உழைக்கும் மக்களை வர்க்கப்பார்வையற்றவர்களாக்கி ஜாதிய வட்டத்திற்குள் கட்டிப்போட முயலும் முதலாளித்துவச் சதி
மத்திய அரசு தற்போது மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளது. பொதுவான மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு ஜாதிவாரிக் கணக்கெடுப்பையும் 2011ம் ஆண்டிற்குள் முடிக்க உத்தேசித்துள்ளது. இந்த அறிவிப்பு நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கினால் கடந்த கூட்டத் தொடரில் முன் வைக்கப்பட்டது.
அதற்கு முக்கிய காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் சமாஜ்வாதி மற்றும் ஆர்.ஜே.டி. கட்சியினர். இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில் எந்தவொரு எதிர்க்கட்சியும் இதனை எதிர்க்க முன்வரவில்லை என்பதே. முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி முதலில் இதனை ஆதரித்தது. அதற்கு அது முன்வைத்த வாதம் ஒவ்வொரு ஜாதியிலும் உண்மையில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துவிடும். அதனால் ஜாதி ரீதியாக மக்களின் எண்ணிக்கை குறித்து உண்மையான நிலவரம் தெரிந்துவிடும். அது பலரது மிகைப்படுத்தப்பட்ட அவர்களது ஜாதியினர் எண்ணிக்கை குறித்த அறிவிப்புகளை அம்பலப்படுத்திவிடும் என்பதாகும். ஆனால் அதன் குருபீடம் ஆர்.எஸ்.எஸ். இதனை எதிர்த்தவுடன் இது குறித்து அக்கட்சியின் தலைவர்களுக்கு இரண்டாவது சிந்தனை ஏற்பட்டுவிட்டது.
இதை வைத்து நாம் ஆர்.எஸ்.எஸ். ஒரு ஜாதிய எதிர்ப்பு இயக்கம் என்று கூற வருகிறோம் என்ற முடிவிற்கு வந்துவிடக் கூடாது. அது உண்மையில் பழைமை வாத அடிப்படையிலான வர்ணாசிரம தர்மத்தைக் கொண்டு வர விரும்பும் அமைப்பே. தற்போது தோன்றியுள்ள பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஜாதியம் அது முன்னெடுத்துச் செல்ல விரும்பும் மத ரீதியிலான பிரிவினைக்கு உகந்ததல்ல என்பதால் அது அதனை விரும்பவில்லை. அதனாலேயே அது இந்த ஜாதிய ரீதியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பை எதிர்க்கிறதே தவிர வேறெதனாலுமல்ல.
தமிழகத்தில் உள்ள கட்சிகளைப் பொறுத்தவரை திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் இதனை வரவேற்றுள்ளன. இது அனைவரும் எதிர்பார்த்த ஒன்று தான். ஏனெனில் திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை அது ஆரம்பமுதற் கொண்டே பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் அமைப்பே. அதனுடைய பார்வை விடுதலை பெற்ற காலத்திலி ருந்து இன்றுவரை எந்தவகை மாற்றமும் இன்றி ஜாதிய அமைப்பு அப்படியே இருந்து கொண்டுள்ளது என்பதே.
தி.மு.க. வைப் பொறுத்தவரை தேர்தல் அரசியலுக்கு உகந்த எதையும் அது செய்யும். அந்த அடிப்படையில் இக்கட்சிகளின் நிலைபாடு அனைவரும் எதிர்பார்க்கும் வகையில் ஏற்கனவே முடிவாகிவிட்ட ஒன்றே.
பிற கட்சிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று தங்களைக் கூறிக் கொள்ளக்கூடிய கட்சிகள் இது குறித்துத் தங்கள் நிலை பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வில்லை. ஒரு விசயத்தை இரண்டு வகைகளில் ஆதரிக்கலாம். ஒரு வகை ஆதரவு நேரடித்தன்மை வாய்ந்தது. மற்றொருவகை ஆதரவு மறைமுகத் தன்மை வாய்ந்தது. ஒன்றை எதிர்க்கா திருப்பது பல சமயங்களில் மறைமுக ஆதரவுத் தன்மை வாய்ந்ததாகவே ஆகிவிடும். அத்தகைய ஆதரவினையே ‘கம்யூனிஸ்ட்’ கட்சிகள் இவ்விசயத்தில் தெரிவிக்காமல் தெரிவிக்கின்றன.
கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைபாடு ஜாதியக் கணக்கெடுப்பை எதிர்த்தால் தேர்தல் அரசியலில் அது எதிர்மறை விளைவை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தினையும் மையமாகக் கொண்டது. பாட்டாளி மக்கள் கட்சி போன்ற ஜாதியக் கட்சிகளைப் பற்றிக் கூறத் தேவையில்லை. இதற்கான அவற்றின் ஆதரவும் ஏற்கனவே முடிவாகி விட்ட ஒன்றே. இவ்விசயத்தில் அதன் கவலை எல்லாம் வன்னியர் மக்கட்தொகை குறித்த தங்களது மிகைப்படுத்தப்பட்ட அறிவிப்புகள் எல்லாம் பொய்யயனத் தெரிந்துவிடுமோ என்பதாகத்தான் இருக்கும்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முடிவு வந்த பின்னரும் அக்கட்சி என்ன சொல்லும் என்பதையும் இப்போதே கூறிவிடலாம். அதாவது கணக்கெடுப்பில் தவறு உள்ளது தமிழகத்தின் தங்கள் இன மக்களின் எண்ணிக்கையைக் குறைவாக கணக்கெடுத்தவர்கள் காட்டியுள்ளனர் என்பதே கணக்கெடுப்பு முடிந்தவுடன் அது கூறும் கருத்தாக இருக்கும்.
இது குறித்து பல தலித் அமைப்புகளிடம் பெரும் உற்சாகம் எதுவும் இல்லை. ஏனெனில் இதன் மூலம் புதுப்பலன் எதுவும் தலித்துகளுக்கு கிட்டப் போவதில்லை; மாறாக இக்கோரிக்கையை எழுப்புபவர்கள் சமாஜ்வாதி, ஆர்.ஜே.டி. போன்ற பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் கட்சிகளாக இருப்பதால், அதனால் பலனடையும் வாய்ப்புள்ளவர்கள் பிற்பட்ட வகுப்பினராகவே இருப்பர் என்ற கண்ணோட்டமே அந்த அமைப்புகளிடம் நிலவுகிறது.
பயனற்றதாகி வரும் இட ஒதுக்கீடு
ஆனால் யதார்த்த நிலையைப் பார்த்தால் தற்போது அரசுத் துறையின் வேலை வாய்ப்புகள் மிகவும் குறைந்துள்ளன. புதிதாக உருவாகும் தொழில் நுட்ப மற்றும் பிற பாடப்பிரிவுகளைக் கற்கும் பட்டதாரிகளில் மிகமிகப் பெரும்பாலோர் தனியார் துறையிலேயே வேலை வாய்ப்பைப் பெறுகின்றனர். அங்கெல்லாம் ஜாதிய ரீதியிலான ஒதுக்கீடு கிடையாது. அதனைக் கொண்டுவரும் முயற்சிகள் தோல்வியடைந்து விட்டன. எனவே இட ஒதுக்கீடு வேலை வாய்ப்பைப் பொறுத்தவரையில் பெரிதும் பயனற்றுப் போன ஒன்றாக ஆகிவிட்டது.
கல்வி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்களைப் பெறுவதில் மட்டுமே இந்த இட ஒதுக்கீடு பயனுள் ளதாக உள்ளது. கல்வி நிலையங்கள் மிகப் பெரும்பாலும் தற்போது தனியார் கல்வி முதலாளிகள் வசம் உள்ளதால் அவர்களுக்குத் தேவைப்படும் கட்டணத்தை செலுத்த வசதியுள்ளவர் கள் எந்த வகுப்பினராய் இருந்தாலும் ஏதாவதொரு வகையில் அவர்களுக்குக் கல்லூரிகளில் இடமளிக்க அவர்கள் தயாராகவே உள்ளனர்.
மேலும் தற்போது கொடிகட்டிப் பறந்துவருவது பொறியியற் கல்வி. அதில் ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கான இடங்கள் நிரம்பாமல் கிடக்கும் சூழ்நிலையே நிலவுகிறது. எனவே யார் கைவசம் பணம் இருந்தாலும் அவர்கள் பொறியியற் கல்லூரிகளில் சேர்ந்து விடலாம்.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் குறைந்த கட்டணத்தில் கல்வி பயில வாய்ப்பிருக்கும் அரசுக் கல்லூரிகளில் மட்டும்தான் இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குச் சிறிதளவு பலன் கிட்டுகிறது.
இவ்வாறு பெரிய பலன் எதையும் நடைமுறையில் பெரிய அளவில் பெரும்பான்மை மக்களுக்கு வழங்க முடியாததாக இட ஒதுக்கீடு இன்று ஆகியுள்ள நிலையில் அதற்குத் தேவைப்படும் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு இக்கட்சிகளும் அமைப்புகளும் இத்தனை முக்கியத்துவம் தருவதன் பின்னணி என்ன?இதுவே இன்று நமது மனதில் எழும் மிக முக்கிய கேள்வி.
ஆளும் வர்க்கக் கட்சிகளின் உள்நோக்கம்
கூர்ந்து நோக்கினால் இக்கட்சிகள் அனைத்தும் நமது சமூக அமைப்பு குறித்த ஒரு தவறான சித்திரத்தை உள் நோக்கங்களுக்காக முன்வைக்க விரும்புகின்றன என்றே படுகிறது. அதாவது அவை சமூகப் பிரச்னைகள் அனைத்தையும் ஜாதிய வட்டத்திற்குள் கட்டிப்போட எத்தனிக்கின்றன. இதுவே இப்பிரச்னைக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படுவதன் பின்னணி என்றே தோன்றுகிறது.
முதற்கண் சமூகப் பிரச்னைகள் அனைத்தின் மூலகாரணமும் வர்க்கப் பிரிவினையே என்று பார்க்க வேண்டிய கம்யூனிஸ்ட் கட்சிகள் கம்யூனிஸ்ட்கள் என்ற பெயரை வைத்துக் கொண்டே இந்திய மண்ணில் இவ்வேலையைச் செய்கின்றனர். அவை தற்போது எவ்வகை மார்க்சியப்பூர்வ ஆய்வுமின்றி முன்வைக்கும் வாதம் இந்தியாவில் நிலவும் ஜாதிப் பிரிவினைகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்காததே தாங்கள் வளராமல் போனதற்குக் காரணம் என்பதாகும்.
ஜாதிப் பிரச்னையை எடுக்காததால் வளரவில்லை என்ற தவறான வாதம்
ஒரு காலத்தில் வர்க்கப் பிரிவினைக்கு எதிராகத் தமிழகத்தின் ஜாதிய வேறுபாடுகளை முன்னிறுத்திய ஈ.வே.ரா.பெரியாரின் கருத்துக்களை எதிர்த்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று பெரியாரின் கருத்துக்களைக் கையிலெடுக்க வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறிக் கொள்கின்றனர். ஒன்றாயிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) உருவான பின்னர் அதிலிருந்து பிரிந்த நக்சல்பாரி கண்ணோட்டத்தை முன்வைக்கும் பிரிவுகளில் பலவும் மார்க்சியம், அம்பேத்காரியம், பெரியாரியம் ஆகியவையே தங்களது சித்தாந்தத்தின் சாராம்சம் என்றும் கூறிக் கொள்கின்றன.
அடிப்படை மாற்றங்களை வலியுறுத்தாத கருத்துக்கள் இஸங்களாக முடியாது. முதலில் நாம் ஒரு விசயத்தைப் பார்க்கத் தவறக் கூடாது. அதாவது ஒரு சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் சில நடைமுறைத் தேவைகளை மையமாகக் கொண்டு எழும் கண்ணோட்டங்கள் எல்லாம் “இஸ”ங்களாக ஆகிவிட முடியாது. அவை சமூகத்தின் அடிப்படையான மாற்றத்தை வலியுறுத்துபவையாக இருக்கும் போது மட்டுமே இஸங்கள் என்று கருதப்பட முடியும். அந்த அடிப்படையில் பெரியாரின் கருத்துக்களையோ, அம்பேத்காரின் கருத்துக்களையோ பெரியாரியம், அம்பேத்காரியம் என்று அழைக்க முடியாது.
பிற்பட்டோர் அரசியலின் பின்னணி
தமிழகத்தில் நிலவுடமைப் பொருளாதாரம் கோலோச்சிய நிலையில் இருந்த ஜாதியப் பிரிவுகளின் தலைமைப் பிரிவாக விளங்கியது பார்ப்பனியம். அது எந்திரத் தொழில் உற்பத்திமுறை வெள்ளையரால் அறிமுகப் படுத்தப்பட்டு வளர்ந்த வேளையில் அதன் அடிப்படையை இழந்தது. அடிப்படையை இழந்தாலும் வெள்ளையர் வழங்கிய ஆங்கிலக் கல்வியைப் பயன்படுத்தி அவ்வகுப்பினைச் சேர்ந்த பலர் அவர்களின் மக்கள் தொகை விகிதாச்சாரத்தைக் காட்டிலும் கூடுதல் எண்ணிக்கையில் அரசு மற்றும் பிற துறைகளில் முக்கியப் பொறுப்புகள் வகித்தனர்.
அவர்களின் அந்த ஆதிக்கத்தைக் கல்வி மற்றும் தொழில் துறைகளில் முறியடித்து முன்னேற அதே ஆங்கிலக் கல்வியைக் கற்ற பல பிற்பட்ட வகுப்பினைச் சேர்ந்தவர்கள் விரும்பினர். அதற்காக அவர்கள் பிராமண எதிர்ப்பை மையமாகக் கொண்ட நீதிக்கட்சியை உருவாக்கினர். அதில் முன்னிலை வகித்தவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் நலன்களை பிரதிபலித்தவர்களே.
பிராமணியத்தின் பின்பலமாக விளங்கியது நமது நாட்டின் ஹிந்து மதம். எனவே ஹிந்து மதவாதத்திற்கும் எதிரான கருத்துக்களை நீதிக் கட்சியிலிருந்து உருவான பெரியார் ஈ.வே.ரா. அவர்களின் திராவிடர் கழகம் முன்வைத்தது. இருந்தாலும் அடிப்படையில் திராவிடர் கழகம் பிற்படுத்தப் பட்டோரின் இயக்கமாகவே இருந்தது. அதன் மற்றும் மகாராஷ்ட்ராவில் அம்பேத்காரின் முயற்சிகளின் விளைவாக ஜாதிய ரீதியான இடஒதுக்கீடு வந்தது.
அடிப்படை ஆட்டம் கண்டாலும் இயக்கப் பின்பலமின்றி ஜாதியம் அழியாது
விடுதலை பெற்ற இந்தியாவின் முதலாளித்துவ அரசு முதலாளித்துவத்தின் துரிதமானதும் வெகு வேகமானதுமான வளர்ச்சிக்கு வகுத்த திட்டங்களின் விளைவாக ஓரளவு தொழில் மயமும் அதனையயாட்டிக் கல்விப் பரவலாக்கலும் நடைபெற்றன. அதன் விளைவாகப் பார்ப்பனியம் முன்வைத்த வர்ணாசிரம தர்மமும் ஜாதியக் கட்டமைப்பும் பெரிய அளவில் ஆட்டம் கண்டன.
விவசாயப் பொருளாதாரம் மேலோங்கியிருந்த நமது நாட்டின் கிராமப் புறங்களிலும் விவசாயம் லாப நோக்கை அடிப்படையாகக் கொண்டு நடைபெறத் துவங்கியதால் அங்கும் ஜாதிய அடிப்படை ஆட்டம் கண்டது. அடிப்படை ஆட்டம் கண்டாலும் எந்தவொரு பிற்போக்கான சமூக வடிவமும் உடனேயே அழிந்தொழிந்து விடாது. அதன் பிற்போக்குத் தன்மையை அம்பலப்படுத்தும் சமூக, கலாச்சார இயக்கங்கள் முற்போக்கு சக்திகளால் வலுவாக நடத்தப்படும் போது மட்டுமே அது படிப்படியாக சமூகப் பொருத்த மில்லாதது என்றாகி மங்கி மறையும்.
ஆனால் நமது நாட்டில் இதற்குப் பதிலாக ஆட்டம் கண்ட ஜாதியத்தை ஆட்சியிலிருக்கும் முதலாளித்துவம் அதனுடைய நலனைப் பாதுகாக்கவும் வாழ்நாளை நீடிக்கவும் முதலாளித்துவச் சுரண்டலினால் பாதிக்கப்படும் உழைக்கும் வர்க்கத்தைப் பிளவு படுத்தவும் தூக்கி நிறுத்தத் தொடங்கியது. அடிப்படையில் உழைக்கும் வர்க்க ஒற்றுமையைத் துண்டாடி தான்தான் சமூக முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை என்பதை உழைக்கும் மக்கள் அறிந்து கொள்ளாமல் இருக்கச் செய்வதை அது விரும்பியது. அதற்காகவே ஜாதிய ரீதியான இட ஒதுக்கீட்டை ஏற்றுக் கொண்டு வசதியுள்ளவர் வசதி இல்லாதவர் என்ற பாகுபாடின்றி தாழ்த்தப்பட்டவர் பிற்படுத்தப்பட்டவர் அனைவருக்கும் சலுகைகள் என அறிவித்து ஜாதியப் போக்குகளை ஊக்குவிக்கத் தொடங்கியது.
முதலாளித்துவ அரசின் அடிப்படை நோக்கம் உழைக்கும் மக்கள் ஒற்றுமையைப் பிளவுபடுத்துவதே. அதைப் புரிந்து கொண்டு நாடாளுமன்ற அரசியலில் பல நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தித் தங்களுக்கெனத் தனித்தனி செல்வாக்கு மண்டலங்களை ஏற்படுத்தித் தங்களது நலன்களை மேம்படுத்திக் கொள்ளவும் உடமைகளைத் தற்காத்துக் கொள்ளவும் பல்வேறு ஜாதிகளின் உடமை வர்க்கத்தினர் விரும்பினர். அதற்காக ஜாதிக் கட்சிகளை அவர்கள் உருவாக்கினர். இருக்கும் பெரிய கட்சிகளுக்குள்ளும் ஜாதியக் குழுக்கள் தங்களது ஜாதிய அடையாளத்தை முன்னிலைப் படுத்தி தங்கள் ஜாதிகளைச் சேர்ந்தவர்களுக்குப் பல பதவி வாய்ப்புகளைப் பெற்றன.
முதலாளித்துவத்தால் வளர்த்து விடப்படும் ஜாதியம்
இந்த வளர்ச்சிப் போக்கு ஒன்றைத் தெளிவாக வெளிக்கொணர்ந்தது. அதாவது இன்றுள்ள ஜாதிய வாதம் நிலவுடமைக் கால கட்டத்தில் நிலவிய ஜாதியத்திலிருந்து பெரிதும் அடிப்படையில் வேறுபட்டது என்பதே அது. நிலவுடமைக் காலத்தில் நிலவிய ஜாதிய வாதம் பிறப்பால் உயர்வு தாழ்வை வலியுறுத்தி அதன் மூலமாக அன்றிருந்த நிலவுடமைப் பொருளாதாரத்தை நெருக்கடியின்றித் தக்கவைக்கப் பயன்பட்டது.
ஆனால் இன்றுள்ளது ஜாதியமாக இல்லை; அமைப்பு ரீதியாக வளர்க்கப்படும் ஜாதிய வாதமாகவே உள்ளது. எந்திரத் தொழில் உற்பத்திமுறை வளரத் தொடங்கிய காலத்தில் இருந்து தொடர்ச்சியாக நகர் மயமாதல் நடைபெற்றுக் கொண்டே உள்ளது. நகரங்களில் யதார்த்தத்தில் வெளிப்படையான எதை வைத்தும் யார் எந்த ஜாதியினர் என்று யாரும் அறிந்து கொள்ள முடியாது. அமைப்பு ரீதியாக்கப்பட்டுள்ள அரசுத்துறை தொழில்களில் இடஒதுக்கீடு இருப்பதால் மட்டுமே அங்குள்ளவர்களின் ஜாதிகள் மற்றவர்களுக்குத் தெரிகின்றன.
கிராமங்கள் என பல காலம் கூறிவந்த பழக்கத்தில் நமது நாட்டில் பல பகுதிகளைக் கிராமங்கள் என்று நாம் கூறுகிறோமே தவிர உண்மையிலேயே ஒவ்வொரு ஜாதியினர் குடியிருப்பதற்கும் ஒவ்வொரு தெரு எனக் கறாராக வரையறுக்கப்பட்ட தெருக்களைக் கொண்ட பழைய கால கிராமங்களாக இன்று எந்தக் கிராமும் இல்லை. மேலும் கறாராக வரையறுக்கப்பட்ட பழைய காலக் கிராம வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்பட்ட தொழில் முறையும் தற்போது இல்லை. சுருக்கமாகச் சொன்னால் நிலவுடமைக் கால ஜாதி அடிப்படையிலான பெரும்பாலான கிராமங்கள் இல்லாமல் போய்விட்டன; இருப்பவையும் வெகுவேகமாக இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றன. ஜனநாயக நடைமுறைகள் கலாச்சார வாழ்வில் முக்கியப் பங்கு வகிக்கும் போக்கு மக்கள் இயக்கங்கள் மூலம் கொண்டுவரப் படாததால் திருமண உறவுகளில் மட்டும் ஜாதிய அடிப்படை இன்றும் பெருமளவு நிலவுகிறது.
எனவே உண்மையில் இன்று அமைப்பு ரீதியாக விசிறி விட்டு வளர்க்கப்படும் ஜாதியமே சமூகத்தில் நிலவுகிறது. பணத்திற்கு மிகப் பெரும் மதிப்பு ஏற்பட்டுள்ள இந்த முதலாளித்துவ சமூக அமைப்பில் மென்மேலும் அதனை ஈட்ட ஜாதிய அணிதிரட்டல் வழிவகுக்கும் என்ற அடிப்படையில் அது சுயநல சக்திகளால் காப்பாற்றிப் பராமரிக்கப்படுகிறது. இதுவே இன்றுள்ள ஜாதியத்தின் அடிப்படை.
விடுதலைப் போரின் இரு முக்கிய அடையாளங்கள்
நமது நாட்டில் நடந்த விடுதலைப் போராட்டத்திற்கு இரண்டு வேறுபட்ட தன்மைகள் இருந்தன. ஒன்று வெள்ளை ஏகாதிபத்தியத்திடமிருந்தான அரசியல் ரீதியான விடுதலை. மற்றொன்று வெள்ளையர் அறிமுகம் செய்த முன்னேறிய தொழிலுற்பத்தி முறையும் அதனைச் செவ்வனே நடத்த அது அறிமுகம் செய்த கல்வி முறையும் முன்னிறுத்திய பல முற்போக்கான சீர்திருத்தங்களை மையமாகக் கொண்ட சமூக விடுதலை. இந்தியா என்ற பூகோளப் பகுதி முழுவதுமே இவ்விரு தன்மைகளும் இருந்தன.
வெள்ளையர் ஆட்சி வேரூன்றிய காலத்தில் இந்தியாவின் பல பகுதிகளின் மக்கள் அப்போது அவர்களை ஆட்சி செய்த தான்தோன்றித்தனமான ஆடம் பரமும் படாடோபமும் நிறைந்த இந்திய ஆட்சியாளர்களால் அல்லல் பட்டுக் கொண்டிருந்தனர். எனவே அவர்களுக்கு வெள்ளையர் ஆட்சி ஒன்றும் மிகக் கொடுமையானதாகத் தெரியவில்லை. ஆனால் நாளடைவில் பிற காலனி ஆதிக்க நாடுகளுடனும், இந்திய அரசர் களுடனும் சண்டைகளில் ஈடுபட்டு அதற்காகப் படை வலிமையைப் பெருக்க விவசாயிகளின் மீது வரிக் கொடுமையைக் கடுமையாகச் சுமத்திய போது தான் அவர்களின் மீது சாதாரண மக்களுக்குக் கோபம் ஏற்பட்டது.
அதுவரை பல உயர்ந்த கல்வி மான்களும் சிந்தனையாளர்களும் வெள்ளையர் ஆட்சி வழிதிறந்துவிட்ட சமூக சீர்திருத்தங்களுக்கே முன்னுரிமை அளித்தனர். அதாவது ராஜாராம் மோகன் ராய், வித்யாசாகர் போன்றவர்கள் சமூக சீர்திருத்தத்தங்களுக்கே முன்னுரிமை அளித்தனர்.
பெரியாரது பொது வாழ்க்கையின் மிகச்சிறந்த கால கட்டம்
சுதேசி மூலதனத்தின் வளர்ச்சி ஏற்பட்டு சுதேசி முதலாளிகள் துணிவு பெற்று வெள்ளையரை வெளியேற்ற வேண்டும் என்று சுதேசி இயக்கத்திற்கு உருக்கொடுத்து அதற்காக மக்களின் எதிர்ப்புணர்வைத் திரட்டிப் போராடிய போது சமூக சீர்திருத்தத்தைக் காட்டிலும் வெள்ளையரை எதிர்த்த அரசியல் முதன்மை நிலைக்கு வந்தது. பெரியார் அத்தருணத்தில் வெள்ளையரை எதிர்த்த அரசியல் மற்றும் சமூக சீர்திருத்தம் ஆகிய இரு அம்சங்களையும் கொண்டு செயல்பட்ட தலைவர்களில் ஒருவராக இருந்தார். ஜீவானந்தம் போன்ற பின்னாளில் கம்யூனிஸ்ட்களான தலைவர்களும் அவரோடு தோளுடன் தோள் நின்று செயல்பட்டனர். பெரியாரது பொது வாழ்க்கையின் மிகச்சிறந்த கால கட்டம் இதுவே.
ஆனால் சமூக சீர்திருத்த நடவடிக்கைகள் சுதேசி மக்களின் ஆதிக்கப் பிரிவினருக்கு எதிராக இருந்ததால் அவர்களில் பலர் வெள்ளையர் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை மேலோட்டமாக ஆதரித்தாலும், சமூக சீர்திருத்த நடவடிக்கைகளை அடியோடு வெறுத்தனர்.
அச்சூழ்நிலையில் விடுதலைப் போராட்டத்தில் தோன்றிய மகாத்மா காந்தியின் தலைமை அனைத்துப்பகுதி மக்களையும் வெள்ளையருக்கு எதிராக அணிதிரட்டுவது என்ற பெயரில் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை. அதனால் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக வெள்ளையரிடமிருந்தான அரசியல் ரீதியான விடுதலைப் போராட்டப் பாதையிலிருந்து பெரியார் விலகிவிட்டார்.
அதன் பின்னர் வெள்ளையரை எதிர்த்துச் சமரசமின்றிப் போராடிய பகத்சிங் போன்றவர்கள் போராடிய காலகட்டத்தில் அவர்களைப் போன்றவர்களின் போர்க்குணமிக்க கம்யூனிஸ, சோசலிச இயக்கங்களை வெள்ளையர் அடக்குமுறைக் கரம் கொண்டு நசுக்கத் தொடங்கிய வேளையில் ஜீவானந்தம் போன்றவர்களுடனான அரசியல் ரீதியான தொடர்புகளிலிருந்தும் படிப்படியாகப் பெரியார் விலகி விட்டார். அதன் பின்னர் முழுக்க முழுக்க தன்னை ஒரு பிராமண எதிர்ப்பாளராக, பகுத்தறிவுவாத மற்றும் சமூக சீர்திருத்த வாதியாக மாற்றிக் கொண்டார். முன்பு அவரிடமிருந்த பரந்த பார்வை இல்லாமல் போய்விட்டது.
முதலாளித்துவம் ஓரளவு வளர்ந்து ஜாதியமைப்பின் அடித்தளம் நொறுங்கிப் போன வேளையிலும் கூட ஒரு வகையான விடாப்பிடியான பிராமண எதிர்ப்பு மனநிலையோடு அவர் செயல் பட்டார். பிராமணத் தொழிற்சங்கத் தலைவர்களைக் காட்டிலும் வேறு ஜாதிகளைச் சேர்ந்த தமிழ் முதலாளிகள் ஆதரிக்கப்பட வேண்டியவர்கள் என்ற அளவிற்கு அவரது கருத்துக்கள் சென்றன.
மேலும் அவர் முன் வைத்த உயர்ந்த கருத்துக்கள் கூட இந்த அமைப்பை அடிப்படையில் மாற்றாமல் அப்படியே வைத்துக் கொண்டு அதில் சில சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் தன்மை வாய்ந்தவையாகவே இருந்தன. புரட்சிகரப் போக்கை அதாவது சமூகத்தின் அடிப்படையை மாற்றுவதை நோக்கி அவை செல்லவில்லை. எனவே பெரியாரியம் என்று அவர் பெயருடன் சேர்த்து ஒரு இஸத்தை முன் வைப்பது அந்த வகையில் பொருத்தமற்றது.
உடன்பட்டும் , முரண்பட்டும் நிற்க வேண்டிய தருணங்கள்
எனவே நிலவுடமைப் பொருளாதாரத்தின் மிச்சச்சொச்சமாக விளங்கிய ஜாதிய வாதத்தை எதிர்த்த போராட்டத்தில் அப்போது அதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெரியார் இயக்கத்துடன் கருத்தொருமித்து ஓரளவு செயல்பட்ட கம்யூனிஸ்ட்கள் பெரியாரின் கருத்துக்கள் அதாவது வர்க்க முரண்பாடுகள் வளரும் போக்குகளாக உருவெடுத்த பின்னரும் பழைய ஜாதிய வாதத்தையே தூக்கிப்பிடித்துப் பார்ப்பனர் அல்லாத முதலாளிகளின் நலன்களை ஜாதிய முகத்திரை போட்டு என்று காப்பாற்றத் தொடங்கியதோ அன்று அதற்கு எதிரான நிலை எடுத்து வர்க்கப் போராட்டங்களை அணிதிரட்டி ஜாதிய வேறுபாடுகள் கடந்த உழைக்கும் வர்க்க ஒற்றுமையை உயர்த்திப் பிடித்திருக்க வேண்டும்.
அவ்வாறு செய்வதன் மூலம் உண்மையிலேயே இன்று அனைத்து சமூகப் பின்னடைவுகளுக்கும் முக்கியக் காரணமாக உள்ள முதலாளித்துவத்தை அம்பலப்படுத்தி பொருளாதார ரீதியில் பின்தங்கியவர் அனைவரையும் அவரவரது ஜாதிகளில் உள்ள உடமை வர்க்கங்களுக்கு எதிராகத் திருப்பியிருக்க முடியும். அதன்மூலம் மட்டுமே ஜாதிய ஒழிப்பு என்பதையும் ஏற்படுத்தியிருக்க முடியும்.
அதைவிடுத்துப் பெரியாரின் கருத்துக்களை எடுத்துச் செயல்படாததன் காரணமாகவே வளர்ச்சி குன்றிப் போனதாக இன்று ‘கம்யூனிஸ்ட்கள்’ கருதுவது உண்மைக்குப் புறம்பானதொரு பொய்த் தோற்றத்தைத் தங்களது போதாமைகளை மூடிமறைக்க முன்வைப்பதே தவிர வேறெதுவுமல்ல.
மேலும் பொருளாதாரத்தைக் கணக்கில் கொள்ளாமல் ஜாதிய ரீதியில் வழங்கப்படும் இடஒதுக்கீடு ஜாதியப் போக்குகள் இன்னும் ஸ்தாபனமயப் படுத்தப்பட்ட வடிவத்தில் வளர்வதற்கு வழிவகுக்கிறது என்ற சூழ்நிலை ஏற்பட்ட போதும் தேர்தல் அரசியல் நலன் கருதி அதனை நிபந்தனையின்றி அவர்கள் ஆதரித்தது கம்யூனிஸத்தின் அடிப்படையிலிருந்து தடம் புரண்ட செயலாகும்.
நிலவுடமை முடிவிற்கு வந்து முதலாளித்துவ யுகம் தோன்றிய காலத்தில் கீழ்நிலையில் இருந்த ஜாதிகளைச் சேர்ந்தவர்களை மேம்படுத்துவதற்கு நடைபெற்ற இயக்கங்கள் முழுக்க முழுக்க ஜனநாயகத் தன்மை கொண்டவையாக இருந்தன. அன்று கீழ்நிலையில் இருந்த ஜாதிகளின் நலன்களை மேம்படுத்தும் போராட்டத்தை மேல் நிலையைச் சேர்ந்த ஜாதிகள் என்று கருதப்பட்டவர்களில் பலரும் மனமுவந்து ஆதரித்தனர்.
ஜாதிகளை ஒழிக்காததோடு அவற்றை வளர்த்தும் விடும் இட ஒதுக்கீடு
ஆனால் இன்று பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொள்ளாமல் ஒரு ஜாதியைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் சலுகை என்ற அடிப்படையே இட ஒதுக்கீட்டில் நிலவுகிறது. அது பல்வேறு ஜாதியக் கட்சிகளாலும் பல கட்சிகளின் உள்ளிருந்து நிர்ப்பந்தங்கள் கொடுத்து சலுகைகள் பெறும் ஜாதியக் குழுக்களாலும் விசிறிவிடப்பட்டு ஜாதியவாதம் வளர்க்கப் படுவதற்கே வாய்ப்பு ஏற்படுத்தித் தந்துள்ளது. அந்த அடிப்படையில் இன்றைய ஜாதிய வாதம் ஜனநாயக உள்ளடக்கத்தைக் கொண்டிராதது மட்டுமின்றி பல பாஸிசப் போக்குகளை உள்ளடக்கியதாகவும் உள்ளது.
இட ஒதுக்கீடுகளினால் பலனடைந்தவர்களே மென்மேலும் பலனடைந்தவர்களாகி தாழ்த்தப் பட்டவர்களில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள் இன்னும் பின்தங்கியவர்களாக இருப்பதே தொடர்கிறது. கல்வியும் தொழிலும் முழுக்க முழுக்க லாப நோக்கம் சார்ந்த தனியார் துறையின் கைகளுக்குச் சென்றுவிட்ட இன்றைய நிலையில் அத்தகைய பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய தாழ்த்தப் பட்டவர்கள் வேலை வாய்ப்பைத் தரும் தனியார்மயக் கல்வியை இடஒதுக்கீட்டைப் பயன்படுத்திப் பெற்று முன்னேறுவது என்பது இனிமேல் நடக்கவியலாத காரியம் என்ற நிலை ஏற்பட்டு விட்டது.
ஒரு பிரிவினரை மட்டும் பிரித்தெடுத்து முன்னேற்ற முடியாது
இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி முன்னேறியவர்களில் மிகப் பெரும்பாலோர் இன்னும் தாழ்த்தப்பட்ட நிலையில் இருக்கும் மற்றவர்களும் முன்னேற்றம் காணும் வகையில் கல்வி நிலையங்களை உருவாக்கித் தங்கள் இனமக்களுக்கு இலவசமாகக் கல்வி வழங்குவது போன்ற பொதுநல நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை.
மாறாக பொருளாதார ரீதியான தங்களது சுயநலம் கலந்த முன்னேற்றத்திலேயே அக்கறை காட்டுகின்றனர். அதற்காகவும் பொருளாதார அடிப்படையில் ஒருவேளை இடஒதுக்கீடு வந்து அது தங்களது அடுத்தகட்ட முன்னேற்றத்திற்குத் தடையாகி விடக்கூடாது என்பதற்காகவும் பாடுபட பல அமைப்புகளை ஏற்படுத்துகின்றனர். அவை அவர்கள் வசம் உள்ள ஒருங்கு திரட்டப்பட்ட வலுவினைப் பறைசாற்றப் பயன்படுகின்றன. அது பிற ஜாதிகளிலுள்ள உடைமை வர்க்கங்களுடனான போட்டியில் அவர்கள் வலுவுடன் ஈடுபட வழிவகுக்கிறது.
இதுதான் பணம் தான் அனைத்தும் என்ற நியதியை எங்கும் பரப்பியுள்ள முதலாளித்துவ அமைப்பில் எங்கும் எப்போதும் பரவலாகத் தவிர்க்க முடியாமல் நடக்கக் கூடிய ஒன்று. இந்த அமைப்பை அப்படியே வைத்துக் கொண்டு ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினரை மட்டும் பிரித்தெடுத்து அவர்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாக முன்னேற்றுவது முதலாளித்துவ அமைப்பில் நடக்கவியலாத காரியம்.
தாழ்த்தப்பட்ட மக்களைப் பொறுத்தவரை இப்போதும் அவர்களில் பெரும்பாலோர் பொருளாதார ரீதியிலும் பின் தங்கியவர்களாகவே உள்ளனர். ஆனால் பிற்படுத்தப்பட்டோர் என்று தமிழகத்தில் வரையறைப் படுத்தப்பட்டுள்ளவரின் நிலை அப்படிப்பட்டதல்ல. வாக்கு வங்கி அரசியல் உண்மையிலேயே குறிப்பிடுமளவு பின்தங்கியில்லாத பல சமூகத்தினருக்கும் பிற்பட்டோர் பட்டியலில் இடம் பிடிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்துள்ளது.
இந்தக் கண்கூடான உண்மை மக்களிடம் சென்று சேர்த்துவிடக் கூடாது என்பதில் அவ்வாறு பிற்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுவிட்ட ஒவ்வொரு வகுப்பிலுமுள்ள உடைமை வர்க்க சக்திகள் கண்ணுங்கருத்துமாக உள்ளன. ஒவ்வொரு வகுப்பினரும் அதில் உள்ள அப்பாவி ஏழை மக்களில் பலரை ஏமாற்றி அவர்களில் ஒரு சிறு பகுதியினருக்கு வெறியுணர்வையும் ஊட்டி அனைத்து வகுப்புகளிலும் ஏழை, பணக்காரர்கள் உள்ளனர்; அவர்களில் ஏழைகளே மிகவும் பாதிக்கப்பட்டவர்களாக சலுகைகள் மூலம் உயர்த்திவிடப்பட வேண்டும் என்ற தேவையைக் கொண்டவர்களாக உள்ளனர் என்ற யதார்த்தத்தை எடுத்துரைப்போரை அச்சுறுத்தும் ஒரு பாசிஸப் போக்கில் செயல்படவும் வைக்கின்றனர்.
வளர்ந்து வரும் இப்போக்கு தற்காப்பு மற்றும் ஜாதி ரீதியாக ஒன்றுபட்டு சலுகைகள் பெறுதல் என்ற சாக்கில் சமூகத்தின் அனைத்துப் பகுதியினரிடமும் ஜாதிய மனநிலையை வளர்க்கும் வேலையையே செய்கிறது. கல்வியும் வேலை வாய்ப்பும் எந்தச் ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பணம் படைத்தவர்களுக்கே என்ற சூழ்நிலை மலை போல் அனைவரின் கண்களின் முன்பும் எழுந்து நிற்கும் சூழ்நிலையிலும் ஜாதிய ரீதியான இடஒதுக்கீடு குறித்த ஒரு மாயை இடைவிடாமல் முன்னேறியோர் , பின்தங்கியோர் என்ற பாகுபாடின்றி அனைத்து மக்கட் பகுதியினரிடமும் பரப்பப் படுகிறது. அதன்மூலம் மக்கட் பகுதியினரிடையே துவேசமும் பொறாமையும் போட்டியும் நிலவச் செய்யப்படுகிறது.
முதலாளித்துவம் தனது மிக நெருக்கடியான கால கட்டத்தில் தன்னைக் காப்பதற்காகப் பெரிதும் சார்ந்திருப்பது பாசிஸத்தையே. அதற்கு புது அடிப்படைகளை ஏற்படுத்தி பாஸிசத்தை வளர்ப்பதைக் காட்டிலும், சமூகத்தில் ஏற்கனவே இருந்து காலாவதியாகிப் போன நிறுவனங்களைப் பயன்படுத்தி அதனை வளர்ப்பது எளிது. அத்தகையதொரு நிறுவனமாக இந்தியாவில் மதத்துடன் ஜாதியும் அதற்குப் பயன்படுகிறது.
கம்யூனிஸ்ட் கட்சிகளால் வர்க்கப் போராட்டங்கள் நடைபெற்று பொருளாதார ஏற்றத் தாழ்வு முன்னிலைப் படுத்தப்படாத நிலையில் இப்போக்கு இன்னும் வலிமை பெற்ற ஒன்றாக ஆகிவருகிறது. இதனால் உழைக்கும் மக்களின் ஒற்றுமை பிளவுபட்டு ஜாதியக் கட்சிகள், முதலாளித்துவ ஊடகங்கள் ஆகியவற்றின் பிரச்சார பலத்தினால் ஜாதிய ரீதியிலான வேறுபாடுகள் நாள்தோறும் முன்னிலைப் படுத்தப்படுகின்றன. இதன்மூலம் சமூக முன்னேற்றத்தின் உண்மையான முட்டுக்கட்டை முதலாளித்துவமே என்பது மூடிமறைக்கப் படுகிறது. தான்தான் எதிரி என அடையாளம் கண்டுகொள்ளப்படாமல் இருக்கப் பயன்படும் இந்த நிலையை மென்மேலும் தக்கவைக்கவும் அதற்காக ஜாதிய ரீதியான வன்மங்களை உருவாக்கவும் ஆளும் முதலாளி வர்க்கம் எத்தனிக்கிறது.
ஜாதிப் பிரிவினை ஆயுதத்தின் கூர் மழுங்காமல் காக்க விரும்பும் ஆளும் வர்க்கம்
இந்தியச் சூழலில் தங்களது நலனுக்குக் குந்தகம் ஏற்படாமல் பல காலமாகப் பலனளித்து வரும் இந்த ஜாதியப் பிரிவினையும், மனநிலையும் சிறிதும் வலுக் குறையாமல் பராமரிக்கப்பட வேண்டும் என்று அந்த ஆளும் வர்க்கம் விரும்புகிறது. அதன் அந்த நோக்கத்தின் பங்கும் பகுதியுமாகவே இன்று இந்த ஜாதியக் கணக்கெடுப்பு முன்மொழியப் படுகிறது.
அதாவது நிலவும் உலகமயச் சூழலில் தேசிய வரையறை கடந்து ஒவ்வொரு நாட்டின் உற்பத்திப் பொருளும் உலகச் சந்தையின் சரக்காக மாறி உலக அளவிலான உழைக்கும் வர்க்க ஒற்றுமை ஏற்பட ஏதுவான சூழ்நிலை தோன்றியுள்ள நிலை ஜாதிய மனநிலை யில் ஒரு தொய்வை ஏற்படுத்தி தனக்குக் காலங்காலமாகப் பயன்பட்ட ஒரு ஆயுதத்தின் கூரினை மழுங்கச் செய்துவிடக் கூடாது என்பதில் இந்திய ஆளும் வர்க்கம் மிகவும் அக்கறையாக உள்ளது.
அதற்குச் சேவை செய்யும் முதலாளித்துவக் கட்சிகளில் பிரதானக் கட்சியான காங்கிரஸ் கட்சி அவ்விருப்பத்தைச் சிரமேற் கொண்டு நிறைவேற்றுமுகமாக நாட்டு மக்களை ஜாதிய வட்டத்திற்குள் கட்டிப் போடும் இந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பினை முன்மொழிகிறது. அதனை இந்தக் கட்சிகள் அனைத்தும் வரவேற்கின்றன அல்லது உரிய எதிர்ப்பைக் காட்டாது மறைமுகமாக ஆதரிக்கின்றன.
இந்த நோக்கத்தைப் புரிந்து கொண்டு உழைக்கும் வர்க்க இயக்கங்கள் உழைக்கும் வர்க்க ஒற்றுமையை தர்க்கபூர்வ வாதங்கள் மூலமும், இதனைச் செய்யும், ஆதரிக்கும் முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ அமைப்புகளின் உள் நோக்கத்தை அம்பலப் படுத்தியும் கட்டியமைக்க வேண்டும். மூலதனம் அதன்மேல் கட்டவிழ்த்து விட்டுள்ள வரைமுறையற்ற தாக்குதல்களையும் சுரண்டலையும் எதிர்த்து தீவிரமான வர்க்கப் போராட்டங்களை நடத்த வேண்டும். அதுவே உண்மையான ஜாதிய ஒழிப்பிற்கு வழிகோலக் கூடியது என்பதை வரலாற்றுபூர்வ எடுத்துக் காட்டுகள் மூலம் நிறுவ வேண்டும்.