கழிவுநீர்க் குழிகளுக்குள் இறங்கி சுத்தம் செய்யும் வேலையைத் ‘தீண்டப்படாதவர்கள்' என்ற சமூகப் பிரிவினருக்கு இந்து பார்ப்பனிய சமூகம் ஒதுக்கி வைத்துள்ளது. தொடர்ந்து தமிழ்நாட்டில் இத்தகைய மரணச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் இந்த மனித உயிர்கள் மதிக்கப்படுவது இல்லை; காரணம் அவர்கள் பிறந்த ஜாதி; அதாவது பார்ப்பனியத்தின் பார்வையில் கடவுள் ‘பிரம்மா'வால் படைக்கப்பட்ட ஜாதி. இந்து கடவுள்களுக்காக ‘தொடைதட்டி' கிளம்பும் இந்து முன்னணி உள்ளிட்ட சங் பரிவாரங்கள், இறந்தவர்களும் ‘இந்து'க்களின் உயிர்தானே என்று கவலைப்பட்டார்களா? கழிவுக் குழிகளில் ‘இந்துக்களை’ இறக்காதே என்று போராடியிருக்கிறார்களா?

இந்தியா இந்துக்களின் ‘பாரததேசம்’ என்று ஒவ்வொரு நாளும் இந்து பார்ப்பனியத்தைச் சட்டங்களாகவும் ஆணைகளாகவும் பிறப்பித்து வரும் ஒன்றிய ஆட்சி, ஒரு இந்து ‘சாக்கடைக்' குழிக்குள் இறங்கி மூச்சுத் திணறி மரணமடைவது அவமானம் என்று கருதி இதை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளில் உண்மையான கவலையோடு செயல்பட்டிருக்கிறார்களா?

தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்ததாரர்களின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள். பணி உறுதி கேட்டு போராடுகிறார்கள். துப்புரவுப் பணிகளுக்கு பார்ப்பனர்களோ, உயர்ஜாதியினரோ, பிற்படுத்தப்பட்ட ஜாதியினரோ வரப்போவது இல்லை. இந்தத் தொழில் மட்டும் ஒரே ஜாதிக்கு நிரந்தரம். ஆனால் பணி நிரந்தரம் மட்டும் கிடையாது என்கிறார்கள். தேசிய துப்புரவுத் தொழிலாளர் ஆணையத்தின் தரவுகளின்படி 2014 முதல் 2015 வரை கழிவுநீர்க் குழாய்களில் இறங்கி 859 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். 2019 முதல் 2026 வரை 18 மாநிலங்கள் மற்றும் ஒன்றியங்களில் இறந்தவர்கள் 332 பேர். 1993 முதல் 2025 வரை உயிரிழந்த துப்புரவுப் பணியாளர்கள் 1350 பேர்.

மனித மலத்தை மனிதன் எடுப்பதும், கழிவுநீர்க் குழிகளில் சுத்தம் செய்வதும் 2021 ஆண்டிலிருந்தே இந்தியாவில் ஒழிக்கப்பட்டு விட்டதாக ஒன்றிய ஆட்சி தம்பட்டம் அடித்து வருகிறது. உண்மையில் ஒழிக்கப்படவே இல்லை. 2023 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் (டாக்டர் பல்ராம்சிங்,சஃபாய் கரம்சாரி) கழிவுநீர் குழிகளில் தொழிலாளர்கள் இறக்கப்படுவதைத் தடை செய்ததோடு இறப்புக்கான இழப்பீட்டுத் தொகையை ரூ.30 இலட்சமாக உயர்த்தியது. ஆனால் இந்த இழப்பீட்டுத் தொகையை பல மாநிலங்களில் வழங்குவதே இல்லை. 15 மாநில தலைமைச் செயலாளர்களுக்கு 2026 ஆம் ஆண்டு இதுகுறித்து ஒன்றிய ஆட்சி கடிதம் அனுப்பி விளக்கம் கேட்டது. அவ்வளவுதான்; மேல் நடவடிக்கை எதுவும் இல்லை.

ஒப்பந்ததாரர்கள் பதிவு செய்யப்படாத தினக்கூலிகளை இத்தகைய இழிவேலைக்கு அமர்த்தி குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள். இயந்திரங்களைப் பயன்படுத்தும் திட்டம் ஒன்றை உருவாக்கினார்கள் (National Action for Mechanised Sanitation Ecosystem) திட்டங்கள் காகிதங்களிலேயே நிற்கின்றன. கொடூரமான பார்ப்பனிய ஜாதிக் கட்டமைப்புகளே இந்த இழிதொழில்களை முடிவுக்குக் கொண்டு வராமல் தடுக்கின்றன என்பதுதான் உண்மை.

 உலகில் எந்த ஒரு நாட்டிலும் இத்தகைய இழிவு நீடிக்கிறதா?. ஜெர்மனியில் துப்புரவுப் பணியாளரை ‘சுழற்சி மற்றும் கழிவு மேலாண்மை நிபுணர்’ என்று அழைக்கிறார்கள். மூன்று ஆண்டுகள் படிக்க வேண்டும். குப்பை பிரிப்பு, மறுசுழற்சி, ஆபத்தான கழிவுகளைக் கையாளுதல், கனரக இயந்திரங்களை ஓட்டுதல் என்று பயிற்சிகள் தரப்படுகின்றன. குறைந்தபட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு. தொடக்கக் கால ஊதியம் ரூ. 2,80,000. காலை 6 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை வேலை. 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை. ஒரு டாக்டருக்கும் இதே விடுமுறை தான். குப்பைகளைப் பிரித்துப் போடாவிட்டால் ரூ.10,000 அபராதம்.

 துப்புரவுப் பணியாளர்களை அதிகம் மதிக்கும் நாடு ஸ்வீடன். 99 விழுக்காடு குப்பைகள் மறுசுழற்சி செய்யப்பட்டு, மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. மண்ணில் புதைப்பது ஒரு விழுக்காடுதான். இங்கிலாந்தில் இருந்து குப்பையை ஸ்வீடன் இறக்குமதி செய்கிறது. குப்பை எடுப்பவர்களுக்கு ‘மின் உற்பத்தியாளர்’ என்று பெயர். மாத ஊதியம் ரூ.3,80,000. அரசைப் பணியவைக்கும் வலிமையோடு விளங்குகிறது இவர்களது தொழிற்சங்கம். மக்கள் இவர்களுக்கு காஃபி கொடுத்து வரவேற்று நன்றி கூறுவது நாட்டின் கலாச்சாரம். பள்ளிகளில் உங்களது தந்தை கிரகங்களை காப்பாற்றுபவரா? என்று ஆசிரியர்கள் அவர்களது பிள்ளைகளைப் பெருமையாக கூறுவார்கள்.

ஜப்பானில் துப்புரவுத் தொழிலாளர்கள் மிகவும் குறைவு. ‘சுகாதாரப் பொறியாளர்கள்’ என்பது அவர்களுக்கான பெயர். அலுவலகத்தில் குப்பை எடுக்கும் தொழிலாளர்கள் என்று தனியாக கிடையாது. அதிகாரிகளும் ஊழியர்களுமே குப்பை எடுத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். வீதியில் குப்பைத் தொட்டியே கிடையாது. மக்கள் குப்பைகளை வீட்டுக்கு எடுத்துச் சென்று விடுவார்கள். ஜப்பானில் இது ஒரு தொழில் அல்ல; கலை. உலகக் கோப்பை கால்பந்து போட்டி முடிந்த பிறகு ஜப்பானிய ரசிகர்கள் மைதானத்தை சுத்தம் செய்து உலகையே வியக்க வைத்தார்கள்.

ஆனால் இந்தப் புண்ணிய பாரதத்தில் தான் வர்ணாஸ்ரமமும் சனாதனமும் மக்களை இழிவுக்கும் இழிதொழிலுக்கும் உந்தித் தள்ளியிருக்கிறது. இந்த நிலை எப்படி மாறும்? ஜாதியத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமாக வேண்டும். அனைத்து ஜாதியினரும் பங்கேற்கும் நவீன தொழில்நுட்பத் திறனுடன் கூடிய தொழிலாக மாற வேண்டும். இங்கே அர்ச்சகராவதற்கும் ஒரே ஜாதி; குப்பை எடுப்பதற்கும் ஒரே ஜாதி; இதுதான் சனாதன பாரதம்.

- விடுதலை இராசேந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.