கீற்றில் தேட...

இரண்டு நிமிடங்களே இருந்தன
இரயிலைப் பிடிக்க

எந்த நிபந்தனையும் விதிக்காமல்
கனத்த பெட்டிகளையும் பெருத்த
பைகளையும் வாங்கிக்கொண்டு

'எந்த வண்டி கோச்' கேட்டபடியே
கூட்டத்தில் புகுந்து புறப்பட்டு

ஓடிய அவனைப் பின்தொடர்ந்தேன்
ஒருகையில் குழந்தையும்
மறுகையில் அழுத்திப்பிடித்த
மனைவியின் கரமுமாக

இலாவகமாய் சுமையைக்
கதவடியில் திணித்து
ஏறவும் கைகொடுத்தவன்
தெய்வமாகத் தெரிந்தான்

'எவ்வளவு சொல்லுப்பா'
தப்பாகி விடக்கூடாதேயெனும்
தவிப்பில் நானும்

'நீயேதான் போட்டுக் கொடுசார்'
அதீத நம்பிக்கையில் அவனும்

இடம்மாறிய நோட்டுத்தாள்களில்
அடைந்தானா திருப்தியென
சரியாக அளவெடுக்கும் முன்னரே
விரையத் தொடங்கியிருந்தது வண்டி

இறங்கிச் சென்றவன்
இமைகளுக்கிடையே இருந்தது
சங்கடமா சந்தோஷமா
தடக்தடக் தாளகதியினூடே
குடைந்த சந்தேகம்

வழியனுப்பிப் பார்த்துநின்ற
பலநூறு மனிதர்களின்
விதம்விதமான உணர்வுகளுக்குள்
வேகவேகமாய்க் கரைந்து
காணமல் போய்க்கொண்டிருந்தது

இனிஆராய்ந்து விடைதேட
அவசியமற்றதாய்க் கருதி
மறந்துபோகும் ஆயிரமாயிரம்
கேள்விகளுள் ஒன்றாக!

- ராமலக்ஷ்மி