ஆங்கிலேயக் கல்வி முறையின் காரணமாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் சாதிய ஒடுக்குமுறை, பெண்ணடிமை, பெண் கல்வி முதலிய பல நிலைகளில் மாற்றம் நிகழ்ந்தது. கல்வி, ஆண் களுக்குக் குறிப்பாக, மேல்தட்டு வர்க்க ஆண்களுக்கு உரியது என்ற கருத்துநிலையில் இருந்து, பொதுவானது; அனைவருக்கும் அவசியமானது என்ற கருத்து மெல்லமெல்ல உருக்கொண்டது. இந்த மாற்றத்தின் பிரதிபலிப்பைப் பத்தொன்பதாம் நூற்றாண்டு புனைவுகளில் காணமுடிகிறது.

தொடக்க கால நாவலாசிரியர்களான மாயூரம் வேதநாயகம் பிள்ளை, ராஜமய்யர், மாதவையர் ஆகிய மூவரும் ஆங்கிலேயக் கல்விச் சிந்தனை அடிப்படையில் வந்தவர்கள். ‘‘உண்மையில் ஆங்கிலேயராட்சியானது தவிர்க்க முடியாதவாறு புதியதொரு வர்க்கத்தைப் படைத்துக்கொண்டிருந்தது. ஆங்கிலங்கற்ற ‘போலித்துரைமாரை’ மெக்காலே பிரபுவின் கல்வித் திட்டம் உருவாக்கத் தொடங்கி இருந்தது. (க.கைலாசபதி: 2005 : ப. 103) இந்தப் பின்னணியில் வந்த இம்மூவரும், மறுத்தோ மறுக்கா மலோ சமயத்தின் அடிப்படையில் கல்வி கற்றுவந்த தமிழ்ச் சமூகத்தை மாற்ற முனைந்தனர்; அது குறித்த சிந்தனைகளைத் தமது நாவல்களிலும் பதிவு செய்தனர்.

ஒடிந்து நலிந்து கிடக்கிற சமூகத்திற்குக் கல்வியின் தேவை யையும், பெண்கல்வியின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் மாதவையர், ‘‘கல்வியானது நம்முடைய நல்லொழுக்கத்துக்கும் சுகத்துக்கும் உயர்பதவிக்கும் அவசியமானது. புத்தி விருத்தியும் பேரறிவும் நல்லொழுக்கமுமே கல்வி கற்பதின் முக்கிய பயன்களாகக் கொள்ள வேண்டும்’’ (மாதவையர்: 1937 : ப. 70) என்று கல்வியின் அடிப்படையை விவரிக்கிறார்.

கல்வி, உழைக்கும் மக்களுக்கு உரியது; பணம் படைத்தவர் களுக்குக் கல்வி முக்கியமில்லை என்ற கருத்து பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிலவியுள்ளது. இக்கருத்திற்கு எதிராக, சுந்தரத் தண்ணி என்னும் பெண் பாத்திரத்தின் வழியாக, ‘‘பல தொழில்களைக் கற்றுக்கொண்டு, கைப்பாடுபட்டுப் பிழைக்க வேண்டியவர்களான ஏழைகளுக்குப் படிக்க நேரமேது? கல்வி விஷயத்தில் செலவழிக்கப் பொருளேது? படித்தாலும் அரைப் படிப்பு, காற்படிப்புப் படிக்கலாமேயல்லாமல் பூரணமாய்ப் படிக்கக் கூடுமோ?’’ (வேதநாயகம் பிள்ளை: 2004 : ப. 60) என்று வேதநாயகம் பிள்ளை பதிவு செய்கிறார். மேலும் கல்வியின் பயன், கடவுளின் மேன்மையான உன்னத நிலையை அறிவதே என்ற இவரது கருத்து சமயத் தளத்திலிருந்து நீங்காத சமூக அமைப்பைக் காட்டுவதாக உள்ளது. பணமுள்ள பையன் ஒழுங்காகப் படிக்கும் வரை, அவன் செய்யும் தவறுகளுக்காக அவனுடன் பயிலும் பணமில்லாத பையன் தண்டனை பெறும் அவல நிலையையும் வேதநாயகம் பிள்ளை பதிவு செய்கிறார்.

ஐரோப்பியப் ‘பெண்ணுரிமை’ கருத்துகளால் ஆட்கொள்ளப் பட்ட இவர்கள், பெண் கல்வியின் அவசியத்தையும் பெண் விடுதலையையும் தமது நாவல்களில் வலியுறுத்துகின்றனர். அனைவருக்கும் கல்வி என்ற முறையைப் பள்ளி மாணவன் வழியாக வெளிப்படுத்தும் மாதவையர், பெண் கல்வி பெறும் தேவையையும் அவன் வழியாகவே விவரிக்கிறார். ‘‘சுமார் பதி னாறு பதினைந்து வயதுவரை, முற்றிலும் வீட்டுப் பெண்களால் தான் குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள். எளிதாய் எவ்விதமும் திருப்பக்கூடிய அவ்வளவு இளம் பிராயத்தில் கல்வி தேர்ச்சியுள்ள வர்களுடைய மேற்பார்வைக்குள்’’ (மாதவையர்: 1937:ப. 70) குழந்தைகள் இருந்தால்தான் அவர்களது வாழ்வு மேன்மையடை யும் என்கிறார். மேலும், மாணவனது சொற்களின் மூலம் சாவித்திரி எனும் பெண் கதாபாத்திரம் கல்வி கற்று (தமிழ் மற்றும் ஆங்கிலம்) தான் விதவையான பிறகும் கற்ற கல்வியின் துணைகொண்டு வாழ்வதாகச் சித்திரித்திருப்பது கவனிக்கத்தக்கது.

வேதநாயகம் பிள்ளையும் தனது நாவலில் நன்கு கல்வி பயின்ற பெண்களைப் பற்றியே அதிகமாகப் பேசியுள்ளார். இவரது நாவல் பிரதாப முதலியாரை முதன்மைக் கதாபாத்திரமாகக் கொண்டிருந்த போதிலும், கல்வியில் உயர் தேர்ச்சி பெற்ற ‘ஞானாம்பாள்’ என்னும் பெண் பாத்திரத்தைச் சுற்றியே கதை பின்னப்பட்டுள்ளது. இக்கதாபாத்திரமே பெண் விடுதலையை யும், பெண் கல்வியையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.

கல்வி, பெண்கல்வி ஆகியவற்றைப் பற்றிப் பேசிய ஆசிரியர் கல்வி கற்பிப்பவர் பற்றிய தன் சமகால நிலையையும் சுட்டிச் செல்கிறார். ‘‘நாம் அநேக ஆசிரியரைப் பார்த்திருக்கிறோம். சிலர், பிள்ளைகள் மேல் செந்நாய்களைப் போல் விழுகிறார்கள்; சிலர், மூடர் ஆடுமாடுகளை அடிப்பதைப் போல் குழந்தைகளை அடிக்கிறார்கள்; சிலர், எப்போதும் கோபாவேசமாகவே இருக்கிறார்கள், பெரும்பான்மையோர், தாங்கள் கற்பிக்கப்புகும் கல்வி விஷயத்தில் சர்வ மூடர்களாய் இருக்கிறார்கள். இராச்சியங்களை உண்மையிற் பரிபாலிப்பது கல்வி புகட்டும் ஆசிரியரே. ஆனால், கற்றுத்தேர்ந்த குணவான்கள் அரிதாகவும், மூடர்கள் கல்வி பயிற்றவும் புகுகிறார்கள்.’’ (மாதவையர்: 1937 : ப. 23) தன் சமகால நிலையை மட்டுமல்லாமல் ஆசிரியர்களின் தகுதிப்பாட்டையும், அவர்களது ஒழுங்குமுறைகளையும் வலியுறுத்துகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த பரிதிமாற்கலைஞர், ‘‘தற்காலத்துத் தமிழ்ப்பாடசாலை களில் வாத்திமைத் தொழில் நடத்துவோர் பெரும்பான்மையும் தமிழறிவு நுட்பங் காணாதவரே. ஆங்கிலேய பாடசாலைகளிற் சில்லாண்டு கற்று ஆங்கிலமாயினும் தமிழாயினும் சீர்பெறக் கல்லாமல் உதரவலி ஒழித்தற்பொருட்டுத் திரிபவரே சிறுவர் களுக்குப் போதிக்க வருபவராவர்’’ (க.கைலாசபதி, ‘பரிதிமாற் கலைஞர்’: 2005 : ப. 102) என்று ஆசிரியர்களின் நிலையைப் பதிவு செய்துள்ளது கவனிக்கத்தக்கது. ராஜமய்யரும் அம்மையப்ப பிள்ளை என்னும் கதாபாத்திரத்தின் வழி, மெட்ரிகுலேஷன் பள்ளியில் பணிபுரியும் தமிழாசிரியர்களின் நிலையை நகைச்சுவையுடன் பதிவு செய்துள்ளார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்து கல்வி மையங்கள் தொழில் மையங்களாக மாற்றமடைந்துள்ளன. ‘‘ஒரு தொழிலு மறியானாயின் ஒரு பள்ளிக்கூடத்தை வைத்துப் பிழைக்கத் தலைப்படுகிறான்’’ (மாதவையர்: 1937 : ப. 23) என்று மாதவையர் கூறிச் செல்கிறார். மெக்காலே கல்விமுறையின் மூலம் புதியதொரு வர்க்கம் உருவாகிக்கொண்டிருந்ததையும் கல்வி, வணிக உரு வாக்கத்தையும் இக்கருத்து வலியுறுத்துகிறது. ‘‘இவ்விஷயத்தில், தக்க சீர்திருத்தம் உண்டாகும் வரை நம் தேசம் முன்னுக்கு வந்து விளங்குதலரிது’’ (மேலது: 24) என்ற கருத்து ஆசிரியரின் வருத்தத்தை வெளிப்படுத்துகிறது.

ஆங்கிலேயக் கல்வி முறையினாலும், ஆட்சி மொழியாக ஆங்கிலம் இருந்ததாலும் அக்காலத்தில் மேல்தட்டு மக்களி டையே ஆங்கிலப் பயிற்சி இருந்து வந்துள்ளது. ஆங்கில மொழியைக் கற்க இயலாதவர்கள், ‘‘எவ்வளவு பணமிருந் தால்தான் என்ன? இந்தக் காலத்திலே இங்கிலீஷ் படித்தால்தான் மகிமை’’ (மாதவையர்: 1937 : ப. 68) என்று கூறுமளவிற்கு ஆங்கில மோகம் இருந்துள்ளது. ஆங்கிலத்தை ‘நீச பாஷை’ என்று கூறிய பார்ப்பனர்கள் பிற்காலத்தில் ‘இராஜபாஷை’ என்று கூறிக் கொண்டு கற்றதாக மாதவையர் குறிப்பிட்டு, ‘வேளைக்குத் தக்க வேஷம்’ என்று அவர்களது இயல்பை அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.

கல்வியின் தேவையையும் இன்றியமையாமையையும் கூறிய வேதநாயகம் பிள்ளை, பள்ளிக் கல்வி மட்டுமே ஒருவனது கல்வி யறிவை முழுமை பெறச் செய்யாது என்கிறார். ‘‘பள்ளிக் கூடத்தில் படிக்கிற படிப்பை அபிவிருத்தி செய்யாவிட்டால் அந்தப் படிப்பு ஒன்றுக்கும் உதவாது. பாடசாலையிலே படிக்கிற படிப்பு அஸ்திவாரமாகவும் பாடசாலையை விட்ட பிற்பாடு தானே படிக்கிற படிப்பு மேற்கட்டத்துக்குச் சமானமாயிருக் கின்றது’’ (வேதநாயகம் பிள்ளை: 2004 : ப. 116) என்று கூறி வாசிப்பு முறையை வலியுறுத்துகிறார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி காலங்களில் பெண் கல்வி, பெண் விடுதலை பற்றிய கருத்து சமூக நிலையில் வலுப்பெறத் தொடங்கியது. இவற்றை வலியுறுத்திப் பல இயக்கங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டன. ஜி.சுப்பிரமணிய ஐயரும் அவரைச் சார்ந்தவர்களும் இணைந்து 1892ஆம் ஆண்டு ‘‘சென்னை இந்து சமூக சீர்திருத்தச் சங்கம்’’ என்னும் அமைப்பை உருவாக்கினர். இந்த அமைப்பு பெண் கல்வியையும், பெண் விடுதலையையும் பிரதானமாக முன்னெடுத்துச் செயல்பட்டது. இந்த அமைப்பில் இருந்த உறுப்பினர்கள், ‘‘எனது கட்டுப்பாட்டில் உள்ள பெண்களுக்கு கல்வி வழங்குவேன்’’ (அருணன்: 1999 : ப. 100) என்ற உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு செயல்பட்டுள்ளனர். ‘பெண் கல்வி’ பரவலாகச் செயல்பட்டுள்ளதை இதன்வழி அறியலாம். இந்த முன்னெடுப்பிற்கு ஐரோப்பிய புத்தொளிச் செயல்பாடுகளை உள்வாங்கிக் கொண்ட கிறித்துவ சமயப் பாதிரியார்கள், ஆங்கிலேயக் கல்வி முறை, அதன் வழி வந்தவர்கள் ஆகியோர் காரணமாக இருந்தனர்.

மேல்தட்டு வர்க்கங்களுக்கு என்று இருந்த கல்வி முறையிலும் மாற்றம் நிகழ்ந்தது. 1894ஆம் ஆண்டு தியாசபிகல் சொசைட்டி தாழ்த்தப்பட்ட மக்களுக்கென ‘பறையர் பள்ளி’ என்ற பள்ளியை உருவாக்கிக் கல்வி வழங்கியதையும் கவனத்தில் கொள்ளவேண்டி உள்ளது. வேதநாயகம் பிள்ளையின் கருத்தைத் தவிர, மற்ற இருவரின் சிந்தனை போக்கிற்கு இந்நிகழ்வுகள் மேலும் வலுவூட்டியிருக்க வேண்டும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் சமூக ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருந்த மக்களுக்குத் துணையாக ஐரோப்பியச் சிந்தனை மரபு வலுவாக ஊக்கம் தந்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் விடு தலைக்கும் பெண் விடுதலைக்கும் கல்வியே ஆதாரம் என்பதை ஆங்கிலேயக் கல்விச் சிந்தனை வழி உணர்ந்த இம்மூவரும் தமது புனைவுகளில் கல்வியையும், கல்வி பெறும் முறையையும் போதிப்பவரின் தன்மையையும் கட்டமைத்துள்ளனர்.

இவர்களது நாவல்களில் இளையோர் கல்வி, பெண் கல்வி ஆகியவை வலியுறுத்தப்படுகின்றன. முதியோர் கல்வி முறை பிற்கால வளர்ச்சியில் உருவான ஒன்றாக உள்ளது. சமயத்தின் அடிப்படையிலான கல்வி முறையிலிருந்து, இருபதாம் நூற்றாண்டில் பகுத்தறிவுக் கல்வி முறையாக வளர்ச்சியடைந்ததை இதன் அடிப்படையிலேயே கருதலாம். 

துணை நூல்கள்

        அருணன், தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் இருநூற்றாண்டு வரலாறு, வைகை வெளியீட்டகம், 6/16, புறவழிச்சாலை, மதுரை - 18. இரண்டாம் பதிப்பு ஏப்ரல் 1999.

        கைலாசபதி.க., தமிழ் நாவல் இலக்கியம், குமரன் பப்ளிஷர்ஸ், வடபழனி, சென்னை -- 26, மறுபதிப்பு, செப்.2005

        மாதவையர்.அ., பத்மாவதி சரித்திரம், 1937, ஆறாம் பதிப்பு.

        ராஜமய்யர்.பி.ஆர்., கமலாம்பாள் சரித்திரம், 1896..

        வேதநாயகம் பிள்ளை மாயூரம், பிரதாப முதலியார் சரித்திரம், சந்தியா பதிப்பகம், அசோக்நகர், சென்னை -83, முதற்பதிப்பு டிசம்பர் 2004.

Pin It