ம்யூனிஸ்ட் கட்சிகள் வித்தியாசமான பல அரசியல் களங்களை வெற்றிகரமாகச் சந்தித்திருக்கின்றன. ஆனால், தமிழகத்தைப்போல விசித்திரமான களத்தினை அவை சந்திப்பதுமில்லை; அத்தகைய களத்தினை உருவாக்குவதுமில்லை. உருகி, உருகி விசித்திரமான அரசியல் களத்தை உருவாக்குவதில் தமிழகத் தோழர்களுக்கு இணையாக வேறு யாரும் இருக்க முடியாது.

பாரதிய ஜனதாவும் வேண்டாம்; காங்கிரசும் வேண்டாம் என்பது கம்யூனிஸ்ட்டுகளின் நிலைப்பாடு. நியாயமான முடிவுதான். மதவெறி சக்தியான பா.ஜ.கவும், அரசியல் சூழலுக்கேற்ப வளைந்து அமீபா தோற்றமெடுக்கும் காங்கிரசும் பன்னாட்டு முதலாளிகளின் பண்ணை அடிமைகளாய் ஆட்சி செய்ததையும் - செய்வதையும் தோழர்களால் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்? அதனால் இரண்டு கட்சிகளிடமிருந்தும் சமமான இடைவெளியில் விலகி நிற்கிறோம் என்று அறிவித்தார்கள். அந்த இரண்டு கட்சிகளுடன் கைகோர்த்திருக்கும் எந்தக் கட்சியாக இருந்தாலும் அதனுடனும் இதே இடைவெளிதான் என்பது தோழர்களின் நிலைப்பாடு.

jayalalitha_ab_bharathan_prakash

விலக்கப்படவேண்டியவர்கள் யார் என்பதில் அவர்களின் அளவுகோல் இது என்றால், சேர்த்துக்கொள்ளப்படுபவர்களுக்கு தகுதிகள் என்ன?

மூச்... அது பற்றியெல்லாம் பேசக்கூடாது. பேசினால், உழைக்கும் மக்களின் எதிரி. ஏகாதிபத்தியவாதி. அமெரிக்காவின் கைக்கூலி.

தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணியில் கம்யூனிஸ்ட்டுகள் இருக்கிறார்களா இல்லையா என்பது கடவுள் இருக்கிறாரா என்பதற்கு இணையான விவாதப்பொருள். தோழர்களைப் பொறுத்தவரை, தேர்தல் வரும்போது மட்டுமே கூட்டணி. அதுவும்கூட தொகுதி உடன்பாடுதான். மற்ற நேரங்களில் உடன்பாடா, முரண்பாடா என்று அவர்களுக்கே தெரியாது. தேர்தல் நேரத்திலாவது உடன்பாடு என்பது முழுமையானதா என்றால் அதற்கும் பதில் தேடுவது கடினம். முழு உடன்பாடு என்பதுபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அ.தி.மு.கவின் தோளோடு தோள் நிற்கும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அரைகுறை உடன்பாட்டோடு தனி மேடையில் அ.தி.மு.க.வை ஆதரிக்கும். ஏன் அத்தனை தயக்கத்துடனும் சிரமத்துடனும் ஆதரிக்க வேண்டும்?

ஜெயலலிதா என்ன காரல் மார்க்ஸின் பேத்தியா? கொடநாடு எஸ்டேட்டுக்கு அங்கே உழைக்கிற தொழிலாளர்களே பங்குதாரர்கள் எனப் பொதுவுடைமையாக்கிவிட்டாரா? குறைந்தபட்சம், சி.பி.எம் கட்சியினரால் கமிஷன் விசாரணைக்குட்படுத்தப்பட்ட சிறுதாவூர் நிலத்தையாவது அதற்குரியவர்களான தலித் மக்களுக்கு திருப்பிக் கொடுத்துவிட்டாரா? காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ள தி.மு.க அரசு மீது தோழர்கள் என்னென்ன குற்றச்சாட்டுகள் சுமத்துகிறார்களோ, அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் அக்காதான் ஜெயலலிதா. அரசு ஊழியர்கள், மக்கள் நலப்பணியாளர்கள், சாலைப்பணியாளர்கள், நெசவாளர்கள், விவசாயிகள் என எந்த உழைக்கும் வர்க்கத்திற்காக கம்யூனிஸ்ட்டுகள் இயக்கம் நடத்துகிறார்களோ அவர்கள் அத்தனைபேரும் ஜெயலலிதா ஆட்சியில் எப்படி நடத்தப்பட்டார்கள் என்பதை மனசாட்சியுள்ள தோழர்களால் ஒருபோதும் மறக்க முடியாது. ஆனாலும், தனிமேடை போட்டாவது ஆதரித்தே தீருவோம் என்பதுதான் அவர்களின் முற்போக்கு பாதை.

காங்கிரசுடன் தி.மு.க கைகோர்த்திருக்கும் நிலையில், பா.ஜ.கவிலிருந்து விலகியிருக்கும் அ.தி.மு.க.தானே எங்களுக்கான வாய்ப்பு என்பார்கள் தோழர்கள். ஜெயலலிதா தன் மனதளவில் என்றாவது பா.ஜ.கவிடமிருந்து விலகியிருந்திருக்கிறாரா? ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது அணியை உருவாக்கி, அப்துல்கலாமை இரண்டாம் முறையாக ஜனாதிபதியாக்குவது எனத் தீர்மானித்து அவர் மறுத்துவிட்ட நிலையில், மூன்றாவது அணியில் உள்ள மற்ற கட்சியினருக்கே தெரியாமல் தேர்தல் நாளில் பா.ஜ.க வேட்பாளர் பைரோன்சிங் ஷெகாவத்துக்கு வாக்களித்தவர்கள்தானே அ.தி.மு.கவினர்!

கரசேவையில் தொடங்கி சேதுசமுத்திரத் திட்டம் வரை ஜெயலலிதாவின் நிலைப்பாடும் பா.ஜ.கவின் நிலைப்பாடும் ஒன்றுதான். அதேநேரத்தில் காங்கிரசுடனான கூட்டணிக் கதவை சோனியா எப்போது திறப்பார் என்று கடந்த மூன்று ஆண்டுகளாக காத்துக்கிடப்பவரும் ஜெயலலிதாதான். ஆனாலும், காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியைத் தோற்கடித்து தமிழகத்தில் மார்க்சியம் பூப்பதற்கு ஜெயலலிதாவுடனான கூட்டணி வேண்டும் என்று சித்தாந்த விளக்கம் கொடுப்பார்கள் தோழர்கள்.

அந்த விளக்கத்தை கேட்டு கிறுகிறுத்துப் போவதைவிட அவர்கள் அ.தி.மு.க பக்கமே இருந்துவிட்டுப் போகட்டும் என விட்டுத்தொலைக்கலாம். இல்லையென்றால், புதிய ஆபத்தை விதைப்பதற்கு அவர்கள் ஆயத்தமாகிவிடுவார்கள். அது என்னவென்றால், விஜயகாந்த்தின் தே.மு.தி.க.வுடன் கூட்டணி என்பதுதான். அதுவும், அ.தி.மு.க. - கம்யூனிஸ்ட்டுகள் - தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய அகண்ட கூட்டணி. இப்படியொரு கூட்டணி அமைந்தால் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்திவிடலாம் என்பது தோழர்களின் கணக்கு. தேர்தல் நேரத்தில் இந்தக் கணக்கு கைகொடுக்கவும் கூடும். ஆனால், இப்படியொரு கூட்டணி என்பது தி.மு.க. - காங்கிரசுக்கு மட்டுமா எதிரானது? தமிழகத்தின் அரசியல் வளர்ச்சிக்கே எதிரானது என்பதை தத்துவார்த்தம் பேசும் தோழர்கள் அறியமாட்டார்களா என்ன? ஆனாலும், நம் தோழர்கள் இத்தகைய ஒரு கூட்டணிக்கான முயற்சிகளில் முழு முனைப்பாக ஈடுபட்டிருக்கிறார்கள்.

vijaykanth_230ஜெயலலிதாவுடன் விஜயகாந்த்தை கூட்டணிக்கு கொண்டு வருவது, இல்லையென்றாலும் விஜயகாந்த்துடன் கைகோர்த்து தேர்தலை சந்திப்பது என்ற ரீதியில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் வகுத்திருக்கும் தேர்தல் வியூகமானது முற்போக்கின் உச்சம். நாடாளுமன்றத் தேர்தலின்போதே சி.பி.எம். கட்சியினர் நள்ளிரவில் விஜயகாந்தை தேடிச் சென்று கூட்டணிக்கு கை நீட்டினார்கள். “நான்தான் கூட்டணிக்குத் தலைவர். அதற்கு ஒப்புக்கொண்டால் அடுத்த விஷயத்தைப் பேசலாம்” என்று கறாராக விஜயகாந்த் பேச, மின்அதிர்வு ஏற்பட்டதுபோல வெடுக்கெனக் கையை உதறிக்கொண்டு வெளியே வந்தார்கள் தோழர்கள். அதன்பிறகும், இந்த முயற்சி முடிந்துவிடவில்லை.

அ.தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சிகளுடன் தே.மு.தி.கவையும் இணைத்து மக்கள் இயக்கம் கட்டப் போகிறோம் என்றார் சி.பி.எம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன். சி.பி.ஐ.யின் தா.பாண்டியன் மட்டும் சும்மா இருப்பாரா? பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை எதிர்த்து நாடுதழுவிய அளவில் நடைபெறும் போராட்டத்தில் தே.மு.தி.க.வும் பங்குபெற அழைக்கிறோம். பகிரங்கமாகவே அழைப்பு விடுத்தார். விஜயகாந்த்தோ, தான் நடித்து இயக்கும் விருதகிரி படத்திற்கான படப்பிடிப்பில் காட்டிய கவனத்தில் கடுகளவுகூட விலை உயர்வை எதிர்த்து எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்தின் திசை நோக்கி காட்டவில்லை. மன்மோகன்சிங் அரசின் அநியாய விலையேற்றத்தை காங்கிரஸ் - தி.மு.க.வினர்கூட வெளிப்படையாக எதிர்க்க முடியாமல் பொருமிக் கொண்டிருக்கிறார்கள். ‘இன்றைய எதிர்க்கட்சி, நாளைய ஆளுங்கட்சி’ என்று ஊடகங்களால் ஊதப்படும் விஜயகாந்த்தோ மக்கள் பிரச்சினையைவிட ஷூட்டிங்கே முக்கியம் என இருந்துவிட்டார். போராட்டத்திற்கு ஆதரவா, எதிர்ப்பா என்பதைக்கூட கடைசிவரை சொல்லாத தமிழகத்தின் ஒரே அரசியல் தலைவர் விஜயகாந்த்தான். இதுதான் கம்யூனிஸ்ட்டுகளைக் கவர்ந்திருக்கிறதோ!

விஜயகாந்த்தின் போராட்ட முறைகள் விசித்திரமானவை. என் கட்சிக்காரர்களை தெருவில் இறக்கி போராடவிடமாட்டேன் என்று கட்சி ஆரம்பித்தபோது சொன்னவர் அவர். ஆனால், தன்னுடைய கல்யாண மண்டபம், பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் வசதியாக - சாலை மேம்பாட்டிற்காக இடிக்கப்படுகிறது என்றதும் அதனைப் பாதுகாக்கச் சொல்லி தொண்டர்களை களத்தில் இறக்கிப் போராடச்செய்து இடிபட்ட மண்டபத்திற்கான நட்ட ஈட்டுத் தொகையை வாங்கிக்கொண்டார். அதன்பிறகு மக்கள் பிரச்சினைக்காக அவரது மனைவி தலைமையில் ஒரு போராட்டம் நடந்தது. ஞாயிற்றுக்கிழமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடந்த போராட்டம் அது. “ஆளில்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துறே.. உன் கடமையுணர்ச்சிக்கு அளவேயில்லையா?” என்ற விவேக் காமெடிபோல, அதிகாரிகளோ-ஊழியர்களோ-பொதுமக்களோ இல்லாமல் பூட்டிக்கிடந்த ஆட்சியர் அலுவலகம் முன்தான் அம்மணியும் அவரோடு அழைத்து வரப்பட்டவர்களும் சவுண்டு விட்டுக் கொண்டிருந்தார்கள். இதுதான் தே.மு.தி.க நடத்திய போராட்டங்களின் வீரவரலாறு.

சவுக்கடிக்கும் சாணிப்பால் சித்ரவதைக்கும் எதிராக விவசாயத் தொழிலாளர்களைத் திரட்டி அணி அமைத்து போராடி அவர்களின் உரிமைகளை மீட்டெடுத்தது கம்யூனிஸ்ட் இயக்கம். பஞ்சாலைத் தொழிலாளர்கள் - நெசவாளர்கள் - அரசு ஊழியர்கள் ஆகியோரின் உரிமைகளுக்காகவும் பஸ்கட்டண உயர்வு - கல்விக்கட்டணக் கொள்ளை போன்றவற்றை எதிர்த்து இன்றும் வீரியமிக்க போராட்டங்களை நடத்தும் தோழர்கள், ஞாயிற்றுக்கிழமையில் பொழுதுபோகவில்லையே என ஒரு போராட்டத்தை நடத்திய கட்சியின் தலைமையில் சோசலிசப் புரட்சியை உருவாக்கிட முடியும் என நம்புவதுதான் விசித்திரமாக இருக்கிறது.

கடவுளை நம்பியோர்கூட ஒரு சில கட்டங்களில் நம்பிக்கை இழப்பதுண்டு. கம்யூனிஸ்ட்டுகள் தங்கள் நம்பிக்கைகளிலிருந்து விலகுவதில்லை. புரட்சித்தலைவர் என்ற அடைமொழியைக் கொண்டதாலேயே எம்.ஜி.ஆர்.தான் தமிழகத்தில் பொதுவுடைமைப் புரட்சி செய்யப்போகிறார் என்று அவருக்கு பக்கபலமாக நின்றவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்.

கேப்டலிசம் + கம்யூனிசம் + சோஷலிசம் = அண்ணாயிசம் என்று இதுவரை பொழிப்புரை - பதவுரை- தெளிவுரை எதுவுமே எழுத முடியாத சித்தாந்தத்தை தந்த எம்.ஜி.ஆருக்கும் அவரது கட்சிக்கும் நற்சான்று பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுத் தருவதுபோல செயல்பட்டு 1977லிலும் 1980லும் அ.தி.மு.க ஆட்சி அமைய துணை நின்றவர்கள் தோழர்கள். அந்த அண்ணாயிசக் குழப்பம் இன்று அம்மாயிச ஆபத்தாக மாறிவிட்ட நிலையிலும் அ.தி.மு.க மீது நம்பிக்கை வைத்து ஒரே மேடையிலோ, தனி மேடையிலோ ஆதரித்தே தீருவோம் என்று ஒற்றைக்காலில் நிற்கும் தோழர்கள், தங்களின் புதிய முற்போக்குப் பாதையாக கேப்டலிசத்தை எதிர்ப்பதற்கு கேப்டனிசமே சரியானது என்ற முடிவுக்கும் வரலாம். அவர்களின் நம்பிக்கை அப்படிப்பட்டது.

 சில வேளைகளில், மூடநம்பிக்கையை விடவும் ஆபத்தானதாக அமைந்துவிடுகிறது முற்போக்காளர்களின் நம்பிக்கை.

- கோவி.லெனின் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It