நமது நாட்டில் இன்று முதன்மையாய் நடைபெற வேண்டியது சமூக சீர்திருத்தமேயாகும். ஆனால் அதற்கு இன்று நாட்டில் செல்வாக்கில்லை. உண்மையான சமூக சீர்திருத்தக்காரர் ஒருவர் இருவர் இருந்தாலும், அவர்களுக்கும் நாட்டில் செல்வாக்கில்லாமல் மக்களின் எதிர்ப்புக்கும், வெறுப்புக்குமே ஆளாகிறார்கள். பெரும்பான்மையான மக்களுக்கும், மனித சமூகத்தில் சமூகக் கட்டுப்பாட்டின் பயனாய் வெகுகாலமாய் தொடர்ந்து துன்பமனுபவித்து வரும் பாமர மக்களுக்கும், பயனற்றதான அரசியல் சீர்திருத்தம் என்னும் விஷயத்திற்கே-இன்று நாட்டில் செல்வாக்கு ஏற்படுத்தப்பட்டு விட்டது.

ஜனங்கள் அரசியல் கிளர்ச்சி மாயையில் இருந்து என்று விடுபடுகிறார்களோ, அன்றுதான் சமூகச் சீர்திருத்தத்தின் அவசியத்தையும், உண்மையையும் அறிய முடியும். மற்றபடி அதுவரையில் போலி சமூக சீர்திருத்த ஏமாற்றந்தான் நடைபெறும். அதுவும் அரசியல் சீர்திருத்தக்காரர்கள் தங்களுக்கு அனுகூலம் செய்து கொள்ளுவதற்காக, மக்களை ஏமாற்ற வேண்டிச் செய்யும் ஏமாற்றும் பிரச்சாரமேயாகும்.

periyar உண்மையான சமூக சீர்திருத்தத்தை இன்று எந்த அரசியல்வாதியும், பொருளியல்வாதியும் ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். நம் நாடு மாத்திரமல்லாமல், இன்று உலகில் எங்கே பார்த்தாலும் அதிகார வெறியும், பண வெறியும் கொண்ட மக்களால்-அவர்களது நன்மைக்கேற்ற அரசியல் சீர்திருத்தக் கிளர்ச்சிகள்தான் நடந்து வருகின்றன. என்றாலும் இவற்றால் எல்லாம் பெரும்பாலான மனித சமூகத்துக்கு, எவ்வித நன்மையும் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லுவதற்கில்லை.

இங்கிலாந்து தேசம் அரசியலில் எவ்வளவோ பெரிய யுத்தங்களையெல்லாம் சமாளித்து, ஜனநாயக முறைப்படி பார்லிமெண்டு அமைத்து, அந்தப் பார்லிமெண்டுக்கு மந்திரிகளையும், அரசரையும் கட்டுப்படுத்தி, உலகத்திலேயே முதல் தரமான அரசியல் முறை என்றும் சொல்லும்படியான அரசியலைக் கொண்டு ஆட்சி நடத்தப்பட்டு வருகின்றது. இதன் பயனாய் தந்திர புத்தி உள்ளவர்களும், பிரபுக்களும், முதலாளிகளும்தான் பயனடைந்து வருகிறார்களே ஒழிய, பாமர மக்களுக்கு ஒரு நன்மையும் உண்டாகவில்லை.

அமெரிக்கா தேசம் உலகத்திலேயே பெரும் செல்வம் பொருந்தியதாய் இருந்தும், குடி அரசு ஆட்சியாய் இருந்தும், அங்குகூட பிரபுக்களும், வியாபாரிகளும், அறிவுக் கூட்டத்தாரும்தான் மேன்மையாய் வாழ்கின்றார்களே ஒழிய, பாமர மக்கள் கோடிக்கணக்காய் வேலை இல்லாமல், ஜீவனத்துக்கு மார்க்கமில்லாமல், வீடுவாசலற்றுத் தவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மக்கள் யாவருக்கும் பிறவியில் சமத்துவமும், சம சுதந்திரமும் இருக்கும்படியானதும் அரசியல் சீர்திருத்தத்தில் உச்ச நிலையை அடைந்ததுமான அய்ரோப்பா, அமெரிக்கா நாடுகளிலேயே இப்படி இருக்கின்ற தென்றால், நம் நாடு அதாவது பிறவியிலேயே கீழ் மேல் நிலையும், பிறவி காரணமாக அடிமைத் தன்மையும் இருந்து வரும் நாட்டின் நிலையைப் பற்றி, நான் உங்களுக்கு விவரிக்க வேண்டுமா என்று கேட்கின்றேன்.

மனித சமூகமானது, பாமர மக்களை ஜாதி, மதம், பழக்கம், வழக்கம், பழைய சாஸ்திரங்கள், கடவுள் கட்டளைகள் என்னும் பேரால் கட்டுப்படுத்தப்பட்டு, அவர்களது வாழ்க்கையையே மிருக வாழ்க்கையை விட மிகக் கீழானதாகவும், அடிமை வாழ்க்கையாகவும் ஆக்கி வந்திருக்கிறது. நம்முடைய அரசியல் மாத்திரமல்லாமல், உலகில் எந்த அரசியலும் இப்படிப்பட்ட சமூகக் கொள்கைகளை அஸ்திவாரமாகக் கொண்டே கட்டப்பட்டிருக்கிறது. இந்த சமூகக் கொடுமைக்கு அஸ்திவாரமான மதம், ஜாதி, பழக்க வழக்கம், சாஸ்திரங்கள், கடவுள் கட்டளைகள் என்பவை தகர்க்கப்படாமல்-எப்படிப்பட்ட அரசியல் சீர்திருத்தம் ஏற்பட்டாலும், ஒரு காதொடிந்த ஊசியளவு பயனும் பாமர மக்களுக்கு ஏற்படாது.

ஒரு பெருங்கூட்ட மக்கள் இன்று சமூக வாழ்வில் தீண்டப்படாதார்களாகவும், மற்றொரு பெருங்கூட்ட மக்கள் சமூக வாழ்வில் சூத்திரர்கள், அடிமைகள், கூலிகள், தாசி மக்கள், இழிமக்கள் என்கின்ற பெயருடனும் இருந்து வருகிறார்கள் என்றால், இது மாறுவதற்கு அருகதை இல்லாத சுயராஜ்யம் யாருக்கு வேண்டும்? இது மாறுவதற்கு இல்லாத மதமும், சாஸ்திரமும், கடவுளும் யாருக்கு வேண்டும்?

வெள்ளைக்காரனை வைவதின் (திட்டுவது) மூலம், மக்களை ஏமாற்றி அடிமையாகவும் மானமற்றவர்களாகவும் நிரந்தரமாய் வைத்திருக்கச் செய்யும் சூழ்ச்சியே இன்றைய காங்கிரசின் யோக்கியதையாகும். இம்மாதிரியான கொடுமைகளுக்கு நான் பார்ப்பனர்களை மாத்திரமே குற்றம் சொல்ல வரவில்லை. பார்ப்பனர்களை வைகின்றோமே ஒழிய, அவர்களுடைய சூழ்ச்சிகளுக்கு நாம் நிபந்தனையில்லாத அடிமைகளாய் இருந்து வருகிறோம். பார்ப்பனனுடைய மதத்தை நாம் ஒப்புக் கொண்டிருக்கிறோம். அவன் சாஸ்திரங்களுக்கு அடிமையாய் இருந்து வருகிறோம்; அவன் கடவுளுக்குப் பக்தி செலுத்தி வருகின்றோம். இவற்றையெல்லாம் செய்து கொண்டு, பார்ப்பனனை வைவதால் என்ன பயன்?

Pin It