கல்வி கண்களுக்கு இணையானது என்கிறார் திருவள்ளுவர்.

வகுப்புவாரி பிரதிநிதித்துவம், இடஒதுக்கீடு எனும் சமூகநீதியின் முன்மையே கல்விதான்.

கல்விக்கண் திறந்த காமராசர் என்று பெருந்தலைவர் காமராசரை மக்கள் சொல்வதற்குக் காரணம், அவர், கல்விக்குக் கொடுத்த முன்னு ரிமை. ஏழை, எளிய மாணவர்கள், வறுமையின் காரணத்தால் எங்கே பள்ளிக்கு வராமல் நின்று விடுவார்களோ என்று எண்ணிய அன்றைய முதல்வர் காமராசர், அப்படி ஒரு நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்று பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

village_school_400தந்தை பெரியாரும், பேரறிஞர் அம்பேத்கரும் கல்விக்கே முன்னுரிமை கொடுத்தார்கள். குறிப்பாகப் பெண் கல்வியை முதல்நிலைப் படுத்தினார்கள். மனித இனத்தின் முன்னேற்றமும், வளர்ச்சியும் கல்வியில்தான் அடங்கி இருக்கிறது.

இன்று கல்வி வணிகப் பொருள் ஆகிவிட்டது. கல்விக் கூடங்கள் வணிக மையங்களாக ஆக்கப்பட்டு விட்டன. குறிப்பாகத் தனியார் கல்வி நிறுவனங்கள் வாங்கும் கல்விக் கட்டணங்கள் எல்லை மீறி, ஏழை நடுத்தர மக்களை மிகவும் பாதிக்கின்றன.

எனவே ஓய்வு பெற்ற நீதியரசர் கோவிந்தராசன் தலைமையில் ஒரு குழு அமைத்து, அது தொடர்பாகச் சட்டமும் இயற்றி, கல்விக் கட்டணங்களை ஒழுங்குபடுத்தத் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

அதன் அடிப்படையில் 10, 233 பள்ளிகளிடம் அவைகளின் அடிப்படை வசதிகள் உட்பட பல்வேறு செய்திகளைக் கேட்டறிந்த கோவிந்த ராசன் குழு, ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனிக் கல்விக் கட்டணங்களை நிர்ணயித்து, 2010 மே 7 ஆம் தேதி ஆணை பிறப்பிக்கப்பட்டது.இவ் வாணைக்கு 6400 பள்ளிகள் எதிர்ப்புத் தெரிவித்தன.

பள்ளிகளுக்குக் கல்விக் கட்டணம் முறைப் படுத்துவது தொடர்பாக அரசு கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்துத் தனியார் பள்ளிகள் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை, நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மீண்டும் நீதியரசர் கோவிந்தராசன் குழு நிர்ணயித்த கட்டணத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த போது, உயர்நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை தடை செய்தார் நீதியரசர் வாசுகி.

இத்தடை ஆணைக்கு எதிராகத் தமிழக அரசும், பெற்றோர்களும் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியபோது, தலைமை நீதியரசர் இக்பால், நீதியரசர் சிவஞானம் ஆகியோர் நீதியரசர் வாசுகியின் தடை ஆணையை நீக்கிவிட்டனர்.

ஏனெனில் அவ்வாணை தனியார் பள்ளிக ளுக்குச் சாதகமாக, அரசு அறிவித்த கட்டணத்தை விடக் கூடுதல் கட்டணங்கள் பெற வாய்ப்புள்ள தாக இருப்பதாக உயர்நீதிமன்றம் கூறிவிட்டது. ஆகவே நீதியரசர் கோவிந்தராசன் குழு அறிவித்த தனித்தனிக் கட்டண அறிவிப்பு நடைமுறைக்கு வருகிறது.

இதில் 2009 ஆம் ஆண்டு 10,934 பள்ளிகளிடம் இதுகுறித்து குழு விளக்கங்கள் கேட்ட போது, 533 பள்ளிகளைத் தவிர ஏனைய பள்ளிகள் கேட்கப் பட்ட விளக்கங்களைக் கொடுத்துவிட்டன. எனவே இந்த 533 பள்ளிகளுக்குக் கல்விக் கட்டணம் வசூலிக்கத் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

சென்னையில் 140 மழலையர் பள்ளிகளில் எல்.கே.ஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை ரூபாய் 1500 தொடக்கம் 8000 வரை கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. சில பள்ளிகளில் 12 ஆம் வகுப்புக்கு அதிக அளவு கட்டணமாக 11,000 ரூபாய்வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ரூபாய் 25 ம், வேறொரு பள்ளியில் 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ரூபாய் 25 ம், கன்னியாகுமரியில் ஒரு பள்ளியில் 12 ஆம் வகுப்புக்கு மட்டும் ரூபாய் 25 ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 140 பள்ளிகளுக்கு நிர்ணயித்த அதே கட்டணம் திருவள்ளூரில் 89 பள்ளிகளிலும், திருவாரூரில் 80 பள்ளிகளிலும், காஞ்சிபுரத்தில் 66 பள்ளிகளிலும், மதுரையில் 24 பள்ளிகளிலும், இராமநாதபுரத்தில் 16 பள்ளிகளிலும், சிவகங்கையில் 10 பள்ளிகளிலும் சிறிதும் மாற்றம் இல்லாமல் ஒரே மாதிரியாக இருக்கின்றன.

பார்க்ப் போனால் இந்தக் குழப்பங்கள் எல்லாம் தனியார் பள்ளிகளாலும், ஆங்கிலவழிக் கல்வி மோகத்தினாலும் ஏற்பட்ட விழைவு.

தமிழ்வழிக்கல்வியில் அறிவு வளராது, ஆங்கில வழிக் கல்வியில் மட்டுமே அனைத்தும் சாதிக்கலாம் என்ற பெற்றோர்களின் தவறான எண்ணங்களே, அவர்களைத் தனியார் பள்ளிகளுக்குக்கொண்டு செல்கின்றன.

சீனா, ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளில் ஆங்கில மோகம் இல்லை. மாறாகத் தம் தாய்மொழிக் கல்வியிலேயே கல்வி கற்கிறார்கள். அவர்கள்தான் இன்று மருத்துவம், அறிவியல், பொறியியல் எனப் பல்வேறு துறைகளில் முன்னணியில் இருக்கிறார்கள்.

தாய்மொழிப்பற்று இருந்தால் மட்டுமே போதாது, தாய்மொழிவழிக் கல்வியும் நம் பிள்ளைகளை உயர்த்தும் என்று பெற்றோர்கள் அறியாதவரை, கல்விக்கு இப்படிப் பணத்தை இறைப்பது தவிர்க்க முடியாததே.

தனியார்க் கல்வி நிறுவனங்கள், கல்வியை வணிகப்பொருள் ஆக்கியதில் என்ன தவறு இருக்கிறதோ, அதே தவறுதான் ஆங்கில வழிக் கல்வி மோகத்தால் தனியார் பள்ளிகளைத் தேடி வரும் பெற்றோர்களிடமும் இருக்கிறது.

பெற்றோர்கள் மனது வைத்தால் மட்டுமே இந்தக் கல்விக் கொள்ளையை முறியடிக்க முடியும். இல்லாவிட்டால் இது தொடர்கதைதான்.

Pin It