மத்திய இரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, இரயில்வே பணியிடங்களுக்கான தேர்வை   இனி அந்தந்த மாநில மொழிகளில் எழுதலாம் என்று இரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். நல்ல செய்தி இது. அதே வேளை, இந்த மாதம் பிப்ரவரி 22ஆம் நாள் நாடாளுமன்றம் கூடியது. மரபுப்படி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தொடக்கத்தில் உரை நிகழ்த்தினார். அவர் ஆற்றிய உரை முழுவதும் இந்தியிலேயே இருந்தது.

இந்திய நாடாளுமன்றத்தில் வெவ்வேறு மொழிகள் பேசும் பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் அனைவருக்கும் இந்தி தெரிந்திருக்கும், படித்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அப்படிப் படிக்க வேண்டும் என்று கட்டாயமும் இல்லை. இந்த உறுப்பினர்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கு பெறும்போது, அவர்களுக்கும் புரியும் மொழியில் அவை நடவடிக்கைகள் அமைய வேண்டும். அவர்கள் பேசுவதற்கும் அது வசதியாக இருக்கும்.

குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல் தன் உரையை இந்தியில் ஆற்றிய பின்னர், அவ்வுரை அப்பொழுதே, நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சொல்லி இருக்க வேண்டும். அப்படி மொழிபெயர்த்துச் சொல்வதற்குப் பதிலாக, குடியரசுத் துணைத்தலைவர் அமீது அன்சாரி, குடியரசுத் தலைவரின் உரையில் உள்ள முதலாவது பத்தியையும், கடைசி பத்தியையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துப் படித்திருக்கிறார்.

நடுவில் உள்ள உரையை யார் வந்து மொழி பெயர்ப்பார்கள் என்று இப்படிச் செய்திருக்கிறார்கள் இவர்கள்? மத்திய இரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி அவர்கள் ஏற்கனவே தான் தமிழில் பேச அனுமதி தர வேண்டும் என்று மக்களைத் தலைவர் மீராகுமாரிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

இந்தியா ஒரு நாடு, ஒரே தேசியம் என்று சொல்லிக்கொள்ளும் மத்திய அரசு இந்தி மொழிக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பதும், ஏனைய மொழிகளை புறக்கணிப்பதுமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டுதான் குடியரசுத் தலைவரின் இந்தி உரையும், அரைகுறை ஆங்கில மொழிபெயர்ப்பும். இந்தி தெரியாத மக்களுக்கு மாற்று மொழியாக ஆங்கிலம் நீடிக்க வேண்டும் என்று நேரு 1959ஆம் ஆண்டு கொடுத்த வாக்குறுதியை மீறும் செயலாக இது இருக்கிறது. நேருவின் உறுதிமொழிக்கு மதிப்பே இல்லை.

1964-65ஆம் ஆண்டின் மாணவர் இந்தி எதிர்ப்புப் புரட்சி மீண்டும் வரக்கூடாது என்றால், தேசிய இனங்களின் மொழிகளை மத்திய அரசு புறக்கணிக்கக்கூடாது, மதிக்க வேண்டும். 
-----------------------------------------------------------------------------------------------------
தி.மு.க. பொதுக்குழுவில் ஒரு பூணூல்

சட்டமன்றத்தில், ‘நான் பாப்பாத்திதான்’ என்று சாதி ஆணவத்தோடு பேசியவர் ஜெயலலிதா. அதற்குச் சற்றும் குறையாத பேச்சு. எஸ்.வி.சேகரின் சட்டமன்றக் கன்னிப் பேச்சு. அவர், தி.மு.க.வின் பொதுக்குழுவில் கலந்து கொண்ட காட்சியைத் தொலைக்காட்சிகளில் பார்த்த போது, அதிர்ச்சியும், வேதனையும் நம்மை அள்ளிக் கொண்டது.

ஆரிய முன்னேற்றக் கழகத்திற்கு, திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழுவில் என்ன வேலை? சங்கர மடத்தின் செல்லப் பிள்ளையை, அறிவாலயம் எப்படி அனுமதித்தது?

- சுப.வீரபாண்டியன்

Pin It