உரையாடல் 2

உங்களுடைய ஓவியப் பின்னணி குறித்துக் கூறுங்கள்?

நான் சென்னை வந்து 50 ஆண்டுகள் ஆகின்றன.  நான்  குமுதம் பத்திரிகையில் இருந்தேன். மதுரையில் பி.ஏ முடித்து விட்டு சென்னைக்கு வந்தேன். சென்னையில் வேலை கிடைப் பதும் கடினமாக இருந்தது. என் அப்பா நீ நன்றாகப் படம் வரைகிறாய் என்று சொன்னது எனக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. பின் குமுதம் பத்திரிகையில் படம் வரைந்தது இன்னும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. மேலும் நான் ஒரு தன்னார்வ (free lance)  ஓவியனாக இருந்தேன்.

நான் வரைந்த சித்திரக்கதையைப் பார்த்து ரா.கி. ரங்கராஜன் என்னைப் பாராட்டினார்.  அவர் தன்னுடைய சிறுகதைக்கும் ஓவியம் வரைய இசைவு தெரிவித்தார்.  அவ்வாறு நான் வரைந்த ஓவியம் அவருக்கும் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. மேலும் அவர் என்னைப் பலருக்கும் அறிமுகப்படுத்திப் பாராட்டவும் செய்தார்.

பொதுவாக ஓவியனுக்குப் படிப்பு இருக்காது என்று எல்லோரும் நினைப்பார்கள். ஆனால் என்னுடைய பி.ஏ படிப்பு அதனைப் பொய்யாக்கியது. எனது பி.ஏ படிப்பு ஓவியன் என்ற அடிப்படையில் என்னைப் பல அலுவலர் களுக்கும் அறிமுகப்படுத்திப் புகழைக் (publicity)  கொடுத்தது.  என்னுடைய ஆங்கில அறிவானது எனது தரத்தை அளவிட மிகவும் உறுதுணையாக இருந்தது. அவர்கள் சொல்லும் முறையை என்னால் எளிதாகப் புரிந்துகொள்ளவும் முடிந்தது.

அவ்வாறு நான் முதன் முதலில் ‘நடுவானத்தில்’ என்ற சித்திரக்கதைக்காகப் படம் வரைந்தேன். அந்தப் படம் மேற்கத்திய உலகில் புகழ் பெற்ற ரிப் கிர்பியை ஒத்திருந்ததாக  எஸ்.ஏ.பி. அண்ணாமலை என்னைப் பாராட்டினார். நான் நடுவானத் தில் என்ற கதைக்கு வரைந்ததை அடுத்து பல கதைகளுக்கு படம் வரைய வாய்ப்பு கிடைத்தது.  இதற்கு குமுதம் உள்ளிட்ட பல இதழ்களைக் குறிப்பிட முடியும்.  பின் சித்திரக்கதைகள் தொடர்ந்து இருபது வெளியீடுகளாக வெளிவரவும் செய்தன.

நான் வரையக்கூடிய படங்கள் எப்படி இருக்கும் என்றால் ஒரு பக்கத்தில் 5 முதல் 8 படங்கள் இருக்கும்.  படங்களின் அளவு ஒரே மாதிரியாக இருக்காது.  நடுப்பகுதியில் உள்ள படம் எல்லா படங்களின் மீதும் நிற்பதாக இருக்கும். ஒரு கதையில் வரும் இறுதிப் பாத்திரம் மற்றவற்றை விடப் பெரியதாக இருக்கும். இதனால் படிப்பவர்களுக்குக் குறிப்பாக மக்களுக்கு எளிமையாகக் கதையின் பொருள் சென்று சேரும்.

நான் 1958லிருந்தே குமுதத்தில் படம் வரையத் தொடங்கி விட்டேன். 60தில் முதல் படம் வரைந்தேன்.  அப்போதெல் லாம் படம் வரைவதற்கு மையைத் தொட்டுக்கொண்டுதான் வரைய வேண்டும். அப்போதெல்லாம் மூன்று பக்கச் சித்திரக் கதை ஒரு வாரத்திற்குள் தரமுடியுமா என்று கேட்பார்கள் ஆனால் நான் மூன்றே நாட்களில் கொடுத்துவிடுவேன்.

appu_250சித்திரக்கதையைப் பொருத்த அளவிற்குப் படைப்பாளி யின் கருத்துக்குத்தக்க படம் வரைந்தால்தான் இருவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். அதோடு ஊக்கப்படுத்துவதாகவும் அமையும்.

சித்திரக்கதை வடிவம் குறித்து உஙகள் கருத்து?

ஒரு சிறுகதை என்றால் ஒரு விளக்கப்படம் (illustration)  இருக்கும்.  ஆனால் சித்திரக்கதை அப்படி அல்ல.  சான்றாக, கல்லூரிக்குப் போய் வந்த ஒரு பெண் பேச முடியாமல் இருக்கிறாள். அப்பா எல்லாம் இவளால்தான் வந்தது என்று நினைக்கிறார். அம்மா பெண்ணுக்காகப் பரிந்து பேசுகிறாள் என்று வைத்துக்கொள்வோம்.  இதனை ஒரே கட்டத்துக்குள் மூன்று படங்களாக வரைய வேண்டும். பெரியதாக வரைந்தால் பரவாயில்லை. ஆனால் அளவு சிறியதாக இருக்கவேண்டும்.  படங்கள் நம்பகத்தன்மை (stability) வாய்ந்ததாகவும், தெளிவாக வும் (expression) இருக்கவேண்டும். 

சித்திரக்கதையைப் பொருத்த அளவிற்குக் கதைமாந்தர் களின் வெளிப்பாட்டு உணர்ச்சியைத் (expression) தொய்வடையாமல் பார்த்துக்கொள்வது கட்டாயமாகும்.  ஒரு காதலன் காதலி பேசிக்கொள்வதை வேடிக்கையாகக் காட்ட வேண்டு மென்றால் ஒரு வளைந்த மரத்தில் காதலன் ஏறி உட்கார்ந் திருப்பதாகவும் மரத்தின் கீழே காதலி நிற்பதாகவும் படம் வரைய வேண்டும்.  அப்போதுதான் அது வேடிக்கை என்று தெரியும்.  அதுவே இயற்கையாகவும் இருக்கும்.  அப்படி வரைந்தபோதுதான் எனக்கு நல்ல பேரும் கிடைத்தது. 

சித்திரக்கதைக்கென்று ஏதாவது வரையறை உண்டா?

சித்திரக்கதைக்கென்று தனியாக வரையறை இல்லை.  ஆனால், அக்கதையில் செயல்பாடுகள் (actions) இருக்கவேண்டும்.  இப்போ ஒருத்தி விதவை ஆயிட்டா அவள ஒருத்தன் காதலிக்கிறான். அவன நாலுபேர் திட்டறாங்க என்று ஒரு கதை இருந்தால், இது சித்திரக்கதைக்குத் தகுதி இல்லாதது.  அதே நேரத்தில் ஒருத்தன் குழந்தையைக் கடத்திட்டான்.  இப்படி ஒரு கதை இருக்குன்னா அது சித்திரக்கதைக்குச் சரியானது.  இதே மாதிரி ஒருத்தன் மோட்டர் சைக்கிள்ல சுத்துறான். அவன் போகிற இடத்துல எல்லாம் சவால் இருக்கு இது சித்திரக்கதைக்குச் சரியானது. காதல் கதைகள் சித்திரக் கதைக்கு மிகவும் சரியான வடிவம். குறிப்பா செயல்பாடுகள் சித்திரக்கதையின் முக்கியமான அம்சம்.

சித்திரக்கதை என்றால் கதைத் தொடர்ச்சி இருக்க வேண்டும். இப்போ ஆரம்பித்த இடத்திலேயே முடிந்துவிட்டது என்றால் அது சித்திரக்கதை அல்ல.  மாறாக, “இப்போ bye சொல்லிட்டு போனவன் ஒரு உணவகத்தில் உக்காந்துக்கிட்டி ருக்கான்.  ஆனா  bye சொன்ன பொண்ணு இன்னொருத்தன் கூட அங்க வரா. உடனே அவன் இப்போ தான  bye சொன்னா நம்மை யாருன்னு தெரியாத மாதிரி பாத்து சிரிச்சிட்டு போறாளே”. இப்படி இருந்தா இத சித்திரக்கதை என்று சொல்லலாம்.  சித்திர அளவில்  பார்த்தாலும் இப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். சித்திரக்கதை என்பது ஒரு நாடகம் போன்றது. 

சித்திரக்கதைகள் உருவாக்க முன்முயற்சிகள் குறித்துக் கூறுங்கள்?

சித்திரக்கதை உருவாக்கம் என்பது நானே முடிவு செய்வதுதான். என் வசதிக்கு ஏற்றபடி நான் படங்களை உருவாக்கிக்கொள்வேன். படங்கள் வரைவதற்கு முன்பு பென்சிலால் படம் வரைந்து சோதனை செய்வேன். அதன் பின்னரே படம் வரையத் தொடங்கி சித்திரக்கதையை சித்திரம் நிறைந்ததாக மாற்றுவேன்.  சித்திரங்கள்  வரைவதற்கு அனுபவம் மிகவும் தேவையான ஒன்றாகிறது. 

அயல்நாடுகளில்  இந்தச் சித்திரக்கதைக்கான பணியை ஒரு குழுவாகச் செய்கின்றனர். ஆனால் இங்கு நீங்கள் ஒருவரே செய்கிறீர்கள் அது பற்றி?

இந்தப் பணி என் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறது.  மேலும் நான் என்ன செய்கிறேன் என்று எனக்குத்தெரியும்.

தமிழகத்துக்குள் யார் சித்திரக்கதையைக் கொண்டுவந்தார்கள். ஏன் அந்த மரபைக் கொண்டுவரவேண்டும். அதற்கான முயற்சி எடுத்தவர்களைக் பற்றிக் கூறுங்கள்?

மரபுன்னு கேக்குறிங்க. மரபு அப்படிங்கிற சொல்ல tradition, culture  என்ற ஆங்கிலச் சொல்லுக்குத்தான் பயன்படுத்தனுமே தவிர, இங்க பயன்படுத்தக்கூடாது.  சித்திரக்கதை என்பது ஒரு வகையான விளக்கப்படம்தான். 

இந்தியாவைப் பொருத்த அளவுக்கு 16ஆம் நூற்றாண்டுல  ஆங்கில சாகசக்கதைகள் இருக்கு. அதுபோல் தமிழ்ச் சித்திரக் கதையின் காலம் என்றால் 1900 என்று சொல்லமுடியும். கன்னிமாரா நூலகத்தில் 1916 அல்லது 1920ல் வந்த விளக்கப் பட இதழ் இருக்கு. அத வச்சித்தான் தமிழ்ச் சித்திரக்கதை யினுடைய காலத்தைச் சொல்லமுடியும்.

 தொடக்க காலத்தில் ‘சாம்பராணி’ன்னு ஒரு கதைக்குப் படம் போட்டிருக்கேன்.  பொதுவா அறிவுத்திறன் குறைவா இருக்கிறவங்களைத்தான் சாம்பிராணினு சொல்லுவாங்க. அந்தப் பையன் எல்லா சேட்டைகளும் பண்ணுவான். ‘பயங்கர பாமா’ என்று ஒரு கதை சுஜாதாவினுடையது. அதுக்காகப் படம் போட்டிருக்கேன். அதாவது தொடக்ககால சித்திரக்கதைகள் எல்லாம் ஒரு கதாப்பாத்திரத்தை மையமாக வைத்தே வந்தன.

பண்டைய தமிழ்மரபில் சித்திரக்கவிகள் இருக்கின்றன.  ஆழ்வார்கள், நாயன்மார் கதைகளைக் கோவில் சுவர்களில் ஓவியமாக வரைகிற மரபும் இருக்கின்றன. இப்படி இருக்க சித்திரக்கதை வடிவத்தினைத் தமிழ் மரபிலிருந்து பார்ப்பதா அல்லது மேற்கத்திய மரபிலிருந்து பார்ப்பதா?

தமிழுக்குச் சித்திரக்கதைகள் கண்டிப்பாக மேற்கத்திய இதழ்களில் இருந்துதான் வந்தது.  சித்திரக்கதைகள் குறித்த உணர்வு (sense)  உலகெங்கிலும் இருந்திருக்கிறது என்பதுதான் உண்மை.

நீங்கள் எந்தப் படம் வரைவதைக் கடினம் என்று நினைக்கிறீர்கள்?

சித்திரக்கதை வரைவதுதான் கடினம். மூன்று வாரம் வெளிவந்த சித்திரக்கதையை நான்காவது வாரம் வரைய  வேண்டுமென்றால் கதையைக் கொடுக்கும்போது முந்தைய கதைகளுக்கு வரைந்த படங்களின் நகல்களையும் அனுப்பி வைக்க வேண்டும். சான்றாக, காதலிக்கும் இரண்டு பெண்களை அறிமுகப்படுத்த வேண்டுமென்றால் எளிமையாக வாசகர் அடையாளம் கண்டுகொள்ள ஒரு பெண்ணுக்கு மச்சம் இருப்பதாகக் காட்டவேண்டும்.

தொடர் சித்திரக்கதையில் பாத்திரங்களை அடையாளப் படுத்த வேண்டுமானால் ஒரு பெண் கருப்பு துப்பட்டா அணிந்திருக்கிறாள் என்றால், அடுத்து வருகிற தொடர்களில் கருப்புத் துப்பட்டாவைக் கட்டாயம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதுபோல ஜெயலலிதாவை மற்றவரிட மிருந்து வேறுபடுத்திக் காட்ட வேண்டுமானால் அவருடைய முகத்தில் இருக்கும் வேறுபட்ட ஒன்றைக் கண்டறிய வேண்டும்.  அவருக்குச் சிறு வயதிலேயே கழுத்து சிறியதாக இருக்கும்.  இது அவர் குறித்த அடையாளம்.  ஜெயலலிதாவே அவருடைய படங்களை எங்கள் வீட்டிற்கு அனுப்பிய காலங்களும் உண்டு என்று சொன்னால் இப்போது மிகையாக இருக்கும்.

சித்திரக்கதைகளில் மிகப்பெரிய கடினம் என்னவென்றால் ஒரு பாத்திரத்தைப் பல்வேறு நிலைகளில் வரைவதுதான்.

சித்திரக்கதைக்கு நீங்கள் எந்தமாதிரியான ஓவிய முறையைக் கையாளுகிறீர்கள்?

சித்திரக்கதைகளுக்கு நான் கோட்டோவியம், ஒளி மற்றும் நிழல்பட ஓவியங்களையும் (light and shade)  பயன்படுத்துவேன். ஆனாலும் என்ன வரையவேண்டும் என்பதை நானும் ஆசிரியரும் முன்கூட்டியே தீர்மானித்துவிடுவோம்.  பெரும் பாலும் Animation படுத்திவிடுவோம். மேலும் எந்த ஓவிய முறைகளையும் கலப்பதில்லை. முதலில் எந்த ஓவிய முறையைத் தேர்ந்தெடுத்தோமோ அதை அவ்வாறே பயன்படுத்திவிடுவோம்.  

மொத்தம் எத்தனை சித்திரக்கதைகளுக்கு ஓவியம் வரைந்துள்ளீர்கள்?

இதுவரைக்கும் 800 சித்திரக்கதைகள் வரைந்துள்ளேன்.  இது குறைவு.  மிகையாக இருக்கக்கூடாது என்பதற்காகவே இந்த 800-ஐக் குறிப்பிடுகிறேன்.

நீங்கள் வரைந்ததை ஆவணப்படுத்தவில்லையா?

அப்படி நான் ஏதும் செய்யவில்லை. பொதுவாக நான் குப்பை சேரவிடுவதில்லை. இப்போது இருக்கின்ற இந்தக் குப்பைகளை அகற்றவே விரும்புகிறேன். ஆனால் என் இதழ்களை எல்லாம் ஒரு மூட்டையாகக் கட்டி வீட்டுப் பரணில் போட்டு வைத்தி ருக்கிறேன்.

தொடர்கதையில் ஓவியம் வரைவதற்கும், சித்திரக்கதையில் ஓவியம் வரைவதற்கும் என்ன வேறுபாடு. ஒரு ஓவியன் என்றமுறையில் சொல்லுங்கள்?

அதாவது தொடர்கதைக்கு ஓவியம் வரைவதில் உள்ள சிக்கல் என்னவென்றால் அதில் வரும் பாத்திரங்களைச் சரியாக நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். பாத்திரங்களின் வரைவு மிகவும் நேர்த்தியாக இருக்கவேண்டும். அதைப் பராமரிக்கவும் வேண்டும். அதுபோல உடையமைப்பு முறை யையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.  எழுத்தாளர் நேரடியாகக் கதைக்குச் சென்றுவிடுவார். நாம்தான் உடை அமைப்பு முறையை நினைவு வைத்திருக்கவேண்டும்.  ஆனால் சித்திரக்கதைக்கு வரைவது மிகவும் சிக்கலானது.

ஒற்றுமை என்பது இரண்டு கதைகளுக்கும் ஒரே மாதிரி யாகக் கவனம் செலுத்துவதில்தான் இருக்கிறது. தொடர் கதையைப் பொருத்த அளவிற்குப் பெரிய படமாக இருக்கும்; வரைவது எளிமை.  சித்திரக்கதையைப் பொருத்த அளவிற்கு சிறிய கட்டங்களில் வரைய வேண்டும்.  எனவே அதில் கவனமாக இருக்கவேண்டியுள்ளது.

தொடர்கதையில் ஜன்னலின் வழியாக ஒருவன் எதிரியின் தலைமேல்  தாவுகிறான் என்பதைப் படம் வரைவது எளிது.  ஆனால் சித்திரக்கதையில் அதனைக் கொண்டுவருதல் இயலாது. காரணம் ஒரே கட்டத்திற்குள் மேற்கண்ட காட்சியைக் காட்டவேண்டும்.  அது சிரமமான ஒன்றாகும்.

ஒருவரே கதையையும் படத்தையும் வரைவதற்கும், ஒரு எழுத்தாளரினுடைய கதைக்கு வேறொருவர் படம் வரைவதற்குமான வேறுபாடு?

நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. நானே சில கதைகளை எழுதிப் படம் வரைந்துள்ளேன்.  சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் வெளிவந்த கதைகளுக்கு நானே படம் வரைந்தேன்.  அக்கதையை நானே எழுதினேன்.

அந்தக் கதைகளின் பெயர் நினைவிருக்கிறதா?

மலேசியாவில் வெளியான ஒரு இதழில் சாம்நத்தி என்று ஒரு சித்திரக்கதையை எழுதி ஓவியம் வரைந்திருக்கிறேன்.  சாம் நத்தி என்பது வேறொன்றுமில்லை, சாமிநாதன் என்பதன் சுருங்கிய வடிவமாகும். அந்த சாம் நத்திக் கதையை எழுதும் போதே சித்திரக்கதையை நினைத்துக் கொண்டே  வேலை செய்வேன்.  சில சமயங்களில் சில காட்சிகளைச் சூழ்நிலை கருதி நானே சேர்ப்பதுண்டு.  கதையில் வாசலிலிருந்து அவளது சேலையைப் பிடித்து இழுத்தான் என்றிருந் தால் அதனை சன்னலிலிருந்து இழுத்தான் என்று மாற்றிக்கொள்வேன். ஏனெனில் சன்னலி லிருந்து சேலையைப் பிடித்து இழுக்கும் போது ரோஜாப்பூக்கள் அவள்மேல் விழுந்தன என்று சொல்லமுடியும்.  இது அவளுக்கு குறியீடாகவும் தெரிந்தது என்று சொல்லமுடியும். ஏனெனில் சன்னலுக்கருகில் ரோஜாப்பூ வளர்வது இயல்பு.  சிலர் என்னிடம் கேட்பார்கள், என் கதையோடு இரண்டு வரிகளைச் சேர்த்துவிட்டீர்களே என்று. 

சித்திரக்கதைகளில் குழந்தைகள் படிப்பதற்கென்றும் வளர் இளம்பரு வத்தினர் படிப்பதற்கென்றும் கதைகள் உள்ளனவா? அதற்கேற்றவாறு நீங்கள் உங்கள் ஓவியங்களில் வேறுபாடுக ளைக் காட்டுவீர்களா?

அப்படிப் பார்க்க முடியாது. அப்படிப் பார்த்தாலும் தவ றில்லை.  தொடர்கதைகளைப் பொருத்தளவிற்குப் பாலியல் கதைகள் வந்தாலும் படம் வரைவதுண்டு. ஆனால் சித்திரக் கதைகளில் அவ்வாறு பாலியல் தொடர்பான படங்கள் வரயியலாது. ஏனென்றால் சித்திரக்கதை களே பாலியல் உணர்வைத் தூண்டுவதற்காக எழுதப்படுகின்றன என்ற பெயர் வந்துவிடும். மேலும் இந்திய மரபிற்கு அது ஒவ்வாது.  மேலை நாடுகளில் பாலியல் கதைகளுக்கென்றே சித்திரக்கதைகள் எழுதப்படுவதுண்டு.  அது அவர்களுடைய பண்பாடு.

சித்திரக்கதைகளுக்குப் படம் வரைய நீங்கள் கையாளும் உத்தி முறைகள்?

ஒரு அலுவலகத்தில் ஒரு காட்சி நிகழ்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதற்குப் பெரிய கட்டம் போட்டுக் கொள்வோம். அக்கட்டத்தினுள் அலுவலகச் சூழலைக் காட்டிவிட வேண்டும். பெரிய அறை, அலுவலகத்தில் எரியக் கூடிய விளக்கு போன்றவற்றைக் காட்ட வேண்டும்.  அதே காட்சியில் வாசலுக்குள் நுழைந்தான் நண்பன் சேகர் என்று ஒரு காட்சி இருந்தால் இன்னொரு படத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்தப் படத்தில் ஒரு வாசல் போட்டால் மட்டுமே போதுமானது. ஏனென்றால் நாம் முன்னரே குறிப் பிட்டிருக்கிறோம்.  அவன் அலுவலக வாயிலில் நுழைந்தான் என்று.

moonkamics_370இது போன்ற சித்திரங்கள் ஒரு உத்தி முறையாகும்.  மீண்டும் இன்னொரு அலுவலகத்தை வரைய வேண்டிய தேவை இல்லை.  இதில் இன்னொன்று ஒரு பெண் பார்ப்பதற்குக் கவர்ச்சி கரமாக இருக்கிறாள் என்று வைத்துக்கொண்டால் அக்கதையின் மையப் பாத்திரம் (நாயகி) அவளாக இருந்தால் எல்லா நேரங்களிலும் கெட்டவள் என்று காட்டவேண்டிய தேவை இல்லை.  கவர்ச்சிகரமாக அவள் இருந்தாலும் நமது உத்திமுறையில் அப்பெண்ணை நல்லவளாகக் காட்டமுடியும்.

அதே போல சித்திரக்கதைகளுக்குள்ள மற்றொரு உத்தி என்னவென்றால், கதை படிக்கும் வாசகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவதாக நாகரிகமான ஒரு பெண்ணைக் காட்டினா லும் மரபார்ந்த சில கூறுகளையும் சேர்த்து அப்பெண் படத்தை வரைந்தால் வாசகர்களின் ஆர்வம் இன்னும் உயரும்.

சித்திரக்கதைகளில் மூன்று பேர் ஒருவனை அடிக்கின்றார்கள் என்றால் அடிப்பது வரை ஒரு காட்சியைக் கொடுத்து அவர்களுக்குள் நடக்கும் சண்டையை இருளில் வரும் காட்சிகள் போல அதாவது நிழல் உருவங்களாகவும் வரையலாம்.  இதனால் நம் வேலை மிச்சமாவதை விட பக்கமும் அழகாக இருக்கும்.

காலத்தை எவ்வாறு காட்சிக்குள் கொண்டுவருவீர்கள்?

இரவுக்காட்சிகள் என்றாலே நிழல் உருவங்கள் தான்.  அதற்கு அடிப்படையாகத் தெரியவேண்டியது ஒளி-நிழல் தொடர்பான செய்திகள்.  இரவுக்காட்சிகளுக்கான தாக்கத்தை (effect)  சித்திரக்கதைகளில் கண்டிப்பாகக் காட்டினால் தான் அப்படத்தின் தன்மை (seriousness)  தெரியும்.

சித்திரக்கதைகளில் இன்னும் சில உத்திகள் இருக்கின்றன.  சான்றாகக் கதாநாயகி, அன்றைக்கு அவளின் தங்கை செருப்பை மாட்டிக்கொள்கிறாள் என்று வைத்துக்கொள் வோம்.  பேருந்தில் அவளைச் சந்திக்கும் காதலன் அவளின் காலை மட்டுமே பார்க்கிறான். செருப்பு அவளுடையது அல்ல என்பது தெரிகிறது. இந்த நேரத்தில் காதலனின் நினைப்பைக் குறிப்பதற்கு, சிறிய வட்டத்துக்குள் அவள் காலை, படம் வரைதல் வேண்டும்.

சித்திரக்கதைகளில் எழுத்து வடிவத்திற்கு இருக்கும் இடம் என்ன?

பாத்திரங்கள் பேசுவது ஒருவகையான எழுத்துமுறையிலும், கதைச் சூழலை விளக்கும் எழுத்துக்கள் சாய்வான வடிவத்தி லும் இருக்கும்.  இதுகூட  ஒருவகையில் கதைக்கு உதவியாக இருக்கும்.

சித்திரக்கதைகளுக்கு அச்சு எழுத்துக்களைப் பயன்படுத்துவது சரியா?

அச்சுவடிவத்தில் எழுதுவது  அவ்வளவு சரியாக இருக்காது.   கையால் எழுதுவதே ஒரு தனி நடையைத் தரும்.  எனவே அச்சை விட கையால் எழுதுவதே நல்லது.

தமிழ்ச் சித்திரக்கதைகளில் நிறங்களை நீங்கள் எவ்வாறு பயன் படுத்துகிறீர்கள்?

என்னைப் பொருத்த அளவுக்குக் குறைவான அளவு நிறங்களைத்தான் (minimum colors)  பயன்படுத்துவேன்.  காரணம், படத்தில் கால் சட்டை ஒன்று இருக்கிறது.  அவன் நடந்து வருவதாக இருந்தால், அச்சாக்கம் செய்யும்போது கால் தனியாகவும் நிறம் தனியாகவும் இருக்கும். எனவே, நிறங் களைப் பயன்படுத்தும்போது மிகவும் எளிமைப்படுத்திக் கொள்வேன். 

நிறங்களை ஏற்படுத்துவதில் உள்ள சிக்கல் என்னவென்றால் அச்சாக்க செயல்முறைகளுக்கும் (printing process)  தலை வணங்கித்தான் செல்லவேண்டி இருக்கிறது. நான் கோட்டோ வியங்களுக்கு இந்தியன் மையையும், வண்ணங்களுக்கு Transparent Colors ஐயும் பயன் படுத்துகிறேன். மேலும் நிற அமைப்பிலேயே சரிசெய்துகொள்ள வேண்டும். அப்படி இல்லையெனில் அச்சாக்கமும் தவறாகிவிடும்.  நாம் வைத்த நிறம் வராமல் வேறொன்றுதான் வரும்.   நான் பொதுவாக பச்சை, ஆரஞ்சு, சிவப்பு, சாக்லெட், இலைப்பச்சை நிறங்களைப் பயன்படுத்துவேன்.

பத்திரிகையாசிரியர்கள் சித்திரக்கதைகளை வெகுசனப் பத்திரிகை களில் வெளியிட விரும்புகிறார்களா? அல்லது சிறுவர் பத்திரிகைக ளில் வெளியிட விரும்புகிறார்களா?

பொதுவாகப் பதிப்பாசிரியர்கள் கதைகளுக்கான வாசகர் வட்டத்தை நன்றாகத் தெரிந்து வைத்திருப்பார்கள்.  சான்றாக நாவல் படிப்பதிலேயே பைத்தியமாக இருப்பவர்கள் சித்திரக் கதைகளை மதிக்கமாட்டார்கள். அதனால், பத்திரிகை ஆசிரியர்களுக்குத் தெரியும்.  என்னைப் பொருத்த அளவிற்கு வளர் இளம் பருவத்திற்கான பகுதியில்தான் நிறைய படம் வரைந்திருக்கிறேன். 

ஒரு சிறுகதையை வாசிப்பதற்கும் சித்திரக்கதையை வாசிப்பதற்கும் ஒரு வாசகராக இருந்து என்ன வேறுபாட்டைச் சொல்லுவீர்கள்?

ஒரு சிறுகதையாக இருந்து அது திரைப்படமாக மாறும்போது காட்சிகள் எவ்வளவு நேர்த்தியாக இருக்குமோ அது போல் சிறுகதைக்கும் சித்திரக்கதைக்கும் உள்ள வேறுபாடு இருக்கணும்.  திரைப்படங்கள் போல் காட்சிகளைச் சரியாகக் கொடுக்க முடியாவிட்டாலும் அதைப் படிக்கும் தன்மையை வாசகர்களுக்கு ஏற்படுத்தணும்.

சித்திரக்கதைக்கென்று தனி மொழியும் இருக்கிறது. அது தமிழாக இருந்தாலும் ஆங்கிலமாக இருந்தாலும் பொருந்தும்.  உதாரணமாக, காவ்யா செருப்பு மாதிரி இருக்கு.  இது காவ்யா செருப்பு என்றாலே போதும் ஆனால் காவ்யாவின் செருப்பை இவள் அணிந்திருக்கிறாள் எனவே இவள் காவ்யா தான் என்று எழுத முடியாது. எனவே ஆங்கிலத்திலும் சித்திரக்கதைக் கென்று ஒரு தனி மொழி உண்டு. 

சிறுகதைகளை இலக்கியமாக ஏற்றுக்கொள்ளும்போது சித்திரக்கதைகளை ஏன் இலக்கியமாக ஏற்றுக்கொள்ளக்கூடாது?

சிறுகதைகள் வேற, சித்திரக்கதைகள் வேற, சித்திரக்கதைகள் சிறுவர்கள் பயன்படுத்துவதற்காகக் கொடுக்கலாம் அல்லது அடுத்த தலைமுறையினருக்கு சேகரித்துக் கொடுக்க லாம்.  ஆனா அத இலக்கியம் என்று சொல்ல முடியாது. இது பொழுது போக்குக்கானதாதான் எல்லோரும் பார்கிறார்கள்.  அதனால் தமிழில் இருக்கிற ஒரு ஆபத்து என்னவென்றால் சேகரித்து வைக்கிற பழக்கம் இல்லை. இப்போ நூலகத்துக்குச் சென்று நடுவானத்தில் என்கிற சித்திரக்கதை குமுதத்தில் எப்போது வந்தது என்று கேட்டால், குமுதம் நடுவானம் எல்லாம் இருக் கட்டும் முதலில் தேதியச் சொல்லுங்க என்று கேட்பார்கள். அதுபோல ஊழி யர்களும் அக்கறையோடு பணியாற்றுபவர் களாக இல்லை. மேலை நாடுகளில் எந்த ஒன்றையும் இயல்பாக உடைமை யாகப் பெறமுடியும். ஆனால் நம் நாட்டில் அப்படி யில்லை. 

சித்திரக்கதைகளுக்கு ஏன் அங்கிகாரம் கிடைக்கவில்லை?

அங்கிகாரம் கிடைக்கிறது அவ்வளவு லேசான செயல் இல்லை. ஏனென்றால் அதற்கான வாசகர்களோட எண்ணிக்கை மிகவும் குறைவு. எழுத்தாளருக்குத் தெரியும் என்னோட கதையும் உங்களோட படமும் சேர்ந்துதான் நல்லா வந்தது என்பார்கள். ஆனா பொதுவா யாரும் சித்திரக்கதைகளை அங்கிகரிக்கிறதில்லை. நான் ஏன் சித்திரக் கதைக்குப் படம் வரையிரேன்னா அது கதையோட நிக்கிறதில்ல.  மாறாக அந்த கதையைப் படிக்க வைக்கணும் அப்புறம் வாசகருக்கு இன்னும் படிக்கணும் என்ற ஆர்வத்தைத் தூண்டனும் என்பதற்காகத்தான். படம் இல்லாம கதை வந்தால், அந்தக் கதை எத்தன பக்கம் எப்போ முடியும் என்று கேட்பார்கள்.  படம் வந்தால் மட்டும்தான் அந்தக் கதையோட அடுத்த கட்ட நகர்வு இருக்கும். 

இப்போதும் சித்திரக்கதைகளுக்குப் படம் வரைகிறீர்களா?

இப்போது மேல்மருவத்தூரிலிருந்து வெளியாகும் ஓம்சக்தி இதழில் பங்காரு அடிகளார் பற்றியத் தொடர்கதைக்குப் படம் வரைந்துவருகிறேன். இது தற்போதைய நிலை.

Pin It