கட்டுரையை எங்கிருந்து தொடங்குவது? எதைப் பேசுவது? என்பது பற்றிய எந்த அவதானிப்புகளும் இல்லாமலேயே துவங்க நினைக்கிறேன். ஆயினும், சமகாலத் தீவிர தமிழ் எழுத்துச் சூழலில் கோணங்கியின் கதை நிலத்தை எவ்வாறு முதலில் புரிந்து கொள்வது அல்லது நான் கோணங்கியென்னும் கதை சொல்லியிடமிருந்து எதைப் பெறுகிறேன் என்பதிலேயே தற்போது லயிக்கிறேன்.

மேற்கத்திய கதை ஆளுமைகளின் வழி நின்றோ, சில மாந்திரீக கதை வல்லுனர்களிடமிருந்தோ நான் கோணங்கியின் கதையை ஏனோ அடையவில்லை. ஒருவகையில் நான் சாக்கடையில் பிறந்த தினால்கூட இருக்கலாம். கோணங்கி கதை எழுதத் துவங்கி கால் நூற்றாண்டிற்குப் பிறகு நான் கதை எழுத வந்தவன்.

எனக்கு முந்தைய கதை மொழியை உணர்பவன் இதை நான் சொல்லவில்லை. எதிர்காலத்திற்கான கள மொழியையோ கதை சொல்லுதலையோ நான் அறிய நினைக்கிறேன். நமது சூழலில் ஏன் குப்பைத் தொட்டிகளில் கடந்த கால கதைகள் நிறைகின்றன? என்ற கவலையும் எனக்கு இருக்கவே செய்கிறது. கதை சொல்லுதலில் மரபான கதை சொல்ல என்னவென்பதையும் நவீனக் கதை சொல்ல என்னவென்பதையும் புரிந்துணர நினைக்கிறேன். கதைகள் ஆவணக் காப்பகங்களாகவோ, வரலாற்று நிகழ் தொகுப்பாகவோ சுய சரிதை நம்பிக்கைகளாகவோ இருக்க வேண்டுமென்று இன்னமும் சிலர் நமது சூழலில் ஏனோ பாவம் விரும்புகிறார்கள். கோனார் நோட்ஸ§டன் கதைகள் எழுதப்பட வேண்டும் அல்லது புரிந்துகொள் வதற்கு சிறு விளக்க கையேடு வேண்டுமென்றும் சிலர் குரலிடு கின்றனர். வேறு சிலரோ இதுதான் மேஜிக்கல் ரியலிஸம், இதுதான் போஸ்ட் மாடர்ன். இதை இப்படித்தான் எழுத வேண்டும், வேறு மாதிரி எழுதக் கூடாது என்று நல் ஆலோசனைகளையும் வழங்கு கிறார்கள். கதைகள் எங்கிருந்து தோன்றுகின்றன? எங்கே நிகழ் கின்றன? எங்கே எழுப்பப்படுகின்றன? எங்கே மரணமடைகின்றன? என்ற கேள்விகளோடு நான் கதைகளை அறிய இயலவில்லை யென்றபோதிலும் கதைகள் நம்மை எங்கு அழைத்துச் செல்ல விரும்புகின்றன? என்ற கேள்வியை நான் சுமந்து திரிகிறேன். இங்கிருந்துதான் நான் கோணங்கியின் கதைகளுக்குள் நுழைகிறேன்.

நாம் எவ்வாறு கதையை வாசிக்க முயல்கிறோமோ, அந்த இடத்தி லிருந்து கோணங்கி கதைப்பதில்லை. பல திசைகளிலிருந்தும் கதையைச் சொல்லத் தொடங்குகிறார். நமக்கு பழக்கப்பட்ட இடத்திற்கு கோணங்கி வரும்போது அது வேறு இடமாகிறது. பொதுவான அர்த்தங்களின், நியதிகளின், சம்பிரதாயங்களின் அனுஷ்டானங்களாகக் கதைகள் சொல்லப்படுவதில்லை. மேலோட் டமான வார்த்தைகளின் சாராம்சமான அர்த்தங்களை மீறுகிற தருணத்திலேயே கதை நிகழ்கிறது.

கோணங்கி கையாள்கிற மனமொழி மிகவும் தொன்மச் சாயலின் புராணிக வாசனை கொண்ட பித்தமேற்படுத்தும் அந்தரங்கத் தன்மை யுடையது. தமிழ்க் கதை சொல்லல் மரபில் கோணங்கியின் கதை சொல்லல் முறை முன்னுதாரணமற்ற தனித்த சாயலுடையது. பலபோதும் நமது சமகால நில எல்லைகளுக்குட்பட்ட ஞாபகங்களை மீறுகிற வேறொரு நில எல்லையற்ற, மன எல்லையற்ற அறிதலில், கதைகள் தங்களைத் திறந்து கொள்கின்றன. ஆழ்ந்த போதைகளின் நிழல் சம்பாஷணைகள் போன்ற ஒரு மயக்கமும் அதில் கவிந்துகொண்டு விடுகிறது.

கோணங்கியின் கதைகளுக்குள் பதுங்கி வாழ்பவர்களோ கிணற் றில் வீழ்ந்து மரணித்து வாழும் பெண்களாகவும் இருக்கிறார்கள். எல்லோராலும் வீழ்த்தப்படுகிற மஞ்சள் நிற அலிகளாகவும் இருக்கிறார்கள். இன்னும் வேறு வேறாகவும் தென்பட்டு மறை கிறார்கள். துன்பமும் அலைச்சலும், சாவும் நோய்மையும், காமமும், காதலும், மைதுனமும், பீடி சிகரெட்டும், விஸ்கியும், மஞ்சள் நிறமொத்த பூனைகளும், வெயிலு, காலதீகம் பெற்ற கிழவர்களும், கிழவிகளும் மட்டுமல்ல, கூனர்களும், அடிமைகளும் இரும்பால் செய்யப்பட்ட வாழ்விடங்களும், தனிமையான லாட்ஜ் அறைகளும், காதலியால் நண்பர்களால் சூழலால் கைவிடப்பட்ட வேறு வேறான மனிதர்களும், அழிந்து கொண்டிருக்கும் கடவுளும் சதுக்க பூதங்களும் பட்டுப்பூச்சிகளும், வயிற்றில் பாம்பென தூங்கும் குட்டிப் பல்லியை சுமக்கும் பெரும் பல்லிகளும், பாம்புகளும், நாய்களும், கழுதை களும், பறவைகளும், பொம்மைகளும் மட்டுமின்றி, குழந்தைகளும், சலூன் நாற்காலியும் சிறுத்தை உட்பட்ட பல்வேறு ஜீவராசிகளும் இதிகாச புராண சமகால பல்வேறு துறை விற்பன்னர்களும் வேறு வேறான இரவு பகல்களும், வீர தீர புருஷர்களும் உலகளாவிய இலக்கிய ஆளுமைகளும் இன்னும் பலரும் பலதும் கதைகளுக்குள் வந்து மறைகிறார்கள். மறைகின்றன. இங்குக் கவனிக்க வேண் டியது, எதையாவது ஆவணப்படுத்தும் ஒரு வாசகனிடமிருந்து கதைகள் நகர்ந்து மாயமாகி விடுகின்றன. தீர்க்கமான சொற்களின் கவித்துவ பாய்ச்சலில் கதைகள் திடீரென வேறு திசைக்கு நகரும் தருணங்களுமுண்டு. கூருணர்வுள்ள ஒருவித துன்பத்தின் சாயல் படிந்த மனத்தினூடாகக் கோணங்கி என்னும் எழுத்துக் கலைஞன் எந்தவொரு உணர்வையும் அதன் அடியாழத்தில் சென்று அறியும் வேட்கையில் அலைவுறுவதையும் அறிய நேரலாம்.

***

கோணங்கியின் ஆரம்பகால கதைகள், தனிமையையும் கிராமத்து வேர்களையும் கொண்டியங்கியது. நகரமாகிக் கொண்டு வரும் கிராமங்களிலிருந்து மறைந்து போய்க் கொண்டிருக்கும் பெண் காதலிகளும், நிராதரவான சூழலும் புதிய வீச்சோடு எழுதப்பட்டது. அக்காலத்திலேயே கோணங்கி அடி ஆழத்திற்குள் வாசகனை நகர்த்திச் செல்லும், ஒருவித துன்ப அலைச்சல்மிக்க மொழியையும் அடைந்தே இருந்திருக்கிறார்.

“ஜன்னலுக்கு வெளியில் பஜாரில் யாராவது தட்டுப்படுகிறார்களா என்று முழித்துப் பார்த்துக் கொண்டே வந்தான். திரும்பவும் ரயில் பாதை வந்தது. வெறுமனே ஆளற்றுக் கிடந்த ஸ்டேஷனில் சிமெண்டு போட்ட ஆசனங்கள் பரிதாபத்துன் உட்கார்ந்து கொண் டிருந்தன” என்று பழகிய கிராமத்தின் புதிய தன்னிலையை எழுதுகிறார். மதினிமார்கள் மறைந்து கொள்ளத் துவங்கியபோது செம்பகம் பழைய காலத்தை தேடுகிறான். அவனே அவன் வசிப் பிடத்தில் அந்நியனாக மாறிக் கொண்டு வரும் சூழலையும் அறிகிறான்.

“செத்த வீட்டு மேளகாரர்கள் மாறிமாறித் தட்டும் ரண்டங்கு மேளத்துடன் உள்ளடங்கி வரும் துக்கத்தை உணர்ந்தான். முதிர்ந்த வயதுடைய பெரியாள் உருமியைத் தேய்க்கிற தேய்ப்பில் வருகிற அமுத்தலான ஊமைக் குரல் அடி நெஞ்சுக்குள் இறங்கி விம்மியது. அந்த இசைஞர்கள் ஒட்டுமொத்த துக்கத்தின் சாரத்தைப் பிழிந்து கொண்டிருப்பதாய் உணர்ந்தான். யாராலும் தீர்க்க முடியாத கஷ்டங்களையெல்லாம் அடிவயிற்றிலிருந்து எடுத்து ஊதிக் கொண்டிருந்த நாயனக்காரரின் ஊதல், போகிற பஸ்ஸோடு வெளியில் வந்து கொண்டிருந்தது” (மதினிமார்கள் கதை) இதுபோன்ற துன்ப நிலைகளினூடாகவே கதை நிலத்தைத் தன் ஆரம்ப காலக் கதைகளில் கோணங்கி வந்தடைகிறார்.

காதலாகிக் கசிந்துருகும் ஸ்திரிகள் கிராமத்தை விட்டு காணாமல் போனதைச் சுயதன்னிரக்கத்தோடு தேடும் ஒரு இளைஞனின் மன அவஸ்தையிலிருந்து விரிவு கொண்ட பெரும் எழுத்துப் பரப்பை பின்னர் கோணங்கி எவ்வாறு வந்தடைந் தார்? இன்னு மத்தியதர வாழ்வினரும், இலக்கிய ரசனையாளர்களும் கோணங்கி போன்ற மஹா மூர்க்கம் கொண்ட கதை சொல்லியிடம் மதினிமார்களின் கதைகளையே எழுத வேண்டுமென்று அடம் பிடிப்பது நமது சூழலுக்கு அவ்வளவு நல்லதுமல்ல. தனது சொந்த நிலம் பற்றிய உலகளாவிய அர்த்தங்களைத் தேடிக் கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளன் ஆரம்ப காலத்தில் தனது சுற்றுப்புறத்தின் வெறுமை யையும் தனிமையையும் காதலையும் வேறுவேறான வாழ்வின் அர்த்தங்களோடும் அபத்தங்களோடும் உரையாடுகிறான். அதைப் பற்றிய கதைகளையும் எழுதிப் பார்க்கிறான். மதினிமார்களின் கதை நிலம் கோணங்கியின் துவக்கப் புள்ளி. அதன் பிறகுதான் எழுத்து வேட்கையும், வேட்டையும் துவக்கம் கொள்கிறது. இங்குக் கோணங்கியின் வேறு சில கதைகளையும் பேச நினைக்கிறேன். ‘ஆதி விருட்சம்’ கதையில் வருகிற துருப்பிடித்த வெள்ளை தாடிக்காரர் வாழ்வை எதிர்கொள்ளும் விதம் பொதுத்தன்மைக்கு ஒரு மறுப்பாகவே பதிவாகியிருக்கிறது. அவருடைய இருப்புக்கு எந்த அர்த்தமும் இல்லையென்றபோதிலும் சதாகாலமும் அவர் சூழலை உலுக்கியெடுக்கிறார்.

“அவனுக்கு எதிரே விரைந்து ஓடும் தார் சாலையைப் பிடித்து அதையே கறுப்புத் துண்டாக விரித்துப் போட்டு எதையோ கேட்கிறான். கறுப்புத் துண்டில் இரும்பு வாகனங்கள் எறும்புகளாய் ஊர்ந்து கொண்டிருக்கின்றன”. இதுபோன்ற விவரணைகளோடு துருப்பிடித்த தாடிக்காரர் கதை நிலத்தில் விஸ்வரூபம் கொள்கிறார். பலகாரக் கடை கந்தப்பிள்ளை தாடிக்காரரால் சதா துன்பப்படுகிறார். அவருடைய வியாபார ரீதியிலான அன்றாட வாழ்வு அர்த்தமிழக் கிறது. நமது அன்றாட சாமான்ய வாழ்வுக்கு எதிரான ஒரு உயிரோட்ட முள்ள அமானுஷ்ய நடமாட்டமாய் தாடிக்காரர் கறுப்பு மரத்தின் வேர்களுக்குள் மறைந்து போகிறார்.

சுயம் உடையப் பெற்ற பாத்திர வார்ப்பினால் சுயம் உடைந்த கதைசொல்லி தனிமையையும் வெறுமையையும் அடைவதுடன் ஆகச் சிறந்த துன்ப நிலைகளுக்கு வந்தும் சேர்கிறார். நீலநிறக் குதிரைகள் கதையில் சுய பரிதவிப்பும் மன அழுகையும் அடையும் ஒருவன்தானா ஆதி விருட்சம் கதையில் வரும் துருப்பிடித்த வெள்ளைத் தாடிக்காரன்? இவ்வாறான பல்வேறு உருமாற்றங்களை நிகழ்த்தும் ஒரு மனவலியும் மனநெருக்கடியும் எங்கிருந்தோ கதைகளைக் கட்டிக்கோர்க்கிறது.

கோணங்கி பின்னர் வந்தடைந்த இடம் மரணத்தின் பேரழுத்த மும், ஞாபகங்களின் பல்வகை நிறக்கோர்வைகளும் அசாதாரணப் பொலிவைக் கிளர்த்துகின்றன.

துயரங்கள்தான் கோணங்கியென்னும் படைப்பாளுமையைக் கூர்தீட்டும் இடங்களென்றால் இதற்கு மாற்றாக வேறு கதைகளையும் கோணங்கி எழுதச் செல்கிறார். அதில் முக்கியமான ஒரு கதை “பட்டுப் பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம்”.

கோணங்கியின் இரண்டாம் துவக்கம் இந்தக் கதையிலிருந்து துவக்கங் கொள்வதாக நான் கருதுகிறேன். “பொம்மைகள் உடைபடும் நகரத்”தின் அடுத்தகட்ட பாய்ச்சலை இந்தக் கதையில் கண்டுணர முடியும். மிக அழகியலாகத் துவக்கப் பெறும், இந்தக் கதை பல்வேறு உள்மடிப்புகளையும் புனைவு வீச்சையும் தன்னுள்ளே கொண்டுள்ளது. நம்ப முடியாத மத்திர கவர்ச்சியால் இந்தக் கதை இன்னமும் எதிர்காலத்திலேயே எழுதப்பட்டது போலவும் எழுதி முடிக்கப் பெறாதது போலவும் வாசிப்பைப் பன்மடங்கு மேன்மைப் படுத்துகிறது. கதையை நகர்த்திச் செல்வது யாரென்று நாம் யூகிக்கி றோமோ அவர்களை விட்டு கதையும் நகர்ந்து விடுகிறது. பொம்மை களும், கருப்பு நாய் புளுடோவும், சிறுவன் ஜாங்கோவும், பாசி யடைந்த இளவரசியும், தாத்தாவும், பாட்டியும், பூதமும் மட்டுமல்ல இந்தக் கதையை இழுத்துச் செல்வது ஜாங்கோவின் நூல்பந்தும், பறவைகளும், மீன்களும் எறும்புகளும் பட்டுப்பூச்சிகளும், உள் மடிப்புகளோடு கதையின் திசையை வேறு வேறு வண்ணத்திற்கு உருமாற்றுகிறார்கள். இவ்வளவு புனைவு வீச்சோடு குழந்தைகளின் அற்புத உலகத்தோடான எல்லையற்ற கனவு வெளியோடு குழந்தைகளின் மன உலக விரிப்பை நுட்பமாக அறிந்தபடி தமிழில் வேறு கதைகள் எழுதப்பட்டுள்ளனவா? இங்கு வெறும் குழந்தை களின் மன உலகம் அதீத பிரம்மைகள் மட்டுமல்ல; அவர்களின் கனவுகளும் பல்நிற பார்வைகளும் குழம்பிய அர்த்தங்களும், நிறுவன மறுப்பு மனோதிடமும் மட்டுமல்ல கதையாக உருக்கொண்டுள்ளது. கோணங்கியின் ஜாங்கோ இரண்டு காலில் நடக்கும் சிறுவன் மட்டுமல்ல. அவன் பறக்கக்கூடியவன். மாயாஜாலங்களை எப்படி நிகழ்த்துகிறான் பாருங்கள்.

“தெருத் திருப்பதில் தீப்பெட்டி கொளுத்தி விளையாடினான் ஜாங்கோ. கருப்புத் தலையும் வெள்ளை உடம்பும் கொண்ட மெழுகுத் தீக்குச்சிகளை ஒவ்வொன்றாகத் தீப்பெட்டிக்குள்ளிருந்து எடுத்தான். தீக்குச்சியின் வெள்ளை உடம்பை விரித்துப் பறந்து செல்லும் வெள்ளை இளவரசிகளாக மாற்றினான். இதுபோன்ற புனைவுகளின் உள்மடிப்புகளைக் கொண்ட கதைகள் நிலத்திலேயே நிகழ்கிறது. “கண்ணளவு சாவித் துவாரங்களினிடையில் எட்டிப் பார்த்தான் ஜாங்கோ. யாரும் அங்கு இல்லாத போதும் உள்ளேயிருந்த வெளிச்சத்தில் அந்த வீட்டுக் குழந்தைகள் விட்டுச் சென்ற பொம்மைகள் கிடந்தன. ஜாங்கோவைக் கண்டு பொம்மைகள் தலையசைத்தன. அவர்கள் எங்குப் போனார்கள் என்றான். பொம்மைகள் கைவிரித்தன. தேம்பித் தேம்பி அழுதன. அழுவாதே அழுவாதே என்கூட வாரிய... மாட்டோம் மாட்டோம் போ என்றன பொம்மைகள்.

உயிப்படைந்த பொம்மைகளும் பறக்கும் சிறுவனும் நிலத்தில் நிகழும் உருமாற்றங்களும் தமிழ் கதை எழுத்து மரபையே வேறு திசைக்கு நகர்த்தியிருக்கிறது. இந்தக் கதையோடு சேர்ந்து பொம்மைகள் உடைபடும். கரம் கதையையும் வாசகர்கள் வாசித்து வேறு மனஉணர்வை அடையலாம். “பொம்மையோடு என்னைச் சந்தித்த சிறுவன் ஒளிமயமான பாதைக்குள் மறைந்து போனான். தேம்பி அழுதார்கள் குழந்தைகள். அவன் சிறு கால்களுடன் பிளாட்பாரத்தில் மறைந்து போய்க் கொண்டிருந்தான். அவன் விரல் என் தலைமுடியைக் கோதிச் சென்றது. அவன் பொம்மையைப் பார்த்து ரயில் போய்க் கொண்டிருந்தது” என்பதான விவரணைகளோடு விரியும் இந்தக் கதை ரயில் பூச்சியால் புனையப்படுகிறது. ரயில் பூச்சி அசாதாரணப் புனைவுத் தன்மைக்குள் கதையின் உருவில் பயணிக் கிறது.

இந்த இரு கதைகளும் மற்ற கதைகளிலிருந்து விலகிய மனநிலையில் கோணங்கியால் எழுதப்பட்டுள்ளது. மதினிமார்கள் கதை எழுதின ஒருவரால் பட்டுப்பூச்சிகள் இறங்கும் மூன்றாம் ஜாமம் கதையை எவ்வாறு எழுத முடிந்தது? என்று வியப்படைகிறேன். மதினிமார்கள் கதையில் நிலமும் வாதையும் என்றால் பட்டுப் பூச்சிகள் கதையில் குழந்தைகள் உலகமும் கனவுப் பிரதேசங்களும் எழுதப்பட்டுள்ளன. ஒரு பெரும் அலைச்சலுக்குப் பிறகு கோணங்கி யின் மன உலகமும் மொழி நடையும் எவ்வளவு தூரம் வேறுபாடு அடைந்திருக்கிறது. நிலமற்றவனின் ... குணங்கள் என்று இதை நான் அனுமானிக்கிறேன்.

கோணங்கியின் பல்வேறு கதை மடிப்புகளிலிருந்து கிணற்றடி ஸ்திரிகள் கதையும் இறந்து கொண்டிருக்கும் சிறுமியின் கல்சாவியும் பதனிடப்பட்ட பெரும் நினைவலைகளைத் துன்பத்திற்குள் இழுத்துச் செல்கிறது. ஒரு வகையில் மதினிமார்கள் தங்கள் கதையிலிருந்து வெளியேறி வேறொரு ரூபங் கொண்ட கிணற்றடி ஸ்திரிகளாக உருமாறி இருக்கிறார்களோ எனவும் ஞாபகங் கொள்கிறேன்.

எல்லா ஸ்திரிகளும் அரளியில் வீசிய காந்த அலையில் பல முன் சொல்லப்படாத நினைவுகளை எட்டினர். “ஒவ்வொரு ஸ்திரியுமே ஆனைக் கிணற்றுடன் பந்தப்படுகிறாள்” “அரளிக்காய்கள் பாலும் நஞ்சும் கலந்து வண்டுகள் அடிவயிற்றில் தேக்கிய நஞ்சுடன் மயங்கி மயங்கிச் சரிந்து சுழன்று வரும் அவாந்திர வெளியில் மறைய தொலைவில் வரும் மாடுகள் தலையாட்டுகின்றன”, “பெண்களை உள்வாங்கும் கிணறும் அரளி காய்களின் மணமும் மரணத்தினடியில் வாழும் ஞாபகங்களுமே கிணற்றடி ஸ்திரிகள் கதையை சாவு மனத்தோடு நம்மை எதிர்கொள்கிறது. கோணங்கி யாருடைய கலைஞன் என்பதின் ரத்த சாட்சியாக சலூன் நாற்காலியில் சுழன்றபடி தொகுப்பு நம் கையில் இருக்கிறது.

பல்வேறு ஞாபங்களையும், இன்மையையும், இருப்பையும் சதா ஊடுருவியபடி, அதீதமான சொற்களின் புராணிகத் தன்மையின் தொன்மச் சாயலுடன், சதா இம்சித்து துரத்தும் அலைச்சலுடன், கோணங்கி பல்வேறு நிறங்களையும் குணங்களையும் கொண்ட கதைகளை எழுதியிருக்கிறார். “இறந்து கொண்டிருக்கும் சிறுமியின் கல்சாவி” நோயின் உடலை பலவாறும் முகர்ந்து அறிகிறது. இதுபோன்ற கதைகளை நாளைய வாசகன் தேடி அடையும்போது அவன் வலியை வாதையை வேறு அர்த்தங் கொண்டு அறியக் கூடலாம். இன்று கதையாளர்களை சுற்றி பல்வேறு ப்ளக்ஸ் பேனர்கள் மொய்க்கும் இக்காலத்தில் கோணங்கி எங்கோ ஒரு யாத்ரீகனாய் நடமாடிக் கொண்டு மரணித்தவர்களின் வகிளை எடுத்துக்கொண்டு தனிமையடைந்து படைப்புச் சூழலை ஆழ்ந்து ஊடுருவிச் செல்கிறார். சாதாரண ஒரு வாசகனுக்கு கோணங்கியிடம் பெறுவதற்கு ஏராளமான கமலக் கற்கள் புதையலாக, பழைய திராட்சை ரஸமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அவன் முன்னேறி வரவேண்டும்.

கோணங்கி கதைகளின் மீதான பார்வைகள் பெரு நகரம் சார்ந்த கமர்ஷியல் குருமார்களிடமிருந்தே இங்கு உருவாகியிருக்கிறது. கணித சூத்திரங்கள் போல அவருடைய கதைகளைக் கணித்து பெட்டியில் அடைத்து விடுகிறவர்களும் இருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலோட்டமான நுகர்வு மட்டும்தான் படைப்பை நிராகரித்து லேபிள் ஒட்டி விடுகிறது.

கோணங்கி நம் காலத்தின் அதீதம் பாரித்த நுட்படமான வாழ்வுக்கும் மரணத்திற்குமான அதி தூதுவன். இப்படிப்பட்ட ஒரு கதைச் சொல்லியை அறியாமல் அந்தக் கதைகளை தனக்கு வெளியே சென்ஸார் செய்து கொள்கிற சமூகம் மெய்யாகிலுமே தன்னையே நிராகரித்தும் விடுகிறது. முடிவாக நான் சலூன் நாற்காலியில் சுழன்றபடியிலிருந்து இந்த வரிகளோடு முடிக்கிறேன்.

தூக்கில் தொங்கிய என் தலை கீழிறங்கி கழுத்தில் ஒட்டியது என்னையே நான் கண்ணாடியில் பார்த்தேன். என் அடையாளம் குளறுபடியாகியிருந்தது. தற்கொலை செய்து கொள்ளலாமா? எல்லாமே ஒரு மயக்கத்தில் புரண்டு கொண்டிருந்தது. சலூன் நாற்காலியிலிருந்து வெளியேறினேன். என் அடையாளம் சொல்லி யாரோ அழைத்தபோது, டவுன்ஹால் ரோட்டில் நடந்து கொண் டிருந்தேன். ஒருவகை பரபரப்பு, யாருக்கும் தெரியாமல் ஓடிவிட வேண்டும். குறுக்கிட்ட ஒவ்வொருவனாகக் கண்ட பயம். இரும்புக் கவசமணிந்தவர்கள் என்னைச் சந்தித்தார்கள். சந்தேகச் சிரிப்புடன் கை குலுக்கி நகர்ந்தோம். திரும்பத் திரும்பப் பார்த்த முகங்களில் படியும் சவக்களை ஊசிக் கண்களால் குத்தும் சந்திப்புகள், தலைகுனிந்து நழுவினேன்.

ஏன் அலைந்து கொண்டிருக்கிறேன் என்று எனக்குத் தெரியாது. தலை திருப்பலில் எல்லாம் உடைந்து சிதறியது. எதிரே எதிரே வரும் சாவு முகங்கள். பின்தொடர்ந்து வரும்போதெல்லாம் முதுகில் செருப்புப் பதிகிறது. சிரித்த முகத்திலிருந்த ஊத்தைகள், அபின் விற்பவர்கள், டாப்பர்கள், மதுரை கரகாட்டக்காரியின் இடைவிடாத ஆட்டம், காமம் தெறிக்கும் கண்களுடன் திருவிழா கேஸ் லைட்கள், கூட்டமாய் நகரும் சான திருப்பங்கள், மலக்கிடங்குகளைச் சுற்றிக் கைகால் வீங்கிய குழந்தைகள், நோயாளிகள், ஆரோக்கியமானவர், நோயுற்றிருந்தார்கள். நோயுற்றவர்கள் இறங்கிக் கொண்டிருந்தார் கள். சவங்கள் அலையும் தண்டவாளங்கள் அடியில்.

கோணங்கியின் கதைகளுக்குள்ளிருந்து பாத்திரங்கள் வெளியேறி விட்டார்கள். கதைக் களமும் சிதைவடைந்துவிட்டது. அர்த்தங்களின் தகவல்களின் அடுக்குதல்கள் கதைகளை அவர் எழுதுவதில்லை. உப்புக் கத்தியில் மறைய சிறுத்தைக் கதையை எத்தனை முறை வேண்டுமானாலும் வாசிக்கலாம். ஒவ்வொரு முறையும் கதை புதிய நிலத்திலே விரிகிறது. ஆண்-பெண் பேதங்களையும் உடலின் பொருண்மையான அடையாளப் படுத்தலையும் மீறி உடலை தன்னெழுச்சியான முறையில் அறிகிறார் கோணங்கி. மஞ்சள் அலி, உப்பில் மறையில் சிறுத்தை போன்ற படிமங்களுக்கடியில் கதை நிலத்தின் வேறு நறுமணத்தை நுகர முடியும். வாசகன் கதையை ஒரே வாசிப்பில் அறிந்துகொள்ள வேண்டுமென்று துடியாய் துடிக்கிறான். இந்த மனநிலைதான் கோணங்கி கதைகளுக்கு எதிரிடையான பேச்சைத் துவக்கிச் சூழல் முழுவதிலும் நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு கதையுமே காலமாற்றத்தோடு வரிசை குழைத்த மன தர்க்கத்தோடுதான் திகழ்கிறது.

கோணங்கி கதைகளின் சிறப்பம்சமாகத் தென்படுவது மற்ற ஜீவராசிகளின் இருப்பும் அவற்றின் மீதான அவரின் ஈர்ப்பும், கதைகளுக்குள் மனிதவெளிக்கு மாற்றான பிரபஞ்ச வெளியும் அதில் பல்வேறு சப்த லயங்களும் பல்வேறு நிறங்களும் உறைந்துள்ளன. நுட்பமாக அதை வாசகன் கவனித்து நகர வேண்டும்.

பறவைகளின் ஒலியையும் ஓவியங்களின் நிறக் கலவையும் கொண்ட இடங்கள் வரும்போது அவன் அதில் லயிப்பதில்லை. மனிதப் பாத்திரங்களையும் கட்டடங்களையும் கதைக்களமாக நம்பிக்கொண்டு கோணங்கி பெறுவதற்கு ஒன்றுமில்லை. ஒருவ னுக்குக் கோணங்கியிடம் பெறுவதற்கு ஒன்றுமில்லை. இண்மையின் அதீதம் பாரித்த இருப்பையே கோணங்கி விரித்து வைக்கிறார்.

கோணங்கி கதைகளுக்குள் இசையின் சப்த ஒழுங்குள் வரிசை குழைந்துள்ளன. பாழ் வெறுமையான மனதின் ரேகைகள் மிதந்தலைகின்றன.

வெயிலை நாம் உணர்வது போல, மழையில் நனைவதுபோல, நோயின் வலியை அறிவதுபோல, மரணத்தை நெருங்குவது போல, முத்தத்தை ருசிப்பது போல, மனத்தின் தீண்டலில்தான் கோணங்கி யின் கதைகள் உருவம் பெறுகின்றன. தீண்டக்கூடியவர்கள் எங்கிருக்கிறார்களோ? அவர்கள்தான் வாசிப்பின் பரிமாணத்திற்குப் பேரழகு சேர்ப்பவர்கள்.

(கவிஞன் பாலை நிலவன் நீட்சி இதழின் ஆசிரியர்)

Pin It