மாலை வெயில் மறையும் நேரம்
இருட்டு வீரன்...!
முரட்டுக் குதிரை ஏறிவிட்டான்
கடிவாளம் போடா காட்டாறு போல்...!

திசைகளை விழுங்கியபடி...!
மெல்லினமும் இடையினமும்
வல்லினத்தால் வளைக்கப்படும்...!
உயிர்வலி எடுக்கப்படும்
பல உதாசீனங்களுக்கிடையில்
இரவின் பிடி இரும்பின் பிடியில்
ஐம்புலனும் அமாவாசை
வருகைக்காய் போய்விட்டன.
ஒவ்வொரு காய்தலிலும்
கருங்கள்வன் மௌனமாய்
சிரிக்கின்றான்.

தீ... தீயுடன் சேர்ந்து கொழுந்துவிட்டு
எரியும் பல அணைப்புகளுக்கு
இடையில்...!

கதம்பின் சத்தம்
காதில் விழாதது போல்...!
நிதம்ப மேட்டின்
நின்றாடிய கள்வன்...!
பின்னொரு நாளில்
வருத்தப்படுவான்
விடியலின் சுரீர் உரைப்பில் கொட்டும்
குளவி என முறைக்கும்

தீயின் கங்கு கனியத் தொடங்கி
சில கணங்களில் பூத்துச்

சாம்பலாய் மாறும்
மெல்லினமும் இடையினமும்
சொல்லிழந்து சுருண்டு
கிடந்தாலும் துணைக்கால்
பார்த்துக் கிடக்கும்
அடுத்த நாள்...
மாலை வெயில் மறையும் நேரம்...!

- பெ.மகாஅமலன்

Pin It