உலகமயம், தனியார்மயம், தாராள மயம் என்பனவெல்லாம் ஏதோ அரசு சார்ந்த நிறுவனங் களுக்கு வேண்டுமாயின் சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என மேம்போக்காகக் கருதி வந்தவர்களின் கன்னத்தில அறை விழுந்தாற் போன்று மூன்று மாதங் களுக்கு முன் தமிழகச் சட்டப் பேரவை யில் தமிழ்நாடு வேளாண் தகவல் ஒழுங்காற்றுச் சட்டம்என ஒன்று நிறைவேற்றப் பட்டுள்ளது. 

உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ் சாது”, “ஆடிப் பட்டம் தேடி விதை”, “விதையொன்று போட்டால் சுரையொன்று முளைக்குமா?” என்பன போன்ற பழ மொழிகளையெல் லாம் இனி வேளாண் பட்டதாரிகளைத் தவிர வேறு எவரும் கூறக் கூடாது. 

திருக்குறளில் உள்ள உழவுஎன்னும் அதிகாரம் முற்றிலுமாக நீக்கப்பட்டுவிடும்! புதிய சட்டத்தின்படி வேளாண் பட்டதாரியல்லாத எவரும் வேளாண்மை தொடர்பான ஆலோசனைகளைக் கூறக் கூடாது. 

பன்னாட்டு நிறுவனங்களின் இரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் இந்நாட்டின் மண்ணை யும் நீரையும் காற்றையும் தொடர்ந்து பாழாக்கிக் கொண்டு வருவதுடன் பேராபத்தை விளைவிக்கக் கூடிய புதுப்புது நோய்களையும் உற்பத்தி செய்கின்றன என்ற காரணத்தால் அவற்றை எதிர்த்துப் பரப்புரை செய்து வருவதுடன் இயற்கை வேளாண்மை என்னும் மரபுவழி வேளாண்மைக்கு ஆக்கம் தேடும் வகையில் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயல் வழிச் சான்றுகளையும் நிறுவி வரு கின்றனர் சில இயற்கை வேளாண் ஆர்வலர்கள். அவர்தம் முயற்சிகளுக்கு வேளாண் மக்களிடம் ஆதரவும் பெருகி வருகிறது. 

இத்தகைய போக்கை வளர விட்டால் அது அடிமைத் தளையை அறுத்தெறியும் தற்சார்புப் பொருளா தாரக் கொள்கைக்கு அடித்தளம் அமைத்துவிடும் என்ற அமெரிக்க எசமானரின் அச்சத்தைப் போக்கவே தமிழக அரசு இந்தச் சட்டத்தை நிறை வேற்றியது. மக்களிடம் கருத்துக் கேட்ட பின் மசோதாவை விவாதிக்கலாம் என்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆலோசனை புறக்கணிக்கப்பட்டது. அள்ளித் தெளித்த அவசரக் கோலமான சட்டத்தின் படி வேளாண் பட்டதாரி யல்லாத ஒருவர் வேளாண்மை தொடர் பான ஆலோசனை கூறினால் முதல் முறையாக ரூ. 5,000/- இரண்டாம் முறையெனில் ரூ. 10,000/- தண்டம் விதிக்கப்படும்; சிறைத் தண்டனையும் உண்டு! 

மூத்த பத்திரிகையாளர்களும் எதிர்க்கட்சித் தலைவர்களும் கேட்டுக் கொண்டதால் இச்சட்டம் தொடர்பான அறிவிக்கை வெளியிடப்படுவது தற் காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டுள் ளதாகத் தமிழக முதல்வர் கூறியுள்ளார். 

ஈழப் போரின்போது மிகப் பெரும்பான்மையான பத்திரிகை யாளர்களும் அனைத்துக் கட்சியினரும் - போரில் பங்காளி களான சில கட்சி களைத் தவிர - மன்றாடிக் கேட்டுக் கொண்டும் மன மிரங்காத முதல்வருக்கு, தற் காலிகமாக வேனும் போரை நிறுத்தச் சொல்ல வக்கற்றுப் போன முதல்வருக்கு வேளாண் தகவல் சட்டத்தை தற்காலிக மாகவாவது நிறுத்த மனம் வந்ததே! இதன் பின்னணி இன்னும் சில மாதங்கள் கழித்துப் புலனாகலாம். ஏனெனில் மற்றொரு சட்டத்தின் மூலம் இது நீக்கப்படாத வரையிலும் இது மீண்டும் உயிர்பெற வாய்ப்பிருக்கிறது. 

நமக்கு இப்பொழுது ஏற்பட் டுள்ள கவலை யாதெனில் வேளாண் பட்டதாரிகளைக் காக்கவும் அமெரிக்க நலன் பேணவும் நிறைவேற்றப்பட்ட சட்டத்தைப் போன்று பிற துறை களிலும் இப்படி சட்டம் இயற்றினால் என்ன செய்வது என்பதுதான்?

நாங்க திருமண நாயக்கர் மகாலைக் கட்டிய பரம்பரையினர்என்றோ, “எங்க முன்னோர்கள் தஞ்சா வூர் அரண்மனையைக் கட்டுனவுங்கஎன்றோ எந்தக் கொத்தனாரும் பெருமையடிப்பதுடன் அவர் கொல் லூரைத் தூக்கவும் முடியாது, அவர் கட்டிடத்துறைப் பொறியாளராக இல்லாத நிலையில்! 

ஒரு குடிசை போடுவதானாலும் பட்டயப் படிப்பு முடித்தவரிடமாவது சான்றிதழ் வாங்கினால்தான் முடியும்! 

ரோட்டு மேல வீடு கட்டினா ஆயிரம் யோசனைஎன்றொரு சொல் வழக்குண்டு. சட்டம் நிறைவேற்றப் பட்டால் கட்டிடப் பொறியாளர் பட்டமோ, பட்டயமோ பெறாத வழிப்போக்கர் எவரும் போகிற போக்கில் இலவச ஆலோசனைகளை வழங்கக்கூடாது! 

கேட்டரிங் டெக்னாலஜிஎன்றொரு படிப்பு. நன்கொடை, கட்டணம் என்று மிகப் பெரிய கொள்ளை! ஏராளமாகப் பணம் செல வழித்துச் சமை யற் கலையைப் பயிற்றுவிக்கும் துறை. இந்தத் துறையில் இப் படி ஒரு சட்டம் வந்தால்.... நளபாகச் சக்கரவர்த்தி”, “அறுசுவை அரசர்என் றெல்லாம் பட்டம் சூட்டிக் கொண்டு பெரிய பெரிய விருந்துகளில் உணவு சமைக்க முடி யாது. அப்படி சமைப்போர் சமையற் கலைப் பட்டமோ, பட்டயமோ பெறாவிடில் அடுப்புக்குப் பக்கத்தி லேயே போகக் கூடாது! காத்திருக்கிறது அபரதாமும் சிறைத் தண்டனையும்! 

சோதிடம் மிகக் கடுமையான எதிர்ப்புகளுக்கு நடுவில் சில பல்கலைக் கழகங்களில் சான்றிதழ் படிப்பாக இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் ஏழு தலைமுறைகளாகப் பஞ்சாங்கம் கணிப்பவர்கள்என்று விளம்பரம் செய்யும் எவரும் சான்றிதழ் படிப்பு இல்லாமல் பஞ்சாங்கம் வெளியிடக் கூடாது. மீறி எவரேனும் செய்தால் கணித்தவர், அச்சடித்தவர், வெளியிட் டவர், விற்பனையாளர் அனைவருமே தண்டத்தொகை செலுத்திவிட்டுச் சிறை வாசமும் செய்யலாம்! 

கிளி சோதிடம், எலி சோதிடம் என்று யாரும் கக்கத்தில் பாயை இடுக்கிக் கொண்டு கூண்டுடன் அலையக் கூடாது. சோழி உருட்டிச் சோதிடம் கூறுதல், ஏடு பிரித்து முக்காலம் கூறுதல், எண் சோதிடம், ரேகை சோதிடம் யாவற்றுக்குமே சான்றிதழ் படிப்பு அவசியம். 

நாளிதழ், வார, மாத இதழ்களில் ராசி பலன் எழுதுவோர்க்கும் இந்தச் சட்டம் பொருந்தும். காலங்காலமாக நள்ளிரவில் குடு குடுப்பையுடன் வரும் சாமக் கோடாங் கிக்கும் விதிவிலக்குக் கிடையாது! இச்சட்டத்தில் கூறப்படாத வேறு எந்தவகையான அருள் வாக்குக் கும் அனுமதியில்லை. 

லஞ்சத்தை ஒழித்து விடுவோம். ஊழலைப் பத்தாண்டுகளுக்குள் களை யெடுத்து விடுவோம்என்று ஆரூடம் கூறும் அரசியல்வாதிகளும் இதில் அடங்குவர். 

பரம்பரை பரம்பரையாகக் கடலுடன் மிக நெருக்கமான உறவு கொண்டுள்ள மீனவர்கள் கடல் உயிரியல், கடல் பொறியியல் என்ற பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டம் அல்லது பட்டயம் அல்லது சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெறாமல் மீன் பிடிக்கக் கடலுக்குள் காலடி வைக்கக் கூடாது! 

கட்டுமரம், நாட்டுப்படகு, விசைப்படகு செலுத்துவோர் அதற் கான சான்றிதழ் படிப்பு இல்லாமல் ஓட்டுநராக முடியாது! 

வெறும் அனு பவத்தைக் கொண்டு மீன் பிடித்தல், முத்துக் குளித்தல், உப்புக் காய்ச்சுதல் போன்ற வேலைகளை எவரேனும் செய்தால் காத்திருக்கிறது கடும் தண்டனை. 

திரைப்படக் கல்லூரியில் பயின்று பட்டம் பெறாமல் திரைத்துறை தொடர்பான எந்தச் செயலிலும் யாரும் ஈடுபடக் கூடாது. 

நான் வசனம் எழுதிய படங்கள் ஆட்சியைக் கவிழ்த் துள்ளன. ஒரு காலத் தில் என் வசனங்களை இளைஞர்கள் மனப் பாடம் செய்து ஒப்பிப்பதைப் பெருமை யாகக் கருதினார்கள்என்பதெல்லாம் கதைக்கு ஆகாது. தள்ளாத வயதானா லும் திரைப்படக் கல்லூரிப் படிப்பு இல்லாமல் அடுத்த படத்துக்கு வசனம் எழுதப் பேனாவைத் தொடக்கூடாது! 

நீங்கள் அடுத்துக் கேட்க வரப் போவது நமக்குப் புரிகிறது. வேளாண் தகவல் ஒழுங்காற்றுச் சட்டம் மக்களுக்கு விரோதமானது. நம் இறையாண் மைக்கு அறைகூவல் விடுப்பது என்ப வற்றையெல்லாம் அறியாது நிறை வேற்றிய சட்டமன்ற உறுப்பினர்களைப் பற்றித்தானே கேட்கிறீர்கள்? அதற் கொரு வழி காண்போம். 

சட்டமன்ற உறுப்பினராவதற்கு அடிப்படைத் தகுதி சட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதைச் சட்டமாக்குவோம்! 

அமைச்சர்கள் தத்தம் துறைகளில் பட்டமோ, பட்டயமோ, சான்றிதழோ பெற வேண்டியது கட்டாயமாகும். ஏற்கெனவே உறுப்பினராக அவர்கள் பயின்ற சட்டப் படிப்புடன் கூடுதல் தகுதியாகத் துறை சார்ந்த படிப்பு அவசியமானதாகும். 

இவ்வாறான தகுதிகளை வரை யறுக்கும் பொழுது இடையிடையே அமைச்சர்களுக்கு துறைகளை மாற்றிக் கொடுக்கும் விளையாட்டுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும். அனுபவம், பரம்பரை என்பதற்கெல்லாம் சிறிது கூட இடம் கிடையாது! 

சிறப்பாக நாம் கவனிக்க வேண் டியது மாண்புமிகு முதலமைச்சர் பதவியைத்தான். தம் கையில் வைத் துள்ள துறைளுக்குரிய படிப்பை முடித் திருப்பதுடன் அனைத்து அமைச்சர் களையும் மேய்க்க வேண்டிய முக்கிய மான பொறுப்பு இருப்பதால் நிர்வாக மேலாண்மைப் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். 

ஐம்பத்தெட்டு வயதானால் என்னதான் திடமான உடலும் வலுவான உள்ளமும் இருந்தாலும் அரசு ஊழியர் களையும் ஆசிரியர்களையும் வீட்டுக்கு அனுப்ப எவை காரணமோ அவை முதலமைச்சர், அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் பொருந்தும்தானே! பதவி சுகத்தை ஆயுள் முழுவதும் அனுபவிக்க அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஏன் தடை? இரு தரப்பும் சிந்தித்தால் நியாயம் பிறக்கும். 

வேளாண் தகவல் ஒழுங்காற்றுச் சட்டம் கேலிக் கூத்தாகத் தோன்ற வில்லையா? எங்கிருந்தோ ஏவி விடப் பட்ட ஆணைக்கு அடிபணியத் தொடங் கிய நிலையின் பரிணாமந்தான் இது. சுய சிந்தனையை மறுதலித்துச் சொந்த மண்ணைக் காட்டிக் கொடுக்கும் மனநிலை உள்ளவர்களுக்கே இத் தகைய சட்டம் இயற்ற இயலும். தமிழ், தமிழினம், தமிழ் மண் என்ற அடை யாளங்களை மீட்டெடுக்க வேளாண் சட்டம் வேரறுக்கப்பட வேண்டும். தாற்காலிக நிறுத்தி வைப்பு என்பது நிரந்தரமாக வேண்டுமாயின் தமிழினத் துரோகிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து முகமூடிகளைக் கிழித் தெறிய வேண்டும். 

- *

மரபுவழிப் பட்டறிவை மறுக்கும் வேளாண் சட்டம் 

நடந்து முடிந்த சட்டமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரின் நிறைவு நாளுக்கு முன் தினமான ஜூன் 23 அன்று முப்பது மசோதாக்கள் முன் வைக்கப்பட்டு அவை எந்தவித விவாதமுமின்றி மறுநாள் ஜூன் 24 அன்று ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன. இனி இந்த 30 மசோதாக்களும் சட்டமாகிவிடும். இதுபோன்று சட்டமாக மாறியுள்ள மசோதாக்களில் முக்கியமான ஒன்றே, “தமிழ்நாடு மாநில வேளாண் மன்றச் சட்டம் 2009” - Tamilnadu State Agriculutural council act 2009.

இதன்படி இனி விவசாயத் தொழில் புரிபவர்கள் யாரும் தங்கள் விருப்பத்திற்கு விவசாயம் செய்யக்கூடாது. செய்ய முடியாது. விவசாயத் துறையில் பட்டம் பெற்றவர்களின் ஆலோசனையைப் பெற்றே விவசாயம் செய்ய வேண்டும். இப்படிப்பட்ட ஆலோசனையையும் எவரும் வழங்கி விட முடியாது. கூடாது. தமிழ்நாட்டில் உள்ள குறிப்பிட்ட மூன்று பல்கலைக் கழகங்களில் பயின்று பட்டம் பெற்றவர்களும், பிற மாநிலங்களில் தமிழ்நாடு அங்கீகரித்து ஏற்றுள்ள பல்கலைக் கழகங்களில் படித்து பட்டம் பெற்றவர்களும் மட்டுமே இப்படிப்பட்ட ஆலோசனைகளை வழங்கவேண்டும். இவர்களிடமிருந்து மட்டுமே ஆலோசனை பெற வேண்டும்.  

அதாவது, மருத்துவத் துறையில் பட்டம் பெற்ற மருத்துவர், சட்டத் துறையில் பட்டம் பெற்ற வழக்கறிஞர் ஆகியோர் அவரவர் துறை சார்ந்து ஆலோசனை வழங்குவது போல், தொழில் செய்வது போல் வேளாண் துறையிலும் வேளாண் பட்டம் பெற்றவர் இப்படி செயல்படுவார். 

இப்படியல்லாது, இப்படிப்பட்ட பட்டம் பெறாது வேறு யாராவது வேளாண் ஆலோசனை வழங்கினால், அது முதல் முறையானால், ரூ. 5,000 ஒறுத்தல் கட்டணம். இதையே மறுமுறை செய்தால் ரூ. 10,000 ஒறுத்தல் கட்டணம். இத்துடன் 6 மாத சிறை தண்டனையும் உண்டு. 

இதன் விபரீதம் என்னவென்றே புரியாது இப்படி ஒரு சட்டத்தை அரசும் எதிர்க் கட்சிகளும் ஒன்று சேர்ந்து நிறைவேற்ற, இச்சட்டத்திற்கு எதிராக, வேளாண் வல்லுநர்கள், இயற்கை மற்றும் மரபு வழிப்பட்ட பரம்பரை வேளாண்மையர்கள், மேலும் பல விவசாய சங்கங்கள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, இப்போதைக்கு இதைச் செயலுக்குக் கொண்டு வராமல் நிறுத்தி வைப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார். 

- எனினும், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டத் தகுதியோடு பாயத் தயாராக இருக்கும் ஒரு பூதம் போல் இது விவசாயிகளின் வாழ்வைச் சூறையாட இருக்கிறது. எனவே இது குறித்து விவசாயிகள் விழிப்போடு இருக்க வேண்டும். இது செயலுக்கு வரவில்லைதானே என்று அலட்சியமாக இருந்துவிடாது, இதை விடாப்பிடியாக எதிர்க்க வேண்டும். 

தமிழக விவசாய உற்பத்திமீது பன்னாட்டு ஆதிக்கம் 

சரி, இந்த சட்டம் செயலுக்கு வந்தால் என்ன ஆகும்? மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் போல் வேளாண் பட்டதாரிகளும் பெயர்ப் பலகை மாட்டி அலுவலகம் திறந்து வைத்துக் கொள்வார்கள். விவசாயிகள் அவர்களிடம் போய் ஆலோசனைக் கட்டணம் செலுத்தி ஆலோசனை கேட்டு, அதன்படிதான் விவசாயம் செய்ய வேண்டும். அல்லாமல் அவர் இஷ்டத்துக்கு ஏதாவது செய்தால், அதாவது அவரது சொந்த விவசாயத்துக்கு அவரே ஆலோசகராக இருந்தால் அதுவும் குற்றச் செயல் ஆகிவிடும். 

உலக வர்த்தக அமைப்பு, காட் ஒப்பந்தம் வாயிலாக பன்னாட்டு நிறுவனங்கள் தங்கு தடையின்றி இங்கே உள் நுழைந்தபோது, சில பேருக்கு அவர்கள் கனரகத் தொழிலில்தான் உள்ளே வருவார்கள் என்கிற ஓர் அலட்சியம் இருந்தது. ஆனால் அவர்கள் அப்பளம், வத்தல், ஊறுகாய், நொறுக்குத்தீனி போன்ற அன்றாடத் தேவைகளிலேயே உள்ளே புகுந்து அதிர்ச்சியளித்த போதுதான் பலருக்கும் அதன் அபாயம் புரிந்தது. 

இப்போது தமிழக அரசு இதைக் கொண்டு வர வேண்டியத் தேவை என்ன? பன்னாட்டு மற்றும் தில்லி நிர்ப்பந்தம்தான். அதாவது விவசாயத் தொழிலையும் ஒரு நிறுவனத் தொழில் போல ஆக்கி, அத்துறை சார் வல்லுநர்களைக் கொண்டு நிர்வகிப்பதன் மூலம் அதைத் தன் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதுதான். 

அதாவது மக்களுக்கு எது தேவையோ, அதைப் பயிரிட்டு மக்களின் தேவையை நிறைவு செய்யாமல், தனது வணிக ஆதிக்க நோக்கில் எது தேவையோ அதைப் பயிரிட்டு கொள்ளை லாபம் ஈட்ட முயல்வதுதான். இப்படி இதுபோன்ற இன்னும் பல ஆபத்துகள் இதில் உண்டு. 

எந்த ஆபத்தும் தொடக்கத்திலேயே எல்லாமும் எல்லாருக்கும் புரியாதுதான். ஆனால் இதே கோட்பாட்டை செயல் முறையில் சற்று நீட்டித்துப் பார்த்தால் இதன் விபரீதம் புரியும். 

அதாவது இன்று வேளாண் பட்டதாரிதான் வேளாண்மை செய்ய ஆலோசனை கூற வேண்டும் என்றால், நாளைக்கு, தச்சுத் தொழில் பட்டதாரிதான் தச்சுத் தொழிலுக்கு ஆலோசனை கூறமுடியும். அணிகலன் பட்டதாரிதான் நகைத் தொழிலுக்கு ஆலோசனை கூறமுடியும். ஆடை வடிவமைப்புப் பட்டதாரிதான் தையல்காரர்களுக்கு ஆலோசனை கூறமுடியும். அவ்வளவு ஏன், உணவகத்தில் சமைப்பதோ, திருமணம் மற்றும் நல்லது கெட்டதுகளுக்கு போய் சமைப்பதோ, சாதாரண சமையற்காரர்கள் போய் எதுவும் செய்து விடமுடியாது. கேட்ரிங்அதாவது சமையல் கலை பட்டதாரிகள் மட்டுமே அதைச் செய்ய முடியும். 

- அதாவது எல்லாவற்றையும் முறைப்படுத்துவது என்பதன் பேரால் பாரம்பரியத் திறமைகளை, பன்முகத் திறமைகளை அழித்து, அவர்கள் வாழ்வில் மண்ணைப் போட்டு எல்லாவற்றிலும் தனது ஏகபோகத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதன் முயற்சியே இது. ஆகவே இது விஷயத்தில் நாம் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்கவேண்டும்.

Pin It