உரையாடல் 5

உங்களைப் பற்றிய அறிமுகத்தையும் ஓவியத்துறைக்குள் நீங்கள் நுழைந்தது குறித்தும் கூறுங்கள்?

என்னோட  பெயர் திருநாவுக்கரசு, நான் பெரம்பூரில் உள்ள அரசுப் பள்ளியில் படிச்சேன். எனக்கு குரு என்று யாரும் கிடையாது. வழிகாட்டுதலும் யாரும் கிடையாது.  எங்கள் வீட்டில் யாருமே ஓவியர்கள் கிடையாது. எங்க வீட்டில் யாருக்கும் படம் போடவும் தெரியாது. மொதமொதல்ல நான் இந்தத் துறைக்கு வரும்போது எனக்குன்னு ஒரு பெருமை.  அப்புறம் எங்க வீட்டுல நான் படிச்சிக்கிட்டிருக்கும் போதே படங்கள் போட்டு காசு சம்பாதிச்சதப் பாத்து இதுக்குக்கூட காசெல்லாம் குடுப்பாங்களான்னு கேட்டாங்க.  நான் டிகிரி படிச்சிக்கிட்டிருக்கும்போதே டிஸ்கண்டியு பண்ணிட்டேன்.  அதுகூட எங்க வீட்டுக்கு ரொம்ப நாள் கழிச்சித்தான் தெரியும்.  ஆனா அதுக்கப்புறம் அவங்களே பேச ஆரம்பிச்சிட்டாங்க. 

இவன் படிச்சி வேலைக்கிப்போய் சம்பாதிக்கிறத இப்பவே செய்யுறான்னு. படிச்சி இருந்தாகூட இவ்வளவு சீக்கிரம் வேலைக்குப் போயிருக்க மாட்டான்னு. ஏன்னா நான் 17  வயசுல போட ஆரம்பிச்சேன். ‘மயன்’னு ஒரு பத்திரிகையில போட்டேன். அப்போதான் நான் முடிவு பண்ணேன்.  நமக்கான பாதை இதுதான். இத நாம கெட்டியா புடிச்சிக்க ணும்னு.  இனிமே நாம  படம்தான் போடணும்னு.  அப்போ இந்த ஃபீல்டுல எத்தனபேர் இருக்காங்கன்னு கவனிச்சேன். ஜெயராஜ், ராமு, மணியம் செல்வன் இவங்களெல்லாம் இருந்தாங்க.  அதாவது எனக்கு முன்னாடி ம.செ வும், அப்பறம் நான், எனக்குப் பிறகு ஷியாம். அப்போ இவங்களெல்லாம் ஓவியத்துல என்ன புதுமை பண்ணி இருக்காங்க.  இதுக்கெல்லாம் வாய்ப்புதருகிற இடம் பத்திரிகைகள்தான். அதுனால அதுல போட ஆரம்பிச்சேன்.  கிட்டத்தட்ட பத்திரிகைக்கு வரைய வந்து 25 வருஷம் ஆகுது. 

நானே பேனாவுல இந்தியன் இங்க்க  ஊத்தி துப்பறியும் நிபுணர் மாதிரி வரைஞ்சி திருநாகா மிக்ஸ்னு வெளியிட்டிருக் கேன்.  துப்பறியும் நிபுணர் அமெரிக்கா போற மாதிரியும்  விமானத்துல எறங்குற மாதிரியும், ரெண்டு வில்லன்கள் தொரத்துறமாதிரியும், பாஸ் பாஸ்னு போட்டு நானே வரைஞ்சி கதை எழுதுவேன்.  எழுதி முடிச்சதும்,  அட்டையில மட்டும் கலர் பண்ணிட்டு, லேமினேஷன் எப்படித் தெரியுமா போடுவேன், மெழுகுவத்தி இருக்கில்ல அத தலைகீழா பிடிச் சிட்டு தேய்தேய்னு தேப்பேன். அது லேமினேஷன் பண்ணமா திரியே இருக்கும்.  அப்பறம் பக்காவா பின்பண்ணி ஸ்கேல் வச்சி பிளேடால நல்லா கட் பண்ணுவேன்.

அப்படி பண்ணதும் ஒரு புத்தகம் ஃபஸ்ட்கிளாஸா ரெடி ஆகும். அப்பறம் என்ன பண்ணுவேன், அத நேரா ஸ்கூலுக்கு கொண்டு போவேன், டீச்சர் கிட்ட எல்லாம் காமிப்பேன். அவங்களுக் குள்ளேயே நெறைய போட்டி இருக்கும், நான் மொதல்ல படிப்பேன் நீ அப்பறம் படின்னு. அப்போ நான் ஆறாவதுதான் படிச்சிட்டி ருந்தேன்.  டீச்சர் எல்லாம் இந்தமாசம் என்னப்பா பண்ணனு கேப்பாங்க. அதுலவேற முத்து காமிக்ஸ்ல எல்லாம் போடு வாங்க இல்ல, அடுத்தமாத வெளியீடு இரும்புக்கை மாயாவி துப்பறியும்ன்னு அதே மாதிரி ‘திருநா காமிக்ஸ்’ அடுத்தமாத வெளியீடு ஜேம்ஸ் துப்பறியும்ன்னு போட்டிருப் பேன். என்னோட பள்ளிக்கூடத்துல அத பாத்துட்டு எல்லா ரும் என்னைப் பாராட்டினாங்க. முத்து காமிக்ஸ் தான் எனக்கு அந்த ஆர்வத்தைக் கொடுத்தது. என்னைத் தூண்டியது.

அப்போ எங்க ஸ்கூல்ல டிராயிங் மாஸ்டர் ஒருத்தர் இருந்தாரு. அவருக்கு என் மேல பயங்கர எரிச்சல். எப்ப பாத்தாலும் என்ன திட்டிக்கிட்டே இருப்பாரு. அப்போ எனக்கு ஒன்னுமே புரியாது. நாம நல்லா தான வரையிரோம் ஏன் இவரு எப்ப பாத்தாலும் நம்மல திட்டிக்கிட்டே இருக்காருன்னு. அதே மாதிரி என்னோட தமிழ் ஆசிரியர் ஒருத்தர் இருக்காரு. அவரு இந்தக் கம்பராமாயணம், மகாபாரதம் கதைக்குப் படம் போட்டுத்தரச் சொன்னாரு.  தமிழ்நாடு முழுக்க அந்தப் போட்டியில கலந்துக்கிட்டாங்க.   அதுல எனக்கு முதல் பரிசு கெடச்சது. 

pho_250அதுக்கு பரிசா பால ராமாயணம்னு சொல்லிட்டு ஒரு பத்து புத்தகம், அப்பறம் தெய்வத்தின் குரல்னு சொல்லிட்டு ஒரு 2000 பக்கத்துக்கு ஒரு புத்தகத்தையும் கொடுத்தாங்க. அதுக்கு மறுநாள் நான் ஸ்கூலுக்குப் போனேன். அப்போ தமிழாசிரியர் கூப்பிட்டு, நீ என்ன அவ்வளவு பெரிய மண்டையான்னு சொல்லி, அதுல இருந்து எப்பப் பாத்தாலும் என்ன திட்டிக்கிட்டே இருப்பாரு.  இத ஏன் நான் இங்க சொல்லறேன்னா.  நாம வளந்து பெரிய ஆள ஆனதுக்கப்பறம் போட்டி இருந்தா அத வரவேற்கலாம்.  ஆனா நாம வளர ஆரம்பிக்கற காலத்துல இருந்தே நம்ம வளர விடமாட்டிங்கறாங்களேன்னு சொல்லறேன்.

முதன்முதலில் நீங்கள் வரைந்த பத்திரிகை?

முதலில் நான் ‘தேவி’ என்ற பத்திரிகையில் படம் போட்டேன்.  மாலை முரசு, வேலூர், திருச்சின்னு ஒவ்வொரு பகுதிக்கும் தனியாக வெளிவரும்.  அதுல ஒரு இணைப்புல ஒரு கதைக்குப் படம் போடச் சொன்னாங்க. அதுதான் நான் போட்ட முதல் படம். என்ன படம்னா, ஒரு கடல்கன்னி படம் தான் அச்சில் வந்த என்னோட முதல் படம்.  அது திருச்சியில் இருந்து வருகிற மாலை முரசு. 

சித்திரக்கதைகளுக்குப் படம் வரையும் ஓவியர்களுக்கென்று ஏதாவது கூடுதல் தகுதி இருக் கிறதா?

எனக்கிருக்கிற ஒரு கூடுதல் தகுதி என்னனு நான் நெனைக்கிறேன்னா. இந்த ஜோக் படம் இருக்கில்ல, ஜோக் படம் தான் சித்திரக்கதைகளுக்கான ஒரு அடிப்படை வடிவம். ஜோக் படம் போடுறவங்க சித்திரக்கதைகளுக்கு ஈஸியா படம் வரைஞ்சிடுவாங்க. சிரிக்கிறமாதிரி ஒரு முகம் போட்டுட்டு அது லைட்டா திரும்பும் போதும் அதே முகச்சுருக்கங்களையும் போடுவது கடினம். ஆனால் ஜோக் படத்தில் அதை ஈஸியாக போட்டுடலாம். சிலவற்றில் நேராக ஒரு உருவத்தைப் பார்ப்பதற்கும், லேசாகத் திரும்பிப் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கு. நேராக பாக்குறதை யார்வேண்டுமானாலும் போட்டுடலாம். ஆனால் திரும்பி இருக்கிற மாதிரியெல்லாம் போடணும்னா அது வேற யாரோ மாதிரி தெரிய நெறைய வாய்ப்பிருக்கு.

அதுனால தான் பெரிய பெரிய நடிகர்கள் உதாரணத்திற்கு எம்.ஜி.ஆர் எல்லாம் கேமரா கோணத்தில் கவனமா இருப் பாங்க. வேற ஆங்கில்ல வெச்சா வேற யாரோ மாதிரி இருக்கும் அதோட வயசான லுக்கு கிடைக்கும்.  அதே ஜோக் படத்த போடுறது சித்திரக்கதை போடுறதுக்கான சரியான அடிப் படையான வடிவம். ஆனா இதுலையும் ஒரு ஆபத்து இருக்கு. என்னன்னா ஜோக் படத்த போட்டுட்டு சீரியஸ் கதைய போட்டிங்கன்னு வெச்சிக்குங்க அது வேற மாதிரி போயிடும்.  இப்போ செல்லத்தினுடைய ஓவியங்களை எடுத்துக்கொள்ளுங் கள். அவர் எப்படி வரைந்தாலும் அதில் ஒரு ஜோக் இருக்கும்.

தொடர்கதைக்கு ஓவியம் வரைவதற்கும் சித்திரக்கதைக்கு ஓவியம் வரைவதற்கும் என்ன வேறுபாடு?

அதாவது,  சித்திரக்கதை ஒரே செட்ல முடிஞ்சிடும்.  ஒரு 15 பக்கத்துக்கு ஓவியம் போடச் சொன்னாங்கன்னா ஒரு ஒரே வாரத்துல முடிச்சிடலாம். பக்கத்துல பக்கத்துல பாக்கலாம். அத வரைஞ்சிக்கிட்டிருக்கும் போதே மொத பக்கத்துல வந்த ஒரு கதாபாத்திரம் 5 வது பக்கத்துல வந்துச்சின்னா அத திருப்பிப் பாத்து வரஞ்சிடலாம். தொடர்கதைன்னு சொன்னா ஒரு வாரம் ஒரு படம் வரைஞ்சி கொடுத்துட்டோம்னா அதோட அந்த வேல முடிஞ்சிடும். அதற்கடுத்து நாம வேற வேலைய பாத்துக்கிட்டிருப்போம். அதுக்கடுத்த வாரம்னு வரும்போது மறுபடியும் அந்தக் கதாபாத்திரத்த ஸ்டடி பண்ண வேண்டி இருக்கும்.

அதோட சித்திரக்கதைக்கு மெனக்கிடற மாதிரி தொடர்கதைக்கு மெனக்கிடத் தேவையில்ல. தொடர் கதையில் ஸ்டைலை மாத்திக்கிட்டே போகலாம். ஒருவாரம் ஒரு மாதிரியும் அடுத்த வாரம் வேறொரு வகையிலும் வரையலாம். ஆனால் சித்திரக்கதையில் ஒரே மாதிரியாக (+00ii) தான் வரையவேண்டும். தொடர்கதை ஒரு பதினஞ்சி பக்கம் கதை கொடுத்தாங்கன்னா அதுல நமக்குப் படம் போட சாய்ஸ் இருக்கு எங்கவேண்டுமானாலும், எந்தக் காட்சியை வேண்டுமானாலும் போட்டுக்கலாம். ஆனா சித்திரக்கதைக்கு படம் வரையும் போது அப்படி இல்ல. எல்லா சீனுக்கும் படம் வரையணும். எல்லாத்தையும் கொண்டுவரணும்.  ப்ரேமுக்கு ப்ரேம் யோசிக்கணும்.

கதையை ஒருவர் எழுதிக்கொடுத்து வரைவதற்கும், ஒருவரே இரண்டு வேலைகளைச் செய்வதற்கும் உள்ள வேறுபாடு?

நீங்க கேக்குற கேள்வி நடிக்கறதுக்கும் டைரக்ட் பண்ணு றதுக்கும் உள்ள வித்தியாசம் என்னனு. நான் ஏறக்குறைய 25 வருஷமா எல்லா கதையும் தொடரையும் படிச்சிக்கிட்டிருக் கேன். இப்போ என்னால ஒரு கதைய பண்ண முடியும்.  இயல்பா அந்த நடையோட வரும். ஆனா படம் போடுறதுக்கு ஒரு கற்பனை இருக்கில்லையா, அதுக்கு இப்படியெல்லாம் படம் போடலாம். இந்த ஆங்கிள்ல படம் போடலாம்னு.  இன்னொன்னு என்னன்னா கதாசிரியர் சொல்லுற அந்த வர்ணனையத் தாண்டி எக்ஸ்ட்ராவா நாம சிலத சேக்க முடியும். அதேமாதிரி கதாசிரியர் சொல்லுற கதாபாத்திரத்த கெடுக்கவும் முடியும்.

அவர் ஒருமாதிரி எழுதி அத நாம ஒருமாதிரி வரஞ்சோம்னா, என்னப்பா இப்படி போட்டுட்டி யேனு சொல்லுவாரு. ஒருசமயம் பாலகுமாரன் தொடர் எங்கிட்ட கொடுக்குறதா இருந்தது. அப்பறம் அங்கயே ஒருத்தர் கிட்ட கொடுத்துட்டாங்க. ‘படத்த கெடுத்துட்டாங்கப்பா உங் கிட்ட கொடுத்திருந்தா நல்லா இருந்திருக்கும்’னு சொன்னாரு. இதே மாதிரிதான் ஒவ்வொரு ஒவியர் கிட்டையும் சொல்லி யிருப்பாங்க. இப்போ ராஜேஷ்குமார்னா அரஸ் தான் போடணும்னு ஒரு முடிவோட இருப்பாரு.

ஒவ்வொரு ஓவியருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கும். மணியம்செல்வன் அவர எடுத்துக் கிட்டிங்கன்னா, அவரோட படத்துல ஒரு சதவீதம் கூட கவர்ச்சி இருக்காது. ஜெயராஜோட ஓவியங்கள் எல்லாம் ரொம்ப ஸ்டைலா மாடர்னா இருக்கும். அந்த பீரியட்ல அவர் ஒரு கலக்கு கலக்கினவரு. என்னோடது என்னன்னு பாத்திங் கன்னா க்ரைம். கதாபாத்திரத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பேன். நான் கார்ட்டூனிஸ்டா, ஜோக் படங்கள் போடுறவனா இருக்கிற தால கதாபாத்திரங்கள ஸ்டடி பண்ணுவேன். ஒரு வயசான கதாபாத்திரம், கிராமத்துப் பெண், தாத்தான்னு கதாபாத்திரங்களா பொருக்கி போடு வேன்.

எனக்கு கிராமத்துக்கதைனா ரொம்ப பிடிக்கும்.  கதையும் ஓவியரும் ஏன் ஒருவரே செய்ய முடியலைனா? கதை எழுத நாலு பேப்பர் எடுத்துக்கிட்டு ஒரு எடத்துல உக்காந்து எழுதிட லாம். ஆனா ஓவியம் வரையறது அப்படியில்ல.  அதுக்கான உபகரணங்கள், சூழல், எந்தவித தொந்தரவும் இல்லாமல் இருக்கணும். இன்னொன்னு என்னன்னா கதையாசிரியர் சாதாரணமா மேல இருந்து ஒருத்தன் குதிச்சி மண்ட செதறி செத்தான்னு எழுதிடுவாரு. ஆனா அத நாம வரையும்போது  நாம குதிச்சி பாத்தோ, இல்ல யாரையாவது கீழ தள்ளியோ பாக்க முடியாது. நம்ம கற்பனையிலதான் இப்படி விழுந்தா எப்படி இருக்கும் எந்த ஆங்கிள்ல பாக்கலாம், ஆஆஆஆன்னு ஒருத்தன் அலறிட்டு விழுந்தான்னா எப்படி இருக்கும்னு நாமதான் பாக்கணும். உலகத்துலயே தமிழ்நாட்டு ஓவியர்கள் மாதிரி யாராலையும் இருக்க முடியாது.

ஏன்னா கற்பனையா படம்போடுறாங்க பாத்திங்களா. தமிழர்கள் மட்டும் தான் கற்பனையா யோசிச்சி படம் போடுவாங்க. இதே வெளிநாடு கள்ல ஒரு அட்டப்படம், உள்ள ஒரு நாலு படம் போடணும்னு ஒரு ஆர்ட்டிஸ்ட் கிட்ட கொடுத்தாங்கன்னா மூனு மாசம் டைம் கேப்பாரு. ஒரு குட்டி விமானத்துல தனியா கேமரா வோட ஒரு தீவுக்கு போயி, அங்க உக்காந்துக்கிட்டு அங்க இருந்து போன் போடுவாரு மாடல் எல்லாருக்கும். அவங்கள கூப்பிட்டு போட்டோ எடுத்து அதவச்சி வரை யுவாங்க. ஒரு படத்துக்கே அவங்களுக்கு அதிக சம்பளம் கெடைக்கும். ஒரு மாசத்துக்கு நாலுபடம் போட்டாலே அவங் களுக்கெல்லாம் போதும்.

ஆனா இங்க நாங்க ஒரு நாளைக்கே 10-15 படம் வரைக்கும் போடுறோம். இங்க இருக்குற சூழல் அப்படி.  அதனால கதையையும் நாமே எழுதி படமும் நாமே போடுற துன்றது கஷ்டம். அதோட ஓவியம்னு வரும்போது இதையே தொழிலா செய்ய முடியும். ஆனா எழுத்தாளர்க்கு இது சாத்தியமில்லை. அவர்கள் முழுநேர வேலையா இத செய்ய முடியாது. அதோட அதுல கெடைக்கிற வருமானமும் பத்தாது.  இன்னைக்கு சுஜாதா இருந்தார்னா அவரோட அறிவுக்கும் ஆற்றலுக்கும் அவர் சம்பாதிச்சதே ரொம்ப கொறைவு. அதுனால எழுத்தாளர்கள் யாரும் இன்னைக்கு முழுநேரத் தொழிலா அதைச் செய்யறதில்ல.

சித்திரக்கதைக்கான ஓவிய முறைகள்?

கோட்டோவியங்கள் தான் சித்திரக்கதைக்குச் சரியான ஓவியமுறை. கார்ட்டூன்கள் மாதிரியும் போடலாம். அது கதையைப் பொருத்தது. நான் மொதல்ல கோட்டோவியங்கள் வரைஞ்சி, ஸ்கேன் பண்ணிட்டு, கம்ப்யூட்டர்ல கலர்பண்ணு வேன். அதுல வாஷ் டிராயிங், கட்கலர்னு பயன்படுத்துவேன்.

சித்திரக்கதைக்குப் படம் போடுவதற்கு முன்னால், அதற்காக உங்களை எப்படித் தயார் செய்துகொள்வீர்கள்?

அவங்க ஒரு பக்கத்தில் கட்டங்களுக்கான காட்சிகளைக் கொடுத்துடுவாங்க. அத நாம புரிஞ்சிக்கிட்டு,  மொதல்ல அது எந்த அளவுல போடணும், எத்தன கட்டங்களில் போடணும்னு நாம பிரிச்சிக்கணும். அவங்க ஒரு 40 சீன் கொடுத்தாங்கன்னா அத 20 சீனா எடிட்பண்ணி போடலாம். அதே மாதிரி ஒரு நல்ல ஆக்ஷன் சீன் வந்துதுன்னா அதமட்டும் பெரிசா போட்டு மீதி இருக்குற கட்டத்தையெல்லாம் சுருக்கி சின்ன சின்னதா போட்டுக்கலாம். அதுனால நாம ஒரு கதைக்கு எப்படியெல் லாம் படம்போடலாம், எப்படி போட்டா நல்லா இருக்கும்னு நாம மனசில காட்சியாக்கி பாக்குறதுதான் முன்முயற்சி. 

சித்திரக்கதை வடிவத்துக்கு வரையறை ஏதேனும் உண்டா?

புதுமையான பத்திரிகை வரப்போகுதுன்னு விளம்பரம் போட்டிருப்பாங்க. ஆனா உள்ள பாத்திங்கன்னா அரைச்ச மாவையேதான் அரைச்சிருப்பாங்க. அது என்ன, வேற மாதிரி அரைப்பாங்க. சித்திரக்கதை என்பது ஒரு கட்டம். அந்த கட்டம்ங்கிற வரையறைக்குள்ளதான் எல்லாமே வரும். அதே மாதிரி 1234 னு தான் அதைப் பாக்கணும்.  சித்திரக்கதைக் கான கட்டமைப்புக்குள் தான் அது வரவேண்டும்.

தமிழில் சித்திரக்கதைகளின் வருகை குறித்து உங்கள் கருத்து?

இந்தியாவில் 60 வருஷமாத்தான் சித்திரக்கதைகள் இருக்கு. அப்போ தமிழில் எப்போ வந்திருக் கும்னு பாத்துக்குங்க. 7,8 வயசில “சேற்றின் சிரிப்பு”ன்னு ஒரு சித்திரக்கதை வர்ணம் அவர்கள் வரைஞ்சத நான் படிச்சிருக்கேன். 40 வருஷத்துக்கு முன்னாடி. அப்போ அதுக்கு முன்னாடியே வந்திருக்கணும். 

சித்திரக்கதைகள் இறக்குமதி செய்யப்பட்ட வடிவமா?

சித்திரக்கதைகள் நம்முடையதில்லை. ஆனா இத சொன்னிங்கன்னா யாரும் ஏத்துக்க மாட்டாங்க. குகையில பண்ணி வச்சிருக்காங்க நீ பாக்கலையா. அதுலையும் இப்படி இப்படின்னு காண்செப்ட் போகும்னு சொல்லுவாங்க. நாம அத இல்லன்னும் சொல்ல முடியாது. ஏன்னா நமக்கு அந்த அளவுக்கு ஓவிய மரபு இருக்கு. ஆனா உரையாடலை ஓவியத்துக்குள்ள கொண்டு வருவது என்பதும் சித்திரக்கதை என்ற முழுமையான முறையும் வெளியில இருந்துதான் வந்தது.

சித்திரக்கதைக்கு ஏன் இலக்கிய வடிவம் என்ற அங்கிகாரம் கிடைக்க வில்லை?

இலக்கியம் என்பது தனிப்பட்ட ஆளுமை. ஒரு 500 பக்கம் ஆழமான ஒரு இலக்கியம் இருக்குன்னா அதுக்குப் படம் தேவையில்ல. அத படிச்சிட்டு நீங்க உணருவீங்க பாத்திங்களா  அதுதான் அந்த இலக்கியத்துக்கான வெற்றி. படம் என்பது எதுக்குன்னா வாசகனுக்கு ஒரு எதிர்பார்ப்ப ஏற்படுத்தணும்ங்கிற நோக்கத்தோடதான் போடப்படுகிறது.  இது ஒரு வியாபார உத்தி முறை. 

தமிழில் சித்திரக்கதைகள் குழந்தைகளுக்கானது என்ற எல்லையைத் தாண்டி ஏன் நகரவில்லை?

நாம இன்னும் குழந்தைகளைக்கூடத் திருப்தி படுத்தவில்லையே. குழந்தைகளை திருப்தி படுத்துறமாதிரி கதைகள் இன் னும் நெறைய வரணும். அது ஒரு காலகட்டத்துல அப்படியே அமிங் கிடுச்சி. எல்லா தரப்பினருக்குமான கதைகள் பண்ண லாம். ஆனா அதுக்கான நேரம், சூழல், பொருளாதாரம் எல்லாம் வேணும். 75 சதவீதம் குழந்தைகளை நோக்கித்தான் சித்திரக் கதைகள் வெளிவந்துள்ளன/வருகின்றன. 12 வயசு வரைக்கு மான குழந்தைகளை நோக்கித்தான் இக்கதைகள் வருகின்றன. 

முன்னெல்லாம் ஒரு 2 பக்கம்தான் சினிமா செய்தி இருக்கும். ஆனா இப்போ அட்டப்படத்துல ஆரம்பிச்சி முடியுற வரைக்கும் அதுதான் செய்தி. எல்லாரும் அதுக்கொரு காரணத்த சொல்லுவாங்க. அதெல்லாம் போட்டாதான் விக்கும்னு. ஆனா அது தப்பு. ஒரு சில பத்திரிகை தரமா அப்படியில்லா மல் நல்ல செய்திகளைத் தாங்கிக்கொண்டும் வெற்றிபெற்று இருக்கின்றன. இந்த மாயை ஒடஞ்சி வரும்போதுதான் குழந்தைங்கள் எல்லாருக்கும் போய்ச்சேரும். சமுதாயத்த மட்டுமே பாக்குற பத்திரிகை, இத மட்டுமே பாக்குற பத்திரிகைன்னு வரும்போது இந்தமாதிரி ஆளுங்க எல்லாம் அடிபடுவாங்க. 

சித்திரக்கதைகளின் இன்றைய நிலை?

இன்னைக்கு சித்திரக்கதை அழிஞ்சிக்கிட்டிருக்கு.  காமிக்ஸ் வர்ரதே கொறைஞ்சிடுச்சி. இன்னும் காமிக்ஸிலேயே நாம தடுமாறிக்கிட்டு இருக்கிறோம். அப்படி இருக்கும்போது தமிழில் கிராபிக் நாவல் முயற்சி இல்லைங்கிறதுல நாம ஆச்சரியப்படுறதுக்கு ஒன்னுமில்ல.

Pin It