அன்றாடம் இரவு நேரங்களில் தொலைக்காட்சிகளில் ஏதாவது ஒரு சேனலில் நடந்தது என்ன, பறந்தது என்ன என்பது போல பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. ஆடையில்லாமல் ஆன்மீகம் வளர்க்கும் அம்மணச் சாமியார், சாக்கடை சாமியார், தண்ணி போட்டு குறி சொல்லும் பெண் சாமியார், மலை உச்சியில் மல்லாக்க நின்று கொண்டு குறி சொல்லும் குரங்கு சாமியார் என பல சாமியார்களைப் பெரும் சிரத்தைகளுக்கு (!) மத்தியில் கஷ்டப்பட்டு மலைகளில் ஏறி பேட்டி எடுத்து ஊடகங்கள் ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன.
இதில் ஒரு ஊடகம் காசிக்கே சென்று, நரமாமிசம் சாப்பிடும் சாமியார்களின் ரகளையான பேட்டிகளை ரொம்ப சுவாரசியத்தோடு எடுத்து வந்து பல வாரங்கள் ஒளிபரப்பியது. நிஜமாக இந்த நிகழ்ச்சிகனால் யாருக்காவது பயன் இருக்கிறதா எனக்கேட்டால் சத்தியமாக இல்லை என்று தான் கூறவேண்டும். “நம்பினால் நம்பு, நம்பாட்டி போ“ எனச்சொல்லிக் கொண்டே இது போன்ற காட்சிகள் கண்களுக்கு அன்றாடம் படைக்கப்பட்டுக் கொண்டிருப்பதன் பின்னணியில் இருப்பது மூடநம்பிக்கை ஒழிப்பு என எடுத்துக் கொண்டால், அதை போன்ற முட்டாள்தனம் வேறெதுவும் இருக்க முடியாது. “ பிரைம் டைம்” எனச் சொல்லக் கூடிய இரவு 9 மணிக்கு பல தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் நாடகங்கள் வீடுகளில் உள்ளவர்களின் மூளைகளில் மூடநம்பிக்கைச் செடிகளை நன்றாக வளர்த்து வருகிறது.
இது போதாதென்று இடைப்பட்ட நேரத்தில் நடிகை ரஞ்சிதாவோடு நித்யானந்தா சிக்கியதால் அதை வைத்து கொஞ்ச நாள் ஒப்பேற்றினார்கள். நான்கு சுவருக்குள் நடக்கும் உறவை வெட்ட வெளிச்சமாக்கிய வீடியோ பதிவை மீண்டும், மீண்டும் ஒளிபரப்பி ஜென்ம சாபல்யம் அடைந்தவர்களும், அதைப் படமாக்கி பக்கம், பக்கமாக வெளியிட்டு காசு பார்த்தவர்களும், காட்சிகளைப் பார்க்க இங்கு கிளிக் செய்து டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் என்றவர்களும் கூவிக் கூவி ஊடக மானத்தைக் கூறுகட்டி விற்றார்கள். அவர்களுக்குத்தான் அரசு விருதுகளும், அரசு மரியாதைகளும் ஆலவட்டம் போடும்.
இதே காலகட்டத்தில் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் வட்டிப்பணம் கட்டச் சென்ற பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்து அதை செல்போனில் வீடியோவாக எடுத்து, அதை தனி இணையத்தைத் துவங்கி வெளியிட்டனர் சில சமூகவிரோதிகள். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச்செயலாளர் வேலுச்சாமியை அக்கும்பல் கொன்று போட்டது. இதுகுறித்த செய்திகளை எந்த ஊடகங்களும் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.
இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் முதலாளி யார் என பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த இருவர் அதிக சம்பளம் வாங்குவதாகவும் அவர்களுக்கு ஆண்டுக்கு 37 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் கணவன், மனைவிகள். அவர்கள் இருவருக்கும் தலா 37 கோடி ரூபாய் ஆண்டுக்கு சம்பளமாய் வழங்கப்படுகிறது. ஊடகத்துறையில் ஆட்சி செய்யும் இவர்கள் நினைத்தால், தொலைக்காட்சியில் விரும்பிய சேனல் பார்க்க முடியும். அவர்களது சேனலில் சமீபத்தில் பள்ளிப்பாளையத்தில் நடைபெறும் கந்துவட்டிக் கொடுமை குறித்த செய்தித் தொகுப்பு ஒளிபரப்பானது. இதில் பேட்டியளித்தவர்கள் பலர், கந்துவட்டிக் கொடுமையை எதிர்த்த வேலுச்சாமி படுகொலை செய்யப்பட்டார் எனக்கூறிய போது அங்கு “கத்தரி” போடப்பட்டது இயல்பாகத் தெரிந்தது. ஜனநாயகத்தூண்களில் ஒன்றாக கருதப்படும் பத்திரிகைத்துறையில் களை எடுக்க வேண்டிய களைகள் நிறைய உள்ளன. ஆனால், எங்கள் பத்திரிகைகள் தான் இத்தனை லட்சம் விற்கின்றன என்ற கூப்பாடோடு, ஏபிசி கம்பெனி நடத்திய ஆய்வு, டிஇஎப் நடத்திய ஆய்வு என பல புரூடாக்களுடன் தங்களிடம் உள்ள ஊடக வலிமையின் மூலம் திட்டமிட்ட பொய்களைப் பரப்பி வருகின்றனர்.
காட்சி ஊடகங்களில் மூழ்கித் திளைப்பவர்களைக் கவருவதற்காக வெள்ளிப்பரிசுகளை அள்ளி வீசுகின்றனர். பல வாரங்களாக கேட்கப்படும் கேள்விகளுக்குச் சரியான விடையளித்தால் பரிசு என்ற திருவிழாக் கூட்டக் கொட்டக்கடைக்காரன் போல ஆசை வார்த்தைகளை அள்ளி வீசுகின்றனர். சமூகத்தின் மீது கொள்ள வேண்டிய அக்கறையைப் பற்றிக்கவலைப்படாமல் தங்களின் லாபவெறிக்காக எத்தகைய பொய்களை வேண்டுமானாலும் இட்டுக்கட்டி நிரப்பி வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில் தான், தமிழகத்தின் அவமானச் சின்னமாக இருந்த, இருக்கிற உத்தப்புரத்தில் மீண்டும் பிரச்சனை கடந்த 17-ந் தேதி வெடித்தது. ஆனால், அதுகுறித்த செய்திகளை இந்த ஊடகங்கள் அமுக்கி வாசித்தன. தலித் மக்கள் பேருந்துக்காக காத்திருக்கும்போது அமரும் இடத்தில் சாக்கடையை ஒரு தலித்தைக் கொண்டே அள்ளிக் கொட்டி தங்களுடைய சாதித்திமிரை மீண்டும் பறைசாற்றிக் கொண்டனர் உத்தப்புரத்து மெத்தனமக்கள். தலித் மக்கள் தங்கள் பகுதியின் வழியாக நடக்கக்கூடாது என கட்டப்பட்ட தீண்டாமைச் சுவரின் ஒரு பகுதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய தொடர் போராட்டத்தின் காரணமாக திறக்கப்பட்டது. ஆனால், அப்பாதையில் இன்னமும் தலித் மக்கள் முழுமையாகப் பயன்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் தான் புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில மாநாட்டில், உத்தப்புரத்து பொதுப்பாதையில் தலித்துகள் வாகனங்களில் செல்லவும், அவர்களுக்கு நிழற்குடை அமைக்கவும் நேரடியாக களம் காணுவோம் என அறிவித்தது. இந்த நிலையில் தான் திட்டமிட்டு உத்தப்புரத்தில் தலித் மக்களுக்கு எதிராக பிரச்சனை மீண்டும் கிளப்பி விடப்படுகிறது.
ஏற்கனவே, இப்பிரச்சனை குறித்து கடந்த 2008ஆம் ஆண்டு மே-6 ந்தேதி, தமிழக முதல்வரிடம் கோரிக்கை எழுப்பிய போது சட்டமன்றத்தில் அவர் உரைத்த சொற்கள் இன்னமும் நினைவில் உள்ளது. “பெரியார், அண்ணா பட்ட பாடுகளின் விளைவாக பெண்கள் முன்னேறியிருக்கிறார்கள். ஆண்களும் முன்னேறுவார்கள். இந்த அரசை பொறுத்தவரை அமைதி வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுப்போம். அங்கு வாழும் உயர் ஜாதி வர்க்கத்தினருக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை என்றால், மத்திய அரசிடம் பேசி ராணுவத்தைக் கூட வரவழைத்துத் தருகிறோம். ராணுவம் வரவழைக்கப்படும் என்கிற சுடு சொல்லைவிட இன்னும் ஜாதி இருப்பதாக ஒப்புக் கொள்வது தான் பெரிய அவமானமாகும். ஜாதி வேற்றுமை கூடாது. இதனால் சிந்தப்படும் ரத்தம் நம் ரத்தம். பாதிக்கப்படுபவர்கள் நம்முடைய மக்கள் என்பதை உணர்ந்து தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். இதுவரை சமத்துவம் இல்லாமல் இருந்த நிலைமாறி உத்தபுரத்தில் இன்று சமத்துவம் ஏற்பட்டிருப்பதால் இனி உத்தப்புரத்தை உத்தமபுரம் என்று அழைக்கலாம்” என்றார் கருணாநிதி.
உத்தமபுரம் என்று அழைக்கலாம் என அவர் உரைத்த சொற்கள் காற்றில் கரைந்த கற்பூரமாகி விட்டது. ஏற்கனவே, தலித் மக்களைக் குறிவைத்து தாக்கும் காவல்துறை இப்போது நடைபெற்ற பிரச்சனையொட்டி மேலும் பல தலித் மக்கள் மீது பொய்வழக்குகளைப் போட்டுச் சிறையில் தள்ளியுள்ளது.
இதுகுறித்து கடந்த ஜூன்-18ந் தேதி மாவட்ட ஆட்சியர் சி.காமராஜுடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் ஒரு மனு அளித்தனர். அம்மனுவில் கூறப்பட்டிருந்த விஷயம் இது தான். “17.6.2010 அன்று மதியம் 2 மணிக்கு உத்தப்புரம் கிராமத்தில் பிரச்சனைக்குரிய சாக்கடையை தோண்டிய போது ஏற்பட்ட தகராறும், அது சம்பந்தமாகக் காவல்துறை எடுத்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்.
பேரையூர் தாலுகா உத்தப்புரம் கிராமத்தில் ஏற்கனவே தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய களஆய்வில் ஒரு தீண்டாமைச்சுவர் இருப்பதையும், தலித் மக்களை அரசமரத்தில் வழிபட மேல்சாதியினர் அனுமதிப்பதில்லை என்பதையும், ஊரின் ஒட்டுமொத்தச் சாக்கடையும் தலித் மக்கள் பகுதிக்கு திருப்பிவிடப்பட்டு சுகாதாரக் கேடுகளை உருவாக்கி வருவதையும் கண்டுபிடித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தது. தீண்டாமையின் கொடூர வடிவமான தீண்டாமைச்சுவரின் ஒருபகுதி இடிக்கப்பட்டு பொதுப்பாதை திறக்கப்பட்டது.
அந்தப் பாதையில் வாகனங்கள் செல்ல தற்போதும் அனுமதிப்பதில்லை. அதே போன்று சாக்கடைப் பிரச்சனையும் இன்னும் தீர்க்கப்படாத நிலையில் 17.6.2010 அன்று வடக்குத்தெரு மேல்சாதி சமூகத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர்களும், தெற்குத் தெருவைச் சேர்ந்த தொந்தி (எ) மாரிமுத்துவும் சாக்கடைக் கழிவுகளைத் தோண்டி தலித் மக்கள் பேருந்துக்காக உட்காருமிடத்தில் போட்டுக்கொண்டிருந்தனர். தெற்குத் தெருவைச் சேர்ந்த சங்கரலிங்கம் சென்று, இந்த சாக்கடை சம்பந்தமாக மே மாதம் 12ம் தேதி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு கொடுத்து இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் இந்தச் சாக்கடையை தோண்டக் கூடாது என ஆட்சேபணை செய்திருக்கிறார். மேலும் புறக்காவல்நிலையத்தில் இருந்த எழுமலை காவல்துறை சார்பு ஆய்வாளரிடம் இதுசம்பந்தமாக தகவல் சொல்லி, தடுத்து நிறுத்துங்கள் என்று சொல்லியும் காவல்துறை கண்டுகொள்ளவில்லை. இந்தச் சம்பவத்தையொட்டி தகராறு ஏற்பட்டு காவல்துறை தடியடி நடத்தியுள்ளது. சங்கரலிங்கம் உட்பட தலித் மக்கள் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
இது சம்பந்தமாக தகவலறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோகரன் அவர்கள் உத்தப்புரம் தெற்குத் தெருவிற்குச் சென்று விசாரணை செய்து, ஏற்கனவே தோண்டிப் போட்ட சாக்கடை மண்ணை அப்புறப்படுத்துவதாகவும், இதுசம்பந்தமாக வேறு எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்று கொடுத்த வாக்குறுதியின்பேரில் சுமுகமாகச் சென்று தங்கள் வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த போது இரவு 1 மணிக்கு மேல் கதவைத் தட்டி, தலித் மக்கள் 12 பேரைக் கைது செய்து, அவர்கள் மீது கொலைமுயற்சி(307) உட்பட ஜாமீனில் வெளிவர முடியாத பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் காவல்துறை தலித் மக்களின் தெற்குத் தெருவிற்குள் நுழைந்து சம்பந்தமில்லாத ஜனங்களையும், பெண்களையும் விரட்டிக் கைது செய்து வருகிறது. அதே நேரத்தில் வடக்குத்தெருவைச் சேர்ந்த மேல்சாதியினர் 4 பேரை மட்டுமே காவல்துறை கைது செய்துள்ளது. இந்த சம்பவத்தில் காவல்துறை நடுநிலையோடு நடந்து கொள்ளாமல் ஒருதலைப்பட்சமாக நடந்துள்ளது.
மேலும் உத்தப்புரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான பொதுப்பாதையில் வாகனம் உட்பட செல்வதற்கு உத்தரவாதமும், மார்க்சிஸ்ட் கட்சி ராஜ்ய சபை உறுப்பினர் பேருந்து நிழற்குடைக்காக அவருடைய நிதியிலிருந்து ரூ.3.75 லட்சம் ஒதுக்கிய பிறகும், நிழற்குடை அமைப்பதில் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்காமல் காலந்தாழ்த்தி வருவதால் இதுபோன்ற விரும்பத்தகாத பதட்டமான சூழ்நிலை அடிக்கடி ஏற்படுகிறது. இனிமேலாவது மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட கோரிக்கைகளை துரிதமாக நிறைவேற்றுவதோடு, தற்போது தலித் மக்கள் மீது காவல்துறை எடுத்துள்ள ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி, அவர்கள் மீது போடப்பட்டுள்ள கடுமையான வழக்குகளை வாபஸ் பெறுவதற்கும், தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காவல்துறையின் தடியடி சம்பவத்தால் பாதிக்கப்பட்ட தலித் மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் கே.பாலபாரதி, சட்டமன்ற உறுப்பினர்கள் என்.நன்மாறன், எஸ்.கே.மகேந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன் ,தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி.சம்பத், பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ், மதுரை மாவட்ட நிர்வாகிகள் எம்.தங்கராசு, எஸ்.கே.பொன்னுத்தாய், ஆர்.ராஜகோபால், உள்ளிட்டத் தலைவர்கள் ஜூன்-21ந் தேதி சந்தித்து ஆறுதல் கூறினர்.
அப்போது காவல்துறையின் தாக்குதலைக் கண்டித்தும், நிழற்குடை அமைக்கவேண்டும். அரசு திறந்துவிட்ட பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தப்புரம் தலித்மக்கள் கைக்குழந்தைகளுடன் உண்ணாவிரதப்போராட்டத்தைத் துவக்கியிருந்தனர். உத்தப்புரத்தில் அதாவது முதல்வர் பாணியில் சொல்வதென்றால் உத்தமபுரத்தில் நடந்தது என்ன என எந்த ஊடகங்களும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
அப்போது பேசிய தலித் மக்கள், “அரசு திறந்துவிட்ட பாதையில் ஆட்டோவோ, விவசாய பொருட்களை ஏற்றிச்செல்லக்கூடிய டிராக்டரோ செல்ல அனுமதிப்பதில்லை. அத்துடன் தாங்கள் வாகனங்களில் செல்லும் போது காவல்துறையினர் தடுப்பதாக குற்றம் சாட்டினர். மதுரை மாவட்ட ஆட்சியரும், காவல்துறை கண்காணிப்பாளர் மனோகரும் கைது நடவடிக்கை இருக்காது என உறுதியளித்த பின்னரும் கைது நடவடிக்கையை காவல்துறை தொடர்கிறது. அப்பாவிகள் காவல்துறையின் மிரட்டலுக்கு உள்ளாகின்றனர் எனக்கூறினர். அரசு திறந்துவிட்ட பாதையில் வாகனங்கள் செல்வதற்குத் தடையில்லை. மக்கள் சுதந்திரமாகச் செல்கின்றனர் என்ற முதல்வரின் அறிவிப்பு உத்தமபுரத்தில் செல்லுபடியாகவில்லை என்பதை தலைவர்கள் கண்கூடாகப் பார்த்தனர்.
இதுகுறித்து கேள்வி எழுப்பியதற்கு, மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பேசிய பேரையூர் தாசில்தார் மங்களராமசுப்ரமணியன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் கனகராஜூம் “அரசு திறந்து விட்டப் பாதையில் வாகனங்கள் செல்வதற்கு எந்தத் தடையுமில்லை” என கூறினர். ஆனால் மக்களோ, அதிகாரிகள் தவறான தகவல்களைத் தெரிவிப்பதாகக் கூறினர். தங்கள் பகுதியில் ரேசன் கடை மூடப்பட்டுள்ளதாகவும், மண்ணெண்ணெய் வாங்க முடியவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.
இதைத்தொடர்ந்து தலைவர்கள், அரசு திறந்துவிட்ட பாதையில் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டிச்செல்வதற்கு முடிவு செய்தனர். இதற்கு மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் முற்றாக மறுத்துவிட்டது. அரசு திறந்து விட்ட பாதையில் வாகனங்கள் செல்வதாக நீங்கள் (அதிகாரிகள்) தானே கூறினீர்கள். இப்போது ஏன் அனுமதி மறுக்கிறீர்கள் என்பதற்கு அதிகாரிகள் சரியான பதிலை அளிக்க முடியாமல் திணறினார்கள்.
இதையடுத்து தலித்மக்களுடன் அரசு திறந்துவிட்ட பாதையில் வாகனங்களை ஓட்டிச்செல்வது என தலைவர்கள் முடிவு செய்து வாகனங்களுடன் புறப்பட்டனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். தலித்மக்களை சந்திக்க வந்த சட்டமன்ற உறுப்பினர்கள் செம்மொழி மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றுள்ள மதுரை மாவட்ட ஆட்சியர் சி.காமராஜை தொடர்பு கொண்டு பேசினர். ஆட்சியரோ, செம்மொழி மாநாடு முடிந்து 28ம் தேதி வந்துவிடுவேன். வந்தவுடன் உத்தப்புரத்திற்கு நேரடியாகச்சென்று பிரச்சனைகளை ஆய்வு செய்து தீர்வு காண்கிறேன் என தொலைபேசி வாயிலாக உறுதியளித்தார்.
அரசு திறந்துவிட்ட பாதையில் வாகனங்களை ஓட்டிச்செல்ல அனுமதிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியதை அடுத்து மாவட்ட ஆட்சியர் மாலை 2.30 மணிக்கு அனுமதியளித்தார். பின்னர் ஓர் ஆட்டோவை வரவழைத்து, காவல்துறை ஜீப் முன்னால் செல்ல, ஆட்டோவில் ஜந்தாறு பெண்கள் பின்னால் சென்றனர். இவர்களது ஆட்டோவைத் தொடர்ந்து பாதுகாப்புக்கு காவல்துறையினர் சென்றனர். இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகாவை நினைவுபடுத்துவது போல இக்காட்சி நம் கண்ணுக்கு முன் வந்தது. இக்காட்சிகளை ஒரு செய்தி தன்மைக்குரிய வகையிலாவது ஒளிபரப்ப வேண்டும் என்ற பத்திரிகை தர்மத்தை பல காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் வசதியாக மறந்துவிட்டன. உண்மையைச் சொல்வதென்றால் மறைத்து விட்டன.
தலித் மக்கள் விவசாயம் செய்யும் பொருட்களை வாகனங்களில் ஏற்றிக் கொண்டு செல்லும் வழியை அரசு திறந்து விட்டும் காவல்துறை அதற்கு அனுமதி மறுப்பது , தலித் மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் ஸ்தம்பிக்கச் செய்யும் வேலைதான். சொந்தமாக நிலம் வைத்து யாரிடமும் கையேந்தாமல், சுயமரியாதையோடு வாழும் தலித் மக்களை எப்படி தங்கள் பகுதியில் வாகனத்தில் அனுமதிப்பது என்ற கேடுகெட்டப்புத்திக்கு ஒத்து ஊதுகிறது கலைஞரின் பொறுப்பில் உள்ள காவல்துறை.
தமிழகத்தில் எங்கும் இல்லாத கொடுமையாக மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் தான் தலித் மக்களுக்குத் தனியாகச் சத்துணவுக்கூடம், ரேசன்கடை, பள்ளிக்கூடம் என சாதி பார்த்து பிரித்து கட்டப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பிலேயே செய்யப்பட்டுள்ள இந்த தீண்டாமை இழிவை இன்னமும் கண்டு கொள்ளாமல் “பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்“ என்ற வள்ளுவனின் வரி எடுத்து செம்மொழிப்பாடல் வடித்துள்ள கலைஞரிடம் கேட்போம், “உத்தப்புரம் உத்தமபுரமாக உண்மையில் மாறிவிட்டதா?“
- ப.கவிதா குமார் (