கீற்றில் தேட...

சப்தத்தை இரைத்துக் கொண்டு
புறப்பட தயாரான இரயிலை
அவதானித்து பாதையின் பின்
வழியில் நின்றிருக்ககையில்
இரயில் பற்றிய சமிக்ஞை
ஏதுமற்று தண்டவாளத்தில்
இரை தேடும் பறவையை
அனிச்சையாய் விரட்டுகின்றேன்
என்னை கவனியாத அச்சிறு பறவை
அருகாமையில் வந்த இரயிலை
கவிழ்த்து விடும் துணிச்சலுடன்
சிறகுகளை வீசிக் கடந்துச் செல்கின்றது.
கடந்துச் செல்லும் தொடர்வண்டியில்
கையசைத்துச் சென்ற குழந்தையின்
மென்விரல் பற்றி ரயிலிலேயே சென்று விட்டது
அதிகாலைச் சோம்பல்.

சோம்பல் முறித்தபடி
பாதையின் இடவலம் தாவிச்
செல்கின்றேன்.
அதிகாலைப் பனியில் விறைத்த
உள்ளங்கையை சூடாக்கி
கன்னத்தில் பரப்புகின்றேன்
எனக்குள் இயங்கத் துவங்குகின்றது
ஒரு இரயிலின் அசைவுகள்.
சக்கரங்களின் சுவடு
பதிந்திராத தண்டவாளத்தின்
இருபுறமும் முட்டி நின்ற வானம்
நோக்கி இரயிலின் சப்தத்தோடு கத்தி
அழைக்கின்றேன் மோதித் திரும்பும்
அதிர்வோசை சக்கரங்களற்ற என் சிறு
பிராயத்து இரயிலொன்றை இழுத்து
வருகின்றது. நான் நீள்வட்டக் கயிற்றில்
ரயில் ஓட்டுபவனாய் தண்டாவாளத்தை
கடந்துச் செல்கையில் என் வருகையில்
வெறுப்புற்று எழுந்துச் செல்கின்றான்
மலம்கழித்தவன்.

- ஆ.முத்துராமலிங்கம்