்றது என்பதை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

‘ஊதியத்தை எதிர்பார்க்காமல், உழைப்பவன்தான் சொர்க்கத்திற்குச் செல்வான்’ என்று ஆசை காட்டுகிறது கீதை.

 “உழைப்பை எனக்கு அர்ப்பணித்து விட்டு என்னிடம் விருப்பங்கொண்டு, முழு இதயத்தோடும்,பக்தியோடும் என்னைத் தியானித்து, என்னை யார் வழிபடுகின்றானோ, அவனை வாழ்வு, மரணம் என்ற பெருங்கடலிலிருந்து கரையேற்றுவேன் ”

என்கிறார் கீதையில் கண்ணன் (இயல் 12, பாடல் 6 - 7).

எனவே, ஊதியம் பெறாமல் உழைக்க ஒரு கூட்டமும், உழைப்பில்லாமல் ஊதியம் பெற இன்னொரு கூட்டமும் உலகில் பெருக வழிவகுத்த தத்துவம்தான் ‘அனாசக்தி யோகம்’. வருணாசிரம ‘ஒழுங்கு’ கெட்டுக் கொண்டிருந்த நேரத்தில்,அதனை மீண்டும் நடைமுறைப்படுத்த எழுந்த ‘புனித நூல்’ தான் கீதை என்பதை இந்நூல் தெளிவாக விளக்குகின்றது.

மூன்றாம் பாகத்தில், ராமகிருஷ்ண பரமஹம்சர், திலகர், அரவிந்தர் தொடங்கி, மிகப் பலரைப் பற்றிய இன்றுவரை சொல்லப்படாத பல செய்திகளை நூல் தருகின்றது.

இந்த ஒரு நூலைப் படித்து முடிக்கின்றபொழுது,பல நூல்களைப் படித்து முடித்த நிறைவு ஏற்படுகின்றது.

வெளியீடு: விடியல் பதிப்பகம்

சூலூர் வெளியீட்டகம்

8,பால இல்லம், நஞ்சப்பா குடியமைப்பு,

சூலூர், கோவை - 402,

தொ.பேசி: 0422 - 2681147

விலை: ரூ.350/-

Pin It