கம்கட்டு வியர்வை
நனைக்கும் எல்லை கடந்து
நனைத்திருக்க கையுயர்த்தி
பொதுத் தொலைபேசியில்
ஒரு ரூபாய் நாணயங்கள்
சேகரிக்கும் சிறுபெண்ணிற்கு
பசி வயிற்றைச் சுருட்டலாம்...
உள்ளாடைப் பிசுபிசுப்பு
தவிப்பை ஏற்படுத்தலாம்...
கடைசியாய்
ஊருக்குப் போகும் பேருந்தின்
இயந்திரம் ஓடத் தொடங்கியிருக்கலாம்...
வறுமையை ஒளியெனப் பொழியும்
இந்த நிலாப்போதில்
சக்கரக் காப்புக்கவசமும் சங்கிலிக்காப்பும்
இல்லாத மிதிவண்டியில்
தன் இயலாமையை இருக்கையில் ஊன்றி
குனிந்து வீதியை விழுங்க
அவள் தகப்பன் காத்திருப்பது
கண்களில் உருகலாம்...
இதோ என் சன்னல்
அவளைக் கடக்கிறது...

***

மின் விசிறிகள் நிறுத்தப்பட்ட துணிக்கடையில்
ஓய்ந்த விற்பனைப் பிரிவில்
குழல் விளக்குகளையே வெறித்துப்
பார்த்துக் கொண்டிருக்கும் நடுவயதுக்காரரின்
மருத்துவத் தேவைக்கு
முதலாளியின் அருள் தேவைப்படலாம்...

கடைவாசலில் வலதுகரத்தால்
நண்பரின் கழுத்தை இறுக்குபவரின்
மருட்டும் வாய் நாற்றம்
தன் மனைவியை நினைவுறுத்தலாம்
கழுத்தைத் தந்தவருக்கு...

மின்சாரம் துண்டிக்கப்பட்ட
தெருக்கம்பத்தின் கீழ் அலைபேசியின் ஒளியில்
வாசித்துக்கொண்டிருக்கும்
பனிக்குல்லாய் வணிகன் ஒருவேளை
காம்யூவாகவோ ஒரேருழுவராகவோ
இருக்கலாம்...
என் சன்னல் கடந்த பின்னர்
முல்லைப் பெரியாருக்கும் கூடங்குளத்திற்கும்
நேரடி அந்நிய முதலீட்டிற்கும்
தீர்வையவர் எழுதிப் போகலாம்...

***

அரை இருட்டின் இட்லிக்கடையில்
குழல் விளக்கிலிருந்து சுருண்டுவிழும்
பூச்சிகளையும் சேர்த்துப் பிசையும்
நண்பருக்கு எதிரே மகிழ்ச்சியை
முகத்திற்குக் கொண்டுவர முயன்று
தோற்கும் ஒருவருக்கு உண்மையில்
விளக்குமாற்றால் மனைவி
அடித்துத் துரத்தியதால் நெஞ்செரிச்சல்
நோயோ என்னவோ...

கோபுரமாக அடுக்கப்பட்டப்
பழங்கற்களுக்கிடையில் அன்றைய கனவுகளை
கார்த்திகை தீபமென ஏற்றிவைத்து
அணையாமல் காவல் செய்பவரின்
வணிகம் ஓய்ந்திருக்கிறது...
அழுகிய பழங்களை யாதுசெய்யக்கூடுமோ
இந்தப் பின்னிரவில்...


***

இருட்டைப் பாதியாக நறுக்கும்
சோடிய விளக்கொளி படர்ந்த
பேருந்து நிறுத்தத்தில்
கைகள் நடுங்க யாசித்துவிட்டு
ஒரு கீழ்மையான விலங்கென
கிடைத்ததை உண்டபின்
முடைநாற்றமடிக்கும் கிழிந்த துகிலுக்குள்
இளமையின் கனவு
கக்கத்தில் களைத்துறங்கத் துயிலும்
வாழ்வு மறுக்கப்பட்ட முதியவரின்
கால்களில் மொய்த்துத் துளைக்கின்றன
கொசுக்கள்...
இறங்கியோடி கொசு மட்டையால்
எரித்துக் கொல்ல அவாவுகிறேன்...

***

ஏமாற்றங்களால் அறையப்பட்டு
கனவுகளனைத்தும் காய்ந்து
சலனமற்று இறுகி
உயிரற்ற ஒரு பொம்மையின்
அசையும் பளிங்கு விழியென
விழியில் மட்டும் உயிரசையும்
என் இந்த முகத்தையும்
இயங்கும் மனிதர்சிலர்
பார்த்திருந்திருப்பார்கள்...

நானும் இறங்கி
வீட்டிற்குப் போவேன்
அவர்களும் இறங்கி
வீட்டிற்குத்தான் போவார்கள்...
நிலவு மயக்கும் இந்தப் பேரெழில்
பனி இரவில்...

Pin It