கழிவறையில்,
கரிக்கோட்டுச் சித்திரங்கள்
எழுதுபவன் நான்.
மூத்திர நெடியில்
பீடி வலிக்கப் பழகாததால்
சித்திரக்காரனானேன்.

எரிந்த வத்திக்குச்சி
முனை கருப்பை
கோடுகளாக
நீட்டிக் கொண்டிருந்தேன்.

சித்திரம் முழுமைபெற்ற மறுநாள்
அந்தரங்க உறுப்புகள்
முளைத்து தொங்கும்.
சித்திர நுணுக்கங்களைவிடவும்
யாரோ இழுத்துவிட்ட
உறுப்புக் கோடுகள்
யாவரையும் வசீகரித்தன.

மறுமுறை வெள்ளையடிக்கும் வரை
உயிர்த்திருக்கும்
ஓவியங்களின் மூச்சு.

கழிவறை உட்சுவற்றின்
சுண்ணாம்பு பாளங்களுக்குள்
மூச்சடக்கிக் கிடக்கின்றன
எனது கரிக்கோட்டுச் சித்திரங்கள்.

இன்னமும்
அடுத்தவர் இழுத்த
கோடுகளாலேயே
அறியப்படுகிறேன் நான்.

Pin It