கனல் கக்கும் நகரின்
அனலறை.
உன்னோடு உரையாடிக் கொண்டிருந்த
தனிமையை
வெளியேறச் செய்தேன் கெஞ்சி

மல்லிகை இதழ்களால் நெய்த
ஆடையொன்றினை பரிசளித்தேன்
மணந்தாள் நீ... தோளில்
கிளியென அமர்ந்தேன் மீனாட்சி

அறைக்குள் காமேஸ்வரி உன்
பரத முத்திரைகள்

எனது கரும்புவில்லை
அனாசயமாய் உடைத்து
பொழுதை இனிப்பாக்கினாய் காமாட்சி

விடையெழுதியத் தாளாக
ஒப்படைத்தேன் என்னை
சரியான மதிப்பெண் அளித்து
தேர்ச்சி சொன்னாய் சரசுவதி

இளமையின் பாலையில்
வறண்டு கிடந்தவனுக்கு
மழையெனப் பொழிந்தாய் செல்வமாய்
வாய்த்தது இலட்சுமி கடாட்சம்

உச்சத்தின் உச்சியில் மாதங்கியா நீ
வெற்றிகளை என்பக்கம் திருப்பிய
நிதம்பசூதனியா...
பசியறிந்து அமுதூட்டினாய் அன்னபூரணி
உன்னோடு உறவுகிற தருணங்களில்
உணர்கிறேன் அர்த்தநாரியாய்

ஓய்ந்து களைத்திருக்குமிவ் வியர்வை
நேரத்திலொரு விண்ணப்பம்

என்னை என்வழியில் பயணிக்க அனுமதி
காற்றைப் போல்... கவிதை போல்.

எனது வண்ணங்களுடன் பறக்கவிடு
மானோட்டமாய் துள்ளலை
ராணுவ அணிவகுப்பாய் மாற்றிவிடாதே

பெருமூச்சுகள் ஓய்ந்த சாந்த தருணத்தில்
கோரிக்கைகளை பரிசீலிப்பாயா
சக்தி! சாந்த சொரூபி...!

- அன்பாதவன்

Pin It