அனுமதிக்கப்படாத கவிதை

திகட்டுமளவிற்கு உனக்கு கவிதைகள் தந்தேன்
உனக்குக் கோபமா? அது அனுமதிக்கப்படாததா?

நிகழ்கால நினைவாக உன்னை உருமாற்றியபடி
ஒவ்வொரு கவிதையிலும் உன்னை நான் இழந்து கொண்டிருக்கிறேன்

தண்ணீர்க்குளியலில் என்னிலிருந்து உன்னை நான் போக்கிக் கொள்கிறேன்
என்னுடைய ஒவ்வொரு கவிதையாலும்
இன்னும் கொஞ்சம் நீ
என்னுள் மரணித்துக் கொண்டிருக்கிறாய்

பாதுகாப்பான அந்தக் கடந்த காலத்தில்
உன்னை நான் புதைத்துக் கொண்டிருக்கிறேன்
கவிதைகளில் உன்னை யதார்த்தமாக்குவதில்
யதார்த்தத்தில் நீ பிசாசாகிக் கொண்டிருக்கிறாய்

அதன் பிறப்பினை அளித்த உணர்வின் மரணத்திற்கு
ஒவ்வொரு கவிதையும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது.

உன் இழப்பைக் கொண்டாடும் ஒவ்வொரு கவிதையும்
என் சோகத்தை துக்கிக்கிறது.
நீ இதை அனுமதித்தாய்
உனக்குப் பதிலாக, என்னைத் தவிர,
நான் இதை அனுமதிக்கிறேன்.

0

வெற்று வார்த்தைகள்

மொழி பிறந்த வெற்றுவெளியை
மீட்க
ஏராளமான வார்த்தைகள் உள்ளன.

ஆனால் அதை உச்சரிக்க ஒரு மரணம் போதும்.

0

வாசிக்கப்படாத நாளிதழ்களுடன் மற்றுமொரு நாள் ஊர்ந்து நகர்கிறது
ஒரு ஜோடி விழிகள் என்னை விட்டு அகல மறுக்கின்றன.
கூர்பற்கள் கொண்ட நீலநிற ஆயுதமென மலை வரிசையொன்று
அழகான புகைப்படத்தில் நிற்கின்றது.
விரைவு உந்து வண்டியின் வேகமிதிப்பானுக்காக
நினைவு உந்த என் கால்கள் தினவெடுக்கின்றன.
நீ என் தாடையைத் தட்டிக் கொடுக்கிறாய்
முன்பொரு காலத்தில் பெருமிதமிருந்த இடத்தில்
ஒரு புதிய கன்னக்குழி பிறக்கிறது.
வானத்திற்கும் நகரும் மேகங்களுக்குமிடையே
ஒரு மற்போர் நடக்கிறது
ஈரப்பதத்துடன் கீழே பூமி.
வேர்கள் பெருமூச்சு வாங்குகின்றன.
குழந்தையென தன்னைச் சுருக்கிக் கொள்ள அறிந்திருந்த
வேப்பமரத்தை அவை ஒளித்துக் கொள்கின்றன.
மரங்களின் சகோதரத்துவம் தொங்கும் மௌனமென
இடையே ஊசலாடுகிறது

மின்சாரப் பச்சைக் குத்தலில் இரத்தக் கசிவாக ஒரு பெயர்.
உணர்வுகள் நிரம்பிய அடிவயிற்றினுள்
கதறல்கள் உள்நுழைகின்றன.

கடிகாரத்தின் பெரியமுள்
நிமிடங்களை அறைவது எதிரொலிக்கிறது
மணிக்கணக்கில் நகரும் காலத்தை
சிறுமுள் கிள்ளுகிறது.

வளர்தலின் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும்
குழந்தையின் உள்காதுகளின் மிருதுவான தோலைப்போல
மெதுவாக கண்ணிமைகள் மூடுகின்றன.

இந்நேரம் வரையிலும் என்னை விட்டகலாத
அந்த ஜோடிக் கண்கள்
குளியலறைத் தொட்டி நீரிலிருந்து
வேகமாக வெளியேறுகின்றன.

ஆங்கில மூலம்: வைஜெயந்தி சுப்ரமணியன்

தமிழாக்கம்: சித்தன் பிரஸாத்

Pin It