1
காலம் தின்ற கதவுகள்
மூடிக் கொண்டன

புறக்கணிக்கப்பட்டன
இடுக்கில் நுழையும்
ஒளிக்கற்றைகள்

உதடுகள் விரிசலை
ஒளித்துக் கொண்டு
துரத்தல் கூச்சல்களை
எழுப்புகின்றன

நிர்வாணப்படுத்தப்பட்ட
என்மனம்
பேரிரைச்சலுடன் வெளியேறுகின்றது

சத்தங்கள் நுழையாத
தேசமொன்றில் உலாவினேன்
துரத்திக் கொண்டு வருகின்றன
பெரும் ஓசைகள்
ஒன்றன்பின் ஒன்றாக...

2

மணல் மூடிய பெருவழிப் பாதையின்
பரந்த வெளியில் நடந்தேன்

பாம்பொன்று துரத்தியது

வேகம் தளர்ந்த பாதத்தில்
ஏறிக் கொண்டது அது

நாவுகளை உள்ளிழுத்து
நஞ்சைக் கக்கியது
நுழைய முடியா வழித்தடத்தில்
கொத்தப்பட்டு
வழிந்தது நஞ்சு

என்னுள் உறைந்திருக்கும்
உள்ளேயுள்ள
உன்னைப் பார்த்திருக்கும் அது
வாலைச் சுருட்டிக் கொண்டு
ஓடியது
என்னைப் போலவே
அதிவேகமாக

3
ஏளனம் செய்யும் இரவு

வழிந்து கொண்டிருக்கும்
இரவுகளின் நீண்ட தாழ்வாரத்தில்
பியர் உடைக்கும் சத்தம் கேட்கிறது

காமத்தின் மீள் தேடலில்
பண்பாடுகள் கசிந்தோடுகிறது

கண்கள் சிகப்படையும்
வகைகளின் பிடியில்
சுகமாக மாட்டிக் கொள்ளுதல்
நடந்து கொண்டிருக்கிறது

எல்லாவித தீயவைகளையும்
பெட்டியில் அடைத்துக் கொண்டு
இரவு எங்கோ
ஓடிக்கொண்டிருக்கிறது

அவ்விருள் பயணங்களின் வழியே
திமிறிக் கொண்டிருக்கும்
இளமை மதர்ப்புகள்
எல்லோராலும் இரசிக்கப்படுகிறது

நட்சத்திரங்கள் உடைவதை
பார்த்து இலயித்தவாறு
நானொரு
புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன்.

4

காற்றற்ற வெளி

பெருஞ் சத்தங்களையெழுப்பியபடி
வீசிக் கொண்டிருந்தது காற்று
அது மனங்களைத் தின்று
அரூப வடிவில்
இலைகளின் வழியாக
வழிந்தோடியது.
பின்னொரு நாளில் புயலாக
விஸ்வரூபம் காட்டி
தென்றலை தின்று கொண்டிருந்தது
குருதி வழிசலுடன்.

காற்றையொடுக்கும்
சூத்திரத்தில்
தோற்றவனானேன் நான்

பிறகு
சவமாக மிதந்து கொண்டிருந்தேன்
காற்றற்ற வெளியில்

நீர் மிதக்கும் விழிகள்
வற்றிப் போகத் தொடங்கின

6

பெரும் பாறைகளின்
வழியாக
ஊர்ந்து கொண்டிருந்தேன்
அரவம் போன்று

கற்கள் பொடிந்து
மணலாக மாறிக் கொண்டிருந்தது
பிறகு,
மரமேறிய பதநீரின் வெளிச்சத்தில்
உறங்கிக் கொண்டிருந்தேன்
நிலா உடைந்து போயிருந்தது

சதுப்பு நிலத்தில்
அம்மணப்படுத்தப்ட்ட
உடலுடன் ஓடினேன்
கழுகு துரத்தியது

வாழ்வின் கொடும் நகங்களில்
சிக்குண்ட நான்
சட்டையுரிக்கத் தொடங்கினேன்
சதைகளும் பிய்த்துக் கொண்டது

எங்கும் வழிந்தது
சிவப்பு குருதி

7

நகர முடியாமல்
உட்கார்ந்திருந்திருந்தது
நெல்லையப்பர் கோயில்
மாக்கல் நந்தி

ஒரு பிரதோச நாளில்
சக தோசங்கள் புடைசூழ
நீ வந்தாய்
துந்துபி கோசங்கள் முழங்க
துயிலும் சிவனையெழுப்ப
நடந்தது பூசைகளும்
புனஸ்காரங்களும்

சிவனை மறைத்த
நந்தியும்கூட
நகர்ந்து கொள்ளும்
உந்தன் மனதை மறைத்த
நந்திகள்
உச்சிக்கால பூசை வரை
உட்கார்ந்துள்ளன

உனது உதடு வழியவிடும்
அந்த வார்த்தைகளுக்காக
இவைகளை
சகிக்கிறேன் சகியே

உன்னுடன் வந்துள்ள
நந்திகள்
உரசும் கொம்பின் தினவுகளை
பார்த்து நகைக்கிறது
கோயில் நந்தி
பார்த்தாய்தானே?


8

காலம் காலமாக
நீலம் பூத்தபடி
விரிந்து கிடக்கிறது
கடல்

கொத்திவிட்டுப் போயிருக்குமோ
பெருமாளின் ஐந்து தலைநாகம்?

நுரை தள்ளியபடி
தத்தளிக்கிறது
அலை சூடிய கடல்

9

அம்மா,
ரொம்பவும் தயக்கத்தோடு
அதிகபட்ச கூச்சத்துடனும்தானே
உன்னிடம் சொன்னேன்?
நீ,
மூலையில் உட்கார வைத்து
ஊருக்கே சொல்லிவிட்டாயே?

உடல் வலியுடன்
இப்போது மனவலியும்

உலக்கை எதற்கு?
குடிலைவிட்டு எழுந்தால்
அடிப்பதற்கா?


10

விடுமுறை நாட்களில்
வீட்டுக்கு வரவேண்டாம்-
குழந்தைகளுடன்
நானிருப்பேன்
பேசமுடியாது

மற்ற நாட்களில்
வந்தும் பயனில்லை
குழந்தைகள்
பள்ளியில் இருப்பார்கள்

11

வீட்டுப் பாடம்
எழுதாமல் போனதற்கு
பிரம்பால் அடிக்கும்
நீ...
படித்திருக்கிறாயா
குழந்தைகளை?

12

வெளுத்ததெல்லாம் பால்
என்று நம்புகிறது மழலை
தன்னை நெருங்கும்
கள்ளிப்பாலினையும்கூட

13

உடைத்துப் போடும்
ஒவ்வொரு பொம்மையையும்
உற்றுப் பாருங்கள்
அப்பிக்கிடக்கக் கூடும்
மழலைகளின் மகிழ்ச்சி...

14

எழுத்துக்கள்
தீர்ந்து போன இரவொன்றில்
கவிதையெழுத ஆயத்தமானேன்.
வற்றிப் போகத் தொடங்கின
சொற்கள்.
பூமியின் கடைசி மையத்தில்
உட்கார்ந்திருந்தது
ஒரு துளி மை ;
அதையெடுத்து
எழுதத் தொடங்கினேன்
பிரவாகமெடுத்தன
எழுத்துக்கள்,

ஆகாயத்தைப் பார்த்தேன்
எழுத்துக்கள்
அங்கே தொங்கிக் கிடந்தன
நட்சத்திரங்களாக.

15

பெரும் சேனைகளின் முன்னே
கம்பீரமாக நடந்தேன்

"பல்லக்குக் கொண்டு வரவா?"
என்று படைத்தலைவன்
பணிந்து கேட்டான்

மறுதலித்து நடந்தேன்
கவச உடைகள்
கனத்துத் தொங்கின

நூறு, ஆயிரம் பல்லாயிரமென
சிப்பாய்கள் பின்தொடர
நான் போருக்கு ஆயத்தமானேன்

"பால் வாங்கி வரலையா?"
என்ற விளித்தலில்
விழித்தேன்

ஆரம்பமாகிவிட்டது
போர்
நான் தனியாகத்தான்
வாளைச் சுழற்ற வேண்டும்

- சூர்யநிலா

சேலத்தில் தனியார் நிறுவன கணக்காளராகப் பணியாற்றும் இவர், "எழுத்துக்களம் இலக்கிய அமைப்பு'' என்ற அமைப்பினை 2003-லிருந்து நடத்திவருகிறார். "சில்லுகள் "(2003), "இன்னும் நிகழ்கிறது உனக்கான காத்திருப்பு" (2008) என்ற இரு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். "என் மெல்லிய தொடுகையில்", "அன்பென்று எதனைச் சொல்ல...'' என்ற கவிதை நூல்களைத் தொகுத்துள்ளார்.

இவரது 'நடை' என்ற கவிதை கோவை பாரதியார் பல்கலைக் கழகப் பாடத்திட்டத்திலும், 'வசிஷ்ட நதி' என்ற கவிதை சேலம் விநாயகா மிஷன் நிகர்நிலைப் பல்கலைக் கழகத்திலும் இடம் பெற்றுள்ளன. இவரது கவிதைகள் கனவு, புன்னகை, சௌந்தர சுகன், நடவு, குலவை, நவீன அகம்புறம் உள்ளிட்ட பல்வேறு இலக்கிய இதழ்களில் தொடர்ச்சியாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

Pin It