உரையாடல் 3

உங்களைப்பற்றியும் உங்கள் ஓவியப் பின்னணி பற்றியும் கூறுங்கள்?

நான் சென்னை ஓவியக்கல்லூரியில் படித்தேன். ஆரம்ப காலத்தில் படித்துக்கொண்டிருக்கும் போதே பல பத்திரிகை களுக்குச் சில படங்களைப் போட்டுக்கொண்டுபோய் கொடுத் தேன் (குமுதம், விகடன்). அவங்க அதிலிருந்து ஒன்று இரண்டு படங்களைத் தேர்வு செய்துகொண்டு நாங்கள் தேவைப்படும் போது பயன்படுத்திக்கொள்கிறோம் என்பார்கள்.  அப்படித் தான் நான் படித்துக்கொண்டிருக்கும் போதே பிரபலமானேன்.  நான் முதலில் மூன்று துறைகளைத் தேர்ந்தெடுத்திருந்தேன், ஓவியம், பத்திரிகை, விளம்பரம் இம்மூன்று துறைகளில் நான் படிப்பை முடித்தவுடன் பத்திரிகையில் சேர்ந்தேன். 

படத்தை பத்திரிகையில் பார்த்தவுடன் நாம போட்ட படமா இதுன்னு நானே வியந்திருக்கேன். மேலும், நண்பர்கள் மத்தியிலும் பேரும் புகழும் வந்ததும் நான் இந்தத் துறையைத் தேர்ந் தெடுத்தேன். விளம்பரப்படங்கள் போடுவதையும், பத்திரிகைப்படங்கள் போடுவதையும் தொடர்ந்து செய்தேன். நான் எப்போதும் ஒரே நிறுவனத்தில் சம்பளத்திற்கு வேலை செய்த தில்லை. என் விருப்பப்படியே வரைந்து கொடுத்தேன். வீட்டுக்கு வந்து கதையைக் கொடுத்து அதற்கேற்ப படங்களை வரைந்து வாங்கிக் கொண்டு போவார்கள் இன்றுவரை.

அதாவது 1964-65 இல் தான் நான் வரைய ஆரம்பித்தேன்.  முதன்முதலில் கல்கி தீபாவளி மலரில் கலரில் வெளிவந்தது.  குமுதத்தில் கதைப்படங்கள் வரைந்தேன். கல்கண்டில் அட்டைப்படங்கள் வரைந்தேன். ராஜேஷ்குமார் தொடர்கதைக் கெல்லாம் நான்தான் முதலில் படம் வரைந்தேன். சுபா, இந்துமதி, அனுராதா, ரா.கி. ரங்கராஜன் குமுதம் ப்ரொப்ப ரேட்டர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை தான் என்னைக் கார்ட்டூன்ல எனக்கு ஆர்வத்தைத் தூண்டியவர். கல்கியில் முதலில் நான் கார்ட்டூன்கள் வரைந்து கொடுத்தேன். பின்னர் தான் எனக்கு கதைகளைக் கொடுத்து அதற்கு வரையச் சொன்னார்கள். காமிக்ஸ§க்கு அவர்களே கதையைக் கொடுத்து விடுவார்கள். முழு கதையையும் கொடுத்து நீங்களே பிரித்துக்கொள்ளுங்கள் என்று கொடுத்துவிடுவார்கள். அவர்களே வசனங்களைக் கொடுத்துவிட்டால் தொல்லை இல்லை. அதாவது முதலில் கட்டங்களால் பக்கத்தை பிரிக்க வேண்டும் அதோடு வசனங்களைக் கையால் எழுத வேண்டும்.       

megala_370தொடக்கத்தில் குமுதத்தில் படம் வரைவதற்கு சொன்னார் கள் நான் முதலில் படம் வரைந்துவிட்டேன்.  படம் வரைந்த பின்பு பார்த்தால் எழுதுவதற்கு இடம் இல்லாமல் போய்விட்டது.  எனவே பின்வந்த காலங்களில் முதலில் கதையை எழுதிவிடு வேன். அதற்குப் பின்தான் படம் வரைவேன். தொடக்கத்தில் சித்திரக்கதை என்றுதான் சொல்லிவந்தோம். தினத்தந்தி யிலிருந்து தான், படக்கதை என்ற சொல் வந்தது. ஆனாலும் சித்திரக்கதை என்று பயன்படுத்துவது தான் சரியான சொல்.   நான் முதலில் சித்திரங்கள் வரைந்த சித்திரக்கதை எனக்கு நினைவில் இல்லை.

இப்போது சித்திரக்கதைகள் வராததற்கு என்ன காரணம்?

சித்திரக்கதைகள் வராததற்கு இப்போது இருப்பவர்கள் படிக்க விரும்புவதில்லை என்பதுதான் காரணம்.  மேலும் இப்போது குழந்தைகளுக்கான இதழ் வருவதில்லை.  முற்காலத் தில் காலணா விலையுள்ள பத்திரிகை ஒன்று மதுரையிலிருந்து வெளிவந்ததது.  அதன் அளவும் சிறியதாக இருந்தது. இப்போது அதெல்லாம் இல்லை.

தொடர்கதைகளுக்கும் சித்திரக்கதைகளுக்கும் எவ்வாறு ஓவியம் வரை கிறீர்கள்?                                                                                                                 

தொடர்கதையைக் கொடுக்கும்போதே பாத்திரங்கள் பற்றி அவர்களே சொல்லிவிடுவார்கள்.  சூழ்நிலைகளை மட்டுமே  நான் வரைவேன். சித்திரக்கதைகளுக்கு அந்த சிக்கல் இல்லை.  வாண்டுமாமாவிற்கெல்லாம் நான் நிறைய படங்கள் வரைந்திருக்கிறேன். 

ஒருவரே கதை எழுதி படம் வரைவதற்கும் ஒருவர் கதை எழுத மற்றொருவர் படம் வரைவதற்கும் உள்ள  வேறுபாடு?

ஒருவரே கதை எழுதி படம் வரைவது தானாக ஒன்றை உருவாக்குவதாகும். வேறொருவர் கதை கொடுத்து படம் வரைந்து கேட்பது சிக்கல் இல்லாத வேலை. அதை யார் செய் வார்கள் என்றால், குழந்தைகளுக்காகச் சித்திரக்கதைகள் வெளியிடுபவர்கள் தான் அதைச் செய்வார்கள். என்னுடைய விருப்பம் என்னவோ அதன்படியே நான் படம் வரைந்து கொடுப்பேன்.

சித்திரக்கதைகளுக்கு என்ன வகை, அளவுகளில் ஒவியங்கள் வரைவீர்கள்?

கோட்டோவியங்களைத்தான் பயன்படுத்துவேன்.  படம் வரைவதற்கு எந்த அளவும் கிடையாது.  

படம் வரைவதற்கு என்ன நிறத்தைப் பயன்படுத்துவீர்கள்?

பொதுவாக Transparent நிறத்தைப் பயன்படுத்துவேன்.  அப்படி பயன்படுத்தி வரையப்பட்ட ஓவியங்களில் படங்கள் மாறாது. அதே நேரத்தில் Poster Colorஐப் பயன்படுத்தினால் அவ்வளவு சரியாக வராது. எனவே எனக்கு வசதியானது Transparent நிறம் தான். 

சித்திரக்கதைகளுக்கென்று ஏதாவது (structure) வடிவ அமைப்பு இருக்கிறதா?

அப்படி ஒன்றும் இல்லை. படங்கள் கட்டத்திற்கு உள்ளே இருப்பதை விட கட்டத்தை மீறி இருந்தால் நவீனமாக இருக்கும். மற்றபடி கட்டத்திற்குள் தான் அடக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒருவேளை படம் பெரியதாக இருந்தால் அதை அட்டைப்படம் என்றுதான் சொல்ல வேண்டும். சித்திரக்கதைக்கு ஒருபக்கத்திற்கு ஒருபடம் மட்டும் இருக்காது.

சித்திரக்கதை தமிழில் எப்போது வந்தது?

அப்படி சொல்ல முடியாது புராணப்படங்கள் எல்லாமே ஒரு வகையில் சித்திரக்கதைகளாகவே வரையப்பட்டிருக்கின்றன. எல்லா கோயில்களிலும் அதைப் பார்க்கலாம். ராமாயணம் என்றால், ராமாயணம் முழுக்க படங்களாக வரையப் பட்டிருப்பது பெரும்பாலான கோயில்களில் இருக்கின்றது. பத்திரிகையில் வந்தது பற்றிச் சொல்ல வேண்டு மானால் அந்த புராணக் கதைகளைப் புதுமைப்படுத்தி வெளியிட்டார்கள். அதற்குப் பின்பு முருகன் விநாயகர் போன்ற தெய்வங்களின் வாழ்க்கை வரலாறுகள் பக்தி நூல் வெளியிட்டவர்களால் சித்திரக்கதைகளாக வெளியிடப்பட்டன.

சித்திரக்கதைகள் எங்கிருந்து வந்தன என்று சொல்வீர்கள்? வெளிநாடுகளில் இருந்து வந்தது என்றா அல்லது இங்கேயே இருந்தது என்றா?

சித்திரக்கதைகளுக்கான வடிவம் இங்கிருந்தது.  ஆனால்  படங்களெல்லாம் அல்லது படம் வரையும் முறை அயல்நாடு களில் இருந்தே வந்தது. 

சித்திரக்கதைகளை யாரும் இலக்கியமாக ஏற்றுக்கொள்வ தில்லை.  காரணம் ஏதாவது இருக்கிறதா?

கதையே இலக்கியமா இல்லையா என்று போராட்டம் நடக்கிறது. ராஜேஷ்குமார் மர்மக் கதைகள் இலக்கியம் இல்லையா என்று போராடுகிறார். எழுத்தாளர்கள் அதை ஏற்றுக்கொள்வதில்லை. மேலும் நமக்கே தெரியும் சித்திரக்கதை இலக்கியத்தில் சேராது என்று. 

நீங்கள் ஏன் சித்திரக்கதையை இலக்கியமாக ஏற்றுக்கொள்ள வில்லை. அதற்குத் தனி காரணம் உண்டா?

இலக்கியம் என்பது நடைமுறையில் உள்ளதை எழுதிக் காட்டுவது. புதுமைப்பித்தனோ ஜெயகாந்தனோ நடைமுறையில் என்ன இருந்தது என்பதைத்தான் எழுதிக்காட்டினார்கள்.  சித்திரக்கதைகள் அப்படி அல்ல. அதில் கற்பனைகள் நிறைய இருக்கும்.  இல்லாத ஒன்றை இலக்கியத்தில் காட்டக்கூடாது.  எனவே சித்திரக்கதைகள் இலக்கியம் ஆக முடியாது. அப்படி வாதாடுகிறார்கள். ஆனால் நான் எந்த கட்சியிலும் சேர விரும்பவில்லை. அது நமக்கு தேவையற்றது. மேலும் இலக்கியமா இல்லையா என்பது எழுத்தாளர்களுக்கு இடையில் நடக்கும் வாதம், ஓவியனுக்கு அது தேவையில்லாதது.

தொடர்கதை வாசிப்பதையும் சித்திரக்கதையை வாசிப்பதையும் எவ்வாறு உணர்கிறீர்கள்?

விருப்பம் தான் முதன்மையானது. நான் உணர்வது தொடர் கதைகளில் வர்ணனைகள் நிறைய இருக்கும். சித்திரக் கதை களில் அதற்கு இடம் இல்லை. தொடர்கதைகளில் தேவையற்ற வருணனைகள் கூட இடம்பெறலாம். ஆனால் சித்திரக்கதை களில் அவ்வாறு இருக்க முடியாது. மேலும் படம் இருந்தால் தான் ஒருகதையைப் படிக்க வாசகன் விரும்புவான். ஒருகதை படம் இல்லாமல் புத்தகம் முழுமையாக இருந்தாலும் படிக்க விரும்பமாட்டார்கள். இரண்டு படங்களாவது இருந்தால்தான் வாசகரின் கவனம் கதைகளில் செல்லும். தொடர்கதை களுக்குப் படம் வரையும்போது கதையின் முடிவைப் படத்தில் காட்டக்கூடாது. அதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.  அவ்வாறு முடிவு தெரிந்தால் அதன் சுவைத்தன்மை  குறைந்து விடும்.

Pin It