மாமேதை லெனின் கூறினார்: நடைமுறை இல்லாத தத்துவம் வறட்டுத் தத்துவம்; தத்துவம் இல்லாத நடைமுறை குருட்டு நடைமுறை என்று. தத்துவத்தை அது பகட்டாகத் தங்கியிருந்த தந்த மாளிகையிலிருந்து விடுவித்து இதுவரை இருந்த தத்துவங்கள் எல்லாம் உலகத்தை நடைமுறைகளோடு பொருத்திக் காட்ட மட்டுமே செய்தன; ஆனால் தேவை என்னவென்றால் அதனை மாற்றுவதே எனக் கூறிய மாமேதை மார்க்ஸின் கருத்தை ரஷ்யப் புரட்சியின் மூலம் நிரூபித்ததோடு தத்துவம் நடைமுறை ஆகிய இரு அம்சங்களின் உருவகங்களாகவும் விளங்கியவர்களே மாமேதைகள் லெனினும், ஸ்டாலினும் ஆவர்.
புகழ்ச்சியும் இகழ்ச்சியும்
யாராவது ஒருவர் வரலாற்றிலேயே அவர் வாழ்ந்த காலத்தில் வானளாவப் புகழவும் அவரது மறைவுக்குப் பின் கடுமையாக இகழவும் பட்டார் என்றால் அவர் மாமேதை ஸ்டாலினாகத்தான் இருப்பார். இவ்வாறு நாம் கூறுகையில், ஆம் அவர் உயிர் வாழ்ந்த காலத்தில் யாரால் அவரை விமர்சித்திருக்கவும் இகழ்ந்திருக்கவும் முடியும்? அத்தகைய கொடுங்கோலராயிற்றே அவர் என்று சிலர் கூறக் கூடும். ஏனெனில் அத்தகைய பொய்ப் பிரச்சாரம், பொய் வரலாறு அவர் குறித்து எழுதவும், கற்பிக்கவும் பட்டுள்ளது.
ஒரு பேச்சுக்காக அவரை விமர்சித்தால் அதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அஞ்சி அவர் ஆண்ட சோவியத் நாட்டைச் சேர்ந்தவர்கள் அவர் வாழ்ந்த காலத்தில்அவர்மீது விமர்சனங்கள் வைக்காமல் இருந்திருக்கலாம் என்று வைத்துக் கொண்டால் கூட அவர் வாழ்ந்த காலத்தில் அவர் குறித்துப் புகழாரங்கள் சூட்டியவர்கள் சோவியத் நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல; ஜனநாயக உலகம் என்று கூறப்படும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அதில் ஏராளம் இருந்தனர் என்பதையும் பார்க்க வேண்டுமல்லவா? குறிப்பாக இரண்டாவது உலகப் போரின் போது அவர் ஜெர்மனியை வீழ்த்தி மனிதகுலத்தைப் பாசிஸத்தின் கோரப் பிடியிலிருந்து விடுவித்ததற்காக அகராதியில் உள்ள அனைத்து வார்த்தைகளையும் பயன்படுத்தி முழு உலகமுமே அவரைப் பாராட்டியது.
அவர் மார்ச் 5, 1953ம் ஆண்டில் இறந்தபோது நமது ஆனந்த விகடன் எத்தனை தூரம் அவரைப் புகழ்ந்து எழுத முடியுமோ அத்தனை தூரம் புகழ்ந்து எழுதியது. ரஷ்யாவின் சோசலிசப் புரட்சியின் போது அங்கு தவிர்க்க முடியாமல் தோன்றிய வன்முறை குறித்து கருத்து வேறுபாடு கொண்டு பொதுவாக சோசலிசக் கருத்துக்களோடு உடன்பாடு கொண்டவராக இருந்த போதும் சோவியத் நாட்டு சோலிசத்திலிருந்து வேறுபட்டதொரு சோசலிசக் கண்ணோட்டத்தை அதாவது பேபியன் சோசலிசத்தை வலியுறுத்திய பிரபல ஆங்கில நாடக ஆசிரியர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவும் ஸ்டாலினை மிக உயர்வாக மதித்தார். அவரது நாட்டின் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலும் அமெரிக்காவின் ரூஸ்வெல்ட்டும் ஸ்டாலினைச் சந்திக்கச் சென்ற போது ஷா கூறினார்: இரண்டு பள்ளிக் கூடப் பையன்கள் ஒரு அரசியல் ஜாம்பவானைச் சந்திக்கச் செல்கின்றனர் என்று.
பாசிஸத்தின் கொடுமைகளை நேரடியாக அனுபவித்த ஐரோப்பிய மக்கள், அவர்களது நாட்டின் ஆட்சியாளர்கள் ஹிட்லரின் தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாது தங்களது நாடுகளைச் சீட்டுக் கட்டினால் கட்டப்பட்ட வீடுகள் சரிவது போல் சரிய அனுமதித்துச் செய்வதறியாது திணறிய வேளையில் அந்தப் போரை எத்தகைய தயாரிப்புகளுடன் யார் யாரையெல்லாம் அணிதிரட்டி எதிர்கொள்ளலாம் எனத் திட்டமிட்டுப் பதற்றமின்றி பாசிஸத்தை எதிர்கொண்டு பாசிஸம் மீண்டும் ராணுவ ரீதியாகத் தலைதூக்க முடியாத அளவிற்கு ஒரு படுதோல்வியை வழங்கிய தோழர் ஸ்டாலினைக் கொண்டாடினர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தற்போதைய தமிழ் மாநிலச் செயலாளர் தனது நினைவுக் குறிப்புகளில் எழுதியுள்ளார்: உலகத் தலைவர்கள் இரண்டாவது உலகப் போர் முடிந்த சூழ்நிலையில் அமர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட நாற்காலிகள் பெர்லின் நகரில் நினைவுச் சின்னங்களாக வைத்துப் பராமரிக்கப் படுகின்றன; அவற்றில் தோழர் ஸ்டாலின் அமர்ந்திருந்த நாற்காலி மட்டும் சேதப்பட்ட நிலையில் உள்ளது. அதன் காரணம் பலர் அவரின் நினைவாக வைத்துப் பராமரிப்பதற்காக அதனைச் சுரண்டி அதன் துகள்களை எடுத்துச் சென்றதே என்று. அந்த அளவிற்கு ஸ்டாலின் குறித்த மனதில் ஆழப்பதிந்த நினைவு அவர்களிடம் இருந்துள்ளது.
கருத்துக் கணிப்புகள்
இவையயல்லாம் அவர் குறித்து உலக அளவில் இருந்த உயர்ந்த அபிப்பிராயங்கள். ஆயிரத்தெட்டு துஷ்ப்பிரச்சாரங்கள் அவரைப் பற்றி மேற்கொள்ளப் பட்டாலும் தற்போதைய ரஷ்ய நாட்டின் இளைய தலை முறையினரின் மனதிலும் அவர் குறித்த கொடுமையான சித்தரிப்புகள் அத்தனை தூரம் ஆழப்பதியவில்லை. அதனால் தான் தற்போதைய கருத்துக் கணிப்புகளில் கூட 56 சதவீதம் பேர் அவர் சோவியத் நாட்டிற்கு ஆற்றிய பணிகள் சாதாரணமானவையல்ல என்றும், ரஷ்யாவின் வரலாற்றில் மாபெரும் மனிதர்களாக மதிக்கப்படும் மூவரில் அவரும் ஒருவர் என்றும் கூறியுள்ளனர். அத்தகைய கணிப்புகள் மோசடித்தனமான முறையில் செய்யப்பட்டுள்ளன; சரியான முறையில் செய்யப் பட்டிருந்தால் லெனினும் ஸ்டாலினுமே முதல் இருவராக அவர்களில் வந்திருப்பர் என்று அந்நாட்டின் பல நடுநிலையாளர்கள் கூறுகின்றனர்.
சோசலிசத்தின் மீதான வெறுப்பே காரணம்
எத்தனை சிரமப்பட்டு ஆளும் வர்க்கங்கள் அகற்ற முயன்றாலும் அகலாது மக்கள் மனதிலும், நினைவிலும் நிற்கும் அவர் குறித்துக் கொடுங்கோலர் என்றும் சர்வாதிகாரி என்றும், எண்ணிறந்த மனிதக் கொலைகளை நிகழ்த்திய கொலைகாரர் என்றும் திட்டமிட்ட பிரச்சாரம் அவர் வாழ்ந்த நாட்டிலும், அந்நாட்டிற்கு வெளியேயும் மேற்கொள்ளப் பட்டதற்குக் காரணம் என்ன? வெறுப்பு; ஆம் சோசலிசத்தின் மீது அத்தகைய பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு இருந்த அளவிட முடியாத வெறுப்பு. அதுவே அதன் காரணம்.
முதலாளி வர்க்கம் கற்பனாவாத சோசலிசக் கண்ணோட்டம் உதயமானபோது அதைக் கண்டு அஞ்சவில்லை. ஏனெனில் அது சிலரது இனிய விருப்பம் மட்டுமே; அது எங்கே தங்களுக்குச் சவாலாக வரப்போகிறது என்றே அது எண்ணியது. அதன் பின் முதலாளித்துவ அமைப்பிற்கு முதற்பெரும் சவால் பாரி கம்யூன் எழுச்சியின் போது ஏற்பட்டது. அதனைக் கொடுமையாக ஒடுக்கிய பின் முதலாளித்துவம் அது நிலவுடைமைக் கருத்தோட்டங்களை எதிர்த்து அதுவரை ஓரளவு நிறைவேற்றி வந்த ஜனநாயகக் கடமைகளை அப்போது முதல் கைவிட்டது. உழைப்பவர் மத்தியில் விழிப்புணர்வையும், ஒற்றுமையையும் உருவாக்கவல்ல எதையும் செய்வது குறித்துப் பலமுறை யோசிக்கத் தொடங்கியது.
அக்டோபர் புரட்சி
அதன்பின் அவ்வர்க்க ஆட்சிக்குத் தீக்கனவாக உருவாகியது ரஷ்யாவில் நடைபெற்ற மாபெரும் அக்டோபர் புரட்சியே. தொழிலாளி வர்க்கப் புரட்சி ஏற்படுவதும் அதன் வர்க்க ஆட்சி அமைவதும் முழுக்க முழுக்க நடைமுறை சாத்தியமானதே என்பதை அசலும் நகலும் அப்புரட்சி நிரூபித்தது. அது மட்டுமின்றி முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக மாறிய நிலையில் தொழிலாளிவர்க்கப் புரட்சி குறித்த கண்ணோட்டம் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதைத் தீர்க்கமாக வகுத்தெடுத்து மாமேதை லெனின் வழங்கிய கருத்துக்கள் உலகப் புரட்சிக்கே பொதுவான வழி காட்டுதலை அசைக்க முடியாத வாதங்களோடு முன் வைப்பனவாக இருந்தன. இது தங்கள் வர்க்க ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற எண்ணத்தை உலகம் முழுவதிலுமிருந்த ஆளும் வர்க்கங்களிடம் ஏற்படுத்தியது. அதன் விளைவுதான் ஸ்டாலினுக்கு எதிரான இத்தனை பொய்ப் பிரச்சாரங்கள்.
ஸ்டாலின் மூலமாக லெனினை எதிர்த்தனர்
ரஷ்யாவில் இருந்த எதிர்ப்புரட்சி சக்திகள் லெனினுக்கு எதிராக வெறுப்புக் கனல்களை வெளிப்படையாகக் கக்க முடியவில்லை. ஏனெனில் சொல்லொண்ணாக் கொடுமைகளுக்கு முதலாளித்துவ நுகத்தடியின் கீழ் ஆட்பட்டிருந்து, மாமேதை லெனினின் மகத்தான வழிகாட்டுதலால் விடுபட்டிருந்த ரஷ்ய மக்கள் அதனைச் சகித்துக் கொள்ள மாட்டார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.ஆனால் மாமேதை லெனினின் கருத்துக்களைத் தடம் புரளாமல் வைத்திருந்தது மட்டுமின்றி அதனைச் செறிவு செய்து நடைமுறைப் படுத்தியது மாபெரும் தலைவர் ஸ்டாலினே ஆவார்.
எந்தவொரு தத்துவத்தையும் சமூகத்தில் நடைமுறைப்படுத்தும் போது மட்டுமே அதற்கு ஆதரவும் எதிர்ப்பும் தோன்றுகிறது. ஒரு வர்க்க ஆட்சியை நிலை நாட்டுகையில் அதற்கான எதிர்ப்பு எதிரி வர்க்கத்தினால் அதன் வலுவனைத்தையும் ஒருங்குதிரட்டி ஒரு முகப்படுத்தி முன் வைக்கப்படுகிறது. மாமேதை லெனின் கூறிய விதத்தில் தூக்கியயறியப்பட்ட முதலாளித்துவ சக்திகள் பன்மடங்கு ஒருங்கு திரட்டப்பட்ட வலுவுடன் சோசலிசத்தை எதிர்க்கத் தயாராகின்றன. சிறு மூலதனம் அழிந்தொழியாது இருப்பது முதலாளித்துவப் போக்குகள், பழக்க வழக்க நடைமுறைகளில் மக்களிடம் பரந்த அளவில் நிலவுவது அந்த எதிர்ப்பிற்குச் சாதகமாக உள்ளது. இதனை அடையாளம் கண்டு எதிர்க்கும் கடமையைச் செவ்வனே ஆற்றியவர் மாமேதை ஸ்டாலின் ஆவார். எனவே லெனினது கருத்துக்களை நேரடியாக எதிர்கொள்ளத் திராணியற்றிருந்த எதிரி வர்க்க சக்திகளுக்கு அதனைத் தடம் புரளாது நடைமுறைப் படுத்திய தோழர் ஸ்டாலின் மீது மிகப்பெரிய கோபம் இருந்தது. பொய்ப் பிரச்சாரத்தை அவர் மீது கட்டவிழ்த்து விடுவதும் அதற்குச் சாத்தியமாக இருந்தது.
சோசலிசத்தை உறுதியுடன் நடைமுறைப் படுத்தியதும் இரண்டாவது உலகப் போரின் போது ஐந்தாம் படைப் போக்குகள் தலை தூக்குவதை அடியோடு ஒழிப்பதற்காக அவர் மேற்கொண்ட நடைமுறைகளும் சம்பாதித்த எதிர்ப்புகள் அவர் இறந்த பின் அவர் மீது பொய்ப் பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்படுவதற்கு ஏற்ற சூழ்நிலையை அவர்களுக்கு உருவாக்கித் தந்தன. அவருக்குப்பின் சோவியத் நாட்டின் ஆட்சியதிகாரத்திற்கு வந்த குருச்சேவ் போன்ற புல்லுருவிகளும் அதற்குச் சாதகமான தளத்தை ஏற்படுத்தித் தந்தனர். இதனைப் பயன்படுத்திக் கொண்டு உலக முதலாளித்துவ ஏகாதிபத்திய சக்திகள் மாமேதை ஸ்டாலின் மீது தங்கு தடையற்ற வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டதோடு அதனை மேலை நாட்டு இளைய தலைமுறையினரிடம் ஆழமாகப் பதிப்பதிலும் வெற்றி கண்டன.
எத்தனை பலமாகச் செய்யப்பட்டாலும் பொய்ப் பிரச்சாரங்கள் பொய்ப் பிரச்சாரங்களே; காலங்காலமாக அவை நின்று நிலவ முடியாது. அதனால் தான் ஆளும் வர்க்கங்களுக்கு ஜன்னி கண்டவர்களுக்கு ஏற்படும் நடுக்கத்தைப் போன்ற நடுக்கத்தை ஏற்படுத்திய ஸ்டாலினது புகழும் பெருமையும் புது உருவம் எடுத்து ரஷ்யாவிலும் உலக அளவிலும் வந்து கொண்டுள்ளன.
கனவை நனவாக்கியவர்
அமெரிக்கப் பத்திரிக்கையாளரும், புரட்சியாளர் பலரை நேர் கண்டு அவர்கள் குறித்த உண்மை விவரங்களை அழகுற உலக மக்கள் முன் வைத்தவருமான அன்னா லூயி ஸ்டராங், ஸ்டாலின் சகாப்தம் என்ற அவரது நூலில் கூறினார்: லெனின் அவரது காலத்தில் உலகப் புரட்சி குறித்துக் கனவு கண்டார்; ஆனால் ஸ்டாலின் உலக வரைபடத்தைத் தன் முன் வைத்துக் கொண்டு அதனை நடைமுறைப் படுத்துவது எப்படியென்று யோசித்துக் கொண்டிருந்தார் என்று.
ஆம் அவர் அவ்வாறு இருந்ததனால் தான் ஜார்ஜ் பெர்னாட் ஷா போன்றவர்களுக்கு அவரைச் சந்திக்கச் சென்ற அமெரிக்க, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பள்ளிச் சிறுவர்களாகச் காட்சியளித்தனர்.
சோவியத் நாட்டின் எல்லை தாண்டி உலகின் பல நாடுகளின் சூழ்நிலைகளையும் புரட்சிக் கோணத்திலிருந்து பார்த்து சரியான பல வழங்கல்களை அவர் செய்துள்ளார் என்பதை உள்ளங்கை நெல்லிக் கனியென விளக்கும் கட்டுரை ஒன்று ஜனவரி 10 ம் நாள் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் திரு இந்தர் மல்ஹோத்ரா அவர்களால் எழுதப்பட்டு வந்துள்ளது. அது இந்தியப் புரட்சி குறித்த அவரது கணிப்பை உள்ளடக்கியுள்ளதால் இந்திய வாசகர்கள் மத்தியில் அவர் புகழும் தொலைநோக்குப் பார்வையும் எட்டுவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபடாது ஒன்றாக இருந்த காலத்தில் இந்தியப் புரட்சி குறித்து விவாதிப்பதற்காக 1951ல் அக்கட்சியின் நான்கு தலைவர்கள் தோழர் ஸ்டாலினைச் சந்திக்க ரஷ்யா சென்றுள்ளனர். அஜாய் கோஷ், எஸ்.ஏ.டாங்கே, சி.ராஜேஸ்வர ராவ் மற்றும் பசவபுன்னையா ஆகியோரே அவர்கள். அவர்களில் பசவபுன்னையாவும், ராஜேஸ்வர ராவும் சீனாவில் நடந்தது போன்ற விவசாயிகளை அடிப்படையாகக் கொண்ட ராணுவத்தை அணிதிரட்டிப் புரட்சி நடத்த வேண்டும் என்ற கருத்தினை ஸ்டாலினிடம் கூறியுள்ளனர்.
சீன நடைமுறை
அதற்குப் பதிலளித்த தோழர் ஸ்டாலின் “சீனாவில் நடந்த புரட்சி சீன நாட்டிற்கு மட்டுமே பொருத்தமுடையது. அதாவது மாவோ பின்பற்றிய நடைமுறை 80 முதல் 90 சதவீதம் வரை விவசாயிகளைக் கொண்டுள்ள நாட்டிற்கு மட்டுமே பொருத்தமுடையது. அப்படிப்பட்ட நாடுகளைப் பொறுத்தவரை அந்நாடுகளின் புரட்சிகர சக்திகள் தங்கள் நாடுகளின் சமூக மாற்றத்திற்குப் பயன்படுத்தத் தகுந்த மாவோவால் வழங்கப்பட்ட ஒரு புதிய கண்டுபிடிப்பு அது. ஆனால் இந்தியாவிற்கு அது பொருத்தமுடையதல்ல. இந்தியா சீனாவிலிருந்து பல விதங்களில் வேறுபட்டது. இந்தியா சீனாவைக் காட்டிலும் தொழில் ரீதியாக வளர்ச்சி பெற்ற நாடு. சீனாவைக் காட்டிலும் அடர்த்தியான ரயில்வே போக்குவரத்து வசதி இந்தியாவில் உள்ளது. எந்தவொரு நாட்டின் முன்னேற்றத்தைப் பொறுத்தவரையிலும் அது வரவேற்கத் தகுந்த ஒன்று. ஆனால் (சீனபாணி) புரட்சிக்கு அதுபோன்ற வளர்ச்சி சாதகமானதல்ல.
மேலும் சீனாவில் ஏற்கனவே மக்கள் விடுதலை ராணுவம் உள்ளது. உங்களிடம் அது இல்லை. சீனப் புரட்சிக்கு ஆதரவும் உதவியும் வழங்கவல்ல சோவியத் யூனியன் அதற்கு அண்டை நாடாக உள்ளது. அத்தகைய அண்டை நாடு உங்களுக்கு இல்லை” என்று கூறியுள்ளார். அத்துடன் “சீனபாணியில் விடுதலை மையங்களை ஏற்படுத்துவதில் ஒரு பாதக அம்சமும் உள்ளது; அவ்வாறு உருவாக்கப்படும் விடுதலை மையங்கள் சில சமயங்களில் தீவுகள் போல் ஆகிவிடும். அவற்றை முற்றுகையிடுவது எதிர்த் தரப்பிரனருக்கு அத்தனை கடினமல்ல” என்றும் கூறியுள்ளார்.
அந்த விளக்கங்களைக் கேட்ட பின்னரும் கூட ஒரு கப்பல் நிறைய ஆயுதங்களை சோவியத் யூனியன் ஆந்திராவின் ஒதுக்குப் புரத்தில் உள்ள ஒரு துறைமுகத்திற்கு அனுப்ப முடியுமா என்று பசவபுன்னையா தோழர் ஸ்டாலினிடம்கேட்டுள்ளார். அதற்குத் தோழர் ஸ்டாலின் நீங்கள் (அத்தகைய ஆயுதங்களைப் பயன்படுத்தி) ஏதாவது ஒரு பகுதியை விடுவிக்கிறீர்கள் என்றே வைத்துக் கொள்வோம். அப்பகுதிக்குப் பாதுகாப்பான பின்புலம் ஏதாவது உங்களுக்கு உள்ளதா என்று கேட்டுள்ளார்.
திரு எஸ்.ஏ.டாங்கே தொழிலாளர் பங்கேற்பு இல்லாத இராணுவ ரீதியான போரை ஒரு தத்துவமாகவே நாங்கள் ஆக்கி விட்டோம் என்று கூற அதற்கு ஸ்டாலின் இது மாவோவிற்குத் தெரிந்தால் அவர் அதற்காக உங்களைத் திட்டுவார் என்று சிரித்துக் கொண்டே பதிலளித்துள்ளார். மேலும் ராஜேஸ்வர ராவ் இத்தகைய ராணுவ ரீதியான எழுச்சி குறித்து மக்களிடம் கேட்டு முடிவு செய்வோம் என்று ஸ்டாலினிடம் கூற, அதை மட்டும் செய்து விடாதீர்கள். உங்களது திட்டத்தை அவ்வாறு சப்தமிட்டுக் கூறினால் நீங்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு விடுவீர்கள் என்று ஸ்டாலின் எடுத்துரைத்துள்ளார்.
மதங்கள் தேசிய இனங்களை உருவாக்குவதில்லை
அத்துடன் இந்தியா பாகிஸ்தான் பிரிவினை ஆங்கிலேயர்களால் கையாளப்பட்ட தந்திரமான திரைமறைவு நடவடிக்கை; நீங்கள் ஒரு செயல்திட்டத்தை வகுப்பீர்களானால் அத்திட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய மூன்று நாடுகளும் பொருளாதார, ராணுவ ரீதியான கூட்டுறவுடன் செயல்பட வேண்டும் என்ற கருத்தை முன் வையுங்கள். செயற்கையாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ள இந்த மூன்று நாடுகளும் ஒன்று சேர முடிந்தவையே.
அத்தகைய திட்டத்தை நீங்கள் முன் வைத்தீர்களானால் அதற்கு மக்கள் ஆதரவு கிடைக்கும். பாகிஸ்தானிலும், இலங்கையிலும் உள்ள மேல்தட்டு வகுப்பினர் அதனை எதிர்ப்பர். ஆனால்(சாதாரண) மக்களுக்கு அதனால் அவர்களின் மீது சந்தேகம் ஏற்படும் என்று கூறியுள்ளார். அடுத்து எந்த அளவிற்கு இப்பிரிவினை செயற்கையானது என்பதைப் பாகிஸ்தானுடன் இணைந்துள்ள வங்காளப் பகுதியைப் வைத்தே தெரிந்து கொள்ளலாம். பாகிஸ்தானை விட்டு முதலில் பிரிவது(பாகிஸ்தானுடன் இணைந்துள்ள) வங்கப் பகுதியாகத் தான் இருக்கும் என்றும் தோழர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
1951ல் நிகழ்ந்த இந்த சந்திப்பின் போது தோழர் ஸ்டாலின் முன்வைத்த இக் கருத்துக்கள் இரண்டு வியங்களைத் தெளிவாக்குகின்றன. முதலாவதாக இந்தியாவிலிருந்து எத்தனையோ காததூரம் தள்ளியுள்ள ஒரு நாட்டின் தலைவர் எத்தனை சரியாக இந்தியச் சூழ்நிலைகளைக் கணித்துள்ளார் என்பதை அது வெளிப்படுத்தியுள்ளது. இரண்டாவதாக இந்தியச் சூழ்நிலையில் முழுமையாக இருந்து கொண்டே கூட இந்தியச் சூழ்நிலையைச் சரியாகக் கணிக்க முடியாதவர்களாக ஒன்றாயிருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் எவ்வளவு தூரம் இருந்துள்ளனர் என்பதும் இதன்மூலம் தெரிய வந்துள்ளது.
இந்தியத் தொழில் வளர்ச்சி, சீனாவிலிருந்ததைக் காட்டிலும் மேலானதாக இருந்த ரயில்வே போக்குவரத்து வசதி, சீனாவிற்கு இருந்தது போன்ற சாதகமான பின்புலம் இல்லாதிருந்தது இது எதையும் கணக்கிற் கொள்ளாமல் சீன பாணிப் புரட்சியை ஒன்றாயிருந்த சி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியது; சீனாவில் மாவோ கடைப்பிடித்த நடைமுறையை ஒரு தத்துவமாகவே ஆக்கியது; அது மட்டுமின்றி எதை மக்களிடம் கேட்டு முடிவு செய்யலாம், எதை அவ்வாறு செய்யக் கூடாது என்ற சாதாரண நடைமுறை ரீதியிலான அணுகுமுறை கூட இல்லாதிருந்தது ஆகிய பல தவறான புரிதல்களை அக்கட்சி கொண்டிருந்தது இதன்மூலம் வெளிப்படுகிறது.
மதம் தேசிய இனத்தைப் பிரதிபலிக்காது
அதற்கும் மேலாக இந்திய , பாகிஸ்தான் பிரிவினையை அக்கட்சி தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைப் பிரச்னையாகவே பார்த்த இமலாயத் தவறு தோழர் ஸ்டாலினால் நாசூக்காக இச்சந்திப்பின் போது சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. எந்தச் சூழ்நிலையிலும் மத அடிப்படையிலான பிரிவினை தேசிய இனப்பிரச்சனையாக ஆக முடியாது என்ற அடிப்படை மார்க்சியக் கருத்தோட்டத்தையே அக்கட்சி அறியாதிருந்திருக்கிறது என்பதும் இதன்மூலம் வெளிப்படுகிறது.
அதனை அழகுறச் சுட்டிக் காட்டிய தோழர் ஸ்டாலின் அதையும் தாண்டி எது உண்மையான தேசிய இனப் பிரச்னை என்பதையும் தெளிவுறச் சுட்டிக் காட்டியுள்ளார். பாகிஸ்தானில் உள்ளடங்கியிருந்த வங்கப் பகுதி அது வேறொரு தேசிய இனம் என்பதால் விரைவில் அது பாகிஸ்தானிலிருந்து பிரிந்து சென்று விடும் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். அதாவது 1971ல் நிகழ்ந்த வங்கதேசப் பிரிவினையை 1951ம் ஆண்டிலேயே முன்கூட்டிப் பார்த்துக் கணித்துள்ளார். இவ்வாறு மிகச் சரியாக வேறெந்தத் தலைவரும் கணித்ததில்லை என்று கட்டுரையை எழுதியவரே கூறியுள்ளார்.
மார்க்சியத் தத்துவத்தால் வளர்ந்த திறமை
இந்த அத்தனை சரியான கணிப்புகளையும் அவர் செய்துள்ளது அவரது தனிப்பட்ட திறமை; அல்லது பிறவியிலேயே பெற்றிருந்த சிறப்புத் தன்மையல்ல. மாறாக இது மார்க்சிய விஞ்ஞானத்தின் அடிப்படையில் அவர் சமூக நிகழ்வுகளைத் தொடர்ச்சியாகக் கணித்ததன் மூலம் அவருக்குக் கைவந்த கலையாகக் கிட்டிய திறமை.
மார்க்சிஸ்டுகள் என்று கூறிக் கொள்வோர் அனைவரிடமும் இந்தத் திறமை வளர்ந்து விடுமா அல்லது கடந்த காலங்களில் அவ்வாறு வளர்ந்துள்ளதா என்றால் முழுமையான ஈடுபாடு, அர்ப்பணிப்பு, மனோதிடம், நிகழ்வுகளை மார்க்சிய வெளிச்சத்தில் பாரபட்சமின்றிப் பார்க்கும் போக்கு ஆகியவை இருந்தால் ஒருவர் தோழர் ஸ்டாலினைப் போன்ற புரட்சியாளராக ஆகவும், வாழவும், பல அரிய வழங்கல்களை மார்க்சிய விஞ்ஞானத்திற்கு ஆற்றவும் முடியும் என்பதே இக்கேள்விக்கான விடையாக இருக்க முடியும் .
ஜார்ஜியாவில் பிறந்த ஸ்டாலின் இளம் வயதிலேயே அவர் கற்ற மிச னரிப் பள்ளியிலிருந்து வெளியேறி கோபா என்ற ஜார்ஜியப் போராளியின் பெயரைத் தனது புனைப் பெயராகக் கைக் கொண்டார். அதன் பின்னர் மார்க்சிய இயக்கத்தினால் கவரப்பட்ட பின் அவருக்கு அவர் வைத்துக் கொண்ட பெயரே ஸ்டாலின் என்பது. இரும்பு மனிதன் என்பது அதன் பொருள். ஏறக்குறைய ஏழுமுறை ஜார் மன்னரின் அரசாங்கத்தால் அவர் நாடு கடத்தப்பட்டார். ஆனால் ஆறுமுறை அவராகவே அதிலிருந்து தப்பி வந்து புரட்சிகர இயக்கத்தில் பணியாற்றினார். ஒரே ஒருமுறை மட்டுமே பொது மன்னிப்பு வழங்கப்பட்டு நாடு கடத்தலிலிருந்து மீண்டார்.
புரட்சிகரத் தன்னடக்கம்
இத்தனை உறுதி கொண்டவராக இருந்த போதும் மாமேதை லெனின் தன்னைவிட மிக உயர்ந்தவர் என்பதை உளப்பூர்வமாக மகிழ்வுடன் ஒப்புக் கொண்டார். அவர் தோள்பட்டை மற்றும் தலையளவு தன்னை விட உயர்ந்தவர்; அவரது உலகப் பார்வை ஒரு மலைக் கழுகின் தொலைதூரப் பார்வையை ஒத்தது என்று கூறி லெனினது சிறப்பினை புரட்சிகரத் தன்னடக்கத்துடன் அங்கீகரித்தார்.
முழுமை பெற்ற கம்யூனிஸ்ட் என்று யாரும் இருக்க முடியாது. அப்படி யாரையேனும் நாம் கற்பனை செய்து பார்க்க விரும்பினால் லெனினையொத்த தத்துவார்த்த வலிமையையும் ஸ்டாலினை ஒத்த அதனை நடைமுறைப் படுத்தும் திறமையையும் கொண்டவராகவே அவர் இருப்பார்.
அம்மாமேதையை அவரது நினைவு நாளில் நினைவு கூர்வோம். அவர் குறித்த பொய்ப் பிரச்சாரங்கள் அனைத்தும் மங்கி மறைந்து, உலகில் சமுதாய மாற்றப் போக்குகள் பெரிதும் தோன்றி வளர்ந்து வரும் இன்றைய நிலையில் அவரது உண்மை மதிப்பினைப் புடம் போடப்பட்ட பொன்னாக மிளிரச் செய்வோம்.