நவீன தமிழ்ச்சமூகத்தில் விளிம்புநிலைக் கதையாடல்களும் வட்டாரப் புனைவுகளும் அது சார்ந்த பதிவுகளும் இன்று கவனப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கவிஞராகத் தனது இலக்கியப்பயணத்தைத் தொடங்கிய குமாரசெல்வாவின் சிறுகதைகள் விளவங்கோட்டுத் தமிழையும் அங்கு வாழும் மக்களின் யதார்த்த சூழலை மொழியாகவும் பகைப்புலனாகவும் கொண்டவை. பொதுவாகப் புனிதங்களை உடைத்தெறியும் யதார்த்த நவீனப் புனைவுகள் கொண்டிருக்கும் அதிர்வலைகளை இவரது சிறுகதைகளிலும் உணரமுடிகிறது. இவரது மொழி ஆளுகையானது குறுவெட்டிகளின் மணத்தையும் மலந்தூக்கனின் பயணத்தையும் மையப் பெட்டியினுள் ஒன்றி அடங்கும் மௌனத்தோடு உணர வைத்து ஒருமுடிவற்ற பயணத்தில் வாசகனைச் சேர்க்கிறது.

ஒரு படைப்பை மாற்றி எழுதி அனுபவிக்கும் உரிமையை, ஒவ்வொரு எழுத்தாளனும் வாசகனுக்கு வழங்கவேண்டும் என்று கூறுகிற குமாரசெல்வா, தனது படைப்புகள் உருவான பின்புலத்தினைத் தானே பதிவு செய்து செல்கிறார். ஒவ்வொரு கதையினையும் எந்த சூழலில் எந்த மனப்பதிவினூடாக எழுதியிருக்கிறார் என்பதனை முன்கூட்டியே தெரிவித்துவிடுகிறார். ஆனால் வாசகனின் வாசிப்பு வெளியினைப் பொறுத்து அவை பிறிதொரு பரிணாமத்தை அடைவது தவிர்க்க இயலாதது. இச்சிறுகதைத் தொகுப்பினூடாக இவரது படைப்பு வெளியினைக் கீழ்க்கண்டவாறு பகுத்துக் கொள்ள முடியும்.

-     சுயத்தை இழந்த மனிதர்களின் வரம்பற்ற தேடுதல் வேட்கை

-     உடல் எழுத்தின் வன்மம் (பெண் என்ற சகஉயிரியினை முன்வைத்து)

-     சாதியமுரண்களும் தொன்ம மீட்டுருவாக்கமும்

-     வட்டார வழக்குகளின் ஆளுகை

படைப்பு என்பது இருப்பதை வைத்துக்கொண்டு இல்லாததைப் பிடிப்பது (கயம்:2009:12) என்று படைப்பு குறித்த தனது அனுபவத்தைப் பதிவுசெய்கிறார் குமாரசெல்வா. அந்த வகையில் நம்முடன் இருக்கின்ற நடமாடுகின்ற சகவாழ்வில் உழல்கின்ற மனிதர்களைத்தான் அவரது கதைகளில் காணமுடிகிறது. ஆனால் அவர்களின் இருப்பு ஒவ்வொரு அசாதாரண சூழல்களிலும் கேள்விக் குள்ளாகி சமநிலையினை எட்டாமலேயே கலைந்துபோவதால், யதார்த்தத்தைத் தாண்டியதொரு மனவெளியில் வாசகன் நிற்க நேர்கிறது. தனக்கு ஏற்பட்ட தீராத நோய்களால் மனிதசமூகத்தி லிருந்தே விரட்டப்பட்ட இரண்டு பாத்திரங்களை இவரது கதைகளி னூடாகச் சந்திக்கநேர்கிறது. அவ்விருவரது வேதனை மிகுந்த குரல் அவர்களைச் சுற்றிய சூழலமைவினூடாகத் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. நாகமலை பாச்சன் தனது அதீத கைப்பக்குவத் தால் மிகச்சிறந்த சமையல்காரன் என்ற அடையாளம் பெற்றவன்; நவநீதப்பாட்டா என்ற தொழுநோய் பீடித்த முதலாளியின் சகலமும் அவனாகி, தனது சுயத்தை மட்டுமன்றி ஆரோக்கியத்தையும் உடலையும் பாட்டாவின் உடல்சார் பசிக்கு பலியாக்கியதால் அதே தொழுநோய்க்கு ஆளானவன். பாட்டாவின் மரணத்தோடு பாச்சனின் இருப்பு கேள்விக்குள்ளாகி விடுகிறது. அவனது சகபாடிகள் அவன் விரும்பாத தனிமையினை அவன் மீது திணித்துவிட்டு நகர்கின்றனர். உண்டபின் வீசப்பட்ட ஐந்தாறு எச்சில் இலைகளோடு அவனுமாக அந்த மலையுச்சியின் அதிகாலைப்பொழுது விடிகிறது.

பொதுவாகச் சிறுகதை வாசிப்பு என்பது ஒரு தொடர்ச்சியான செயல்பாடு. அப்படித் தொடர்வதற்கான களனைக் கொண்டிருப்பதே சிறந்த சிறுகதை. அந்த வகையில் ‘நாகமலை’ படித்துமுடித்த பின்பும் பாச்சனோடு வாசகனையும் ஒரு தேடலுக்குட்படுத்துகிறது. குமாரசெல்வாவின் மொழி ஆளுகைக்கு கிடைத்த வெற்றி இது.

சோவியத் யூனியனின் பிளவும் எய்ட்ஸ் நோய் பரவலும் உருவாக்கிய மனத்தாக்கத்தில் இவரால் எழுதப்பட்டது ‘குறுவெட்டி’. இயக்கமே அடையாளமாகித் தன் சுயத்தை இழந்த ஒரு மனிதன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படும்பொழுது அவன் எதிர்கொள்ளும் விளைவுகள் எப்படிப்பட்டவை? அந்நோய் குறித்த புரிதலோ விழிப்புணர்வோ இல்லாத ஒரு சமூகத்தில் அவனைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை வாசகன் வலியுடன் உணரும் வகையில் இக்கதையானது அமைந்திருக்கிறது. எய்ட்ஸ் உறுதியாகிவிட்டால் இயக்கத்தில் மட்டுமன்று மனித சமூகத்திலிருந்தே ஒதுக்கித் தள்ளப்படும் நிலையில், அம்மனிதனின் ஓட்டமும் தன்னிலை மீதான தேடுதலும் மனிதாபிமானத்தையும் பொதுவுடைமை இயக்கத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது.

இந்த இருவேறு பாத்திரங்களின் துருவமுரண்பாட்டுப் பயணத் தில் வாசகன் ஒரே புள்ளியில் நிற்க நேர்கிறது. அவ்விருவரின் வரம்பற்ற தேடுதல் வேட்கையில் பங்குகொள்ள வேண்டிய நிர்ப்பந்தமும் வாசகனுக்கு ஏற்படுகிறது.

***

உடல் எழுத்துக்கள் என்பவை உளவியலோடு தொடர்புடை யவை. அவை அமுக்கப்பட்ட வேட்கைகளை உடைத்தெறிந்து வெளிப்படுத்துபவை. Òஅது உறவுகளை வென்றெடுத்த உடல் சாம்ராஜ்யம்...பண்பாடு என்பது இவற்றின்மீது எழுப்பப்படும் கல்லறைகள் அல்லது மனித இழிவுகள் ஆகிறது. அது தரும் குற்றஉணர்ச்சி இவ்வகையான எழுத்துகளில் துளியும் இல்லை. ஆபாசம் என்ற கூச்சல் இல்லை.அணிவதைவிட அல்லது புனைவதைக் காட்டிலும் பெரிய ஆபாசம் எது? வேட்டையாடும் துடிப்பில் இருக்கும் உடல்கள் மீதான உணர்வுகளுக்கும் நெருக்கங் களுக்கும் மட்டுமே இவ்வகையான எழுத்துக்கள் முக்கியத்துவம் தருகின்றனÓ. என உடல் எழுத்துக்கள் குறித்த மதிப்பீட்டினைக் கொண்டவர் குமாரசெல்வா. (மாற்றுவெளி:டிசம்,2010:26) இவரது கதைகளில் இந்த உடல்எழுத்து செயல்பட்ட விதம் குறிப்பிடத் தக்கது.

அவை பொதுவாகப் பெண் என்ற சகஉயிரி குறித்த இவருடைய மனப்பதிவினை உணர்த்துவதாக ஊடாடிச் செல்கின்றன. அம்மதிப்பீடு அவர்களின் உடல்குறித்த, அவ்வுடலின் பாலியல் வேட்கை சார்ந்ததாக அவ்வுணர்வு நிலையின் ஆழம் சார்ந்ததான எழுத்தாக இருக்கிறது. பெண்நாய், இராணிதேனீ இவைகளின் பாலுணர்ச்சிப் பண்புகளை மனித உயிரிக்கும் பொருத்தி ‘பெண்’ என்பதை ஒரு ஒட்டுமொத்த கட்டமைப்பாக வைத்து அதன் பாலியல்உணர்வு நிலைகளை தரப்படுத்தியிருக்கிறார் (‘பெண் ஜென்மங்களின் அளவுகோல்கள் என்னவென்று யாருக்கும் தெரியாது’:உயிர் மரணம்:74). இவர் சித்திரிக்கும் பெண் என்ற குறியீட்டின் பாலுணர்வுத் தன்மையானது ஒட்டுண்ணித் தன்மையில் எதிர்பாலினத்தை அணுகுவதாக உள்ளது. அதற்குப் பலியாவது, அல்லது அவ்வுணர்ச்சியில் சிக்கி மாள்கிற ஆண் என்கிற எதிர்பாலினத்தைப் பற்றிய எழுத்தும் (‘சவைத்துத் துப்பப்படும் ஆண்பிறவி’:விடாலு:168) கவனிக்கத்தக்கது. பெண்உடல் என்பது ஒரு புதைகுழி, பூலோகமே அதனுள் சென்றுவரலாம் என்பன போன்ற பதிவுகள் இவரது கதைகளில் வந்துபோகும் ஆண்களின் அதிர்ச்சிக் குரலாக உள்ளது. உடல்கள் மீதான உறவுகளின் நெருக்கத்தைப் புலப்படுத்துவது உடல் எழுத்துக்கள். ஆனால் சம்பந்தப்பட்ட உடல் மீதான அச்ச உணர்வை, நடுக்கத்தை, ஒரு கேலிக்குரிய தொனியில் பதிவு செய்யும் பொழுது அது உடல் எழுத்துக்குரிய அந்தஸ்தைப் பெறாது. மாறாக அது உடல்எழுத்தின் வன்மத்தையே வெளிப்படுத் தும்.

‘உயிர்மரணத்’தில் வரும் ரஞ்சனியாகட்டும்,’விடாலு’வில் ஆணின் பாலுணர்வு நிலையினை அதிரவைக்கும் பெண்ணாகட்டும் ஒரே தன்மையுடைய உடல் எழுத்தின் வன்மத்தினூடாகவே வாசகனுக்கு உணர்த்தப்படுகின்றனர். ஒருவிதத்தில் உயிர் மரணம் ப்ராய்டின் இருமைக் கோட்பாட்டு அடிப்படையில் இயங்குவதும் கவனத்திற்குரியது.

***

சாதிய முரண்கள் இவரது கதைகளில் முக்கிய இடத்தினை வகிக்கின்றன. அவற்றை வெளிப்படுத்தியிருக்கும் முறை புதுமை யானதாக இருக்கின்றது. திரைப்படத்தில் சில நிகழ்வுகள் சென்சார் செய்யப்பட வேண்டிய நிகழ்வுகளாக இருக்கும் பட்சத்தில் அவை கார்ட்டூன் சித்திரங்களாகத் திரையிடப்படலாம். இந்த விதிமுறைத் தளர்வினைத் தனது சிறுகதைக்குப் பொருத்துகிறார் குமாரசெல்வா. விடாலு கதையில் ஒரு கட்டத்தில் பாத்திரங்கள் யாவும் முயல்களாக வும் பூனையாகவும் நாயாகவும் மாறிவிடுகின்றன. முயலுக்கும் பூனைக்குமான விசித்திர இணைவு, அதில் நாயின் தலையீடு என பாதி கதை சென்றபின் மீண்டும் மனிதர்கள் தோன்றுகின்றனர். ஆதிக்கசாதி யின் கொடுமைகளிலிருந்தும் வஞ்சத்திலிருந்தும் தன்னையும் தான் வளர்த்த முயல்களையும் காப்பாற்றிய நாய், இறுதியில் முயல்களின் மீதான அதீதபாசத்தால் தன்னை பலிகொடுத்து விடுகிறது. இக்கதை யினை வாசிக்கும் போது புதுமைப்பித்தனின் ‘எப்போதும் முடிவிலே இன்பம்’ சிறுகதை நினைவில் நிழலாடுகிறது.

***

‘கயம்’ ஒரு தொன்ம மீட்டுருவாக்க முயற்சி. சமண சமயத்தின் செல்வாக்கினை உள்வாங்கி இவரால் எழுதப்பட்டது. வட்டார நம்பிக்கைகளுக்கும் வழக்காறுகளுக்கும் பிறகதைகளைக் காட்டிலும் அதிகம் இடமளித்த கதை. சமணப்பள்ளிகள் வைதிக செல்வாக்கி னால் கோயில்களாக மாற்றப்பட்டது வரலாறு. நாட்டார் கதையின் செல்வாக்கினால் இக்கதை எழுதப்பட்டதாகக் குமாரசெல்வா பதிவு செய்துள்ளதும் கவனத்திற்குரியது. சித்தமருத்துவத்தின் ஊடாக உயிர்களின் தொடர்ச்சி அவற்றின் வடிவ மாற்றங்கள் என இக்கதை நகர்கிறது. கயத்தினுள் செல்பவர்கள் தலையற்ற ஜடமாக ஆற்றில் வீசியெறியப்படுகின்றனர். அப்படி மாண்டுபோன ஒரு மனிதனின் இறப்பில் அவன் தாய்தந்தையர் இணைகின்றனர் என வாழ்வியல் முரண்களுக்கு ஒரு நாட்டார் மரபு சார்ந்த சூழலைக் களமாக்கி யிருக்கிறார்.

‘கிணறு’ இவரது கூற்றுப்படி வெளிப்படையான கதை. பூடக மொழிகளோ நிகழ்வுகளோ எதுவும் இன்றி நகர்வது. பெண் களுக்கான சொத்துரிமையினை வலியுறுத்துவது. ஆனால், சொத்து குறித்தப் பிரச்சனையில் தனது மகன் மூலமாக நேசமணி எத்தகு அவமானங்களைச் சந்தித்தாரோ அதே வேதனையைத் தருகின்ற ஆனால் வேறுபட்ட அவமானங்களையும் அலட்சியத்தையும் தனது மருமகனிடம் இறுதியில் அடைகிறார். இங்கு அவருக்கான ஆறுதல் அவரது பெண் மூலம் மட்டுமே கிடைக்கிறது. இடிபஸ் தந்தையின் மனோநிலையினை அவர் இறுதியில் எட்டுவதும் குறிப்பிடத்தக்கது.

உண்மையில் குமாரசெல்வாவின் கதைகளில் உள்ள சூழலமைவு இதமானது. வாழைப்பூவின் மணத்தில், கூம்பாய் மெலிந்த ஒற்றைப் பாறையிலிருந்து விழுந்த வெள்ளிநீர்ச்சாரலில் உடல் நனைக்கும் சில்லென்ற பயணம். ஆனால் அச்சூழலில் நடைபெறும் நிகழ்வுகள் ஏற்படுத்துகிற உணர்வு கனமானது. மலையுச்சியின் பனிச்சாரலை அனுபவிக்கும் நேரத்தில் தனித்துவிடப்பட்ட உயிரின் அவலக் குரலையும் கேட்கமுடிகிறது. தேனடையின் சுவையினை உணரும் தருணத்தில் தேனீயின் தாக்குதலும் ஒட்டிக்கொள்கிறது. குமார செல்வாவின் எழுத்துகளில் சில இடங்களில் முரண்பாடுகள் இருந்தாலும் அவை தற்காலச் சிறுகதைப் போக்குகளில் தனக்கெனத் தனித்ததொரு பாதையினைக் கொண்டு இயங்குவதை மறுக்க இயலாது.

(கட்டுரையாளர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையின் முனைவர் பட்ட ஆய்வாளர்.“தேவார யாப்பு மரபு” குறித்து ஆய்வு செய்து வருகிறார்.)

Pin It