உரையாடல் 4

உங்களுடைய தந்தையார் குறித்தும் நீங்கள் இத்துறைக்குள் வந்தது குறித்தும் கூறுங்கள்?

என்னுடைய தந்தையார் ஒரு ஓவியர் கல்கி பத்திரிகையில் வரைந்தவர்.(பொன்னியின் செல்வன்) சரித்திரகாலக் கதைக்கு வரைந்தார். அவருடைய தொழிலையே நானும் எடுத்துச் செய்கிறேன். நான் 1973இல் முதன்முதலில் விளம்பர நிறுவனத்தில் வரையத் தொடங்கினேன். 1974இல் பத்திரிகைகளுக்கு வரையத் தொடங்கினேன். இன்றுவரை வரைந்து கொண்டிருக் கிறேன்.

ஓவியங்களில் பல விஷயம் இருக்கு கதைக்குப் படம் போடுறது ஒன்னு, கதைப்படம் போடுறது ஒன்னு சரித்திர கால இடத்தையும் சூழலையும் எடுத்துக்கொண்டு மத்த கதாபாத்தி ரங்களை அந்த காலத்திற்கு ஏற்றார் போன்று கற்பனையில் வரைய வேண்டும்.  இதிகாசங்களையும், புராணங்களையும் வரையும் போது அதனுடைய தன்மை கெடாமல் வரைய வேண்டும். இயல்பாக ஒரு கதைக்குப் படம் வரையும் போது சூழலுக்கு ஏற்றார் போல் போட்டால் போதும். ஆனால் சித்திரக்கதைக்குப் படம் வரைவது வேறானது.

சித்திரக்கதைகள் குறித்து உங்கள் கருத்து?        

சித்திரக்கதையைப் பொருத்தளவிற்கு  ஒரு பாத்திரத்தை ஒரே கோணத்தில் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.  வெளிநாடுகளில் என்ன செய்வார்கள் என்றால் ஒருவரைப் பல கோணங்களில் படம் எடுத்துக்கொள்வார்கள். அதன் பின்பு சித்திரக் கதைகளை உருவாக்குவார்கள்.

நீங்கள் வரைந்த சித்திரக்கதைகள் பற்றிக் கூறுங்கள்?

குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, கோகுலம், ராமகிருஷ்ண விஜயம் மற்றும் பாவை போன்ற இதழ்களில் சித்திரக்கதைகளை வரைந்துள்ளேன்.  சித்திரக்கதை என்பது (comics)  மிக அற்புதமான ஒன்றாகும்.  அதன்படி வினாயகர் போன்ற கடவுளர்களின் கதைகளையும் சித்திரக்கதைகளாக வரைந்துள்ளேன்.

வெளிநாடுகளில் எடுத்துக்கொண்டால் சித்திரக்கதைக்கென்று தனி ஓவியர்கள் இருப்பார்கள். அதே நேரம் மற்றவகை ஓவியர்களைவிட சித்திரக்கதை ஓவியனுக்கு இருமடங்கு பொறுப்பு உண்டு. சித்திரக்கதைகளைப் பொருத்தளவிற்குப் புதிய உணர்வுகளை ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும்.  உதாரணத்திற்கு,  டி. கே. சி யின் மகன் இறந்ததற்காக இரங்கல் கூட்டம் நடந்தது. அதில் ஒரு கவிதை படிக்கப்பட்டது.  அதைக் கேட்ட டி.கே.சி இப்படி ஒரு கவிதை  கிடைப்பதற்கு அவர் இறந்தாலும் பரவாயில்லை என்று சொன்னார்.  ஆக அவருடைய இந்தத் தமிழ்ப்பற்றைக்கூட சித்திரக்கதையில் மிக நுட்பமாகக் கொண்டுவரமுடியும்.

ஒரு இலக்கியவாதி ஒன்றை எழுதினான் என்றால் கட்டாயம் அது குறித்து அறிந்திருக்க வேண்டும். அதன் பின்னணிகளைத் தெரிந்திருக்க வேண்டும்.  சித்திரக்கதையும் அப்படித்தான்.  காலத்தின் தேவைக்கு ஏற்ப அவை எழுதப்பட வேண்டும்.  ஒரு படம் வரைந்தால் அதன் பின்னணியையும் (Background), போக்கையும் (Style) அதன் சமகாலத் தேவையை யும் கருத்தில் கொள்ள வேண்டும்.  அப்படி வராத படம் சமகாலத் தன்மையைக் கொடுக்காது.

இப்போதும் நீங்கள் சித்திரக்கதைகளை வரைகிறீர்களா?

ஆம், தொடர்ந்து செய்துகொண்டுவருகிறேன். ஒரு வரைய றைக்கு உட்பட்டு, ஆசையின் காரணமாகச் செய்து வருகிறேன்.  பல வேலைகள் இருந்தபோதும் படம் வரைவதைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறேன்.

சித்திரக்கதைகளுக்குப் படம் வரைவதற்கும், தொடர்கதைகளுக்குப் படம் வரைவதற்கும் உள்ள வேறுபாடுகள் பற்றி ஓவியர் என்ற நிலையிலிருந்து சொல்லுங்கள்?

சித்திரக்கதைகளில் ஒரு தொடர்ச்சி கண்டிப்பாக இருக்க வேண்டும். அதில் வரக்கூடிய சூழ்நிலைகள், கதாப்பாத்திரங்கள் போன்றவற்றில் மிகக் கவனமாக இருக்கவேண்டும்.  தொடர்கதைகளில் வாரம் ஒருமுறைதான் தொடர்ச்சி தேவைப்படும். ஆனால் சித்திரக் கதைகளுக்கு அப்படியல்ல.    சித்திரகக்தைகளைப் பொருத்த அளவிற்கு எந்தக் கதாபாத்திரத்ததைக் காட்ட நினைக்கிறோமோ அதன் உருவ அமைப்பைப் பல கோணங்களில் வரைந்து வைத்துக்கொள்வது முதல் வேலை. பின் அவ்வுருவங்களைக் காட்சிக்கேற்றபடி அடையா ளப்படுத்த வேண்டும். 

ஒரு எழுத்தாளர் கதையினை எழுதிக்கொடுக்க அதற்கு ஓவியர் படம் வரைவதற்கும், ஓவியரே கதையாசிரியராகவும் இருந்து படம் வரைவதற்கும் உள்ள இடைவெளி குறித்து?

ஆசிரியரே படம் வரைந்து வெளியிடுவதே சிறப்பு.  ஏனென் றால் அக்கதையின் நிகழ்ச்சிகள், மண்மனம் போன்றவை ஆசிரியருக்குத்தான் தெரியும்.  பிரபஞ்சனின் நாவல் ஒன்றில் ஆனந்தரங்கம்பிள்ளை, காரைக்காலம்மையார். போன்றோரும் வருவர். ஆனந்தரங்கம் பிள்ளையை வரையும்போது ஆனந்த ரங்கரின் வீட்டிற்குச் சென்று ஆய்வு செய்யவேண்டி யிருந்தது. 

porcilai_370ஆசிரியரே படம் வரைந்து வெளியிடுவது சிக்கலற்றது.  மாறாக வரலாறு, இலக்கியப் பாத்திரங்கள், புராணங்கள் போன்றவை சித்திரக்கதையாகும்போது சிக்கல் என்பதைவிட கவனமாகக் கையாள வேண்டும். மேலும், சித்திரக்கதைகளுக்கு ஓவியம் வரைபவன் ஒரு கலைக்களஞ்சியமாக (encyclopedia)  இருக்க வேண்டும்.

சித்திரக்கதைகளுக்கென்று தனியாக ஏதேனும் ஓவிய முறையைக் கையாளுவீர்களா?

இதற்கென்று தனியாக எந்த ஓவிய வகையும் இல்லை. ஒரு சித்திரக்கதையில் என்ன சூழ்நிலையைக் காட்டப் போகிறோமோ அல்லது என்ன முகபாவனையை வெளியிட வேண்டுமோ அதற்குத் தகுந்தாற்போலக் கட்டங்களை அமைக்க வேண்டும். பின் தேவைக்கேற்ப அவற்றை வடிவமைக்க வேண்டும்.   

தமிழ்ச்சூழலுக்குச் சித்திரக்கதைகளின் வருகை குறித்து தங்கள் கருத்து?

சித்திரக்கதை மரபு என்பது தொடக்க காலத்திலிருந்து இந்தியாவில் இருக்கிறது. அஜந்தா, எல்லோரா போன்ற குகை ஓவியங்களில் சித்திரக்கதைக்கான கூறுகள் இருக்கின்றன.  அதை ஒரு படமாகப் பார்ப்பதைவிட பல காட்சிகளாகப் பார்க்க வேண்டும்.

முழுமையான சித்திரக்கதை வடிவம் என்று எதைச் சொல்வீர்கள்?

நமக்கு ஓவிய மரபு தொடக்க காலத்திலிருந்தே இருந்தது.  அதுபோலத் தமிழகக் கோயில்களில் வரையப்பட்டுள்ள ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களின் கதை ஓவியங்களை உண்மையான சித்திரக்கதை வடிவங்களாகக் கொள்ள முடியும். எங்கிருந்து வந்தது என்றால் அயல்நாட்டிலிருந்து தான் வந்தது. பத்திரிகை என்ற வடிவம் அவர்களிடமிருந்து தான் வந்தது. பின் இங்கு நடந்த விடுதலைப் போராட்டம் பாரதியாரைக் கருத்துப்படம் போடுமளவிற்குத் தூண்டியது.  முதலில் சித்திரக்கதைகள் நான்கு கட்டங்களாக இருந்து பின் அது எட்டுக் கட்டங்களாக வளர்ச்சி அடைந்திருக்கும்.

பொதுவாகச் சித்திரக்கதை இலக்கியம் என்று கொள்ளப்படாமல் ஏன் பொழுது போக்குக்கான ஒன்றாகக் கருதப்படுகிறது?

பொழுதுபோக்கு அம்சம் என்று சொல்ல முடியாது.  நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ், காந்திஜீ போன்ற தலைவர்களின் வாழ்க்கைகூட சித்திரக்கதைகளாக வந்திருக்கின்றன.  சித்திரக்கதை என்று சொன்னாலே அது சிறுவர்களுக்கான ஒரு வகை என்றாகிவிடுகின்றது.  குழந்தைகளுக்கு மகிழ்ச்சி ஊட்டக்கூடிய கதை வடிவம் என்றும் கொள்ளப்படுகின்றது.  மேலும் சித்திரக்கதைகள் இலக்கியம் என்று ஏற்றுக்கொள்ளப் படாமைக்கு எழுத்துக்குக் கொடுக்கின்ற முன்னுரிமை ஓவியத்திற்குத் தரப்படவில்லை. ஒரு இரண்டாம் நிலைக் கருவியாகத்தான் ஓவியங்களைப் பார்க்கிறார்கள்.  ஓவியக் கலைஞர்களை நாம் மதிப்பதில்லை.  ஆனால் இந்தக் கேள்வி மிகவும் முக்கியமான, விவாதிக்கப்பட வேண்டிய கேள்வியாகும்.

மேலும் ஓவியனை ஒரு இலக்கியவாதியாக நாம் அடையாளம் காணவேண்டும்.  ஓவியமே ஒரு இலக்கியம் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கட்டங்களுக்குள் காட்டப்படும் காட்சிகளால் வாசகனின் கற்பனையும் ரசனையும் முடங்கிவிடாதா?

உறுதியாக அப்படி ஆகாது.  ஒருவேளை வாசகரின் ரசனை மிகையாக இருந்தால் அந்தப் படம் அவனுக்குப் பிடிக்காமல் போயிருக்கும். உதாரணமாக, சினிமா படம் பார்க்கச் செல் லும் ஒருவன் தனக்குப் பிடித்திருந்தால் மட்டுமே பார்க்க முடி யும். ஒட்டுமொத்தமாக அத்திரைப்படத்தைப் புறக்கணிக்க முடியாது.

சித்திரக்கதைப் படங்கள் ஒரு வாசகனின் அறிவிற்கும், ரசனைக்கும், கற்பனைக்கும் ஏற்றபடி அமைந்திருந்தால் அவ னின் இரசனைத்திறன் சுருங்கிப் போகாது. மேலும் சித்திரக் கதைகள் ஒரு வரையறைக்குட்பட்டும் வரவேண்டியுள்ளது.  அது முரணாக இருக்கக் கூடாது. பாலியல் உணர்வைத் தூண்டக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஒரு மனிதன் வீட்டிற்குள் இருப்பதற்கும், வெளியில் வருவதற்கும் வேறுபாடுகள் இருக்கின்றன அல்லவா. அதுபோலவே  சித்திரக்கதைகளும் இருக்க வேண்டும்.

பாதிப்பாளர்கள் குழந்தைகள் பத்திரிகைகளில் சித்திரக்கதை கள் வெளியிட விரும்புகிறார்களா அல்லது வெகுசனப் பத்திரிகைகளில் வெளியிட விரும்புகிறார்களா?

இந்தியாவைப் பொருத்த அளவிற்குக் குழந்தைகள் பத்திரிகை அல்லது வெகுசனப் பத்திரிகை என்ற வேறுபாடெல்லாம் கிடை யாது.  எந்த பத்திரிகையில் வெளியிட்டால் வணிகம் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார்களோ அதையே வெளியிடத் தேர்ந்தெடுக்கிறார்கள். அயல் நாடுகளில் சித்திரக் கதைகள் வெளியிடுவதற்கென்றே நிறைய பதிப்பகங்கள் இருக்கின்றன. இந்தியாவைப் பொருத்தளவிற்குச் சித்திரக் கதைகளின் அறிமுகம் பரவலாக்கப்படாமையே இதற்கான காரணம்.

தமிழ் வாசகர்களைப் பொருத்த அளவிற்குக் குடும்பத்தை நடத்துவதற்கே பணம் பற்றாக்குறையாக இருக்கும் போது புத்தகம் வாங்கிப் படிக்கவேண்டும் என்ற எண்ணம் மிகவும் குறைவாகவே காணப்படும்.  என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். 

சித்திரக்கதைகள் எந்தமாதிரியான வாசகர்களைச் சென்றடைகிறது?

குழந்தைகளில் பல்வேறு வகையினர் இருக்கிறார்கள்.  ஒவ்வொரு வகையினரும் வெவ்வேறு கதைகளை ரசிப்பார்கள். குழந்தைகள்  சிலர் பொம்மைக்கதைகளை ரசிப்பார்கள், சிலர் அதிரடிக்கதைகளை ரசிப்பார்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை இருக்கும். 

தமிழ்ச் சூழலில் சித்திரக்கதைகள் உருவாக்கப்படாமல் போனதற்கான காரணம் என்னவாக இருக்குமென்று நீங்கள் கருதுகிறீர்கள்?

அனுமன் கதை ராமன் கதை போன்ற கதைவடிவங்கள் நம் கிராமத்து மக்களிடையே காலம் காலமாக வழங்கி வருகின்றன. ஆனால், நாம் எப்பொழுதும் அயல் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதையே பெரிதாக நினைத்து அதைப் பின்பற்றவும் செய்கிறோம். ஆக, நம்முடைய தமிழ்ச்சமூகத்திலும் கதைமரபுகளும், அதனுடைய தன்மைகளும் நிறைய இருக் கின்றன. 

சித்திரக்கதை என்பது இதுதான், இப்படித்தான் இருக்கவேண்டும் என்று ஏதேனும் வரையறை இருக்கிறதா?

கண்டிப்பாகச் சித்திரக்கதைக்கு எந்த வரையறையும் இல்லை. மேலும் நம் பழக்க வழக்கங்களுக்கு எப்படி வரையறை கொடுக்க முடியாதோ அதுபோல சித்திரக்கதைகளையும் வரையறுக்க முடியாது. ஒரு படைப்பாளி அக உலகிற்கும் புற உலகிற்கும் எதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படவேண்டும். எப்படி கண்டபடி வாழக்கூடாது என்று சொல்கிறார்களோ அதுபோல கண்டமாதிரி வரையவும் கூடாது. படம் வரைபவனுக்கு அந்தச் சமூகத்தின் மீதான உணர்வு எப்போதும் இருக்கவேண்டும்.

Pin It