கொரியாவில் இலையுதிர் காலம் ஆரம்பமாயிற்று
பெரியதொரு மரத்திடம் தனித்திருந்த ஒரு பொழுது.
வரும் பனியில் நனைந்திடவா
வெறும் உடலில் நிற்கிறாய்? என்றேன்.
விட்டுச்சென்ற வெயிலிற்காக
விதவைக்கோலம் பூண்டேன் என்றாள்.
திரும்பி அவனும் வரும் வரை
வருந்திதான் நிற்பாயோ? என்றேன்.
துணை விட்டு வந்தவன் தானே நீயும்?
எனை ஏன் கேட்கிறாய்? என்றாள்.
கொழுந்தாய் பிறந்தவள் சருகாய் போகும்போது
அழும்தாய் நீயோ? என்றேன்.
வேறெங்கே செல்கிறாள். வேரருகே தானே செல்கிறாள்
வசந்தம் வந்ததும் வந்துவிட போகிறாள். என்றாள்.
எத்தனை படித்தாலும் உன் உணர்வும் ஞானமும்
எனக்கில்லையே? என்றேன்.
சிரித்துச் சொன்னால் மரதேவதை
நான் காற்று மொழியில் படிக்கிறேன்
நீ வேற்று மொழியில் படிக்கிறாய் என்று
- அமல்.ஜான்