மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அதன் பொதுச் செயலாளர் வைகோவையும் ஜெயலலிதா திட்டமிட்டு இழிவுபடுத்தியதைத் தொடர்ந்து, தன்மானம் காக்க அக்கட்சி அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளது. இப்படி வெளியேறிய கையோடே 19.03.2011 முற்பகல் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தையும், பிற்பகல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தையும் மறுநாள் விடிய விடிய நடத்தி அது அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்ததுடன், வர இருக்கும் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது.

அதிமுக கூட்டணியிலிருந்து மதிமுக வெளிவந்த நிகழ்வும் அதன் பிறகு அக்கட்சி எடுத்த முடிவும் தமிழக அரசியல் சூழலில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்துடன், தமிழ் உணர்வாளர்கள் மத்தியிலும் அது பேரிடியாக விழுந்துள்ளது.

தமிழகத்தில் காங்கிரஸ் நிற்கும் 63 தொகுதிகளிலும் அதை வீழ்த்த வேண்டும் என்கிற வெறியோடும் ஆவேசத்தோடும் உள்ளனர் தமிழ் இன உணர்வாளர்கள். அந்த நோக்கை நிறைவேற்றுவதற்காக எந்த அணியையும் எந்தக் கட்சியையும் ஆதரிக்க அதை வெற்றி பெறச் செய்ய அணியமாய் இருந்தனர். இந்த அடிப்படையில்தான் ஜெ.வை அவர் புலிகள் எதிர்ப்பு, தமிழீழ விடுதலை எதிர்ப்பு நிலையில் இருந்தாலும், காங்கிரசை வீழ்த்துவது என்கிற இலக்குக்கு அவரை ஆதரிக்கும் பயன்படுத்திக் கொள்ளும் நிலையிலும் இருந்தனர். ஆனால் தற்போது மதிமுகவே, வைகோவே அந்த அணியில் இல்லை என்றால்... இதுதான் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் தற்போது பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

அதிமுக அணி மதிமுகவை விட்டுவிடாமல் வலுவோடு இருந்திருந்தால் காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுகள் சிந்தாமல் சிதறாமல் ஒரு வேட்பாளருக்கு ஒரு கட்சிக்குக் கிடைத்து காங்கிரசை வீழ்த்த வாய்ப்பாக இருந்திருக்கும். ஆனால் தற்போது அந்த வாய்ப்பு ஊனமுற்றிருக்கிறது. மதிமுக வாக்குகள் அனைத்தும் காங்கிரஸ் திமுக எதிர்ப்பு வாக்குகள். ஆனால் அந்த வாக்குகள் முழுதாக காங்கிரஸ் எதிர்ப்பு அணிக்குப் போக வாய்ப்பில்லாமல் தற்போது பெருமளவு வீணாக இருக்கின்றன.

இதற்காக வைகோவை, மதிமுகவைத் தங்கள் முடிவை மாற்றிக் கொள்ளுங்கள் என்று நாம் கோர முடியாது. தன்மானத்தை இழந்து இந்த அவனமானத்தைச் சகித்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல முடியாது. தன்மானமுள்ள எந்த மனிதனும் அப்படிச் சொல்லவோ கோரவோ மாட்டான்.

ஒரு கட்சி எப்படிப்பட்டச் சூழலில் என்ன முடிவு எடுப்பது. எந்தக் கட்சியோடு கூட்டணியில் இருப்பது அல்லது இல்லாமல் இருப்பது என்பது அதன் சொந்த விஷயம். அக்கட்சியின் விருப்பம். அதில் போய் யாரும் தலையிடமுடியாது. ஆனால் அந்த முடிவு சில சமூக விளைவுகளை ஏற்படுத்தும் என்றால், சமூக அக்கறையுள்ள எவரும் அதன்மீது கருத்து கூற உரிமையுண்டு. அந்த வகையில் சில.

மதிமுக எடுத்த முடிவு அவசரப்பட்ட முடிவு. உணர்ச்சி வயப்பட்ட முடிவு. அதாவது உணர்ச்சிக் கொந்தளிப்பில் தங்களையும், அதிமுகவின் இழிவான நடவடிக்கைகளையும் மட்டும் கருத்தில் கொண்டு மற்றவற்றைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் எடுத்த முடிவு என்பதாகவே படுகிறது.

நியாயமாய் அதிமுக அணியிலிருந்து தனித்து வெளியே வந்த மதிமுக என்ன செய்திருக்கவேண்டும். 234 தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் செய்திருக்க வேண்டும். அவ்வளவு முடியாவிட்டால் செல்வாக்குள்ள இடங்களில் 200, 150, 100, 50 என்ன முடியுமோ அங்கு வேட்பு மனுத் தாக்கல் செய்து களத்தில் நின்றிருக்க வேண்டும்.

அப்படி ஒரு தாக்குதல் தொடுத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? அதிமுக கூட்டணியே அதிர்ந்திருக்கும். தொகுதிவாரி பழைய வாக்குப்பதிவுக் கணக்குகளை யெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு மதிமுக தனித்து நின்றால் எவ்வளவு வாக்குகள் பெறும். அது எந்தெந்த தொகுதிகளில் என்னென்ன இழப்புகளை ஏற்படுத்தும் என்று கணக்கிட்டு, மதிமுகவுடன் சமரசத்துக்கு வந்திருக்கும். அந்த சமரசத்தின் அடிப்படையில் வேண்டப்படாத தொகுதிகளில் வேட்பு மனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கலாம். ஒருவேளை இதிலும் காலதாமதம் நேருவதானாலும், கடைசீ நேரத்திலும் போட்டியிலிருந்து விலகிக் கொள்ளலாம். அதாவது வாக்களிப்பு யந்திரத்தில் பெயர் சின்னம் இருந்தாலும் அதற்கு வாக்களிக்காமல் யாரை எந்தச் சின்னத்தில் குறிப்பிடுகிறோமோ அவருக்கு வாக்களியுங்கள் என்று கோரி நாம் செயல்படாது ஸிமீtவீக்ஷீமீ ஆகிவிடலாம்.

இதுதான் தற்போதைய தேர்தல் அரசியலுக்கு உரிய தாக்குதல் நடவடிக்கை, கூட்டணிக் கட்சிகளை அதிர வைக்கிற நடவடிக்கை. ஆனால் இந்தத் தாக்குதல் நிலைக்குப் போகாமல் தற்காப்பு நிலைக்குப் போயிருக்கிறது மதிமுக.

இப்படித் தனித்துப் போட்டியிடுவது என்கிற கருத்து கட்சிக்குள் வந்ததாகவும், ஆனால் இப்படி நின்றால் மதிமுக இப்படிச் செய்ய யாரிடமோ கைநீட்டி விட்டது என்று அவப் பெயர் வந்து விடுமோ என்று அஞ்சி அந்த முடிவு வேண்டாம் என்று மாற்றிக் கொண்டதாகவும் ஒரு செய்தி.

வைகோவைப் பொறுத்தவரை அவர் எந்த ஊழல் குற்றச்சாட்டுக்கும் அப்பாற்பட்ட ஓர் அப்பழுக்கற்ற அரசியல்வாதியாகத் திகழ்பவர். அப்படியே நீடிக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பவர். அவரது கட்சி சார்ந்த செயல்பாடுகள், நிலைப்பாடுகள் பற்றி பலருக்கும் பல விமர்சனங்கள் இருந்தாலும், அவரது தனி மனித ஆளுமை நோக்கில் எல்லோராலும் மதிக்கப்பட உயர்ந்து நிற்பவர். அதேபோல பழகுவதிலும், மனிதர்களிடம் பாசம் வைப்பதிலும் மிகுந்த மனித நேயத்தோடு நடந்து கொள்பவர். எல்லோருடனும் எளிமையாக பழகுபவர். முதல் நாள் ஐ.நா. மன்றத்தில் பேசுகிறார், அமெரிக்க அதிபரோடு கைகுலுக்குகிறார் என்றால் மறுநாள் மாலை ஒரு சாதாரணத் தொண்டனின் குடிசை வீட்டில் அவன் உடல் நலன் பற்றி விசாரிப்பவர். அதேபோல சேர்ந்த இடத்துக்கு நம்பிக்கையோடும், விசுவாசத்தோடும் நடந்து கொள்பவர். திமுகவிலிருந்து வெளி வந்ததோ, அதற்குப் பிறகான அவரது பிற கூட்டணிகளோ, விலகலோ எதை எடுத்துக்கொண்டு பார்த்தாலும் அது அவர்களாக இவரைப் புறமொதுக்கியோ அல்லது இழிவுபடுத்தியோ, பழி தூற்றியோ விலக்கி வைக்க அல்லது விலக வைக்க முயற்சித்திருப்பார்களோ அன்றி இவராக விலகி வந்திருக்கமாட்டார்.

இப்போது அதிமுகவிலிருந்து வெளி வந்ததும் இப்படியே. இப்படிப்பட்ட மிக உன்னதமான உயர் பண்புகளையெல்லாம் கொண்ட இவரிடம் உள்ள ஒரு சிறு பலவீனமாக மற்றவர்கள் பார்வையில் குறிப்பிடுவது இவர் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர். நெக்குருகி நெகிழ்ந்து போய் விடுவதலிலும் சரி, ஆத்திரம் ஆவேசத்துக்கு ஆளாவதிலும் சரி, அதன் உச்சத்துக்குச் சென்றுவிடக் கூடியவர். இது பொதுவாக எல்லோரும் சுட்டிக்காட்டும் சுபாவம். இந்த சுபாவம் தேர்தல் அரசியலுக்கு எதிரானது. அதற்கு உதவாதது. இதையெல்லாம் கடந்தே தேர்தல் அரசியலைச் சந்திக்க வேண்டி யிருக்கிறது.

இந்த, இப்படிப்பட்ட உணர்ச்சி மேலிட்டான முடிவால் என்ன நிகழ்கிறது. இந்த முடிவின் மறு பக்கத்தைக் காணவிடாமல் இந்த உணர்ச்சி அதைத் தடை செய்கிறது.

தனியே நின்றால் அவப்பெயர் வரும் என்பதனால்தானே அந்த முடிவை எடுக்காமல் விட்டார். சரி, இப்போது மட்டும் என்ன அந்த அவப் பெயர் வராதா. காங்கிரஸ் - திமுக எதிர்ப்பு ஓட்டுகளைக் குறைக்க, தடுக்க, அந்த வாக்குகள் பதிவாகாமல் தடுக்க வைகோ தேர்தல் புறக்கணிப்பு செய்கிறார் என்று சொல்ல மாட்டார்களா.

சரி, இருக்கட்டும் தேர்தல் புறக்கணிப்பு என்றால் போட்டியிடுவதிலிருந்து விலகி நிற்றல் என்பது மட்டும்தானே தவிர தொண்டர்கள் வாக்களித்தத் தடையில்லை, யாருக்கு வாக்களிப்பது என்பது அவர்களுக்குத் தெரியும் என்கிற பொருள்பட வைகோ ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் தொண்டர்கள் தங்களை இழிவுபடுத்திய அதிமுகவுக்கு வாக்களிப்பார்களா - நிச்சயம் மாட்டார்கள். இயலாது. இது மட்டும் காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு சாதகமாக ஆகாதா? அப்போது மட்டும் அவப்பெயர் வராதா?

ஆக இதன்படி பார்த்தால் தனித்து நிற்பதும் புறக்கணிப்பதும் இவை ஏற்படுத்தும் விளைவு ஒன்றுதான். காங்கிரஸ் திமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரிப்பதுதான். அது நமக்கு நோக்கமில்லை என்றாலும் இதன் விளைவு அதுதானே.

ஆக அவப்பெயர் எந்த நிலையிலும் வரும். து£ற்றுபவர்கள் எப்போதும் து£ற்றிக் கொண்டுதான் இருப்பார்கள். அரசிலில் அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நமக்கு எது சரி, நியாயம், பொருத்தம் என்று படுகிறதோ அந்த முடிவை எடுத்துக் கொண்டு நாம் பாட்டுக்கு பயணம் போய்க் கொண்டிருக்க வேண்டியதுதான்.

சரி, தனியாக பல இடங்களில் வேட்பு மனுத் தாக்கல் செய்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். யாரும் கூப்பிட்டு பேசினால்தான் ஆயிற்று. ஒருவேளை யாருமே கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது என்ன ஆவது என்று சிலர் கருதலாம்.

அப்படி நேர்ந்தால் குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் நின்று வேலை செய்வது. வருகிற வாக்குகள் வரட்டும் என்று துணிவோடு அதை எதிர் கொள்வது. இதனால் மட்டும் காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகள் பிரியாதா என்றால் பிரியும். பிரிவதால் சில தொகுதிகளில் காங்கிரசே கூட வெல்லும். வெல்லட்டும், பரவாயில்லை. ஆனால் திமுக, அதிமுக கூட்டணிக்கு எதிராக மாற்று சக்தி யன்று மூன்றாவது சக்தியன்று உயிர் பெற்று, அபிமன்யு போல, தனித்துப் போட்டியிடுகிறது, களம் காணுகிறது என்கிற செய்தி தமிழகமெங்கும் பரவும்.அது பல அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும்.

அதாவது புறக்கணிப்பு என்பதன் மூலம் நாம் நம் அடையாளமே இல்லாமல் காங்கிரஸ் வெல்ல வழி வகுப்பதைவிட, நாம் களத்தில் நின்று நம் அடையாளத்தைத் தமிழக மக்களுக்குக் காட்டி, விளைவு எதுவானாலும் பரவாயில்லை என்று நம் அடையாளத்தை மக்கள் மத்தியில் பதியச் செய்வதே சரியான போர் உத்தியாக இருக்கமுடியும். இதுவே மதிமுக வின் எதிர்காலத்துக்கும் பயன் தருவதாக அமைய முடியும்

வைகோ, தொடக்கத்தில் திமுகவை விட்டு வெளியே வந்த கையோடே அதிமுக அணியோடு உறவு வைக்காது தனித்த சக்தியாக தன்னை, மதிமுகவை அடையாளம் காட்டியிருக்க வேண்டும். இப்படிக் காட்டியிருந்தால் இவர் தொடக்கத்தில் சில இடர்ப்பாடுகளைச் சந்திக்க வேண்டியிருந்திருந்தாலும், அடுத்தடுத்து தமிழீழத்திலும் தமிழகத்திலும் நடைபெற்ற சில வரலாற்று நிகழ்வுகளில் இவர்கள் அடையாளம் வலுப் பெற்றிருக்கும். இளைஞர் களின் ஆதரவு இவருக்குப் பெருகியிருக்கும். இத்தனை ஆண்டுகளில் இவர் தலைமையில் நம்பிக்கையுள்ள ஓர் மூன்றாவது அணி அமைந்திருக்கும். ஆனால் அந்த வாய்ப்பு கை நழுவிப் போயிற்று. கூடவே சில ஆண்டுகளும் போயிற்று.

ஆனால் இப்போதும் ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. இந்த விநாடி வரை வைகோ என்கிற ஆளுமை தமிழகத்தில் உயர்ந்து தனித்து நிற்கிறது. தற்போது அதிமுகவின் அகங்கார நடவடிக்கை மேலும் உச்சத்திற்குச் சென்றுள்ளதானது தமிழக மக்களுக்கு வைகோ மீதான அனுதாபத்தை அவர் மீதான பாசத்தை, மரியாதையைக் கூட்டியிருக்கிறது.

இந்தச் சூழலையாவது வைகோவும், மதிமுகவும் சரியாகப் பயன்படுத்தி தமிழகத்தில் தனித்த ஒரு சக்தியாகத் வரவேண்டும், வளர வேண்டும். அப்படி வளர்ந்தால் தற்போது திமுக, அதிமுக அணிகளில் ஒண்டி அதன் நிழலில் தன்னை வளர்த்துக் கொள்ள முயலும் கட்சிகள் அந்த அணியைவிட்டு விலகி வைகோவின் மதிமுக அணிக்கு வரும். தமிழகத்தின் தலையெழுத்திலும் சில மாற்றங்கள் நிகழும்.

Pin It