ராசாவின் பதவி விலகலும் கபில் சிபலின் பொறுப்பேற்பும்

மன்மோகன் சிங் அரசால் ஊழலை மூடிமறைக்க அரங்கேற்றப்பட்டதொரு ஓரங்க நாடகம்

நான் அடிப்பது போல் அடிக்கிறேன், நீ அழுவது போல் அழு என்பது நமது ஆட்சியாளர்களின் நடவடிக்கை ஆகிவிட்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்கப்பட்டதில் நடத்த ஊழல் இந்தியத் தலைமைத் தணிக்கை அதிகாரி மூலம் வெளிவந்தவுடன் அதனால் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஊடகங்கள் மூலமும் வந்த விமர்சனங்களின் விளைவாகத் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த ராசா பதவி விலக நேர்ந்தது. அவர் வகித்த தொலைத் தொடர்பு அமைச்சகம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரான கபில் சிபலிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது.

மத்திய மந்திரி சபையில் புதிதாகச் சேர்க்கப்பட்டவராக இருந்தாலும் திருவாளர் கபில் சிபல் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அடுத்தபடியாக அதிகம் மதிக்கப்படுபவர். அவர் ஒரு சிறந்த வழக்கறிஞர், சிறந்த ஆங்கில அறிவு பெற்றவர், நாவன்மை பொருந்தியவர் என்பவற்றோடு கூட அவருக்கு ஊடகங்கள் அளித்துவரும் அதீதமான விளம்பரத்திற்கு வேறொரு காரணமும் உண்டு. அதே காரணத்திற்காகத் தான் மன்மோகன் சிங்கும் நேர்மையாளர் என்று ஊடகங்களால் கருதப்படுகிறார்.

அதாவது அரசியலில் சமீபத்தில் நுழைந்தவர்களாக இருப்பது தற்போதெல்லாம் பலரது நற்பெயருக்கு ஒரு காரணமாக ஆகிவருகிறது. அந்த அடிப்படையில் இவர்கள் இருவரும் பலகாலம் அரசியலில் இருந்து பதவிகள் வகித்துப் படிப்படியாகச் சீரழிந்து இன்று பொதுவாழ்க்கையில் இருக்க வேண்டிய மதிப்புகள் எதுவும் இல்லாமல் அவப்பெயர் எடுத்த மூத்த அமைச்சர்களைப் போன்றவர்கள் அல்ல என்பது இவர்களது நற்பெயருக்கான முக்கியக் காரணமாக உள்ளது. ஒப்பு நோக்குமிடத்து முழுநேர அரசியலுக்குப் புதியவர்கள் என்பதும் அவர்களுக்கு ஊடகங்கள் மூலமாக ஒரு நற்பெயரை ஏற்படுத்தித் தந்துள்ளது.

உடனடிப் பரபரப்பு

இத்தகைய கபில் சிபல் அவர்கள் பொறுப்பேற்றவுடன் மிகவும் பரபரப்புடன் 2ஜி அலைக்கற்றை உரிமத்தை முறைகேடாகப் பெற்ற நிறுவனங்களுக்குக் கடிதம் எழுதி விளக்கம் கேட்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார். கூட்டணிக் கட்சியான தி.மு.க.வைச் சேர்ந்தவராக திரு.ராசா இருந்தபோதும் பாரபட்சமின்றி மிகவும் நடுநிலையாகவி­சயத்தை மத்திய அரசு அணுகத் தொடங்கியது போன்ற ஒரு தோற்றத்தைஉருவாக்கினார். அதன் பின்னர்தான் சி.பி.ஐ.னுடைய சோதனைகள் ராசா மற்றும் ராசாவுக்கு வேண்டியவர்கள் வீடுகளில் தீவிரமாக நடைபெற்றன; வழக்கோடு தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்ற செய்திகளும் வெளிவந்தன. சுருக்கமாகக் கூறினால் மக்கள் அனைவரிடமும் 2ஜி அலைக்கற்றை குறித்த விசாரணை விருப்பு வெறுப்பின்றி நடைபெறுகிறது என்ற எண்ணம் ஏற்படும் வகையில் கபில் சிபல் செயல்பட்டார்.

புதிய மொந்தை பழைய கள்ளு

ஆனால் அடுத்துத் திடீரென்று பத்திரிக்கை யாளர்களுக்கு அளித்த பேட்டியின் போதுதலைமைத் தணிக்கை அதிகாரியின் கணக்கிடுதல் 2ஜி அலைக்கற்றை விச­யத்தில் முழுக்க முழுக்கத் தவறானது; 1,76,000 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்படவில்லை. உண்மை இழப்பு 17,000 கோடி அளவிற்குத் தான் இருக்க முடியும். 3ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டு ஈட்டிய தொகையுடன் ஒப்பிட்டு 2ஜி அலைக்கற்றை விற்பனையில் ஏற்பட்ட இழப்பு 1,76,000 கோடி என்று தலைமைத் தணிக்கை அதிகாரி கணக்கிட்டுள்ளார். அது தவறானது என்று கூறியுள்ளார். அத்துடன் நிறுத்தியிருந்தால் கூடப் பரவாயில்லை அதையும் தாண்டி ஸ்பெக்ட்ரம் ராசா என்னென்ன வாதங்களைத் தனக்குச் சாதகமாக வைத்தாரோ அத்தனை வாதங்களையும் புதிய மொந்தையில் பழைய கள்ளு என்பதுபோல் இவர் தனது பேட்டியில் முன் வைத்துள்ளார்.

முழங்கப்படும் பொய்கள் மூடி மறைக்கப்படும் உண்மைகள்

அதாவது இவ்வாறு முதலில் வருபவருக்கு முதல் உரிமம் என்ற அடிப்படையில் உரிமம்வழங்கியதன் மூலம் செல் போன் நிறுவனங்களிடையே போட்டி உருவாக்கப் பட்டதாகவும்அதனால் உலகிலேயே மிகக் குறைந்த கட்டணத்தில் செல்போனில் பேச முடிந்தவர்களாகஇந்திய மக்கள் ஆகியுள்ளதாகவும் கபில் சிபல் கூறியுள்ளார்.

அத்துடன் மனிதவள மேம்பாட்டுத் துறை அவருக்குக் கற்றுக் கொடுத்த சுயாதிகாரம் உள்ளவர்களாக ஆக்குதல் (Empowerment) என்ற சொல்லையும் திறம்படக் கையாண்டு செல்போன் சேவை பரவலாக்கப்பட்டதன் மூலம் சுயாதிகாரம் பெற்றவர்களாக மக்கள் ஆகியுள்ள தாகவும் கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர் ராசா தான் கடைப்பிடித்தக் கொள்கையின் விளைவாக செல்போன் உபயோகிப்பாளர்கள் எத்தனை மடங்கு தான் அமைச்சர் பதவி வகித்த காலத்தில் அதிகரித்தனர் என்று கூறியிருந்தார். அதனை அத்தனை பெரிதாக கபில் சிபல் கூறவில்லையே தவிர ராசா முன்வைத்த பிற அனைத்து வாதங்களையும் அவர் முன் வைத்துள்ளார்.

ஊடகங்கள் அவர் குறித்து உருவாக்கிய எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் மாறான அவரது இந்தத் திடீர் அந்தர் பல்டி பொது மக்களை ஒருவகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன் கபில் சிபல் அவர்கள் முன்வைத்துள்ள வாதங்கள் மேலும் பல கேள்விகளையும் மக்கள் மத்தயில் எழுப்பியுள்ளன. முதற்கண் 2ஜி அலைக்கற்றை விற்பனை இத்தனை சாதகங்களை ஏற்படுத்தியுள்ளது என்றால் 3ஜி அலைக்கற்றை விற்பனையை மட்டும் ஏலத்தில் விட அரசு அனுமதித்தது ஏன்? மக்களுக்குச் சாதகங்கள் வழங்கியது போதும் இனிமேல் ஓரளவு பாதகம் செய்வோம் என்பதனாலா? அல்லது மக்கள் போதுமான அளவு சுயாதிகாரம் பெற்றவர்களாக ஆகிவிட்டனர் என்று திடீரென்று அரசிற்கு ஞானோதயம்ஏற்பட்டுவிட்டதாலா?. உண்மையில் சாதாரண மக்களுக்கு இதன் மூலம் கிடைத்துள்ளபலன்களைப் போல் பற்பல மடங்கு பலன்களை 2ஜி உரிமம் பெற்ற நிறுவனங்கள்பெற்றுள்ளன. அதனை மையமாக வைத்தே இதனால் அரசிற்கு ஏற்பட்ட இழப்புகணக்கிடப்பட்டுள்ளது. அந்தக் கண் கூடான உண்மையை முழுமையாக மூடிமறைத்துள்ளதன் மர்மம் என்ன?

தலைமைத் தணிக்கை அதிகாரி தணிக்கை மற்றும் கணக்கியல் கற்றவர். பொதுப்பணம் கொள்ளை போகும் நிலை உருவாகிவிடக் கூடாது என்பதற்காகவே அப்பொறுப்பு பாராளுமன்ற ஜனநாயகத்தில் பராமரிக்கப் படுகிறது. கபில் சிபல் சொல்வதைப் போல் ஒரு இழப்பை 10 மடங்கு அதிகரித்துக் காட்டும் தவறைச் செய்பவராகத் தலைமைத் தணிக்கை அதிகாரி இருந்தால் அவர் எத்தனை தகுதிக்குறைவானவராக இருப்பார்?அத்தனை கோளாறானவர்களை அப்பொறுப்பில் வைத்துக் கொண்டிருக்கும் அரசாங்கமும் எத்தனை பொறுப்பற்றதாக இருக்கும்? இக்கேள்விகள் அனைத்தும் இயல்பாகவே ஒருவருக்கு எழலாம் அல்லவா?

அடுத்து கபில் சிபல் அவர்கள் கணக்கியலில் தலைமைத் தணிக்கை அதிகாரியையும் விட நிபுணத்துவம் பெற்றவரா? மேலும் அவரது கருத்து ஒரு பாராளுமன்ற நிறுவனத்தை கேலிக்குரியதாக ஆக்குவது ஆகாதா? வழக்கமாகப் பாராளுமன்றத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் உயர் அதிகாரிகள் பெரும்பாலும் ஆட்சியாளர்களுக்குத் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தக் கூடிய செயல்களைச் செய்ய மாட்டார்கள். அவர்கள் அவ்வாறு செய்ய நேர்ந்தால் அது மிகவும் அப்பட்டமான அதாவது அவர்கள் வலிந்து கடைப்பிடிக்கும் சுயகட்டுப்பாட்டையும் தாண்டிய ஒன்றாக முறைகேடுகள் இருந்தால் மட்டுமே நடக்கும்.அந்நிலையில் அவருடைய கணிப்பை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஒரு அமைச்சர்அப்பட்டமாகத் தவறெனக் கூறியிருப்பது எப்படிச் சரியானதாக இருக்க முடியும்?

உருவாக்கப்படும் சந்தை

அடுத்து ராசாவும் கபில் சிபலும் வைக்கும் ஒருவாதம் குறைந்த கட்டணத்தில் பலரும்பேசுமளவிற்கு மக்களுக்கு ஒரு சாதகத்தை 2ஜி அலைக்கற்றை விற்கப்பட்ட முறைஉருவாக்கியுள்ளது என்பதாகும். முதற்கண் மொபைல் செல் வசதி சாதாரண மக்களைப்பொறுத்தவரை ஒரு அத்தியாவசியமான தேவையல்ல.

ஒரு சமயத்தில் தொழில் நிறுவனங்கள் சுயமாகத் தொழில் செய்பவர்கள் ஆகியோருக்குமட்டுமே தேவையானது என்றிருந்த நிலை மாறி சமூகத்தின் பிற மத்தியதர மக்களும் பயன்படுத்தக் கூடியதாக தொலை பேசி வசதி மாறியநிலையில் அதற்கான சந்தை அதாகவே ஓரளவு உருவானது. அதன் பின்னர் தற்போது வந்துள்ளதெல்லாம் வலிந்து உருவாக்கப்பட்ட சந்தையே தவிர தேவை அடிப்படையில் அதாகவே உருவான சந்தையல்ல. வாலை ஆட்டும் நாயைப் போல் இல்லாது இன்றைய முதலாளித்துவப் பொருளாதாரம் நாயை ஆட்டும் வாலாக ஆகியுள்ளது. அதாவது உற்பத்தித் துறைக்கு உதவி புரிவதாக மட்டுமே இருக்கவல்ல சேவைத்துறை உற்பத்தித் துறையைக் காட்டிலும் பெரிதாக வளர்ந்து வருகிறது. அதன் விளைவே இந்தத் தகவல் தொழில் நுட்பப் புரட்சி என்று கூறப்படும் புரட்டு.

அத்தியாவசியப் பொருட்களான உணவுப் பொருட்கள் போன்றவற்றைப் பொறுத்தவரையில், “அரிசியை வாங்கி உபயோகப்படுத்துங்கள் எங்களது கோதுமை மிக உயர்ந்த கோதுமை அதைக் கட்டாயம் பயன்படுத்துங்கள்” என்பது போன்ற விளம்பரங்கள் தேவையில்லை. ஏனெனில் அவற்றின் சந்தை நிரந்தரமாக இருக்கக் கூடியது. அப்பொருட்களில் பற்றாக்குறை ஏற்படும் போது சமூகத்தில் பெரும் கொந்தளிப்பே எழும்.

விளம்பரமே உயிர்நாடி

ஆனால் செல்போன் சேவையைப் பொறுத்தவரையில் அவற்றின் விற்பனையின் உயிர் நாடியும் முதுகெலும்பும் விளம்பரமே. பெரும் பெரும் நடிகர்களையும் நடிகைகளையும்வைத்து ஒவ்வொரு செல்போன் நிறுவனமும் அவற்றின் சேவை குறித்த மிகைப்படுத்தப்பட்ட ஒரு தோற்றத்தை மக்களிடையே உருவாக்கிக் காட்டி அதன்மூலம் அவற்றின் விற்பனையை அதிகப்படுத்துகின்றன.

அதிக எண்ணிக்கையில் செல்போன் சேவை வழங்க முடியும் என்ற அளவிற்கு உயர் தொழில் நுட்பம் வளர்ச்சி அடையும் போது அதனைப் பலருக்கு பகிர்ந்தளிக்காமல் அச்சேவையை ஒரு நிறுவனமே செய்தால் கூட அதனை விளம்பரம் செய்து வழங்கினால் அப்போதும் அவற்றின் விற்பனை நடைபெறத்தான் செய்யும். ஆனால் பொதுத்துறை ஊழியர்களிடம் உரிமை உணர்வு வளர்க்கப்பட்ட அளவிற்குக் கடமையுணர்வு வலியுறுத்தப் படவில்லை. அதனால் அவர்கள் மொபைல் வசதி அவர்களிடம் மட்டும் இருந்திருந்தால் கூட இதனைச் செய்திருப்பார்களா என்பது சந்தேகமே.

அதற்கு நேர் எதிராக தனியார் மொபைல் நிறுவனங்களில் உரிமை மட்டுமல்ல, சுய கெளரவத்தையும் இழந்து கூட விளம்பரமும், விற்பனையும் செய்து முதலாளிகளுக்கு லாபம் ஈட்டிக் கொடுக்கும் முறை வளர்ந்து நிலை பெற்றுள்ளது. நிறுவனங்களுக்காகக் கூசாமல் பொய் பேச அவர்களிடம் வேலை செய்பவர்கள் நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். அவர்கள் கூறுபவை பொய் என்பதை அறிந்த நிலையில் வாடிக்கையாளர்களுக்கு வரும் கோபத்தின் கனலையும் ஊழியர்களே தாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது.

சாதனையும் வேதனையும்

மேலும் செல்போன் உபயோகம் மக்களுக்குச் சுயாதிகாரம் வழங்குவது போன்ற நல்ல விச­யங்களைத் தான் செய்கிறது என்றும் கூற முடியாது. குறிப்பாக இளைஞர்கள்மாணவர்களின் கவனங்களைத் திசை திருப்பி அவர்களின் கல்வியாற்றல் அவர்களிடம்உள்ள திறமை அளவிற்கு வெளிப்படாமல் போவதற்கும் வரைமுறையற்ற செல்போன் உபயோகம் ஒரு காரணம் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. எனவே இதனை ஒரு மிகப்பெரிய சாதனை என்று கூற வருவது ஓரளவிற்கு வேதனையே.

ஊற்றி மூட உருவாக்கப்பட்ட அமைப்பு

அடுத்தபடியாக ராசாவும், கபில் சிபலும் முன்வைக்கும் மற்றொரு சால்சாப்பு வாதம் தாங்கள்தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் முன்வைத்த நல்ல போட்டிக்குத் தேவையான சமதளத்தை உருவாக்குதல் (Level Playing Field ) என்ற கருத்திற்கிணங்கவே2ஜி அலைக்கற்றை உரிமம் வழங்கினோம் என்பதாகும். ஒழுங்குமுறை ஆணையம் தொலைபேசிச் சேவையை உரிய முறையில் பராமரிப்பதற்காக உருவாக்கப்பட்ட தன்னிகரற்ற அமைப்பு என்பது போன்ற எண்ணத்தைத் தங்கள் வாதங்கள் மூலம் அவர்கள் ஏற்படுத்தப் பார்க்கின்றனர். மேலும் ஏதோ சமூகம் முழுவதும் சமத்துவத்தை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட முழக்கம் என்பது போல் அம்முழக்கத்தையும் அவர்கள் முன் வைக்கின்றனர்.

தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் என்பதை அந்த ஆணையத்தின் பெயரில் ஒழுங்குமுறை என்ற சொல் இருப்பதை வைத்து அது ஒரு உயர்ந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட ஆணையம் என்று யாருமே எண்ணிவிடக் கூடாது. பொதுத் துறையிலிருந்த தொலைத் தொடர்புத் துறையை தனியாருக்குத் தாரை வார்க்கும் தனியார் முதலாளித்துவ நலன் பேணும் கொள்கையை மிகவும் வெளிப்படையாக அரசு கடைப்பிடிக்கத் தொடங்கியவுடன் அந்த வேலையைச் செய்வதற்காக அதாவது அரசின் வசமிருந்த தொலைத் தொடர்புத் துறையை படிப்படியாக ஊற்றி மூடுவதற்காக உருவாக்கப்பட்டதே தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்.

அது அப்பணியினைச் சிறிதும் குறைவின்றியே செய்தது. எந்தவொரு புதிய தொழில் நுட்பத்தையும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பயன்படுத்தி அதற்கென இருந்த சந்தையை ஏறத்தாழப் பயன்படுத்தி முடித்த பின்னரே அரசின் தொலைத் தொடர்புத்துறை அதை நோக்கிச் செல்ல வாய்ப்பளிக்கும் பரிந்துரையையே அது பலகாலம் எள்முனை அளவு கூடப் பிசகாமல் செய்தது. அந்தக் கைங்கரியத்தைச் செவ்வனே செய்வதற்காக அது உருவாக்கிப் பயன்படுத்திய வார்த்தையே அனைவருக்கும் சமமாகப் போட்டியிடுவதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குதல் என்ற வகையில் அது கடைப்பிடித்த கொள்கையாகும்.அதைத்தான் டிராய் போன்ற உன்னதமான நிறுவனத்தின் ஒரு உயர்ந்த தத்துவத்தைப்பின்பற்றியே தாங்கள் செயல்பட்டதாக இந்த அமைச்சர்கள் கூறிக் கொள்ளுகின்றனர்.

வழக்கமான நிகழ்வாக ஆக்க முயற்சி

அதுமட்டுமின்றி மன்மோகன் சிங் ராசாவுக்கு 2ஜி அலைக்கற்றை வரிசை உரிமம் வழங்குதல் குறித்து எழுதியிருந்த கடிதம் அதற்கு ராசா அளித்த பதில், ராசாவின் பதிலிலிருந்த சரியில்லாத தொணி ஆகியவை குறித்து உச்ச நீதிமன்றமே சர்ச்சையைக்கிளப்பியிருந்தது. அதைப்போல 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விச யத்தில் நிதி அமைச்சகம் எழுப்பியிருந்த கேள்விகளைப் பொருட்படுத்தாமல் திருவாளர் ராசா விடாப்பிடியாக 2001-ல் அப்போதிருந்த அரசு கடைப்பிடித்த கொள்கையையே தானும் கடைப்பிடித்ததாக இடைவிடாது கூறி அரசிற்கு பெரு நஷ்டத்தை ஏற்படுத்தியதும் உச்ச நீதிமன்ற விசாரணையின் மூலம் அனைவரும் அறியும் விதத்தில் வெளிவந்தது. தன்னிச்சையான உள்நோக்கம் கொண்ட அவரது நடவடிக்கைகள் ஊழல் நடைபெற்றிருப்பதற்கான முகாந்திரத்தைப் பலமாகப் பறைசாற்றுகின்றன என்பதே இவற்றின் மூலம் அனைவருக்கும் தெளிவாகக் கிடைத்த செய்தியாகும். இதனால் தான் பிரதமரிடமும் நிதி அமைச்சகத்திடமும் இருந்து வந்த கடிதங்கள் வி­சயத்தில் முன்னாள் அமைச்சர் ராசா இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார் என்ற வி­சயம் பொது அறிவுள்ள எந்த ஒரு மனிதனுக்கும் படும் விதத்தில் ஊடகங்கள் மூலம் நிறுவப் பெற்றிருந்தது.

தற்போது கபில் சிபல் அவர்கள் அதையும் ஒரு வழக்கமான நிகழ்வே; அதாவது பிரதமர் கடிதம் எழுதினார்; தன் நிலையை விளக்கி அமைச்சர் அதற்குப் பதில் எழுதினார்; நிதி அமைச்சகம் சில வினாக்களை எழுப்பியது; அதற்கும் அமைச்சர் பதிலளித்துவிட்டார்;அதன்பின் அரசின் ஒட்டுமொத்த முடிவாகவே 2ஜி அலைக்கற்றை உரிமம் வழங்குதல் நடை பெற்றுள்ளது என்று கூறியுள்ளார். அதாவது 2ஜி ஊழல் என்ற முழுப் பூசணிக்காயையும் கொஞ்சம் கொஞ்சமாகச் சோற்றில் அமுக்க கபில் சிபல் திறமையாக முயன்றிருக்கிறார்.

ஓரங்க நாடகம்

ஒட்டுமொத்தத்தில் ராசாவின் பதவி விலகல், கபில் சிபலுக்கு தொலைத் தொடர்புத் துறைக் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது, அதன்பின் அவர் முறைகேடாக உரிமம் பெற்றநிறுவனங்களுக்குக் கடிதம் அனுப்புவது அவர்களைக் கேள்வி கேட்பது போன்ற பலபாவனைகளைச் செய்ய அனுமதிப்பது இவற்றைச் செய்த பின் கபில் சிபல் அவர்களைஅப்படியே அந்தர் பல்டி அடிக்கச் செய்து ராசா முன்வைத்த வாதங்களையே அவரையும்முன் வைக்கச் செய்து ஊழலை மூடிமறைக்க ஒரு ஓரங்க நாடகத்தை அரங்கேற்றுவதுஎன்பதையே மத்திய காங்கிரஸ் அரசு நடத்தியுள்ளது .

தற்போது அமைச்சராக இருக்கும் கபில் சிபல் என்ற நீதிமன்றத்தில் வாதாடுவதில் திறமை பெற்றிருந்த ஒரு தேர்ந்த வழக்கறிஞரைத் தனக்குச் சாதகமாக மக்கள் மன்றத்தில் ஒரு பாதுகாப்பான சூழ்நிலையில் வாதிடுவதற்கு திரு ராசா அவர்கள் நியமித்துள்ளது போன்ற ஒரு தோற்றத்தையே இது உருவாகியுள்ளது. ஆனால் வழக்கமான நீதி மன்றங்களுக்கும்கபில் சிபல் தனது வாதங்களை முன்வைக்கும் இந்த மக்கள் மன்றத்திற்கும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. அதாவது வழக்கமான நீதி மன்றத்தில் வழக்குத் தொடுப்பவருக்கும் எதிர் வழக்காடுபவருக்கும் பெயரளவிலாவது சம வாய்ப்புகள் உண்டு. ஆனால் கபில் சிபல் அவர்கள் தனது வாதத்தை முன்வைத்துள்ள இந்த மன்றத்தில் எதிர் வழக்காட வேண்டியவராக இருப்பவர் ஒரு அரசு அதிகாரியாக இருப்பதால் அவர் மிகவும் அடக்கி வாசித்தே ஆகவேண்டும். அரசின் தலைமைத் தணிக்கை அதிகாரி ஒரு அமைச்சரை எதிர்த்து மிகவும் வரம்பிற்குட்பட்ட விதத்தில்தான் பேச முடியும். அதாவது அமைச்சர் முழங்கும் போது அதிகாரி முணங்கத்தானே முடியும்.

கபில் சிபல் அவர்களின் இந்த நடவடுக்கை மூலம் தரம் தாழ்த்தப்பட்டிருப்பது அரசின் தலைமைத் தணிக்கை அலுவலகம் மட்டுமல்ல; கபில் சிபல் போன்றவர்கள் குறித்துச் சரியாகவோ தவறாகவோ மக்கள் மத்தியில் இருந்த நற்பெயரும் தரம் தாழ்த்தப் பட்டிருக்கிறது. ஆம், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற அறிவியல் மாநாட்டில் பேசிய இன்போசிஸ் நாராயண மூர்த்தி கூட கபில் சிபல் குறித்துக் குறிப்பிட்டார்: திரு. கபில் சிபல் போன்ற நல்ல அமைச்சர்கள் நமக்குக் கிடைத்துள்ளது ஒரு உயர்ந்த வி­சயமென்று. அத்தகைய நற்பெயர் தற்போது அவர் இவ்விச­யத்தில் எடுத்துள்ள நிலையினால் களங்கப்பட்டே போயிருக்கிறது. இது ஒரு விசயத்தை அதாவது முடைநாற்றமடிக்குமளவிற்கு ஊழல் மலிந்ததாக ஆகிவிட்ட இன்றைய முதலாளித்துவஅமைப்பில் அதன் சேவையில் ஈடுபடும் எந்தத் திறமைசாலியும் அவரது திறமைகளைஊழல்களையும் திருட்டுத் தனங்களையும் மூடிமறைக்க மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற விசயத்தை நிலைநாட்டியுள்ளது.

Pin It