உன்னதம் இதழின் ஆசிரியரான கௌதம சித்தார்த்தன் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களுள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர். தமிழ்ச் சிறுகதைகள் குறித்துக் கறாரான பார்வை உடையவரான இவர் ‘பொம்மக்கா’, ‘பட்சி பறவைகள்’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டு உள்ளார். பின்நவீனத்துவ பாணியைச் சிறுகதை என்னும் புனைவுக்குள் கொண்டுவந்தவர்களில் இவரும் ஒருவர். ‘தனித்துவமான பாணியை உருவாக்கியவர்களும் அந்தச் சூழலில் இயங்கியவர்களும்தான் சிறுகதைத் துறையில் தவிர்க்க முடியாத ஆளுமைகளாக மாறமுடியும். மற்றவர்கள் அந்தக் கட்டத்தில் மட்டுமே பிரகாசித்து மங்கிப் போய்விடுவார்கள்’ (உன்னதம், ஆகஸ்ட் 2011) என்று கூறும் கௌதம சித்தார்த்தன் அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வடிவ அமைப்பிலும் உள்ளடக்க ரீதியிலும் புதுமையைக் கையாண்டவர்.

கொங்கு வட்டாரத்தைக் கதைக்குள் கொண்டுவரும் இவர் தனது கதைக்களம் குறித்தும் கதைப் பொருண்மைக் குறித்தும், ‘புதிர்க் கட்டங்களிலும் வடிவ உத்திகளிலும் தொன்மங்களிலும் நான் மேற்கொண்ட பயணம், மண் சார்ந்த தொன்மங்களின் கதையாடல்களில் கால் பதிக்க வைத்தது. நான் பிறந்த கொங்கு மண்ணின் வாசம் என் உடலெங்கும் அப்பிய வேளை, மிகப் பழைய காலம் ஒன்றின் மறைந்தொழிந்து போன வாழ்விலிருந்து வழக்கொழிந்து போன, புழக்கத்திற்கு அருகிப்போன கதைச் சொல், எண்ணற்ற அளவில் வந்து குமிந்து கொண்டிருந்தது என் மொழிக்குள். கொங்கு மண்ணின் அந்தக் கதைச் சொற்கள் இறந்த காலத்தின் புதைக்குழிகளிலிருந்து மீண்டெழுந்து புதிய அர்த்தங்களுடன் தங்களைக் கட்டமைத்துக் கொள்கின்றன’ (2005: பொம்மக்கா - நூன்முகம்) என்று கூறுகின்றார்.

-     தொன்மக் கதையாடல்

-     தொன்மம்/நாட்டார் கதையாடலை மீட்டெழுதுதல்

-     சமுகம் /வாழ்நிலை/ அதிகார வர்க்கம்/ சாதியம்

-     கலை/ ஏழ்மை/ ஆண்-பெண் உறவுநிலை

ஆகியவற்றை கதைக்களமாகக் கொண்டவை இவரது படைப்புகள். இக்கதைகள் அனைத்தும் கொங்கு வட்டாரத்தைப் பின்னணியாகக் கொண்டவை. இதில் பொம்மக்கா, பாட்டப்பன், ஒண்டி முனியப்பன், பெருமாயி, அறுபத்துநாலு பொட்டுச்சாமி போன்ற கதைகள் கொங்கு வட்டாரத்தில் உள்ள சிறுதெய்வம், அதுசார்ந்த நம்பிக்கை, சடங்கு ஆகியவற்றின் பின்னணியில் இயங்கும் கதையாடல்களைக் களமாகக் கொண்டவை.

‘புத்திக்கல்லு போடறது’ (பொம்மக்கா), கல்குறி கட்டுதல் (சாத்தாவு), கருப்பு ஆட்டைத் திருடிப் பொங்கல் வைத்தல் (பாட்டப்பன்), ஒண்டி முனியன் கோயிலில் உலுந்துட்டுப் போதல் (ஒண்டி முனியப்பன்), பச்சைமண் பானை எடுத்தல் (பொம்மக்கா, மண்), படப்புக் கல்லு மீது கோவைப்பழம் வைத்தல் (பெருமாயி), பொட்டுச்சாமி மீது திருமணமாகாத ஆண்கள் 64 பொட்டு வைத்தல் (அறுபத்துநாலு பொட்டுச்சாமி) முதலான சடங்குகளின் பின் இயங்கிக்கொண்டிருக்கும் கதையாடல்கள் புதிய அர்த்தங்களுடனும் விமர்சன ரீதியிலும் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவரது கதைகளில் இராமாயண, பாரதக் கதைகள் பிரசங்கங்களாக மறுவாசிப்புக் குட்படுத்தப்படுகின்றன. குறிப்பாக ஆண் மையச் சமூகத்தைச் சீண்டிப் பார்ப்பவையாகச் சீதையின் குரலும் பாஞ்சாலி யின் குரலும் பொம்மக்கா மூலம் ஒலிக்கின்றன. இக்கதை, கதைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் சொல்லுபவரின் சமூகப்பின்புலத்தில் எப்படியெல்லாம் திரிக்கப்பட்டு விரிக்கப்படுகின்றன என்பதையும் கூறுகின்றது.

பெண் தான் ஒழுக்கமானவள்தான் என்பதை நிரூபிக்க பச்சை மண்ணால் செய்யப்பட்ட பானையில் தண்ணீர் சுமந்து கோயிலை மூன்று முறை சுற்ற வேண்டும் என்னும் சடங்கை மண் என்னும் கதையில் விவரிக்கின்றார். இச்சடங்கு முறை காலங்காலமாக ஆண்கள் பெண்கள் மீது செலுத்தும் அதிகாரத்தின் அடையாளம் என்றும், சீதை அக்னி குண்டத்தில் இறங்கிய கதையின் மாற்று வடிவம் என்றும் விவாதிக்கின்றார்.

ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்த தவசி என்பவன் தவசிக் கூத்தாடும் நிலையைப் பற்றிக் கூறும்போது ‘சூத்திரனும் சத்திரியனும் இணைந்த அபூர்வக் கலவையில் மிளிர்கிறது அர்ச்சுனனின் ஆளுமை. வர்ணங்களற்ற வலிய உடல் ஒன்றையே பிரதானமாய்க் கொண்ட ஆதி அழகின் அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகளாய் மிருதங்கத்தை உடைத்தெழுகின்றன கால் அடவுகள்’ (பெருமாயி) எனக் கால வோட்டத்தில் சத்திரியன் கதையைச் சூத்திரனே நிகழ்த்த வேண்டியுள்ளது எனக் கிண்டல் கலந்த தன்மையில் வருணாசிரம முறையை உடைத்தெரிகிறார்.

ஓர் ஆண் வேற்றுச்சாதி பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தால் அவனுக்கு வருங்காலத்தில் எடுக்கப்படும் நடுகல் எடுக்க மாட்டார்கள் என்னும் வழக்கத்தை ‘தலைமுறை தலைமுறையாக நடுகல்லாக நிற்கும் அவனது ஆகிருதி அடையாளமற்று மறைந்து போவதின் கொடூரமான அச்சுறுத்தல்’ (பொம்மக்கா, மண் 120) என்கிறார்.

அழைப்பு என்னும் கதை பள்ளிப்பருவ நண்பனைப் பல வருடங்கள் கழித்துத் திருவிழாவில் தன் கணவனுடன் பார்க்கும் பாலிய கால தோழியின் செயல்பாடுகளை விவரிக்கிறது. தொப்புள் கொடி என்னும் கதை கலைக்காகவே வாழ்ந்த ஒருவனின் குடும்ப வாழ்க்கைச் சிதைவதையும் அதனால் அக்கலைத் தொடர்ச்சி அற்றுப் போவதையும் விவரிக்கின்றது. லாடம், வலி ஆகிய கதைகள் சாதாரண மக்களின் வாழ்நிலையையும் ஏழ்மையையும் சித்திரிக்கின்றன. உழைப்பைச் செலுத்தியும் அதிகார வர்க்கத்தால் வறுமைத் தீராத நிலையை இக்கதைகள் காட்டுகின்றன.

சாத்தாவு என்னும் கதை கல்குறி கட்டுதல் என்ற நம்பிகையை மையப்படுத்தியும், நீல ஊமத்தம்பூ என்னும் கதை துணி வெளுப்பவனை மையப்படுத்தியும் அமைந்துள்ளன. இக்கதைகள் முழுக்க முழுக்க குறியீட்டுத் தன்மையில் பின்நவீனத்துவக் கோட்பாட்டு அடிப்படையில் அமைந்தவை ஆகும்.

கொங்கு வட்டாரத்தில் கிராமியப் பகுதியில் வழங்கிய நம்பிக்கை, சடங்குகள் குறித்த நாட்டார் கதைகளையும், அப்பகுதி மக்களின் வாழ்வியலையும் தனது கதைக்குள் கொண்டு வந்த கௌதம சித்தார்த்தன் பல தலைமுறைகளாகக் கொங்கு வட்டாரத்தில் வழங்கி வரும் தாய முறைகளையும் ஊர்ப்பட்டம், நாட்டுப்பட்டம், சீமைப் பட்டம் முதலிய அதிகார முறைகளையும் விரிவாகப் பதிவு செய்துள்ளார்.

புதுமைப்பித்தன் போலத் தனித்துவமான ஒரு பாணியை உருவாக்க வேண்டும் என்று கூறி அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டவர் கௌதம சித்தார்த்தன். வடிவ நேர்த்தியிலும் உள்ளடக்க ரீதியிலும் கொங்கு மண் சார்ந்த நாட்டாரியல் தொன்மக் கதைகள் - சமகாலச் சமூகப் பிரச்சனைகள் - தனிமனித உணர்வுகள் ஆகியனவற்றைப் பதிவு செய்தார்.

நாட்டாரியல் சார்ந்த தொன்மக் கதையாடல்களைப் படைப்புக்குள் கொண்டு வந்து, அவற்றை வரலாற்று விரிவின் முன் நிறுத்தி, அது சார்ந்த பல அடுக்களை ஒரே புள்ளியில் ஒருங்கிணைத்து அதற்குள் ஒரு விவாதத் தன்மையை மேலெழுப்பியவர்.

இவரது கதைகள் தொன்மக் கதையாடல்களிலும் இதிகாச, புராணங்களிலிருந்தும் விரியும் வரலாற்றைக் கேள்விக்குட்படுத்துகின்றன. மேலும் அவற்றுள் தொழிற்படும் நம்பிக்கை சார்ந்த அதிகார மையத்தையும், சடங்கு சார்ந்த பெண்ணிய, சாதிய ஒடுக்கு முறைமைகளையும் சிதைக்கின்றன. எனினும் இவரது சிறுகதை எழுத்துகளின் பரவலாக்கமும் கவனப்படுத்தலும் குறைவாகவே உள்ளன.

(கட்டுரையாளர் ஆசான் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழ் இலக்கியத் துறையில் புறநானூற்று யாப்பு பற்றிய ஆய்வை செய்து முனைவர் பட்டம் பெற்றவர்)

Pin It