சாராயம்
கருவாடு
சுருட்டு
ஆடு
மாடு
பன்னி
கோழியென பலியிட்டு
இன்று
என்னைப் போலவே
நீயும் வணங்குகிறாய்

என் பாட்டன்களான
மதுரைவீரன்
இருச்சி
காத்தவராயன்
நந்தன் என
அன்று
உன் பாட்டனுக்கெதிராய்
அடங்க மறுத்து
அத்துமீறியதால்
பழிவாங்கப்பட்டவர்கள்
இன்று
சாமிகளானார்கள்

இன்று
கழுத்தறுந்தும்
மலம் தின்னும்
உன்னோடு
சண்டையிடும்
நாங்கள் யார் தெரியுமா
உன்
பிள்ளைகளின் சாமிகள்

****

முதன் முதலாக
கோயிலுக்குள் போன
கந்தசாமி
சூரப்பாட்டு சந்தையில
பொணமாய்க் கிடந்தான்

தனித்துக் கிடந்த
சுமைதாங்கிக் கல்லுமேல
கால் மேல் கால் போட்ட
கோவிந்தன் நொண்டியானான்

கொளத்துல தண்ணி மொண்ட
பெரியத்தாயும் குப்பனும்
அடிதாங்க முடியாம
ஊரைவிட்டுப் போனவங்க
திரும்புல

நாங்கெல்லாம் அப்போ
எப்படியெல்லாம்
போராடினோம் தெரியுமாயென
அடிக்கடி
மார்தட்டிக் கொள்ளும்
என் பாட்டனைப் பார்த்து
கேட்கத்தான் தோன்றுகிறது

கடைசிவரை
வரவேயில்லையா
நம்ம சேரிக்கு
காந்தி தாத்தாவும்
நேரு மாமாவும்

- அதியன்

Pin It