நடைபெற இருக்கக்கூடிய தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எப்படியாக அமையும் என்பதை தற்போது ஒன்றும் அறுதியிட்டுச் சொல்கிற சூழல் இல்லை. இப்போதைய கருத்துக் கணிப்புகள், அநுமானங்கள், கட்சிகளின் பலம், பலவீனங்கள், மக்களின் மனவோட்டங்கள் தேர்தல் நெருங்க, நெருங்க, தேர்தல் நாளில், வாக்களிப்புத் தருணங்களில் எப்படியாக மாறும், எப்படியாகச் செயல்படும் என்பதை வைத்தே அதைத் தீர்மானிக்க முடியும். அதைவிட்டு இப்போதிருக்கும் சூழலே இறுதி வரை நீடிக்கும் என்பதாகக் கணிக்க முடியாது.

தேர்தல் முடிவில் திமுகவுக்கோ, அதிமுகவுக்கோ தனிப் பெரும்பான்மை கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். இவ்விரு கட்சிகளுக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்க வில்லையானால் கூட்டணிக் கட்சிகளின் பலத்திலோ, குதிரை பேரங்கள் நடத்தி பிற சட்டமன்ற உறுப்பினர்களை விலைபேசியோ இவற்றுள் ஏதாவதொன்று ஆட்சி அமைக்கலாம். ஆனால் அப்படி அமையும் ஆட்சி தற்போதிருக்கிற இதே கூட்டணியின் அடிப்படையில் தான் அமையும், என்று சொல்லமுடியாது எப்படி வேண்டு மானாலும் அமையலாம்.

அதாவது திமுக, காங்கிரஸ் சாராது பா.ம.க., வி.சி.க. துணையோடு ஆட்சி அமைக்கலாம். அப்படி அமைய முடியாத நிலை ஏற்பட்டு காங்கிரசின் ஆதரவைப் பெற வேண்டிய நிலை உருவாகுமானால் காங்கிரஸ் இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் தீவிரத்திலேயே இருக்கும்.

கடந்த கால ஆட்சியில் காங்கிரசுக்கு ஆதரவாக இருக்க திமுகவுக்கு அளிக்கப்பட்ட விலைக்கும், இந்தப் பயன்களைப் பெற திமுக காங்கிரஸ் கட்சிக்குத் தந்த குடைச்சலுக்கும் பழி தீர்க்கும் விதமாகவே அது இருக்கும். அந்த வகையில் இது திமுகவுக்கு கடும் தொல்லையாகவே அமையும்.

மறுபுறம் அதிமுக கூட்டணி. காலமெல்லாம் திமுக அரசை ‘மைனாரிட்டி அரசு’ என்றே ஏளனம் பேசி வந்த ஜெ. தனக்கு அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் மிகுந்த எச்சரிக்கையோடும் உத்தியோடும் கூட்டணிக் கட்சிகளுக்கு திட்டமான இடங்களை ஒதுக்கி 160 தொகுதிகளைத் தன் கைவசம் வைத்துள்ளார். இதில் எப்படியும் 118 இடங்கள் வென்று ஆட்சியமைத்து விடலாம் என்பது அவர் கணக்கு.

ஆனால் அப்படியரு நிலை வராதிருப்பதே தமிழகத்துக்கு நல்லது. காரணம், இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும், இத்தனை அனுபவங்களுக்குப் பிறகும் இவர், தன்னைத் திருத்திக் கொள்ளாது, மாற்றிக் கொள்ள முயலாது, அதே அகங்காரம், ஆணவம், வரட்டுப் பிடிவாதம், கூட்டணிக் கட்சிகளை மதிக்காத போக்கு என இப்படி எண்ணற்ற தன் பலவீனங்களை இன்னமும் களைந்து கொள்ளாமலே இருக்கிறார். இனிமேலும் களைந்து கொள்வார் என்பதற்கும் எந்த உத்திரவாதமும் இல்லை.

எனவே அவர் கையில் தனி மெஜாரிட்டியுடன் தமிழக ஆட்சி அமைந்தால் தமிழகத்தில் எப்படிப்பட்ட கூத்துகள் அரங்கேறும் என்பதைச் சொல்லமுடியாது.

கருணாநிதி ஆட்சி சொந்தக் குடும்ப ஆட்சி என்றால் ஜெ. ஆட்சி மன்னார்குடி குடும்ப வகையறாக்களின் ஆட்சியாக இருந்தது. இனி வந்தாலும் அப்படித்தான் இருக்கப் போகிறது. கருணாநிதி ஆட்சி ஊழல் வன்முறை ஆட்சி என்றால் அதற்கு நிகரான ஊழல் வன்முறை ஆட்சியாகவே ஜெ. ஆட்சியும் இருந்தது, இருக்கப் போகிறது.

ஆக, இப்படி எல்லாவகையிலும் கருணாநிதி ஆட்சி போலவே, அதற்குச் சற்றும் குறைவுபடாத ஆட்சி தருப வராகவே ஜெ. ஆட்சியும் அமையும். மேலோட்டமான நிர்வாக மற்றும் நடைமுறை பிரச்சினைகளில் இருவர் ஆட்சி யிலும் சிற்சில மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் சாரத்தில் இருவர் ஆட்சியும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல என்பதாகவே அமையும். ஆகவே ஜெ. தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்க இயலாத சூழல் உருவாவதே நல்லது.

ஜெ.வுக்கு இப்படி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க வாய்ப்பற்று ஆட்சியை அமைக்க ஒரு சில எண்ணிக்கை ஆதரவே குறைகின்றன என்றால் அந்த எண்ணிக்கைக்கு இடதுசாரிகள் ஆதரவு தந்து, சாதுவாய் அமைதியாய் இருந்து விடுவார்கள். அம்மையார் ஆட்சிக்குப் பெரிய அளவில் சிக்கல் இருக்காது. ஆனால் அதிகமான எண்ணிக்கை குறைவு ஏற்பட்டு, தேமுதிக ஆதரவுடன்தான் ஆட்சி அமைக்க முடியும் என்றால், தேமுதிக அதற்குரிய விலையைக் கேட்கும். அப்படிக் கேட்கத் தொடங்கினால் அது அம்மையாரின் ஏகபோக ஆட்சிக்கு சிக்கல்தான். இப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் இந்த நிலையில் தேமுதிகவை கழற்றிவிட்டு காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க ஜெ. நினைக்கலாம். அது நீண்ட நாள் கனவு என்பதோடு மட்டுமல்ல. திமுக, அதிமுக கட்சிகளிடையே காலம் காலமாக இருந்துவரும் பகை ஆதிக்கப் போட்டி ஆகியவற்றின் வெளிப்பாடும் இது.

தவிர, தில்லி அதிகார மையத்தின் மீதான மோகம், அதற்கான அதிகாரப் போட்டி. இவ்வளவும் இதில் பங்கு வகிக்க, தில்லி காங்கிரஸ் கூட்டைப் பெற அதிமுக முயற்சிக்கலாம். காங்கிரசும் திமுக இவ்வளவு காலமும் கொடுத்து வந்த குடைச்சலில் இருந்து மீளவும், பதிலுக்கு அதைப் பழி வாங்கவும் திமுகவை கழற்றிவிட்டு, அதிமுகவுடன் சேர்ந்து அதற்கு ஆதரவளிக்கலாம். ஆட்சியிலும் பங்கு பெறலாம்.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் திமுகவுக்கு பெரும் சங்கடம்தான். சோதனைக் காலம்தான். இதனால் தமிழ் நாட்டில் திமுகவின் ஆட்சிக் கனவு நிறைவேறாமல் போவது மட்டுமல்ல, தில்லியில் உள்ள திமுக அமைச்சர்கள் பதவி பறிபோய் விடும். தில்லி அதிகாரம் கைவிட்டுப் போகும். மாறாக பதிலுக்கு அதிமுகவிலிருந்து யாரும் அமைச்சர்கள் ஆனாலும் ஆக்கப்படலாம். தில்லி அதிகாரத்திலும் ஜெ. பங்கு பெறலாம். அதிமுகவுக்கும், காங்கிரசுக்கும் திமுகவின் மீதான கோபத்திற்கு அதைப் பல வகையிலும் பழிவாங்கலாம். ‘தண்ணி’ காட்டலாம். ஸ்பெக்ட்ரம் ஊழல் மீதான நடவடிக்கை மேலும் தீவிர மடையலாம்.

ஆக, எப்படியானாலும் இப்போதிருக்கிற ஆட்சிக்கு மேலான ஆட்சி ஏதும் உடனடியாக அமைய வாய்ப் பில்லை. எனவேதான் மூன்றாவது அணி பற்றி நாம் அடிக்கடி பேசி வருகிறோம். நினைவூட்டி வருகிறோம். ஆனால் அதற்கான அறிகுறிதான் எதுவுமே தென்படாமல் இருக்கிறது. எனவே, தேர்தலுக்குப் பிறகான தமிழக சூழல் எப்படியும் அமையலாம். அதாவது இப்போதுள்ள கூட்டணி அப்படியே தொடர்ந்து நீடிக்கும் என்று இல்லாமல், தற்போதுள்ள கூட்டணி அடிப்படை யிலேயேதான் ஆட்சி அமையும் என்று இல்லாமல், தேர்தல் முடிவுகள், அதில் வெற்றி பெறும் கட்சிகளின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்து தனிக் கட்சி அரசோ, கூட்டணி அரசோ அமையலாம், அந்தக் கூட்டணி புதுக் கூட்டணியாகவும் இருக்கலாம் என்பதே உண்மை.

Pin It